நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவுடன் சேர்த்துப் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு, தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, பிறகு நிரபராதியென விடுதலை செய்யப் பட்டவர் எஸ் ஏ ஆர் கிலானி. இவர் காசுமீர விடுதலைப் போராட்ட ஆதரவாளர்; தில்லிப் பல்கலைக்கழகத்தில் பேராசி யராகப் பணியாற்றுகிறார். 2009 முதல் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாகக் குரல்கொடுத்து வருபவர். தமிழீழ விடுதலையை வெளிப்படையாக ஆதரிக்கக் கூடியவர். இவர் சென்னையில் “அரசு அடக்குமுறைக்கு எதிரான கூட்டமைப்பு” கூட்டத்தில் பங்கேற்க வந்தபொழுது சந்தித்து, தமிழர் கண்ணோட்டம் இதழுக்காக செவ்வி எடுத்தவர் தோழர் திருமுருகன் காந்தி. அதிலிருந்து...

இந்திய அரசும், நீதித்துறையும் பற்றிய உங்களின் புரிதல் எவ்வாறாக இருக்கிறது.?

இந்திய அரசு தனது சொந்த நீதித் துறையை முடக்கி விட்டது. இது கிட்டதட்ட தனது நீதித்துறையையும், நீதி பரிபால னத்தையும் கொலை செய்துவிட்டது எனலாம். எங்கள் மீதான குற்றச்சாட்டில் இது மிகத் தெளிவாக விளக்கப்பட்டது. எங்கள் மீதான (கிலானி, அப்சல் குரு) நீதிமன்ற விசாரணை என்பதே எங்களை கொலை செய்வதற்காக நிகழ்த்தப்பட்ட ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கும் நிகழ்ச்சியே அன்றி வேறில்லை. ஏனெனில் இந்தியா வில் நீதித் துறை என்பது இங்கு இருக்கும் உலுத்துப் போன இந்திய அதிகார வர்க்கத்தின் பகுதியாகவே இருக்கிறது. நீதித்துறை இந்த அரசின் செயல்பாட்டினை ஆமோதிப்பதாகவும், செயல்படுத்துவதாகவும் இருக்கிறது. இது சுதந்திரமான அமைப்பாக கருத முடியாது. இதைத்தான் இன்றைய நாளில் வெளியாகி இருக்கிற புதிதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ள சதாசிவம் அவர்களும் தமது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். இதைத்தான் வழக்கறிஞர் நரிமான் சொல்லும் போது, ‘இந்தியாவின் குற்றவியல் நீதிபரி பாலனம் உடைந்து விழும் நிலையில் நிற்கிறது’ என்றார். மன்மோகன் சிங் கூட இந்தியாவின் நீதித்துறை ஊழல்மிக் கதாகவே இருக்கிறது என்று ஒப்புக்கொண்டிருக்கிறார்.

என்னை நிரபராதி என நிரூபிப்பதற்கான வாய்ப்பினையும் வசதியையும் ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. அவ்வாறான ஒன்று அப்சல் குருவிற்கு கிடைக்கவில்லை. நீதிமன்ற விசாரணையின் போது வழக்கறிஞர் இல்லாமலேயே அப்சல் குரு வழக்கினை நடத்த வேண்டி வந்தது. வழக்கறிஞர் இல்லாமல் எந்த ஒரு குற்றம் சாட்டப்பட்டவர் மீதும் வழக்கு நடத்தக்கூடாது என்கிற இந்தியாவின் நீதிமன்ற நடவடிக்கையை இந்தியாவே கொலை செய்தது. வழக்கறிஞர் இல்லாமல் நடத்தப் பட்ட விசாரணையை வைத்தே அப்சலுக்குத் தூக்குத் தண்ட னையை “மக்களின் விருப்பத்திற்காக திருப்திக்காக” என்று இந்திய நீதிமன்றம் நிறைவேற்றியது. இந்தக் கொடுமை உலகில் எங்கும் நிகழ்ந்திருக்காது.

அப்சல் குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தண்ட னை குறித்து நீங்கள் நேரில் அறிந்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?

அப்சல் குரு தூக்கிலிடப் போவது அப்சலுக்கு ஓரிரு மணி நேரத்திற்கு முன்பே சொல்லப்பட்டது. அதாவது காலை 7 மணியளவில் சொல்லப்பட்டது. அவருடன் இரவு உணவு உண்டவர்களை, சிறை நண்பர்களை சந்தித்த பொழுது அவர்கள் இதைச் சொன்னார்கள். அவரது மனைவியை, குழந்தையை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அவர்களு டன் இறுதியாக பேசவேண்டும் என்று கேட்டதையும் மறுத் தார்கள். அப்சலின் மனைவிக்கு தெரிவிக்காதது சட்டப்படி குற்றமாகவே கருதப்படவேண்டும். இந்திய அரசு தனது சொந்த நீதியை அதுவே கொலை செய்தது. அப்சல் குருவிற்கு இறுதியாக ஒரே ஒரு தாள் காகிதத்தினையும், ஒரு பேனாவை யும், சில மணித் துளிகளையும் அளித்து இறுதிக் கடிதத்தினை எழுத வைத்தார்கள். இதுவே இந்தியாவின் நீதி.

இன்று எங்கள் காசுமீர் மக்களுக்கு அப்சலின் குடும்பம் ஒரு மாபெரும் தியாகியின் குடும்பம். அவர் காசுமீரின் வீர நாயகன். அவரது மகன் நாங்கள் கொண்டாடும் ஒரு பெரும் விடுதலை வீரனின் மகன். அவன் காசுமீரமெங்கும் அனை வரது வீட்டிலும் சிறப்பு விருந்தாளியாகவும், காசுமீரமகனா கவும் கொண்டாடப்படுபவான். இந்தியம் தூக்கிலிட்ட காசுமீர வீரனின் மகன் எங்கள் அனைவருக்கும் மகனே. இந்தியா காசுமீரை விட்டு வெளியேற வேண்டும். இதுவே எங்கள் மூச்சு.

அப்சல் குருவின் கடிதம் வலிமை யானது. வலிமிகுந்தது. அவருக்காக ஒட்டுமொத்த காசுமீரமும் பெருமை கொள்கிறது.

இந்தியாவின் மீதான அச்சுறுத்தலாக இந்திய அரசு கட்டமைக்கும் வாதம் எவ்வாறு உங் களால் பார்க்கப்படுகிறது?

இந்தியாவில் உள்ள மக்களுக்கு இந்திய அரசு தான் அச்சுறுத்தல். வெளி யிலிருந்து எந்த அச்சுறுத்தலும் இங்கு கிடையாது. இவ்வாறான கட்டமைப்பின் மூலம் மக்களை ஒடுக்குவதற்கான பலத்தினை இந்திய அரசு பெருக்கிக் கொள்கிறது. மன்மோகன், இடது தீவிர வாதிகளே இந்தியாவின் மாபெரும் அச்சுறுத்தல் என்கிறார். அவர்கள் யார்? தனி நாடு கேட்பவர்களா? பழங்குடிகள். தங்களுக்கான பூர்வீக நிலத்தினை தம்மிடம் இருந்து பறிக்கக் கூடாதென போராடுபவர்கள் அவர்கள். அவர்களுக் கான வாழ்வாதாரத்தினைத் தக்க வைத் துக்கொள்வதற்கான அனைத்து உரிமைகளும் கொண்டவர்கள். இந்திய அரசு இந்த நாட்டின் சொத்தினை வெளி நாடுகளின் நிறுவனங்களுக்கும், இந்தியாவின் பணக்காரர்களுக்கும் விற்க முனைகிறது. இதனாலேயே தம் மக்கள் மீது இந்திய அரசு போர் தொடுத்து இருக்கிறது. இதைவிடப் பெரிய அச்சுறுத்தல் வெளியிலிருந்து இங்குள்ள மக்களுக்கு வரப்போவ தில்லை.

மரண தண்டனை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்று கருதுகிறீகள்?

மரணதண்டனை எப்பொழுதும் ஒரு குற்றத்தினை தடுப்பதற்கான ஆயுதம் அல்ல. மரண தண்டனை கூடாது. இங்கு மரணதண்டனை என்பது அரசியல் காரணங்களுக்காகவே பயன்படுகிறது. அப்சல்குருவிற்கு நிகழ்ந்த மரண தண் டனை எனும் கொலை காசுமீரத்தில் அமைதியை ஏற்படுத்தி இருக்கிறதா என்ன? தமிழகத்தில் முருகன், சாந்தன், பேரறிவாளன் மீது நிற்கும் தூக்குக் கயிறு எந்தவகையில் நேர்மையானது. தமிழகத்தினைப் பொறுத்த வரை சிறைத்தண்டனை என்பது இசுலாமியர்களுக்கும், மரண தண்டனை என்பது தமிழ்த் தேசியவாதிகளுக்கும் எதிராகவே பயன்படுத்தப்படுகிறது என்றே நான் உணர்கிறேன். இவர்களை ஒடுக்குவதற்காகவே இச்சட்டங்கள் பயன்படுகின்றன.

காசுமீரத்தின் தற்போதயை நிலை என்ன?

நான் பேசிக்கொண்டிருக்கும் இன்றும் கூட இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கின்றன. நாங்கள் கேட்பது எங்களுக்கான விடுதலை. எங்கள் மீது இசுலாமிய தீவிரவாதம் என்கிற பொய்ப் பிரச்சாரம் பரப்பப்படுகின்றது. காசுமீர விடுதலைக்காக அனைத்துக் காசுமீரிகளும் போராடுகின்றார்கள். இதில் இசுலாமியரும் இருக்கிறார்கள் என்பதுவே உண்மை. உதாரணமாக அமர்நாத் யாத்திரையை ஒருபோதும் காசுமீரிகள் தடுத்ததோ எதிர்த்ததோ இல்லை. மாறாக அமர்நாத் யாத்திரிகர்களை நாங்கள் உபசரிக்கவே செய்கிறோம். அமர்நாத் யாத்திரை செல்லும் வழியெங்கும் வாழ்பவர்கள் இசுலாமியர்களே. எங்களது ஆயுதப் போராட்ட காலத்திற்கு முன்பு மிகக் குறைவான மக்களே வந்துகொண்டிருந்தனர். ஆயுதப்போராட்ட காலத்தில் மிக அதிகமான யாத்திரிகர்களை இந்திய அரசு அனுப்பியது; எனினும் எந்தவித துன்புறுத்தலும் எங்களால் வந்தது கிடையாது. மாறாக சூழலை கெடுத்து அழித்த காரணத்தினால் அழிவு நிகழ்ந்தது. சுற்றுப் புறச்சூழலை அழிக்காதீர்கள் என நீண்டகாலமாக கோரிக்கைவைத்தோம். ஆனால் எங் களைத் தீவிரபயங்கரவாதிகளாக சித் தரிக்க முற்பட்ட இந்திய அரசு சூழலைக் கணக்கில் எடுக்காமல் அழித்தது. இதுவே இன்று பேரழிவாக வந்திருக் கிறது. 1990இல் ஒட்டுமொத்த காசுமீர மும் கடையடைப்பு நிகழ்த்தி ஒரு பெரும் போராட்டத்தினை இந்திய அரசுக்கு எதிராக நடத்திய பொழுது கூட காசுமீர இசுலாமியர்கள் அமர்நாத் யாத்திரீகர் களுக்குக் கடையைத் திறந்து வைத் திருந்தார்கள். உணவும் நீரும், தங்குவ தற்கான உதவியும் செய்தார்கள். அமர் நாத் யாத்திரையை 15 நாட்களில் இருந்து 45 நாட்களாக அதிகரித்து ஒட்டு மொத்த சுற்றுப்புறச் சூழலை அழித்தவர் களே இந்தியர்கள் தான்.

இந்தியர்களுக்குக் காசுமீரிகளின் கோரிக்கைகள் புரிவதும் இல்லை. அவை சொல்லப்படுவதும் கிடையாது. காசுமீரில் இந்து-இசுலாமியர் பிரச்சி னை கிடையாது. எங்களுக்கு இந்தியா என்பது ஆக்கிரமிப்பாளர். எங்களுக் கும் சராசரி இந்திய மக்களுக்கும் எந்தவித பிரச்சினையும் கிடையாது. 1990க்கு முன்புவரை இந்தியாவெங் கும் இருக்கும் தொழிலாளர்கள் காசுமீ ரத்தில் வேலை செய்திருக்கிறார்கள். இன்றும் கூட பீகாரில் இருந்து தொழி லாளிகள் பெருமளவில் வருகிறார்கள். எங்களுக்கு இந்தியாவின் ஏகாதிபத்தி யமே பிரச்சினை, சராசரி இந்தியர்களல்ல.

இந்திய அறிவாளர்கள் மற்றும் அறிவுச் செயல்பாட்டாளர்கள் தேசிய இனப் பிரச்சினையை அங்கீகரிக்கிறார்களா?

அவர்களிடத்தில் சிக்கல் இருக்கிறது. அவர்கள் கூட காசுமீரப் பிரச்சினையை மனித உரிமையாக மட்டுமே பார்க்கிறார்கள். நான் ஒருமுறை நேரடியாக அவர்களிடத்தில் ஒரு கூட்டத்தில் பேசும் பொழுது கேட்டேன், “காசுமீர விடு தலையை அங்கீகரிக்கிறீர்களா?” என்று. அமைதியே எனக்குப் பதிலாக கிடைத்தது. இது தமிழீழ விடுதலைக்கும் பொருந்தும். தேசிய அளவிலான செயல்பாட்டாளர்கள் தேசிய இனப்பிரச் சினையை அங்கீகரிப்பதில் தயக்கம் காட்டவே செய்கிறார்கள். இது நம்மைப் போன்ற தேசிய இனங்கள் அனைத் தும் எதிர்கொள்கிற பிரச்சினை. இதை எதிர் கொண்டு கடக்கவேண்டும். தேசிய இனங்களுக்கிடையிலான ஒற்று மையே இந்த செயல்பாட்டளர்களை வெல்லவும், இந்திய அரசினைத் தனி மைப்படுத்தவும் உதவும்.

தமிழகத்தினைப் பொறுத்தவரை தமிழர்களின் ஒன்றுதிரண்ட குரலுக்குப் பயந்தே இந்தத் தமிழக அரசு உதட்டளவில் வேலை செய்கிறது. நேர்மையான அரசாக இருந்திருந்தால் மீனவர்கள் கொல்லப்படுவதற்கு, தாக்கப்படுவதற்கு எதிராக இந்திய அரசினைக் கடும் நெருக் கடிக்குள்ளாக்கி இருக்கவேண்டும். 900 மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் எனக் கேள்விப்பட்டேன். இது அதிர்ச்சி அளிக்கக் கூடியது.190 மும்பைவாசிகள் கொல்லப்பட்டதை தேசியபிரச்சினையாக மாற்றினார்கள். 900 பேர் அதுவும் வேறொரு நாட்டினால் கொலை செய்யப்பட்டதை தேசியப் பிரச்சினையாக மாற்றாமல் தமிழக அரசியல்வாதிகள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இந்திய அரசு தமிழர்களை இவ்வாறு ஒடுக்குகிறது. ஏனென்றால் குஜராத் மீனவர்களைப் பாகிஸ்தானியர்கள் கொலை செய்வதில்லை, மாறாகக் கைது செய்கிறது. இந்திய அரசின் தூதரகம் அவர்களை மீட்கிறது. இந்திய அரசின் இந்த மௌனம் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது. நான் முழுமையாகத் தமிழர்களின் பக்கமே நிற்கிறேன். நாம் ஒன்றாக நிற்கவேண்டிய காலமாக இந்தக் காலம் இருக்கிறது.

Pin It