இலாபத்துடன் இயங்கி வரும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி அனல் மின்நிறுவனத்தின் (என்.எல்.சி.) 5 விழுக்காட்டுப் பங்குகளை, தனியாரி டம் விற்பது என கடந்த 21.06.2013 அன்று நடுவண் அமைச்சரவை முடிவெடுத்தது. நடுவண் அரசின் இம் முடிவுக்கு எதிராக நெய்வேலி சுரங்கத் தொழிலா ளர்கள் மற்றும் அனல் மின் நிலையத் தொழிலாளர் கள், சூலை 3-லிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தை முறியடிக்க முனைந்த என்.எல்.சி. நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு மனு செய்தது. வேலை நிறுத்தம் அங்கீ கரிக்கப்பட்ட உரிமை தானேத் தவிர, அது அடிப் படை உரிமையல்ல என வாதிட்டது என்.எல்.சி. நிர்வாகம். உயர்நீதிமன்றமும், போராட்டத்திற்கு தடை விதித்து ஆணையிட்டது.

எனினும், நீதிமன்ற உத்தரவை மீறி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர் தொழிலா ளர்கள். நிரந்தரப் பணியாளர்கள் மட்டுமின்றி, ஒப்பந்த (கான்ட்ராக்ட்) பணியாளர்களும், சேவைப் பணியாளர்களும் என ஒட்டுமொத்த நெய்வேலி அனல் மின்நிலையத் தொழிலாளர்களும், ஏறக்குறைய அனைத்துத் தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கெனவே, தமிழகத்தின் இயற்கை வளமான காவிரிப் படுகையில் கிடைக்கும் பெட்ரோல் வளங் களை, வடநாட்டு ரிலையன்ஸ் அம்பானி களுக்கு விற்றுவிட்டது இந்திய அரசு. தற்போது, மற்றொரு வளமாகக் கிடைத்துக் கொண்டுள்ள பழுப்பு நிலக்கரியையும், அதைக் கொண்டு நடைபெறும் மின் உற்பத்தி நிலையத்தையும் படிப்படியாக தனியார் மயமாக்கி பன்னாட்டு - வடநாட்டு முதலாளிகளிடம் அதை முழுவதுமாகத் தாரை வார்க்கும் முயற்சியி லேயே இந்திய அரசு பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வருகின்றது.

இந்திய அரசு அவ்வப்போது, “நிதிப் பற்றாக் குறையை சமாளிக்க” என சொல்லிக் கொண்டு, இலாபத்துடன் இயங்கி வரும் அரசுத் துறை பொது நிறுவனங்களின் பங்குகளை தனியாரிடம் விற்றுப் பணம் திரட்டுகின்றது. இதில் பெறப்படும் தொகை, மக்களின் நலத் திட்டங் களுக்கு செலவிடப்படும் எனவும் கதையளக்கிறது. தற்போது கூட, நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 5 விழுக் காட்டுப் பங்குகளை விற்பதன் மூலம் சற்றொப்ப 466 கோடி ரூபாய் நிதி கிடைக்கும் என இந்திய அரசு தகவல் வெளியிடுகின்றது.

நடப்பு நிதியாண்டான 2012-2013-இல் மட்டும், சற்றொப்ப 5 இலட்சத்து 28,163 கோடி ரூபாயை தனியார் நிறுவனங்களுக்கு வரிச் சலுகையாக அளித்துள்ளது இந்திய அரசு. இது 2005--2006ஆம் நிதியாண்டில் கொடுக் கப்பட்ட வரிச்சலுகைகளை விட 2 மடங்கு பெரிய தொகையாகும். (காண்க : தி இந்து, எழுத்தாளர் சாய்நாத் - பத்தி, 16.03.2013).

இவ்வளவு பெருந்தொகையை முதலாளிகளுக்கு வரிச்சலுகை யாக அளிக்கும் இந்திய அரசு, வெறும் 466 கோடி ரூபாய் நிதி யைத் திரட்டுவதற்காக என். எல்.சி. நிறுவனத்தின் பங்குகளை தனி யாரிடம் விற்கத் துடிப்பதிலி ருந்தே, இதன் தனியார் மய உள்நோக்கம் தெளிவாகிறது.

நடுவண் அரசின் கட்டுப் பாட்டில், ‘நவரத்ன’ நிறுவனங்கள் எனப்படும் இலாபகரமாக இயங் கும் 9 நிறுவனங்களுள் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC என்.எல்.சி.) முக்கியமான ஒன்றா கும். கடந்த ஆண்டு மட்டும் சற் றொப்ப 1400 கோடி ரூபாய் இலாபமாக அரசுக்கு வருமானத்தை, இந்நிறுவனம் ஈட்டித் தந்தது.

இவ்வாறு இலாபத்தில் இயங்கி வரும் அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாரிடம் விற்று, அந்நிறு வனங்களை படிப் படியாக தனியார் மயமாக்கி விடும் முயற்சி புதிதானதும் அல்ல. இந்திய அரசு அதைத் தொடர்ந்து செய்தே வருகின்றது. இந்த மோச டித் தனத்தை அரங்கேற்றவே, செபி என்றழைக் கப்படும் இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் (SEBI - Securities and Exchange Board of India), என்ற அமைப்பையும் நடத்தி வருகின்றது.
உலகமய, தாராளமயப் பொருளியல் கொள்கைகளை தீவிரமாக செயல்படுத்தி வரும் இந்திய அரசு, முதலாளியப் பங்குச்சந்தை வணிக சூதாட்டத்தின் மூலம்தான் தனது பொருளியல் நிலைமையைக் கணக்கிடுகின்றது. பன்னாட்டு - வடநாட்டுப் பெருமுதலாளிகள் கோலோச்சும் பங்குச் சந்தைகளில் நடைபெறும் முறை கேடுகளை தடுக்கும் வகையிலும், அதை ஒழுங் கமைக்கும் வகையிலும் எனக்கூறி 1992 ஆம் ஆண்டு செபி அமைப்பு உருவாக்கப் பட்டது.

ஆனால், காலப்போக்கில், அவ்வமைப்பு அரசுத்துறை நிறு வனங்களை பங்குச்சந்தை சூதாட் டத்தில் இறக்கும் ‘தரகு’ நிறுவ னமாகவும், பங்குச்சந்தை கவிழ்ந்து விடாமல் இருப்பதற்காக முதலாளி களிடம் சமரசம் பேசும் அமைப் பாகவும் உருவெடுத்தது.

கடந்த 2010ஆம் ஆண்டு சூன் 4அன்று, செபி அமைப்பு தனியார் நிறுவனங்களின் பங்குகளில் குறைந்தபட்சம்25 விழுக் காட்டை அடுத்த 3 ஆண்டுகளுக்குள் பொது மக்களுக்கு விற்க வேண்டுமென விதிமுறை வகுத்தது. இதற்கு தனியார் நிறுவன முதலாளிகளி டம் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், 09.08.2010 அன்றே அது 10 விழுக்காடாக குறைக்கப் பட்டது.

இந்த 10 விழுக்காட்டு மூல தனமும் முழுவதும் சாதாரண மக்களிடம் சென்று விடாமல் பல்வேறு “பினாமி” ஏற்பாடுகள் மூலம் நிறுவனத்தை நடத்தும் தனியார் குழுமங்களே பங்கு களை வாங்கிக் கொள்கின்றன.

அதே போல, அரசின் பொதுத் துறை நிறுவனங்களும் 10 விழுக் காட்டுப் பங்குகளை ‘பொது மக் களிடம் விற்க’ வேண்டுமென அறிவித்தது. இதை, ஆகத்து 8 2013க்குள் முடிக்க வேணடு மெனவும் கெடுவிதித்தது.

செபியின் விதிமுறைகளைக் காரணம் காட்டி, ஏற்கெனவே, என்.எல்.சி. நிறுவனத்தின் பங்கு களில் 5 விழுக்காடு அதில் பணி புரிபவர்களிடம் விற்கப்பட்டு விட்டது. நடுவண் அரசின் மற்றொரு நிறுவனமான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் என்.எல்.சி. நிறுவனத்தின் 1.44 விழுக்காட்டுப் பங்குகளைப் பெற்றுள்ளது. எனினும், அரசு நிறுவனம் வாங்கி யுள்ள இந்த 1.44 பங்குகள் பொது மக்களுக்கு விற்ற பங்குகளின் கணக்கில் வராது என செபி அமைப்பு அறிவித்துள்ளதால் மீதம் 5 விழுக்காட்டுப் பங்கு களை விற்க வேண்மென இந்திய அரசு தீவிரம் காட்டியது.

இந்நிலையில் தான், நடுவண் அமைச்சரவை என்.எல்.சி. நிறுவனத்தின் 5 விழுக்காட்டுப் பங்கு களை வரும் ஆகத்து 8ஆம் நாளுக்குள் ‘பொது மக்களுக்கு’ விற்க வேண்டும் என முடிவெடுத்தது.

“பங்குகளை பொது மக்களுக்கு” விற்பது என்ற சொற்றொடர் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், உண்மையில் அது மக்களுக்கு மிகத் தீங்கை விளை விக்கும் நடவடிக்கையாகும். பொது மக்கள் என்ற பெயரில் ஏற்கெனவே பங்குச் சந்தையில் கோலோச்சும் தனியார் நிறுவனங்களே இப்பங்குகளை வாங்குவார் கள். பங்குச்சந்தை வணிகச் சூதாட்டத்தில் என்.எல்.சி. நிறு வனத்தின் பங்குகளை இறக்கி அதை மறைமுகமாக பன்னாட்டு- வடநாட்டு நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் விற்றுத் தாரை வார்க்கும் தனியார்மய நடவடிக் கையாகும். இது.

தற்போது முன் வைக்கப் பட்டுள்ள என்.எல்.சி. நிறுவனத் தின் 5 விழுக்காட்டு பங்கு விற் பனைமேற்கொள்ளப்பட்ட பிறகு, 88.56 விழுக்காட்டுப் பங்குகளே இந்திய அரசிடம் இருக்கும். அதி லும் பெரும்பகுதி பங்குகளை. காலப் போக்கில் விற்றுவிட்டால், என்.எல்.சி. நிறுவனத்தை முழு மையாகத் தனியார் மயமாக்கி விட்டு, அதை தனியார் நிறுவனங்களின் கொள்ளை இலாபக் கட்டுப்பாட்டில் விட்டுவிடலாம் என எண்ணுகிறது இந்திய அரசு.

கடந்த 1980களில் தொடங்கப் பட்ட மகிழுந்து உற்பத்தி நிறு வனமான மாருதி உத்யோக் நிறு வனத்தின் 50 விழுக்காட்டுப் பங்குகளை இந்திய அரசும், மீதமுள்ள 50 விழுக்காட்டுப் பங்குகளை ஜப்பானின் சுசுகி நிறுவனமும் பெற்றிருந்த நிலையில், பா.ச.க.வின் தேசிய சனநா யகக் கூட்டணி அரசு 2003ஆம் ஆண்டு ‘பொது மக்களுக்கு விற் கிறோம்’ என்ற பெயரில்தான், மாருதி நிறுவனப் பங்குகளை பங்குச்சந்தையில் இறக்கித் தனி யாரிடம் விற்றது.

இதற்கு அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் கடும் எதிர்ப் புத் தெரிவித்த நிலையிலும் அது பொருட்படுத்தப்படவில்லை. முடிவில், படிப்படியாக மாருதி நிறுவனம் இந்திய அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, இன்று முழுவதுமாக தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் அது இயங்குகிறது.
 
8 மணி நேர வேலை, தொழி லாளர்களின் பணிப்பாதுகாப்பு, குறைந்த பட்ச ஊதிய உத்தர வாதம், ஒப்பந்தத் தொழிலாளர் உரிமைகள் என தொழிலாளர் உரிமைகள் அங்கு மதிக்கப் படுவ தில்லை. மாருதி நிறுவனத் தைப் போலவே, தாமும் பாதிக்கப் படுவோம் என அஞ்சியே என். எல்.சி.உள்ளிட்ட அரசுப் பொதுத் துறை நிறுவனத் தொழிலாளர் கள், தனியார்மயத்தை எதிர்த்துப் போராடி வருகின்றனர்.

அரசுத்துறை நிறுவனங்களில் சிறிய அளவில் தொடங்கும் இவ் வகையான ‘பொது விற்பனை’ நடவடிக்கை, காலப்போக்கில் அதிகரிக்கப்படும். இதில், பா.ச.க. - காங்கிரசு என்ற கட்சி வேறு பாடே இல்லை என்பதை மாருதி முதல் என்.எல்.சி. நிறுவனப் பங்கு விற்பனை வரை நாம் காண்கின்ற உண்மையாகும்.

நெய்வேலியின் நிலக்கரி வளம் என்பது,தமிழ்நாட்டிற்கு இயற்கை அளித்த கொடையாகும். எனவே, தமிழ்நாடு உரிமை கொண்டாட வேண்டிய நெய் வேலி நிலக்கரி நிறுவனத்தை, தனியாருக்கு விற்கக் கூடாது என சாட வேண்டிய முதலமைச்சர் செயலலிதா, இந்திய அரசின் முடிவுக்கு எதிராக 23.05.2013 அன்று வழக்கம் போல் கண்ட னக் கடிதம் எழுதினார். அக்கடி தத்திறகு பதில் அனுப்பிய நடுவண் அரசு ‘முடிவை மறுபரிசீலனை செய்ய முடியாது’ எனத் திமி ரோடு பதில் கடிதமும் அனுப்பியது.

இலாபத்தில் இயங்கும் அரசு நிறுவனத்தை தனியார் மயமாக்கு வதில் இவ்வளவு உறுதியாக நிற்கும் நடுவண் அரசை மக்க ளிடம் அம்பலப்படுத்தி, கடுமை யான நிலை எடுக்க வேண்டிய செயலலிதா, சில தினங்களிலேயே மீண்டுமொரு கடிதம் எழுதினார். அதில், ஒருவேளை பங்குகளை விற்பது தான் தங்கள் உறுதியான முடிவென்றால், அந்த 5 விழுக்காட்டுப் பங்குகளை தமிழக அரசுத்துறை நிறுவனங்களிட மாவது விற்று விடுங்கள் எனக் கேட்டார்.

செயலலிதாவின் முன்வைத்த கோரிக்கையை பரிசீலிப்பதாக இந்திய அரசும், செபி அமைப்பும் அறிவித்தன. என்.எல்.சி.யின் 5 விழுக்காட்டுப் பங்குகளை, தமிழக அரசு. நிறுவனங்கள் வாங்குவது ஒரு தற்காலிக நிவாரணமாக அமையுமே அன்றி என்.எல்.சி. தனியார்மயமாகும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தி விடாது.

ஏனெனில் 2002 லேயே என்.எல்.சி. யின் 51 விழுக்காட்டுப் பங்குகளை தனியாருக்கு வழங்க அன்றைய வாஜ்பாய் அரசு முடிவெடுத்தது. தொழி லாளர் களிடையேயும், அரசியல் கட்சி களிடையேயும் அதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் அந்த முயற்சி நிறுத்தப்பட்டது.

ஆயினும் வெவ்வேறு அளவு களில் நெய்வேலிப் பங்குகளை தனியாருக்கு விற்கும் முயற்சியை இந்திய அரசு அவ்வப்போது மேற்கொண்டுதான் வருகிறது.

என்.எல்.சி. தொழிலாளர்கள் முன்னெடுத்துள்ளப் போராட்டம், என்.எல்.சி. நிறுவனத்தை மட்டுமல்ல, தமிழகத்தின் இயற்கை வளங்களை இந்திய அரசிடமிருந்துப் பாதுகாக்கும் போராட்டமாகவும் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். தமிழ் நாட்டு இயற்கை வளங்கள் தமிழக மக்களுக்கே என அது விரிவடைய வேண்டும்.

Pin It