விளக்குமாற்றுக் கட்டைக்குப் பட்டுக் குஞ்சம் கட்டுவது போல் சாதி வெறிக் கொலைகளுக்கு மதிப்பான ஒரு பெயர் சூட்டியுள்ளார்கள். அதுதான் கவுரவக் கொலை! ஆதிக்கச்சாதிகளைச் சேர்ந்த அறிவாளிகள்தாம் “கவுரவக் கொலை” என்ற சொற்கோவையைக் கட்டமைத்திருப்பார்கள் என்று கருத இடமுண்டு. சாதிவெறியின் கொடூரத்தைக் குறைத்துக் காட்ட, அவர்களுக்குப் புதிய சொற்கோவை தேவைப்பட்டிருக்கும்.

நாயக்கன் கொட்டாய் - நத்தம் குடியிருப்பு இளவரசன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பதை முடிவு செய்ய ஆராய்ச்சிகள் தேவைப்படலாம். ஆனால் அவன் சாதிவெறிக்குப் பலியானான் என்பதற்கு ஆராய்ச்சியோ – சோதனைகளோ தேவையில்லை. இளவரசன் சாவுக்குப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமைதான் காரணம் என்று உறுதி செய்வதற்குப் புதிய சான்றுகள் தேவையில்லை. அக்கட்சித் தலைவர்களின் மேடைப் பேச்சுகள் - களச்செயல்பாடுகள் ஆகியவையே போதுமான சான்றுகளாகும்.

தனது சுவரொட்டிகளில், துண்டறிக்கைகளில், வெளியீடுகளில் காரல் மார்க்சு – பெரியார் - அம்பேத்கர் படங்களைப் போட்டுக் கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சித் தலைமை, ஒடுக்கப்பட்ட சாதிகள் அல்லாத ஒரு சாதிக் கூட்டணியை உருவாக்கி அதற்குத் தலைமை தாங்குகிறது. பார்ப்பனர்களைத் தங்கள் கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்க்க மாட்டோம் என்று ஒளிவுமறைவின்றி உரத்து முழங்கி வந்த பா.ம.க. தனது சாதிக் கூட்டணியில் பிராமணர் சங்கத்திற்கு முதலிடம் தந்துள்ளது. மாமல்லபுரத்தில் கடந்த ஏப்ரல் 25 ஆம் நாள்(சித்திரை-12 முழுநிலவு நாள்) நடந்த வன்னியர் பெருவிழாவில் முதலில் பேசிய சாதிச் சங்கத் தலைவர் பிராமணர் சங்கத்தைச் சேர்ந்தவர்.

அனைத்து சாதிகளுக்கும் அதனதன் மக்கள் தொகை விகிதத்திற்கேற்ப ஒதுக்கீடு வழங்கும் தொகுப்பு முறை இடஒதுக்கீடுக் கோரிக்கை எழுப்பி, சாதி மறுப்புத் திருமணங்களுக்குத் தலைமை தாங்கி, அம்பேத்கர் சிலைகளைத் திறந்து வைத்து “சமூகநீதிக் காவலர்” என்று சிறப்புப் பட்டம் பெற்ற மருத்துவர் இராமதாசு அவர்கள், ஒடுக்கப்பட்ட சாதிகளில் பிறந்தோருடன் வன்னிய சாதி இளைஞர்கள் காதல் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று போராடத் தொடங்கினார். அதற்கு “நாடகக்காதல்” என்று பெயர் சூட்டினார். “உண்மைக்காதல்” என்றால் ஆதரிப்போம் என்று சொல்லவில்லை.

ஒடுக்கப்பட்ட பிரிவாருடன் ஏற்படும் காதல் திருமணம் அனைத்துமே நாடகக் காதல் வகைப் பட்டவை என்பது அவர் வரையறுப்பு. வன்னியப் பெண்களிடம் பணம் பறிப்பதற்காக, தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் நடத்தும் மோசடிக் காதல் அது என்று வரையறுத்தார். “மேல் சாதி” பெண்களை மயக்குவதற்காக ஜீன்ஸ் பேண்ட், கூலிங்கிளாஸ், முகப்பூச்சு எனத் தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் ஒப்பனை செய்துகொள்கிறார்கள் என்றார்.

தாழ்த்தப்பட்ட வகுப்பினருடன் மட்டுமல்ல வன்னியரல்லாத எந்தச் சாதியுடனும் திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற எண்ணம் உருவாகக் கூடிய வகையில்தான் பா.ம.க.வின் பரப்புரையும் தன்சாதிக் கட்டுப்பாடுகளும் அமைந்தன. சாதி அரசியல் நடத்தி பதவிகளையும் அரசு அதிகாரத்தையும் அடைந்த பா.ம.க.வினரைப் பார்த்து மற்ற “மேல்” சாதி அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் நாக்கில் நீர் ஊறியது. பா.ம.க.வின் தலைமையை ஏற்று சாதிக் கூட்டணியில் அவர்கள் இணைந்தனர். காதல் திருமணம் கலப்புத் திருமணம் ஆகியவற்றிற்கெதிராகத் தங்களின் நாக்குப் பீரங்கிகளைத் திருப்பினர். கொங்கு வேளாளர் பிரிவினர், தேவர் பிரிவினர் எனப் பல சாதிப் பிரிவினர் பா.ம.க.வின் தலைமையில் தமிழகமெங்கும் தன் சாதிப் பெருமைகளைத் தம்பட்டம் அடித்தனர். ஒடுக்கப்பட்ட சாதிகளுக்கெதிராக அனல் கக்கினர். தீண்டாமைக் குற்றங்களுக்கெதிரான வன் கொடுமைச் சட்டத்தை நீக்க வேண்டும் என்று முழங்கினர்.

இவர்களின் சாதிவெறிப் பரப்புரை, அவரவர் சாதியில் உள்ள ஒரு பகுதி மக்களைத் தீவிரப்படுத்தியது. ஆனால் அச்சாதிகளில் பிறந்த அனைவரும் அவர்களின் சாதிவெறிப் பரப்புரைக்குப் பலியாகிவிடவில்லை. இப்போக்கு தவறானது என்று சாடுவோரும் அச்சாதிகளில் கணிசமாக உள்ளனர். தேர்தல் தோல்வி - மருத்துவர் இராமதாசின் குடும்ப அரசியலை சகித்துக் கொள்ள முடியாமை ஆகியவற்றால் சோர்ந்து கிடந்த பா.ம.க. உறுப்பினர்களிடையேயும் ஆதரவு சக்திகளிடையேயும் “நாடகக் காதல்” பற்றிய நாடக, வசனம், சுறுசுறுப்பை உண்டாக்கியதைக் கண்டார் மருத்துவர். “இனி நமது அரசியல் குரு காடுவெட்டிக் குருதான்” என்று முடிவு கட்டினார் முன்னாள் சமூகநீதிக் காவலர்.

இவர்களின் சாதித் தீவிரவாத அரசியலுக்குத் தீனி போடும் நிகழ்வாக இளவரசன் - திவ்யா சாதி மறுப்புத் திருமணம் அமைந்தது. பயன்படுத்திக் கொண்டனர். பறையர் வகுப்பைச் சேர்ந்த இளவரசனும் வன்னியர் வகுப்பைச் சேர்ந்த திவ்யாவும் காதல் திருமணம் செய்து கொண்டதை முறியடித்துப் பாடம் புகட்டுவதன் மூலம் ஒட்டு மொத்தமாக சாதிமறுப்புத் திருமணங்களுக்கு முடிவு கட்டலாம் என்று சாதித் தீவிரவாதிகள் நினைத்தார்கள்.

இவர்கள் கொடுத்த “தன்மான” நெருக்கடியால் திவ்யாவின் தந்தையார் – அப்பகுதி ஒடுக்கப்பட்ட மக்களிடம் நற்பெயர் பெற்றிருந்த நாகராசன் – தற்கொலை செய்து கொண்டார்.

இளவரசன் – திவ்யா திருமணத்திற்கு வரலாறு காணாத பாடம் புகட்டத் திட்டமிட்டு, நத்தம் குடியிருப்பு, அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகியவற்றில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் முந்நூறு வீடுகளைக் கொள்ளையடித்து, கொளுத்தி, இடித்துத் தகர்த்து அழித்தனர்.

இந்த அழிவுகள் உயிரிழப்பு ஆகியவற்றிற்குப் பிறகாவது சாதித் தீவிரவாதிகள் ஒதுங்கியிருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் எடுத்த சபதத்தை நிறைவேற்றப் பல்வேறு வழிகளில் செயல்பட்டனர். திவ்யாவின் தாயாருக்கு நெருக்கடி கொடுத்தனர். உடல் நலமில்லாத தம்மை ஒரு முறை வந்து பார்த்துவிட்டுப் போகும்படி தாயார் மகளை அழைத்தார். பார்த்துவிட்டுத் திரும்பும் மனநிலையில் இருந்த திவ்யாவின் மனதை கரைத்து, குழப்பி மீண்டும் இளவரசனுடன் சேர்ந்து வாழமாட்டேன் என்று ஊடகங்களிடம் சொல்லும் அளவுக்கு அவரை மாற்றிவிட்டனர். அவ்வாறு திவ்யா உறுதிபடத் தெரிவித்த மறுநாள் இளவரசன் பிணமானார்.

திவ்யாவின் காதல் உண்மையானது, உறுதியானது. அதில் அவரிடம் நாம் குறைகாணவில்லை, ஆனால் அனுபவக் குறைவான அந்த இளம் பெண்னை திட்டமிட்டுச் சூது மதியாளர்கள் சூழ்ந்து கொண்டு குழப்பிவிட்டனர். தனது காதலால் தந்தையை இழந்தோம், மூன்று கிராமங்களில் பலநூறு வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, தமிழ்நாடே சாதித்தீயால் பாதிக்கப்படும் பதற்றம் ஏற்பட்டுள்ளது, குடும்பத் தலைவரை, இழந்த தாயாரின் - தம்பியின் எதிர்காலம் என்ன என்பன போன்ற கொன்ற ழிக்கும் கவலைக் குழிக்குள் அப்பெண் வீழ்த்தப்பட்டாள். ”பெரும் குற்றம் செய்துவிட்டேனோ, இத்தனை இழப்புகளுக்கும் நெருக்கடிக்கும் நான்தான் காரணம் என்ற பெரும்பழி வந்து சேருமோ” என்ற வினாக்கள் அவ்விளம் பெண்ணை துளைத்திருக்கும். அதனால், காதல் கணவனைப் பிரிவதாக அறிவித்திருப்பார்.

ஒரு வாதத்திற்காக மருத்துவர் இராமதாசு அவர்களிடம் நாம் கேட்கும் வினா இதுதான் : இளவரசன் – திவ்யா திருமணத்தில் நாடகக் காதல் நடத்தியவர் யார்? திருமண அகவை அடையாத தாழ்த்தப்பட்ட வகுப்பு சிறுவனைக் காதலித்து, அழைத்துப் போய் தாலிகட்ட வலியுறுத்தி, திருமணம் முடித்துப் பல மாதங்கள் சேர்ந்து வாழ்ந்து, பின்னர் அவனைக் கைவிட்டு விட்டு, தன் வீட்டோடு போய்விட்ட 21 அகவைத் திவ்யாதான் நாடகக் காதல் நடத்தினார்; தாழ்த்தப்பட்ட வகுப்பு இளைஞனை மேல்சாதிப் பெண் ஏமாற்றிவிட்டார் என்று கூறலாம் அல்லவா? நாம் அவ்வாறு கூறப் போவதில்லை. மருத்துவர் இராமதாசு அவர்களின் நாடகக் காதல் தத்துவம் அவருக்கே எதிராக இளவரசன் – திவ்யா திருமணத்தில் செயல்படுகிறது என்பதை எடுத்துக்காட்டவே இதனைக் குறிப்பிட்டோம்.

தமிழ்நாட்டு அரசியல் சூழ்நிலை, சாதிவெறிசக்திகள் குதியாட்டமும் கொலை வெறியாட்டமும் போடுவதற்கு ஏற்றதாக உள்ளது. இங்கு சாதிமறுப்புத் திருமணங்களுக்காகப் பலியானோர் பலர். ஆனால் வெளியுலகக் கவனத்திற்கு வந்தவை குறைவு. 2008-இல் பரமக்குடி திருச்செல்வி, கோவை சிற்றரசு, 2009-இல் பழனி-ஸ்ரீபிரியா, 2010-இல் ஈரோடு இளங்கோ, 2011-இல் தருமபுரி சுகன்யா, திருவண்ணா மலை துரை, 2012-இல் கடலூர் கோபாலகிருஷ்ணன் என காதலுக்காகப் பலியானோர் சிலர் மட்டுமே கவனத்திற்கு வந்துள்ளனர்.

தருமபுரியில் மூன்று கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்களின் முந்நூறு வீடுகளுக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்ட பின்னர்தான் மருத்துவர் இராமதாசு அவர்கள் தாழ்த்தப் பட்டோர் அல்லாத தமது சாதிக் கூட்டணிக் கூட்டங்களை தமிழ்நாடெங்கும் வீச்சாக நடத்தி, சாதிமறுப்புத் திருமணங்களை தாக்கி வந்தார். தீண்டாமைக்கெதிரான வன்கொடுமைச் சட்டத்தை எதிர்த்து வந்தார். இவ்வகையான சாதியப் பரப்புரைக்காக, மருத்துவர் இராமதாசு வருவதற்குச் சில மாவட்டங்களில் தடைகள் விதிக்கப்பட்டன. அவ்வாறு தடை விதித்ததை எதிர்த்தார் தி.மு.க. தலைவர் கருணாநிதி.

அடுத்து கடந்த மே மாதம் நடந்த மாமல்லபுரம் வன்னியர் சங்க மாநாட்டை ஒட்டி பா.ம.க.வினர் அரங்கேற்றிய மரக்காணம் வன்முறை, மாமல்லபுரம் மாநாட்டில் காடுவெட்டிக் குரு சாதிவெறி வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது ஆகியவற்றை ஒட்டி அவர்கள் மீது வழக்குகள் பதிவு – தளைப் படுத்துதல் என நிகழ்வுகள் தொடர்ந்தன். இவ்வாறு நெருக்கடியில் சிக்கியிருந்த பா.ம.க.வை இதுதான் தருணம் என்று கூட்டணிக்கு அழைத்தது தி.மு.க.

கடைசியாக கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவைத் தேர்தலில் வாக்குக் கேட்டு, பா.ம.க.வை அணுகியது தி.மு.க. தமிழகத்தில் உள்ள இருபெரும் கட்சிகளில் ஒன்றாகவும். பெரியாரின் விரல்பிடித்து வளர்ந்த கருணாநிதியின் தலைமையைக் கொண்டுள்ளதுமான தி.மு.க. சாதி வன்முறைக்குக் காரணமான பா.ம.க.விடம் கொண்டுள்ள இணக்கப் போக்கிற்கு இவையெல்லாம் சில எடுத்துக்காட்டுகள்.

பா.ம.க.வுடன் “வாழும் பெரியார்” – “வாழும் வள்ளுவர்” – கருணாநிதி கூட்டணி காணத் துடிப்பதேன்? பா.ம.க.விடம் வன்னியர் வாக்கு வங்கி இருக்கிறது. அதைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற தன்னல வெறியை தவிர வேறென்ன கொள்கை உத்தி இதில் அடங்கியிருக்கிறது? எரிகிற வீட்டில் பிடுங்கியது ஆதாயம்!

அடுத்த நிலையில் உள்ள தே.மு.தி.க., காங்கிரசு போன்ற கட்சிகள், பா.ம.க. அமைத்த சாதிக் கூட்டணியை – அதன் சாதி வாதங்களை என்ன விமர்சனம் செய்தன? எந்த அளவு எதிர்த்தன? ஒன்றுமில்லை. சாதிவாதம் தலை விரித்தாடுவதற்கேற்ற சூழலைப் பதவி அரசியல் கட்சிகள் உருவாக்கி வைத்துள்ளன. ஏற்கெனவே அ.இ.அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழகக் கட்சிகள் சாதி அடிப்படையிலான வாக்கு வங்கிகளை அதனதன் ஆற்றலுக்கேற்கப உருவாக்கி வைத்துள்ளன. எனவே பா.ம.க.வை மட்டும் நாம் குறை சொன்னால் அது முழுமையான நேர்மையான திறனாய்வு ஆகாது.

ஒடுக்கப்பட்ட் சாதிகளுக்கென்று உருவாகியுள்ள அரசியல் கட்சிகளும் தங்கள் சாதியினரைத் தனித்தனித் தீவுகளாகத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றன. வேறு யாரும் அதற்குள் நுழைந்துவிடக் கூடாது என்று கருதுகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் பகுசன் சமாஜ் கட்சியும் இளவரசன் பிணத்தைக் கைப்பற்றுவதில் – அதற்கு உரிமை கொண்டாடுவதில் தருமபுரியில் போட்டி போட்டுக் கொண்டுள்ளன. ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் கட்சிகளும் அமைப்புகளும் சாதிவாதச் சூழ்நிலையைத் தக்கவைக்கத்தான் முயல்கின்றனவே தவிர, சாதி ஒழிப்பிற்கு முனையவில்லை. சாதி ஒழிவது தங்கள் தலைமைக்கு – தங்கள் அமைப்பிற்கு ஆபத்து என்று கருதுகின்றன.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் கட்சிகளைச் சேர்ந்தோர் தங்களின் முதல் எதிரியாகக் கருதுவது தமிழ்த் தேசியவாதிகளைத்தாம்! பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு – சாதிவெறிக் கொலை நடந்தால் உடனே தமிழ்த் தேசியவாதிகள் எங்கே என்பர்! தமிழ்த்தேசியம் தோற்றது என்பர். தருமபுரிக் கிராமங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் வீடுகள் எரிக்கப்பட்டால் – இளவரசன் பிணமானால் உடனே, தமிழ்த் தேசியம் எங்கே போனது என்று கேட்கின்றனர். நெடுமாறன் எங்கே, மணியரசன் எங்கே என்று இணையத் தளங்களில் கூவுகின்றனர்.

மூன்று கிராமங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டபோது, தமிழ்த்தேசியவாதிகள் இதைக் கண்டிக்கவில்லை அங்கே வரவில்லை என்று ஆனந்த விகடன் இதழில் செவ்வி கொடுத்தார் தோழர் தொல்.திருமாவளவன். நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி ஆகிய இடங்களில் எரிந்த வீடுகளை அவர் பார்த்துக் கொண்டிருந்த அதே நாளில்தான் நானும் த.தே.பொ.க. தோழர்களும் பார்த்துப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னோம். பின்னர் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மே 17 இயக்கம் முன்னேடுத்த – கண்டன ஆர்ப்பாட்டத்தில் த.தே.பொ.க.வும் பங்கேற்றது.

தமிழ்த் தேசியர்களைப் பார்த்து இவ்வளவு சினத்தோடு கேள்வி எழுப்பும் திருமா அவர்கள், அவர் உறுப்பு வகிக்கும் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தி.மு.க.வைப் பார்த்து, அதன் தலைவர் கருணாநிதியைப் பார்த்து ஒரு கேள்வி கூடக் கேட்டதில்லை. தருமபுரி, மரக்காணம் சாதிவெறி வன்முறைகளுக்கெதிராக தி.மு.க. என்ன இயக்கம் நடத்தியது? என்ன பரப்புரை செய்தது? மாறாக இந்த சாதிவெறியாட்டங்களின் பின்னணியில் உள்ள பா.ம.க.வுடன் கூட்டணி சேர இக்காலத்தில் தி.மு.க. எல்லா முயற்சிகளையும் செய்தது. கனிமொழிக்கு வாக்களிக்குமாறு பா.ம.க.விடம் வேண்டுகோள் விண்ணப்பம் வைத்தது.

திராவிடத்தின் இந்த சந்தர்ப்பவாதத்தைத் தோழர் திருமா ஏன் விமர்சிக்கவில்லை? தி.மு.க.வுடன் இடைவெளி ஏற்படாமல் ஒட்டிக் கொள்ள ஓடிக் கொண்டிருக்கிறாரே ஏன்? பதவி அரசியல்தானே இது! தமிழகத்தின் பெருஞ்சக்தியாக இன்னும் வளர்ச்சியடையாத – இப்போதுதான் வளர்ந்து வருகிற தமிழ்த்தேசியம் என்ன செய்தது என்று கேட்பதில் திருமாவும் தலித்தியவாதிகளும் தீவிரமாக இருக்கின்றனர்.

ஓய்வு பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான சிவகாமி அவர்கள் அண்மையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், “தமிழ், தமிழர் என்கிறார்கள்; அவர்கள் முல்லைப் பெரியாறு அணைக்காகக் கூப்பிட்டால் நாங்கள் போக வேண்டும், காவிரிச் சிக்கலுக்கலுக்காகக் கூப்பிட்டால் நாங்கள் போக வேண்டும், ஈழம் என்று கூப்பிட்டால் நாங்கள் போக வேண்டும், ஆனால் அவர்கள் எங்களுக்காக வரமாட்டார்கள்” என்றார்.

முல்லைப் பெரியாறு, காவிரி, ஈழம் ஆகியவை ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்குத் தொடர்பில்லாத வெளியார் சிக்கல்களா? யாருக்காகவோ இரவலாக வந்து ஒடுக்கப்பட்ட மக்கள் இந்தச் சிக்கல்களில் போராடுகிறார்களா? தமிழ்ச் சாதிகள் அனைத்திற்கும் தமிழ் மக்கள் அனைவர்க்கும் உரிய சிக்கல்கள் இவை! வேளாண்மைக்கும் – குடி நீருக்கும் தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் முல்லைப் பெரியாறு அணை நீர் வேண்டும்; காவிரி நீர் வேண்டும். ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரின் தொப்புள் கொடி உறவுகள்!

தமிழக ஒடுக்கப்பட் மக்களின் தாய்மொழி தமிழ். அவர்களின் தாயகம் தமிழ்நாடு. எனவே தமிழ்த் தேசியம் என்பது ஒடுக்கபடப்ட மக்களுக்கும் உரியது.

தில்லி ஏகாதிபத்தியத்திற்குத் தமிழ்நாடு அடிமைப்பட்டுக் கிடக்கிறது; அது விடுதலை பெற வேண்டும் என்கிறது தமிழ்த்தேசியம்! இந்த அடிமைத்தனத்தின் சமூகவியல் கூறுகள் யாவை?

இந்தி பேசும் வடநாட்டு ‘உயர்சாதியினர்க்கு’ தமிழ்நாட்டு உயர்சாதியினர் அடிமைகள்; இந்தி பேசும் வடநாட்டுப் பிற்படுத்தப்பட்டோக்குத் தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டோர் அடிமைகள்; இந்தி பேசும் வடநாட்டு ஒடுக்கப்பட்டோர்க்குத் தமிழ்நாட்டு ஒடுக்கப்பட்டோர் அடிமைகள்! எப்படி?

அவர்களின் இந்திமொழி தமிழ்நாட்டிற்குள்ளும் ஆட்சிமொழி; இவர்களின் தமிழ்மொழி தமிழ்நாட்டிற்குள்ளும் இந்திக்கு அடிமை மொழி! அவர்கள் ஒன்றிய அரசுத் தேர்வுகளைத் தங்களின் இந்தியில் எழுத முடியும். தமிழர்கள் ஆங்கிலம் அல்லது இந்தி என்ற ஏதாவதொரு அயல் மொழியில் தான் எழுத முடியும்; தங்களின் தாய்மொழியான தமிழில் எழுத முடியாது. தமிழகத்தில் நடுவண் அரசு நிறுவனங்களில் இந்திக்காரர்கள் ஏராளமாக வேலை பார்க்கிறார்கள். இந்தி மாநிலங்களில் உள்ள நடுவண் அரசு அலுவலகங்களில் அதே விகிதத்தில் தமிழர்கள் வேலை பார்க்கிறார்களா? இல்லை.

தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் தலைவர்களை, வட இந்தியாவில் உள்ள தாழ்த்தப்பட்ட – பிற்படுத்தப்பட்ட சாதிகளின் தலைவர்கள் தங்களுக்குச் சமமாகக் கருதுவதில்லை. இவர்களைத் தங்களுக்குக் கீழே உள்ளவர்களாகத்தான் அவர்கள் கருதுகிறார்கள்.

இந்த வேறுபாடுகளெல்லாம் இங்கே உள்ள ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் தலைமைகளுக்கும், தலித்தியவாதிகளுக்கும் தெரியும். தாங்கள் தலைவர்களாக இருப்பதற்கும், பிரமுகர்களாக இருப்பதற்கும் சாதிப் பிரிவினைகள் நீடித்தால்தான் வாய்ப்பிருக்கும் என்பது அவர்களின் அடிமனக்கவலை!

தலித்தியம் பேசுவோர் தமிழ்த்தேசியத்தை எதிர்க்கும் போதெல்லாம் அவர்கள் ஏகாதிபத்தியவாத மான இந்தியத் தேசியத்தை ஆதரிக்கிறார்கள் என்பதே உண்மை! இந்திய தேசியம் நீடித்தால் தான் இந்துத்வா நீடிக்கும்; இந்துத்வா நீடித்தால் தான் சாதி நீடிக்கும். சாதி நீடித்தால்தான் தங்கள் தலைமையும் பிரமுகத்தனமும் நீடிக்கும் என்று அவர்கள் கருதுகிறார்களோ? தன்னல நோக்கில் தாங்கள் பிறந்த சொந்த தமிழ் இனத்திற்குத் துரோகம் செய்கிறார்கள்.

தமிழ்த்தேசியம் சாதி ஒழிப்பைத் தனது இலக்காகக் கொண்டுள்ளது. மனிதர்கள் அனைவரும் சமம்; தமிழர்கள் அனைவரும் சமம் என்பது தமிழர் அறம்; இதுவே தமிழ்த் தேசியத்தின் சமூகவியல் சாரம்!

திராவிடம் பேசும் சிலர் தருமபுரி நிகழ்வுகளை வைத்துத் தமிழ்த்தேசியத்தைத் தாக்குகின்றனர். அண்மையில் தொலைக்காட்சி விவாதமொன்றில் பங்கெடுத்த திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள், “தமிழ்த்தேசியம் பேவோர் தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தி, அவரது செல்வாக்குக் குறையும்படிச் செய்து விட்டனர். அதனால் தான் சாதி வன்முறைகள் நடக்கின்றன” என்றார்.

தந்தை பெரியார் உயிரோடிருக்கும் போது, அண்ணா ஆட்சி நடத்தும்போது 1968 டிசம்பர் 25 அன்று கீழ்வெண்மணியில் மேல்சாதிக்கார்களால் நாற்பத்து நான்கு ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் ஒரு குடிசைக்குள் வைத்துக் கொள்ளுத்திக் கொல்லப்பட்டனரே, அப்போது திராவிடம் தானே கோலோச்சியது?

வர்ண – சாதி ஆதிக்க எதிர்ப்பு, பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு ஆகியவற்றில் பெரியாரின் மகத்தான பங்களிப்பை த.தே.பொ.க. ஒருபோதும் மறுத்ததில்லை. அதே வேளை தமிழினம், தமிழ்மொழி குறித்த அவரின் பிழையான பார்வையை மறுக்கத் த.தே.பொ.க. ஒருபோதும் தயங்கியதில்லை. ஓர் இனம், அதன் மொழி ஆகியவற்றிற்கு எதிரான பார்வையை வைத்துக் கொண்டுள்ள ஒருவர் அவ்வின மக்களுக்க்காக இதரத் துறைகளில் ஆற்றும் முற்போக்கான பங்களிப்பு – அதன் முழுப்பலனை அம்மக்களுக்குத் தராது.

தமிழ் மக்களை வர்ண சாதி எதிர்ப்பில் ஓரடி முன்னால் எடுத்து வைக்கச் சொல்லும் பெரியாரின் கொள்கை, அவரின் பிழையான மொழி - இனக் கொள்கை ஓரடி பின்னால் இழுத்துவிடும் வேலையைத்தான் செய்யும். இன்றைக்குத் தமிழர் ஒற்றுமையைப் பேச வேண்டிய நிலையில் “திராவிடர்” என்ற கருத்தியல் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோருடன் தமிழர்களையும் இணைத்துத் தமிழ் மக்களிடையே ஓர் இனக் குழுப்பத்தைத்தான் உண்டாக்கியிருக்கிறது. பெரியாரியவாதிகள் இனியாவது திராவிடக் குழப்பத்தைக் கைவிட்டு, தமிழர் என்ற ஓர்மையில் பெரியாரின் இதர முற்போக்குக் கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுகோள்.

பெரியாரை விமர்சிப்பதைத் “தெய்வக் குற்றம்” போல் பார்க்கக்கூடாது. பெரியாரை விமர்ச்சித்த தால்தான் தருமபுரி நிகழ்வுகள் நடந்துவிட்டன என்று கூறுவது, பகுத்தறிவுப் பக்தி மார்க்கம் ஆகும். இது சமூக அறிவியல் பார்வை ஆகாது. மேலும், தமிழ்நாட்டில் 45 ஆண்டுகளுக்கு மேல், அரசியல் தலைமைப் பாத்திரம் வகிக்கும் பெரியாரின் கருத்தியல் வழித்தோன்றல்களின் சாதனைகள் தாம் என்ன என்ற வினாவையும் எழுப்பும்.

இனி என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்க வேண்டும்.

1. தாழ்த்தப்பட்டோர் அல்லாத சாதிக் கூட்டணி அமைத்துக் கொண்டு, சாதிவெறியைத் தூண்டிப் பொது மேடைகளில் பேசி வந்த அனைவர் மீதும் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

2. தமிழக அரசு அமைத்துள்ள நீதிபதி சிங்காரவேல் ஆணையத்தின் மீது சிலர் ஐயப்பாடு எழுப்பியுள்ளதால், அவரை அமர்த்தாமல், உயர்நீதிமன்றப் பணியில் இருக்கும் வேறொரு நீதிபதியைக் கொண்டு ஆணையம் அமைக்க வேண்டும்.

அந்த ஆணையம் இளவரசன் சாவு பற்றி விசாரித்து உண்மை நிலையைக் கண்டறிந்து வெளிக் கொணர வேண்டும். அத்துடன் தமிழ்நாட்டில் சாதி வெறியர்களின் நடவடிக்கைகளைத் தடுக்க, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, சமூக நல்லிணக்கத்தை வளர்க்கப் பரிந்துரைகள் வழங்குமாறு விசாரணை வரம்பை விரிவுபடுத்த வேண்டும்.

3. சாதி மறுப்புத் திருமணங்களுக்குப் பாதுகாப்பளிப்பது, சாதி இழிவுகளைப் போக்க நடவடிக்கை எடுப்பது தொடர்பாக 1998ஆம் ஆண்டு திருத்துறைப்பூண்டியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய “தீண்டாமை ஒழிப்பு – தமிழர் ஒற்றுமை” மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில் சிலவற்றைத் தமிழக அரசின் ஆய்வுக்கும் தமிழ் மக்களின் பார்வைக்கும் முன்வைக்கிறோம்.

அ. காவல்துறையில் குற்றவியல் பிரிவு தனியே இருப்பது போல் காதல் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் தொடர்பாக தனிப்பிரிவு உருவாக்க வேண்டும். பெண்ணைக் கடத்திக் கொண்டுபோய் விட்டார்கள் என்றோ உரிய அகவை அடையும் முன் நடத்தப் போகும் திருமணம் என்றோ வரும் புகார்களை இத்தனிப்பிரிவு மட்டுமே விசாரிக்க வேண்டும். புகார் வந்தால் உடனே வழக்காகப் பதிவு செய்யாமல் அந்த ஆணையும் பெண்ணையும் விசாரித்து உண்மை அறிந்து அதன்பின் நடவடிக்கை பற்றி முடிவு செய்ய வேண்டும். உரிய அகவை – இருவர் விருப்பம் ஆகியவை சரியாக இருந்தால் காவல் நிலையத்திலோ அல்லது காவல் துறையின் உதவியுடனோ திருமணம் நடத்தப்பட வேண்டும்.

உரிய அகவை இல்லை ஆனால் பெண்ணின் விருப்பத்துடன் திருமணம் நடந்தது என்றால், பிரித்து விட வேண்டுமே தவிர கடத்தல் வழக்குப் பதிவு செய்யக்கூடாது. அப்போதும் அப்பெண்ணை வீட்டுக்கு அனுப்புவதா அல்லது காப்பகத்திற்கு அனுப்புவதா என்பதை அப்பெண்ணின் விருப்பத்துக்கு இசைய செய்ய வேண்டும். காப்பகங்கள் முறையாக நடப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

ஆ. சாதி அடிப்படையிலான தொழில்களாக – கிராமங்களில் செத்த மாடு தூக்குதல், பிணம் புதைத்தல் அல்லது எரித்தல் ஆகியவை உள்ளன. இந்நிலையை மாற்றி ஊராட்சிக்கு இரண்டு சுகாதாரத் தொழிலாளிகளை இட ஒதுக்கீடு அடிப்படையில் அனைத்து சாதியிலிருந்தும் அமர்த்த வேண்டும்.

இ. அரசு, நீதிமன்றம், உள்ளாட்சி, நாட்டாமை, கிராம அமைப்பு ஆகியவை தங்களின் அறிவிப்புகளைத் தண்டோரா (டாம்டாம்) போட்டு மக்களுக்குத் தெரிவிக்கும் முறை தடை செய்யப்பட வேண்டும். குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்தாம் தண்டோரா போடும் வேலையைச் செய்கிறார். அவ்வேலையைச் செய்யுமாறு அச்சாதியில் பிறந்தவர் நிர்பந்திக்கப்படுகிறார். இக்கொடுமையை அகற்றத் தண்டோரா போடும் முறையை நீக்கி, நவீன வழிகளில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

ஈ. சாதி மறுப்பு, காதல் திருமணம் செய்து கொண்டோரில் பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆண் அல்லது பெண்ணுக்கு அரசு அலுவலகங்கள் அல்லது அரசுத் தொழிலகங்களில் கல்விக்கேற்ற வேலை கட்டாயம் தர வேண்டும்.

உ. வீட்டுவசதிவாரியக் குடியிருப்புகளில் 25 விழுக்காடு வீடுகள் பட்டியல் வகுப்பார்க்குத் தர வேண்டும். கிராமப்புறங்களுக்கும் இத்திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்.

ஊ. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டோருக்கு தனி ஒதுக்கீடு வழங்க இந்திய அரசு சட்டமியற்ற வேண்டும்.

இளவரசன் சாவு, தமிழர்களின் கண்களைத் திறக்கட்டும்! சாதிவெறியை சவக்குழிக்கு அனுப்பட்டும்! சாதி வெறியை ஒழிப்பதில் அனைத்து சாதிகளிலும் உள்ள சனநாயக ஆற்றல்கள் ஒன்றிணையட்டும்!

மேற்கண்டவற்றைச் செயல்படுத்தும்போதே, நாம் அனைவரும் தமிழர்கள் – ஒரு மரக்கிளைகள், ஒரு குலைக் காய்கள் என்ற தமிழ்த் தேசிய இன உணர்வை வளர்க்க வேண்டும். மனதில் இந்த உணர்வு வளர்வதற்கான புறநிலைத் தேவை இருக்க வேண்டும்.

தமிழினம் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப்பட்டிருப்பது, காவிரி - முல்லைப்பெரியாறு – பாலாறு உரிமைகள் பறிக்கப்பட்டிருப்பது, மீனவத் தமிழர்கள் உயிரும் உரிமையும் பறிக்கப்படுவது, ஈழத்தமிழர்கள் இந்தியாவின் பங்களிப்புடன் இன அழிப்பிற்கு உள்ளானது என பற்பல புறநிலை நிகழ்வுகள் – தமிழர்கள் என்பதால் நாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்ற உணர்வைத் தூண்டும். தமிழ் நாட்டின் விடுதலை தேவை என்பதை உணர்த்தும். இதுவே தமிழ்த்தேசியத்தின் அடித்தளம்.

தமிழர்கள் மனதிலிருக்கும் “சாதி” என்ற அழுக்கை நீக்கத் ‘தமிழ்த்’ தேசியமே மாமருந்து! அதே வேளை சாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிராகக் களம் காண்பதும் தமிழ்த் தேசியத்தின் பணி!

இளவரசன் சாவு, தமிழர்களின் கண்களைத் திறக்கட்டும் சாதி வெறியை சவக்குழிக்கு அனுப்பட்டும்! சாதி வெறியை ஒழிப்பதில் அனைத்து சாதிகளிலும் உள்ள சனநாயக ஆற்றல்கள் ஒன்றிணையட்டும்!