பெயரளவுக்குச் சட்டங்களும், நீதிமன்ற ஆணைகளும் இருந்தாலும் பழங்குடி மக்கள் அவர்களது வரலாற்று வாழ்விடங்களிடமிருந்து வெளியேற்றப்படுவது தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. தமிழகமும் இதற்கு விதிவிலக்கல்ல.

நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் பகுதியில் பசுமை மாறாக் காடுகள் அழிக்கப்பட்டு சட்டவிரோதமாக பல ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. 12 மிகப்பெரிய தோட்ட நிறுவனங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளன. இவர்களை வெளியேற்றக் கோரி கோதவர்மன் என்பவர் 1995 இல் உச்சநீதிமன்றத்தில் 1.A.No.703/WP எண் 202/95ன் படி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் அடிப்படையில் உண்மையான வன நிலக் கொள்ளையர்களை வெளியேற்றி இருக்க வேண்டும். ஆனால் வனத்துறையோ நிலக் கொள்ளையர்களை வெளியேற்றாமல் பாரம்பரியமாக காடுகளில் வாழும் பழங்குடிகளையும் வனம் சார்ந்து வாழும் மக்களையும் அதிரடியாக வெளியேற்ற முயல்கிறது.

நீலகிரியில் 12 தோட்ட நிறுவனங்களுக்கு மட்டும் 19644.19 ஏக்கர்தான் அரசு உத்தரவின்படி இருக்க வேண்டும். ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதித்து மேலதிகமாக 32.356.52 ஏக்கர் அடர்ந்த காட்டுப்பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து தேயிலைத் தோட்டங்களாக மாற்றியுள்ளனர்.

மலைவாழ் பழங்குடிகளின் நலன் காக்க வாழ்வு மாண்புக்கான சுயமரியாதை இயக்கத்தின்(Compainge for survival and dignity) சார்பில் பல்வேறு வழக்குகள் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டன. இந்திய அரசின் வனத்துறை அமைச்சகத்தின் 6 அரசாணைகள் இருந்தும், பழங்குடிகள் வெளியேற்றப் பட்டார்கள் 1980க்கு முன்பு வனப்பகுதியில் குடியேறியவர்களை எப்படி வெளியேற்றலாம்? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டார்கள். இந்திய அரசால் பதில் எதுவும் சொல்லமுடியவில்லை. வேறு வழியில்லாமல் இந்திய அரசின் வனத்துறைச் செயலாளர் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் “வரலாற்று ரீதியாக ஆதிவாசிகளுக்கு எதிராக அநீதி இழைத்து விட்டோம். அதை சரிசெய்திட விரைவில் வனவுரிமைப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வருகிறோம்.” என அம்மனு உறுதியளித்தது. இதன் பிறகே இந்திய அரசால் செடியூல்டு பழங்குடியினர் மற்றும் இதர வனவாழ் மக்களின் வனவுரிமை அங்கீகாரச் சட்டம் 2006 இல் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. 2008 சனவரி 1 முதல் இச்சட்டம் இந்தியா முழுவதும் அமுலுக்கு வந்துவிட்டது. ஜம்மு காஷ்மீர் தவிர தற்போது இச்சட்டம் நாடு முழுவதும் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. அரசும் சரி, அ.இ.அ.தி.மு.க. அரசும் சரி இச்சட்டத்தை நடைமுறைப்படுத்திட முன் வரவில்லை. தமிழகத்தில் வாழும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்களுக்கும் இதர வன வாழ் மக்களுக்கும் 1 செண்ட் நிலம் கூட இச்சட்டத்தின்படி வழங்கவில்லை தொடர்ந்து பழங்குடி மக்களை வஞ்சித்து வருகிறது. அரசி அதிகாரிகளை கேட்டால் சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித் திருப்பதாகக் கூறி இச்சட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்திட முன் வர வில்லை. ஆளும் செயா அரசும் உண்மை நிலவரம் என்ன்? என்பதைப் பார்க்க மறுத்து வருகிறது. உண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் தடை எதுவும் விதிக்க வில்லை. உயர்நீதிமன்ற அனுமதியைப் பெற்று வனவுரிமையை அங்கீகரிக்கலாம் என்றுதான் கூறியுள்ளது.

இச்சட்டம் அமுலுக்கு வந்த உடனே ஆதிக்கசக்திகளின் தூண்டுதலின் பேரில் v. சாம்பசிவம் என்னும் பணி நிறைவு பெற்ற அய். எப். எஸ். அதிகாரி சென்னை உயர்நீதி மன்றத்தில் இச்சட்டத்தின் சில சரத்துகளுக்கு எதிராக தடைகேட்டு ரிட் மனுதாக்கல் செய்தார். இதே போன்று மதுரை உயர்நீதிமன்றத்திலும் சிங்கப்பட்டி சமீந்தார் தீர்த்தபதி முருகதாஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் கீழ்கண்ட உத்தரவுகளை கடந்த 30.4.2008 அன்று பிறப்பித்தார்கள்.

“ If claims are made for community rights or rights forest cants and and applications are submitted as per sections 3 and 4 of the Act read with Rules 11 and 12 of the Rules, then the process of Verification of the claim after intimation to the concerned claim ant shall go on, but before the certificate of title is actually issued, orders shall be obtained from this court. (b) As regards felling of trees for providing diversion of forest land under section 3(2) of the Act is concerned, the process shall go on till the clearance of such development projects and also the gram Sabah’s recommendation is obtained, but before the actual felling of trees, orders shall be obtained from this court. (WP in WP NP: 453/2002 No: 1/2008)

“இதன் பொருள் வனவுரிமைச் சட்டம் விதிகள் 3 மற்றும் 4ன்படி வனநிலத்தின் மீது சமூக வனவுரிமைகள் கோரியோ அல்லது தனி நபர்கள் வன நிலவுரிமை கோரியோ விண்ணப்ப மனுக்கள் அளித்தால் விண்ணப்ப மனுக்களை ஆய்வு செய்யும் போது சட்ட விதி எண் 11 மற்றும் 12ன் படி வனவுரிமை கோரிய விண்ணப்பதாரர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு வின்ணப்ப மனுக்களை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் மேலும் வனவுரிமைகள் வழங்குவதற்கு முன்பு உயர்நீதி மன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும்.” என்பது இதன் பொருள்.

மேலும் வனவுரிமைச் சட்டம் 2006ன்படி 3(2)ன்படி வன நிலங்களை வளர்ச்சித் திட்டங்களுக்காக மாற்றும் போது வளர்ச்சித்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். மரங்களை வெட்டும் போது மட்டும் நீதிமன்ற அனுமதியைப் பெற வேண்டும் என்று மட்டுமே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தடை விதிக்கப்படுகிறது என்று எந்த இடத்திலும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப் படவில்லை. ஜெயா அரசும் அதிகாரிகளும் தடை இருப்பதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது.

இச்சட்டம் சரியாகச் செயல்படுத்தப்பட்டால் பல பெருந்தோட்ட நிறுவனங்கள் ஆக்கிரமிப்புச் செய்துள்ள நிலம் பற்றிய தகவல்கள் வெளியே அம்பலமாகும். ஆக்கிரமிப்பு நிலங்கள் பறிக்கப்பட்டு விடும் என்கிற அச்சத்தால்தான் அதிகாரிகள் திட்டமிட்ட முறையில் இச்சட்டத்தை செயல்படுத்த மறுக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. நீதிமன்றம் கூறிய வழிகாட்டுதல் படி வன உரிமைக்கோரிய விண்ணப்ப மனுக்களை வருவாய் துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வில்லை. மேலும் 2012 அக்டோபர் 31ந்தேதி வரை 21, 781 நிலவுரிமை கோரிய விண்ணப்ப மனுக்களை பெற்றுள்ளதாகவும் அதில் 3, 361 சமூக வனவுரிமை கோரிய விண்ணப்ப மனுக்களும் இருக்கிறது என்றும் நீதிமன்றம் நிலவுரிமையை அங்கீகரிக்க வில்லை என்றும் ஜெயா அரசு நடுவண் அரசின் பழங்குடி நலத்துறை அமைச்சர் கிசோர் சந்திராதியோ அவர்களிடம் பதில் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 22.4.2010 அன்று(கோவை, ஈரோடு, சேலம், மற்றும் விழுப்புரம்) ஆகிய நான்கு மாவட்டங்களிலிருந்து பெறப்பட்ட விண்ணப்ப மனுக்களை ஆய்வுக்கு எடுத்தது. 15.6.2010 அன்று இவ்வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பயனாளிகளின் பட்டியலையும் கிராமசபையின் தீர்மானங்களையும் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மூலம் சமர்பித்திருப்பதாக நடுவண் அரசிடம் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 2.5. வருடங்கள் ஆன பின்பும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனுமதியை பெறமுடியவில்லையே ஏன்? என்று கேட்டு நடுவண் அரசின் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் தமிழக அமைச்சர் அவர்களுக்கு கடந்த 18.12.2012 அன்று கடிதம் எழுதியுள்ளார். இன்று வரை ஜெயா அரசு பதில் எதுவும் தெரிவித்ததாகத் தெரியவில்லை. பயனாளிகளிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் யாவும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி இல்லாததால் சென்னை உயர்நீதிமன்றம் இன்றுவரை அனுமதி வழங்கவில்லை.

எனவே மீண்டும் சரியான விண்ணப்ப மனுக்களை பெற்று நீதி மன்றத்தில் முன்வைத்து உயர்நீதிமன்ற அனுமதியைப் பெறுவதற்கு தமிழக அரசு எவ்வித முயற்சியும் எடுக்காத காரணத்தினால் பழங்குடிகள் மற்றும் இதர வனவாழ் மக்களின் வனவுரிமைகள் அங்கீகரிக்கப்படாமல் இருந்து வருகிறது 2013 ஆண்டிலாவது சரியான விண்ணப்ப மனுக்களை தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வைத்து நீதிமன்ற அனுமதியை பெற வேண்டும். இதற்கு மலைவாழ் பழங்குடி மக்கள் ஒன்று கூடி அழுத்தம் தர வேண்டும்.

Pin It