சென்ற இதழ் தொடர்ச்சி 

தமிழ்நாட்டு வரலாற்றைத் தமிழ்நாட்டின் வரலாறாகப் பார்க்க வேண்டும். அனைத்திந்திய வரலாற்றின் பகுதியாகவோ, வட நாட்டு வரலாற்றின் வாலாகவோ பார்க்கக்கூடாது.

இங்கு தமிழகத்தில் OUTCAST என்பதாக எந்த சாதியும் கிடை யாது. இங்கு கொடுமையான சாதிய ஒடுக்குமுறைகள் இருக்கின்றன என்ற போதிலும், ஒரு சாதியை ஒதுக்கிவைத்துவிட்டு இங்கு ஊர்த் திருவிழா, கோயில் திருவிழா கிடை யாது. இங்கு கோயில் திருவிழாக்களில் ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்துத்தான் நடத்துகிறார்கள். அவர்களுக்குக் கோயிலில் பங்குண்டு. அதேவேளை அந்தந்த சாதிக்கென்று தனித்தனி இடம் ஒதுக்கியுள்ளார்கள். அந்த சாதி ஒடுக்குமுறை உண்டு. ஆனால் சமூகக் கட்டுக்கோப்புக்கு வெளியே அவர்கள் இல்லை.

தஞ்சைப் பெரிய கோவில் திறப்பு விழாவின் போது மன்னன் இராசராசன், அந்தக் கோவிலைக் கட்டிய குஞ்சரமல்லனுக்கு, ‘இராசராசப் பெருந்தச்சன்’ என்று தன்னுடையப் பெயரை இணைத்துத்தான் பட்டம் அளித்தான். அங்கு உழைத்த தொழிலாளர்களுக்கு முடித் திருத்தம் செய்தவருக்கு ‘இராசராசப் பெருநாவிதன்’ எனப் பட்டம் அளித்தான். முரசறைந்து அரசு அறிவிப்புகளை வெளியிட்டவருக்கு, ‘இராசராச பெரும்பறையன்’ என்று பட்டம் சூட்டினான்.

எனவே, தமிழ்ச்சமூகத்தை வட நாட்டு சமூகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. தமிழகத்தின் வரலாற்றைத் தனித்தேப் பார்க்க வேண்டும். வட நாட்டுக் கதைகளையும், உதார ணங்களையும் தமிழ கத்திற்குப் பொருத்திப் பார்க்கக் கூடாது.

இராசராசன் காலத்தில் சாதி ஒடுக்குமுறைகள் நிலவுவதற்கு முன்பும், சாதி ஒடுக்குமுறைகள் நிலவிய காலத்திலும், தமிழகத்தில், அனைத்து சாதி மக்களிடத்திலும் ‘தமிழர்கள்’ என்ற உணர்வு இருந்தது. தமிழ்த் தேசிய உணர்வு இருந்தது. சங்ககாலத்தில் தமிழன், தமிழகம், தமிழ் நாடு எனப் பேசப்பட்டது. இதைப்போல, வட நாட்டில் எங்கா வது தேசிய உணர்வு இருந்ததாகச் செய்தி உண்டா?

சாதிநீடிப்பதற்கு பொருளியல் காரணங்கள் முக்கியமான வையே. ஆனால், அவை மட்டுமே காரணிகள் அல்ல. இறுதிக்கும் இறுதியாக சாதியானது மனித மனங்க ளில் தங்கியிருக்கிறது.

இங்கு கம்யூனிஸ்டாக, பெரியா ரிஸ்டாக, அம்பேத்கரிஸ்டாக, தமிழ்த் தேசியராக நாம் இருந் தாலும், நம்மை அறியாமல் நம்மில் பலரிடம் சாதி உணர்வு இருக்கக் கூடும். அந்த மன அழுக்கை அவரவர் உணர்ந்து, துடைத்தெறிய வேண்டும்.

வர்க்கப்புரட்சியையும், சாதி ஒழிப்புப் புரட்சியையும் இணைத்து நடத்துவதே தமிழ்த் தேசியப் புரட்சி என நாங்கள் கூறுகிறோம். அனைத்து மக்களுக்கும் பொது வான ஓர் அரசியல் இலட்சியத் துடன் இணைக்கப்படாமல் தனியே வர்க்கப்புரட்சியும் வெற்றி பெறாது. சாதி ஒழிப்புப் போராட்டமும் வெற்றி பெறாது.

அனைத்துத் தமிழ் மக்களுக்கு மான பொது இலட்சியமாக அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ் நாட்டின் விடுதலை இலட்சியத்தை நான் சார்ந்திருக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முன்வைக் கிறது. எனவே சாதி ஒழிய, சமதர் மப் பொருளாதாரம் வேண்டும்; சாதியை அருவறுத்து ஒதுக்கும் மனப்பயிற்சி வேண்டும்; இவற்றை இணைத்துக் கொண்ட தமிழ்த் தேசியம் வேண்டும்.

வரலாற்றில் தடம்பதித்த, சாத னைகள் நிகழ்த்திய, நாயகர் களைப் பாராட்டுகின்றோம். அவர்களின் சாதனைகள் குறிப்பிட்ட சாதியின் சாதனை என்று பார்க்கக் கூடாது. அது தமிழின வளர்ச்சியின் விளைச் சல். தமிழ் அற நூல்களும், திருக் குறளும் இல்லாமல் 19ஆம் நூற் றாண்டில் வள்ளலார் இராமலிங்க அடிகளார் வரலாற்று நாயகராக உயர்ந்திருக்க முடியாது.

‘வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன், வீடுதோறும் இரந்தும் வெற்று ஓடராய்த் திரிந்தி யோரைக் கண்டு உள்ளம் நொந் தேன், கருணையில்லா ஆட்சிக் கடுகி ஒழிக’ என்று இராமலிங்கர் பாடியதையெல்லாம் உள்வாங்கிக் கொண்ட பாய்ச்சல் தான் பாரதி யின் பாய்ச்சல். இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டி பரந்து கெடுக இவ்வுலகியற்றியான் என்று திரு வள்ளுவர் பாடியதன் மறுவடி வம் தான் பாரதியார் பாடிய ‘தனி யொரு மனிதனுக்கு உண வில்லை யெனில் ஜகத்தினை அழித்திடு வோம்’ என்ற வரிகளாகும். இதன் அடுத்தக்கட்டப் பாய்ச்சல்தான் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய ‘ஓடப்பராயிருக்கும் ஏழை யப்பர் உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடு வார் உணரப்பா நீ!"“என்று பாடியது.

இவ்வாறு தமிழினத்தின் அறிவு மற்றும் அறச்சீற்ற வளர்ச்சி தொடர் சங்கிலியாய் இன அடிப் படையில் வருகிறதே தவிர, சாதி அடிப்படையில் அல்ல. ஒரு சாதி யில் பிறந்த சாதனையாளரின் திறமை, ஆற்றல், அறிவு ஆகியவை அந்த சாதியின் விளைச்சல் அல்ல. அது தமிழினத்தின் விளைச்சல்.

1864ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவிய போது வள்ளலார் ஒரு வேண்டு கோள் வைத்தார். வடலூர் சன் மார்க்க சங்கத்தில் அதை எழுதி வைத்தார். அது “மதம், சமயம், சாதி, குலம், ஆண்-பெண் வேறுபாடு களின்றி அனைவரும் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் அங்கத்த வராக இருக்க வேண்டும்” என்ப தாகும் அது. அதிலுள்ள ஒரே யொரு நிபந்தனை புலால் மறுத்தல் என்பது மட்டுமே. இசுலாமிய மக் களையும், ஒடுக்கப்பட்ட மக்களை யும் உயர் வகுப்பைச் சேர்ந்த வர்களையும் ஒன்றாக உறுப்பின ராக்கி, அந்தக் காலத்திலேயே ஒரு சோசலிச சங்கத்தை நடத்தியவர் வள்ளலார்.

உருவ வணக்கத்தை தவிர்த்து ஒளி வணக்கத்தை வலியுறுத்தி ஆன் மிகத்தில் ஒரு புரட்சி செய்தார். நவீன காலத்தில் தமிழர் மறுமலர்ச் சியின் தொடக்கப் புள்ளியாக வள் ளலார் இருக்கிறார். வள்ளலாரின் பரிணாமம், தமிழினத்தின் பரிணா மம் என்று பார்க்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதி சங்கங்கள் தொடங்குவோர் கூட, கடைசியில் தமிழினத்தோடு தான் தங்களை அடையாளப்படுத்திக் கொள் கிறார்கள். வன்னியர் சங்கத்தின் தலைவராக விளங்கி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக உருப்பெற்ற மருத்துவர் இராமதாசு “தமிழினக் காவலர்” என்றே அடை யாளப்படுத்தப்பட்டார். ஒடுக் கப்பட்ட மக்களின் விடுதலைக் கான அமைப்பாக உருவாக்கப் பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் “எழுச்சித்தமிழர்” என்று அழைக்கப்படுகிறார். தேவேந்திர குல வேளாளர் சங்கம் அரசியல் கட்சியாக மாறிய போது, “புதிய தமிழகம்” என்று பெயரிடப் பட்டது. யாதவர் சங்கம் அரசியல் கட்சியான போது, “மக்கள் தமிழ்த் தேசம்” என்று பெயர் மாற்றம் செய் யப்பட்டது.

இவையெல்லாம் எதைக் காட்டு கின்றன? தமிழினத்தோடு தன்னை இணைத்துக் கொள்ளாத சாதிய மைப்பு, இந்த மண்ணில் நிலைக்க முடியாது என்பதைத் தான்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு மே லாக தமிழ், தமிழர் என்ற உணர்ச் சியில் ஊறி வந்தது தான் தமிழர் உளவியல்.

இப்போது தலித்தியம் பேசும் சில நண்பர்கள், இந்த தமிழர் உளவியலுக்கு எதிராக சிந்திக்கி றார்கள்; எழுதுகிறார்கள். அவர் கள் தமிழ்த்தேசியத்தை எதிர்ப்ப தையே தங்கள் முதல் கடமையாகக் கருதுகிறார்கள். வடநாட்டிலிருந்து வந்த தலித்திய சிந்தனையின் விளை வாக இது இருக்கக்கூடும்.

கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தலித் முரசு ஏட் டில் வந்த ஓர் நேர்காணல், தலித்தியம் பற்றி நாம் வைக்கும் விமர்சனத்திற்கு சான்றாக உள்ளது. தலித் முரசிலுள்ள நேர்காணலை நான் படிக்கிறேன். இந்த நேர்காணலைக் கொடுத்தவர் பகுசன் சமாஜ் கட்சியின் ஊடகத் தொடர்பாளர் திரு. விவேக்குமார்.

கேள்வி: ஆனால் நீங்கள் சொல்வது போல் தமிழகத்தில் உள்ள, பகுசன் சமாஜ் கட்சி ஓர் இயக்கமாக இல்லையே?

விவேக் குமார்: பகுசன் சமாஜ் கட்சியின் தமிழ்த் தலைவர்களிடம் உள்ள சிக்கல் என்று நான் கடந்த ஓராண்டில் கணித்தது என்னவெனில், தமிழ் தலித்துகள் தற்போது மூன்று வகையான இயக்கங்களில் அல்லது மூன்று வகையான சமூக யதார்த்தங்களில் சிக்கியுள்ளனர். முதலாவதாக அவர்கள் தமிழ்ப் பண்பாட்டிற்குப் பலியாகியுள்ளார்கள். அவர்களைத் தமிழ் அடையாளத்தை விட்டு வெளிக் கொணர்வதும் மிகுந்த கடினமான ஒன்றாகும். பகுசன் சமாஜ் கட்சியின் தமிழ்த் தலைவர்களே தமிழ்ப் பண்பாட்டிற்கு பலியாகியுள்ளனர்.

தமிழ்ப் பண்பாட்டிலிருந்து தலித் தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கிறார் விவேக்குமார். அப்படியென்றால், திருக்குறளிலிருந்து, சிலப்பதிகாரத்திலிருந்து, சங்க இலக்கியங்களிலிருந்து அவை கூறும் அறம், வீரம், பண்பாடு ஆகியவற்றிலிருந்து தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறாரா? உத்தரப்பிரதேசத்தில், பகுசன் சமாஜ் கட்சியே பிராமண சங்கத்தோடு கூட்டுச் சேர்ந்து பிராமணியத்தையும், பூணூலையும் விட் டொழிக்காத பிராமணர்களை கட்சியின் பொதுச் செயலாளராகவும், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களாகவும் ஆக்கிக் கொண்டுள்ளது. ஆரியத்தோடு இணைந்துள்ள பகுசன் சமாஜ் கட்சி, தமிழ்ப் பண்பாட்டை எதிர்ப் பது இயல்பு தான்.

தமிழ்ப் பண்பாடு, தமிழ் இனம் என்ற பெயரில் தமிழர்களிடையே நிலவும் சாதி ஒடுக்குமுறைகளை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றோ, அவற்றைக் கண்டு கொள் ளக் கூடாது என்றோ நாம் ஒரு போதும் சொல்வதில்லை. அவ்வாறு சொன்னால் அது தவறு. ஒடுக்கு முறையாளர் தாக்கும் போது, திருப் பித் தாக்குங்கள் என்பதே நம்மு டைய வழிகாட்டல் ஆகும். பதிலடி கொடுத்துத் தான் இங்கே ஒரு சமத்துவம் முகிழ்க்கும். அதே வேளை, நமக்கு எச்சரிக்கையும் தேவை.

சாதி அடிப்படையில் ஒடுக்கு முறை செய்வோருக்கு எதிராக நாம் போராட வேண்டுமே தவிர, அவர் கள் சார்ந்துள்ள சாதி மக்கள் அனைவருக்கும் எதிராக நாம் போராடக் கூடாது. மருத்துவர் இராமதாசு, காடுவெட்டி குரு போன்றவர்களின் சாதிவெறி பேச்சு களை, நடவடிக்கைகளை நாம் எதிர்க்க வேண்டும். அதற்காக ஒட்டு மொத்த வன்னியர்கள் அனைவரும் ஒடுக்குமுறையாளர்கள் என்றோ, பிற்போக்காளர்கள் என்றோ நாம் கருதக் கூடாது.

ஒவ்வொரு சாதியிலும் சனநாயக சக்திகளும், முற்போக்காளர்களும் இருக்கின்றனர். அவர்களை இணைத்துக் கொண்டு தான் சாதி வெறி சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும்.

தமிழ்த் தேச விடுதலை என்பது சாதி ஒழிப்பையும் தனது இலட்சி யமாகக் கொண்டதாகும். இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக தமிழகம் பல்வேறு வகைகளில் நசுக்கப்படுகிறது. உரிமைகளை இழந்து தவிக்கிறது. காவிரி, முல் லைப் பெரியாறு, பாலாறு, கச்சத் தீவு உரிமைப் பறிப்புகள் தமிழ்ச் சாதிகள் அனைத்துக்கும் ஏற்பட்ட உரிமைப் பறிப்புகளாகும்.

எனவே, சாதி அணுகுமுறையைக் கைவிட்டு, தமிழினம் என்ற ஓர்மை யுடன் நாம் நம் உரிமைகளை மீட் கப் போராட வேண்டியத் தேவை இருக்கிறது. காலனி ஆதிக்கத்தி லிருந்து தமிழ்நாட்டை விடுவிக்கும் போராட்டத் தீ, பகை சக்திகளை மட்டுமின்றி, தமிழர்களிடையே நிலவும் சாதி அழுக்கையும் சுட்டெ ரிக்கும்”

இவ்வாறு தோழர் பெ.மணியரசன் பேசினார்.

நிறைவில், தோழர் சுகுமார் (தமிழ்த் தேசியப் பண்பாட்டு இயக் கம்) நன்றி தெரிவித்தார். இக் கூட்டத்தில், தமிழுணர்வாளர் களும், மனித உரிமை ஆர்வலர் களும் திரளாகப் பங்கேற்றனர்.

(எழுத்துவடிவம்: க.அருணபாரதி)