எதிர்வினை:

‘திராவிடமும் இந்தியமும் உடன் கட்டை ஏறவேண்டும்’ என்றும், ‘சங்க இலக்கியத்தில், காப்பிய இலக்கியத்தில் பக்தி இலக்கியங்களில் திராவிடர் என்ற சொல் இல்லை’ என்றும் பெ.மணியரசன் பேசியதைத் தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டத்தில் (ஏப்ரல் 16‡30,2012) வெளியிட்டிருந்தீர்கள்.

‘திராவிடம்’ என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் இனத்தைக் குறிக்கத் திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான். திரிந்த தமிழ்ச் சொல்லே தவிர வடசொல் அல்ல.
 
தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும். திராவிடன் என்று சொன்னால் தமிழனையும் குறிக்கும், மொழியால் தெலுங்கராக, கன்னடராக, மலையாளியாக, துளுவராகத் திரிந்துபோனவர்களையும் குறிக்கும். அவர்கள் எல்லாம் மொழியால் திரியாமல் இருந்த காலத்தில் ஆரியரால் சொல்லப்பட்ட திரிபுச்சொல்லே திராவிடம்.

தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக்கொள்வதை இழிவாகக்கருதினால் சிந்துவெளி நாகரிகம் எங்கள் நாகரிகம் என்று உரிமை கொண்டாடக்கூடாது. சிந்துவெளிக் காளைச் சின்னத்தைத் தமிழர் கண்ணோட்டத்திலிருந்து எடுத்துவிடவேண்டும். அது திராவிட நாகரிகத்தின் குறியீடு.

மொகஞ்சொதாரோ, அரப்பா நாகரிகம் திராவிட நாகரிகம் என்று டாக்டர் பானர்ஜி கூறியிருக்கிறார். வரலாற்று உலகம் தமிழனைத் திராவிடன் என்றுதான் அடையாளப்படுத்தி உள்ளது.

‘திராவிடம்’ என்ற சொல்சங்க இலக்கியத்தில் இல்லை. மொகஞ்சொதாரோ, அரப்பாவும் சங்க இலக்கியத்தில் இல்லை. அதில் மட்டும் எப்படி உரிமைகொண்டாட முடியும்?

‘நெஞ்சுக் கிறாள்கடி தீபம் அடங்கா நெடும்பிறவி
நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூற்றுரை’

என்ற பெரிய திருமொழிச் சிறப்புப்பாயிரத்தில் வரும் ‘தமிழ நன்னூற்றுரை’ என்பதற்கு திராவிட சாத்திரம் என்றார் பிள்ளை லோகாச் சாரிய ஜீயர். 500 ஆண்டுகளுக்கு முன்பே 18‡ஆம் நூற்றாண்டில் தாயுமானவர் ‘கல்லாத பேர்களே நல்லவர்கள்’ என்ற பாடலில் ‘வடமொழியிலே வல்லான் ஒருவன் வரவும் திராவிடத்திலே வந்ததா விவகரிப்பேன்’ என்று கூறியுள்ளார். இதில் தமிழைத்தான் திராவிடம் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆழ்வார்களின் நாலாயிரத்திவ்விய பிரபந்தங்கள் திராவிட வேதம் என்று குறிக்கப்படுகின்றன. இயக்கத்திற்குத் திராவிடம் என்று பெயரிட்டு திராவிடம் பேசிய தலைவர்கள் பெரியார் முதல் இன்றுள்ளவர்கள் வரை தமிழனுக்காக, தமிழுக்காக, தமிழ் நிலத்திற்காக உழைத்திருக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

****

மறுவினை:
தேவையில்லை திராவிடத் திரிபுவாதம்
பெ.மணியரசன்

“திராவிடம்” என்பது திரிந்த தமிழ்ச் சொல் என்கிறார் புலவர் முருகேசன். அத்திரிபு தமிழர்களிடையே ஏற்பட்டதா, அயல் இனத்தவரான ஆரியரிடையே ஏற்பட்டதா? அவர்களிடம் அது எப்போது ஏற்பட்டது? இவ் வினாக்களுக்கு விடையளிக்கும் போதுதான் “திராவிடர்” என்பது அயல் இனத்தார் தமிழரை அழைத்த கொச்சை வடிவம் என்று புரியும்.

இந்தியா என்று இப்பொழுது அழைக்கப்படும் இத்துணைக்கண்டமெங்கும் தமிழர்களே வாழ்ந்த காலத்தில் அயல் இனத்தவரான ஆரியர் இங்கு வந்தபோது, தமிழ், தமிழர் என்பதை ஒலிக்கத் தெரியாமல் திரமிள, திராவிட என்று ஒலித்தனர். அவ்வாறே திராவிடர் என்று பிராக்ருத, சமற்கிருத மொழிகளில் எழுதியும் வைத்தார்கள். அக்கொச்சைச் சொல்லை அப்போதும் சரி, அதன்பின் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழிந்த பின்பும் சரி தமிழர்கள் ஏற்கவில்லை. “திராவிடர்” என்று தங்களை அழைத்துக் கொள்வதைத் தமிழர்கள் இழிவாகக் கருதியதால்தான், சங்க இலக்கியங்களிலோ, காப்பிய இலக்கியங்களிலோ, பக்தி இலக்கியங்களிலோ “திராவிடர்” என்ற சொல்லைத் தமிழர்கள் பயன் படுத்தவில்லை என்று நான் பேசி வருகிறேன்; எழுதி வருகிறேன்.

எனது அக்கருத்தை மறுக்கவந்த புலவர் முருகேசன், ஆழ்வார்கள் காலப் பெரிய திருமொழியில் திராவிடர் என்று கூறியுள்ளதாகப் புனைந்துரைக்கிறார். பெரிய திருமொழியின் சிறப்புப் பாயிரப் பாட்டையும் எடுத்துப் போட்டுள்ளார். அவர் சான்று காட்டியுள்ள பாடலே எனது கருத்துக்கு வலுவான சான்றாகும். பெரிய திருமொழியை எழுதியவர் திருமங்கை ஆழ்வார். அவரது காலம் கி.பி. 9‡ஆம் நூற்றாண்டு.

அப்பாடலில் “நஞ்சுக்கு நல்ல அமுதம் தமிழ நன்னூற்றுறை” என்று உள்ளது. இதில் “தமிழ நன்னூல்கள்” பற்றிக் கூறப் பட்டுள்ளது. புலவர் முருகேசன் புனைந்துரைப் பது போல் “திராவிட நன்னூல்கள்” என்று கூறப்பட வில்லை. பெரிய திருமொழிக்கு ‡ அதில் உள்ள மேற்படிப் பாடலுக்குப் பிற்காலத்தில் பதினாறாம் நூற்றாண்டு வாக்கில் உரை எழுதிய பிள்ளை லோகாச்சாரி ஜீயர் என்பவர் தமிழ நன்னூல்கள் என்பதற்குத் “திராவிட சாத்திரம்” என்று விளக்கம் தந்துள்ளார் என்கிறார்.

நாயன்மார்கள், ஆழ்வார்கள் பாடிய ‡ எழுதிய பக்திப் பாடல்கள் காலத்தைப் பக்தி இலக்கியக் காலம் என்று வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்தார்கள். கி.பி. 7 ‡ஆம் நூற்றாண்டு தொடங்கி சேக்கிழாரின் பெரியபுராணம் எழுதப்பட்ட 12‡ஆம் நூற்றாண்டின் தொடக்கக் காலம் வரை உள்ள காலப் பகுதியைப் பக்தி இலக்கியக் காலம் என்பர். நான் இந்தப் பக்தி இலக்கியக் காலநூல்கள் ஏதாவதொன்ஷீல் “திராவிடம்” என்ற சொல் பயன் படுத்தப்பட்டதா என்று வினவி, இல்லை என்று விடையிறுத்திருந்தேன்.
 
புலவர் முருகேசன் பக்தி இலக்கியக் காலநூல் ஒன்றுக்கு பக்தி இலக்கியக் காலம் முடிந்து 400 ஆண்டுகள் கழிந்தபின் எழுதிய விளக்கவுரையில் “திராவிட” என்ற சொல் இருக்கிறது என்கிறார். இது என்ன வாதம்! விதண்டாவாதம்! வரலாற்று ஆசிரியர்கள் வரையறுத்த கால அளவை வைத்தே நான் சங்க காலம், காப்பியக் காலம், பக்தி இலக்கியக் காலம் என்று வரிசைப் படுத்தி அவற்றுள் எதிலும் “திராவிட” என்ற சொல் பயன்படுத்தப்பட வில்லை, காரணம் தமிழர்கள் தங்களைத் திராவிடர் என்று சொல்லிக் கொள்வதைக் கேவலமாகக் கருதிய காலங்கள் அவை என்றேன்.

பெரிய திருமொழி நூலில் இருக்கிறது “திராவிடம்” என்று புலவர் முருகேசன் காட்டியிருந்தால் நாம் ஏற்றுக் கொள்ளலாம். அது எழுதப்பட்டு, 700 ஆண்டுகள் கழித்து, பக்தி இலக்கியக் காலம் முடிந்து 400 ஆண்டுகளுக்குப் பின், பெரிய திருமொழிக்கு உரை எழுதிய பிராமணரான பிள்ளை லோக்காச்சாரி ஜீயர் தம் சொந்த சொல்லாகப் பயன்படுத்திய “திராவிட” என்ற வைக்கோல் துரும்பை எடுத்துக்கொண்டு வாள் வீசுகிறார் புலவர் முருகேசன். அசலான தமிழ் இனத்தை ‡ தமிழ் மொழியைப் புறந்தள்ளி விட்டுப் போலியான திராவிடத்தை எடுத்துக் கொள்வதுதான் திராவிட இயக்க மரபு.

கருணாநிதியிலிருந்து புலவர் முருகேசன் வரை உள்ள திராவிடச் சிந்தனையாளர்களுக்குக் கிடைத்த திராவிடச் சான்று அனைத்தும் ஆரியம் தந்த சான்றுகள் தாம்!

சங்க காலம், காப்பியக் காலம், பக்தி இலக்கியக் காலம் ஆகிய மூன்று காலப் பகுதிகளிலும் தமிழர் என்ற இனப் பெயரும், ஆரியர் என்ற இனப் பெயரும் பல இடங்களில் பதிவாகியுள்ளன. ஆனால் ஓரிடத்தில் கூட திராவிட என்ற இனப் பெயரோ அல்லது மொழிப் பெயரோ பதிவாகவில்லை. காரணம் தமிழர் என்பதும் ஆரியர் என்பதும் அசலான இனப்பெயர்கள். திராவிடம் என்பது மாயை.

தெலுங்கினத்தைச் சேர்ந்த நாயக்க மன்னர்கள் தமிழ் நாட்டை ஆண்ட காலம் கி.பி. 16‡ஆம் நூற்றாண்டு. அப் போது சமற்கிருதமும் தெலுங்கும் தமிழகத்தில் கோலோச்சின. தமிழ் புறந்தள்ளப் பட்டது. அக்காலத்தில்தான் மணிப்பிரவாள நடையை உரையாசிரியர்கள் அதிகம் பயன்படுத்தினார்கள். அதிலும் வைணவ ஆச்சாரியார்கள் (பிராமணர்கள்) மணிப்பிரவாள நடையை அதிகம் பயன்படுத்தினர். சமற்கிருதமும் தமிழும் சரிக்குச் சரியாகக் கலந்து எழுதுவதற்குப் பெயர் மணிப்பிரவாளம்! மணிப்பிரவாளத்தில் தமிழைத் தமிழ் என்று சொல்ல மாட்டார்கள், திராவிடம் என்றே சொல்வார்கள். ஆரியப் பிராமணரான பிள்ளை லோகாச்சாரி ஜீயர் பயன்படுத்திய மணிப்பிரவாள “திராவிடம்” தான் புலவர் முருகேசன் அவர்களுக்குக் கிடைத்த ஆகப்பெரிய சான்று!
 
18‡ஆம் நூற்றாண்டில் தான் முதல்முதலாகத் தமிழ்ச் செய்யுளில் தாயுமானவர் “திராவிட” என்றச் சொல்லைப் பயன்படுத்தினார். பிராமணர்களின் மணிப்பிரவாளம் மலிந்திருந்த காலம் அது. தாயுமானவரும் தமது நேர் கூற்றாகத் “திராவிடம்” என்ற சொல்லைப்பயன் படுத்தவில்லை. விதண்டாவாதம் செய்பவர்களைச் சாடிய தாயுமானவர், ‘இது என்றால் அது என்பர், அது என்றால் இது என்பர்’ என்று கூறி நையாண்டி செய்தார். “முதலில் வடமொழியில் வந்ததென்பார்; வட மொழியில் வல்லவர் ஒருவர் வந்து விட்டால் திராவிட மொழியில் வந்ததென்பார்” என்று கூறினார் தாயுமானவர். இதனால் படித்தவர்களை விடப்படிக்காதவர்களே மேல் என்றார்.
 
“சங்க இலக்கியத்தில் மொகஞ்சொதாரோ, அரப்பா என்ற சொற்கள் இடம் பெற்றிருக்கின்றனவா? இல்லை. அவை இடம் பெற வில்லை என்பதற்காக அவை இல்லை என்று ஆகிவிடுமா” என்று கேட்கிறார் முருகேசன்.
 
1920‡களில் அகழ்வாராய்ச்சியில் கண்டறியப் பட்டவை, புதையுண்டு கிடந்த மொகஞ் சொதாரோ, அரப்பா நகரங்கள். இந்நகர நாகரிகம் 3500 ஆண்டுகளுக்கு முன் நிலவிய தமிழர் நாகரிகமாகும். சிந்து வெளி நாகரிகம் ‡ மொகஞ் சொதாரோ, அரப்பா போன்றவற்றை சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன என்று ஐராவதம் மகாதேவன் கூறுகிறார். சிந்துவெளித் தமிழர் நாகரிகத்தின் பல பகுதிகள் குசராத்திலும் இருந்தன. அங்குள்ள துவாரகையை தலை நகராகக் கொண்டு தமிழக வேளிர் ஆண்டனர் என்ற குறிப்பைக் கபிலர் கூறியுள்ளார். புறநானூறு 201‡ ஆம் பாடலில் இக் குறிப்புள்ளது.
 
பாரி மகளிரை அழைத்துச் சென்று, திருமணம் செய்து கொள்ளுமாறு இருங்கோவேளை வேண்டிய பொழுது, கபிலர் இருங்கோவேளின் முன்னோர் துவாரகையை ஆண்ட வேளிர் ஆவர். அவ்வேளிர் மரபில் நீ 49‡ஆவது தலைமுறை என்றார்.

“நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றிச்
செம்பு புனைந்தியற்றிய சேணெடும் புரிசை
உவரா ஈகைத் துவரை யாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே”

என்று கபிலர் கூறினார். இவ்வரிகளுக்கு உ.வே. சாமிநாதய்யர் பிழையான விளக்கம் எழுதியுள்ளார் என்று ஐராவதம் மகாதேவன் கூறி மேலே சொன்ன புதிய விளக்கம் தந்துள்ளார். (சிந்து வெளிப்பண்பாடும் சங்க இலக்கியமும் ‡ முனைவர் ஐராவதம் மகாதேவன் ‡ செம்மொழித் தமிழாய்வு நிறுவன வெளியீடு, சனவரி ‡ 2010)

துவரை என்பதை துவார சமுத்திரம் என்று உ.வே.சா. கூறியிருப்பது சரியன்று என்று மகாதேவன் சுட்டுகிறார். உ.வே.சா. பிழையாகக் கருதிய துவார சமுத்திரம் என்ற கருத்தைப் பின்னர் வந்த அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை போன்றோரும் அவ்வாறே எடுத்துக் கொண்டனர்.
 
பாரி மகளிரை ஏற்க மறுத்த இருங்கோவேள் மீது கபிலர் சினந்து பாடிய பாடல், புறம் 203‡ஆம் செய்யுளில் உள்ளது. அப்பாடலில் வரும் “அரையம்” என்ற சொல் அரப்பாவைக் குறிப்பிடுகிறது என்கிறார் ஐராவதம் மகாதேவன். தமக்கு முன் பி.எல்.சாமி அரையம் என்பதை அரப்பா என்று செந்தமிழ்ச்செல்வி சனவரி 1994 இதழில் எழுதியதையும் சுட்டிக் காட்டுகிறார் மகாதேவன்.

“இருபாற் பெயரிய வருகெழு மூதூர்க்
கோடி பல வடுக்கிய பொருமணுக்குதவிய
நீடுநிலை அரையத்துக் கேடுங் கேளினி”

என்ற வரிகளில் அழிந்து போன இருபெரும் சிந்து வெளி நகரங்களைக் குறிக்கின்றார் என்கிறார் மகாதேவன். தம் கூற்றுக்கு மேலும் சான்றுகளாக அகம் 15, 208, 372, 375 ஆகிய பாடல் களையும் மற்ற சங்கப் பாடல்களையும் அவர் கூறுகிறார். எனவே, எடுத்தேன் கவிழ்த் தேன் பாணியில் சங்க இலக்கியங்களில் சிந்துவெளி நாகரிக நகரங்கள் குறிப்பிடப் பட வில்லை என்று கூற வேண்டியதில்லை. புதிது புதிதாய் வருகின்ற ஆய்வுகளையும் புலவர் முருகேசன் போன்ற திராவிடச் சிந்தனையாளர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். தெலுங்கு நாயக்கமன்னர்கள் காலத்திலேயே திளைத் திருக்கக் கூடாது; கால்டு வெல் காலத்திலேயேகளித் திருக்கக்கூடாது.

அடுத்து,தமிழர்கள் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதை இழி வாகக் கருதினால், ‘சிந்து வெளி நாகரிகம் எங்கள் நாகரிகம்’ என்று உரிமை கொண்டாடக் கூடாது என்கிறார். ஏன் உரிமை கொண்டாடக்கூடாது? தஞ்சாவூரை ஒலிக்கத் தெரியாமல் (உச்சரிக்கத் தெரியாமல்) டேஞ்சூர் என்றனர் வெள்ளையர். தஞ்சாவூரை டேஞ்சூர் என்றுதான் இன்றும் சொல்லவேண்டும், தஞ்சாவூர் என்று சொன்னால், தமிழர்கள் தஞ்சாவூருக்கு உரிமை கொண் டாடக்கூடாது என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும்? அப்படி இருக்கிறது புலவர் முருகேசன் கூற்று!

“தமிழர்”என்பதை ஒலிக்கத் தெரியாமல், திரமிள, திராவிடர் என்றனர் வந்தேறிகளான ஆரியர்கள். அந்தக் கொச்சைத் திரிபைத் தமிழர்கள் இன்றும் கட்டி அழ வேண்டுமா?
 
அடுத்து, தமிழர் என்ற மரபினத்திலிருந்து தெலுங்கர், கன்னடர் போன்றோர் பிரிந்து போய் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகி விட்டன. பால் தயிரான பிறகு, தயிர் மீண்டும் பால் ஆகாததுபோல் தமிழரிலிருந்து பிரிந்துசென்ற தெலுங்கர், கன்னடர், மலையாளி போன்றோர் மீண்டும் தமிழராகமாட்டார், அவர்கள் மொழியும் தமிழாகாது என்றார் தேவநேயப் பாவாணர்.

எந்தக்காலத்திலும் பழந் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்படாத “திராவிடர்” என்ற சொல்லை இந்தக் காலத்தில் தமிழர்கள் என்ன காரணம் பற்றி ஏற்கவேண்டும்? ஆரியர்களும், ஆரியப் பார்ப்பனர்களும் மட்டுமே அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை “திராவிடம்” என்று பேசி தமிழரைக் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
 
தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் முதலியோர் தாங்கள் தமிழர் என்ற மரபினத்திலிருந்து தோன்றியவர்கள் என்றோ, தங்கள் மொழி, தமிழிலிருந்து பிரிந்தது என்றோ ஏற்றுக் கொள் கிறார்களா? அதுவும் இல்லை. தமிழ் நாட்டில் மட்டும் திராவிடத்தைப் பேசி தமிழினத்தைச் சீரழிக்கும் கீழறுப்பு வேலைகளை இன்றும் தொடர்வது ஞாயமா? நேர்மையா?
 
“திராவிடம்” என்ற சொல்லை வடமொழியில் உள்ள மனுதர்ம நூலிலிருந்தும், பிற சமற்கிருத நூல்களிலிருந்தும் எடுத்தேன் என்கிறார் கால்டுவெல். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளுக்கு மூலமொழி (Proto Language) திராவிடம் என்றார். மூல மொழி தமிழ்தானே தவிர, திராவிடம் அல்ல என்பதைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட மொழி நூல் அறிஞர் பலர் நிறுவியுள்ளனர்! ஆனால் தமிழ் நாட்டுத் திராவிட அரசியல்வாதிகள் அதை ஏற்றுக் கொள்ளாமல், ஆரியர்கள் உருவாக்கிய திராவிடத்தை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டு தமிழின் மேன்மையைக் குலைக்கின்றனர்.

கால்டுவெல் தவறாகப் பெயர் சூட்டிய திராவிடத்தைப் பின்பற்றியே மேலை ஆய்வாளர்கள் தமிழர் நாகரிகமாகிய சிந்துவெளி நாகரிகத்தை திராவிட நாகரிகம் என்று கூறினர். அதற்காக ‡ அது திராவிட நாகரிகம் ஆகி விடாது. தமிழர் நாகரிகமே!
 
காசி பாரத வித்யா பீடம் உ.வே.சாமிநாதய்யருக்கு “திராவிட பாஷாவித்வ” என்று பட்டம் கொடுத்தது. காஞ்சி மடம் அவருக்கு “தட்சிணாய கலாநிதி” என்று பட்டம் கொடுத்தது. இவை இரண்டும் ஆரியப் பார்ப்பன பீடங்கள். அவை “தமிழ்” மொழியை வெறுப்பவை. தமிழ் என்று ஒலிப்பதும் இழிவு என்று கருதுபவை. அப்படிப் பட்டோர் கொடுத்த “திராவிட வித்வ” என்ற பட்டத்தைத் தான் தமது திராவிடச் சித்தாந் தத்துக்குச் சான்றாகக் கருணாநிதி கூறுகிறார். பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து சான்று காட்ட வேண்டியது தானே என்று நாம் கருணாநிதியைப் பார்த்துக் கேட்கிறோம். உடனே புலவர் முருகேசன் சீறிப்பாய்கிறார். இதோ பழந்தமிழ் இலக்கியச் சான்று என்று ஆரியப் பார்ப்பனர் பிள்ளை லோகாச் சாரி ஜீயர் 16‡ஆம் நூற்றாண்டில் எழுதிய விளக்க உரையைத் தூக்கிப் போடுகிறார்.
 
கருணாநிதியாக இருந்தாலும் முருகேசனாக இருந்தாலும் திராவிடத் திரிபு வாதத்திற்குக் கிடைக்கும் சான்றெல்லாம் ஆரியப் பார்ப்பனச் சான்றுகள் மட்டுமே!
 
“திராவிடம் என்ற சொல் தமிழனை, தமிழை, தமிழ் நிலத்தைக் குறிக்கத் திரித்துச் சொல்லப்பட்ட சொல்தான்“ என்கிறார் புலவர் முருகேசன். தமிழ், தமிழர், தமிழகம் என்ற அசல் இருக்கும்போது ஆரியர் திரித்துச்சொன்ன திராவிடத்தை ஏன் நீங்கள் பயன் படுத்துகிறீர்கள்? நீங்களும் ஆரியரைப்போல் ஏதோ ஒரு வகையில் திரிபுவாதிகளா? தஞ்சாவூர், தூத்துக்குடி என்ற அசல் தமிழ்ச்சொற்கள் இருக்கும்போது டேஞ்சூர், டூட்டுக் கொரின் என்ற அயலாரின் திரிபுகளை ஏன் பயன் படுத்தவேண்டும்?

கி.பி. 7‡ஆம் நூற்றாண்டில் ஜைன சமயத்தைச் சேர்ந்த ஆரியரான வஜ்ரநந்தி தமிழகத்தில் “திராவிட சங்கம்” ஒன்றை உருவாக்கினார். ஜைனம், பெளத்தம் ஆகியவை முற்போக்கு மதங்கள் தாம். ஆனால் அவை ஆரியத்தில் தோன்றியவை. அச்சமயங்களின் குருமார்கள் தமிழ் நாட்டில் பிராக்கிருதம், சமற் கிருதம், பாலி போன்ற அயல் மொழிகளைத்தாம் பரப்பினர். அவர்கள் தமிழை மதிக்க வில்லை, ஏற்கவில்லை. எனவே தான் ஆரியரான வஜ்ரநந்தி தமிழ்நாட்டில் திராவிட சங்கம் தொடங்கினார்.
 
சமண மதத்திலிருந்து விலகி சிவநெறிக்கு வந்த தமிழரான திருநாவுக்கரசர் “ஆரியன் கண்டாய், தமிழன் கண்டாய்” என்று சிவபெருமானைப் பாடினார். அவர் “திராவிடன் கண்டாய்” என்று பாடவில்லை. “திராவிடன்“ என்பதைத் தமிழர்கள் இழிவாகக் கருதினார்கள். திருநாவுக்கரசர் காலமும் கி.பி. 7‡ஆம் நூற்றாண்டே!

நாலாயிரத்திவ்வியப் பிரபந்த நூல்களை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர்கள் “திராவிட வேதம்” என்று கூறியதை ஒரு சான்றாக முருகேசன் குறிப்பிடுகிறார். ஆரியர் உருவாக்கிய மண் குதிரையை நம்பித்தான் திராவிடப் பயணம் நடை பெறுகிறது என்பதற்கு இது இன்னும் ஒரு சான்று.
 
“திராவிடம்” என்ற பெயரில் தானே பெரியார் தொடங்கி இன்றுள்ள திராவிடத் தலைவர்கள் வரை தமிழர்களுக்குப் பாடு பட்டார்கள் என்கிறார் புலவர் முருகேசன். ஏன், தமிழர்கள் என்ற இனப்பெயரில் செயல் பட்டிருந்தால் பேரிழப்புகள் ஏற்பட்டிருக்குமோ? அத்தலைவர்கள் தங்களுக்கு மட்டும் தமிழர் தலைவர், தமிழினத் தலைவர் என்று பட்டம் சூட்டிக் கொண்டார்கள். திராவிடர் தலைவர், திராவிட இனத்தலைவர் என்று பட்டம் சூட்டிக் கொள்ள வேண்டியதுதானே!
 
தமிழன் என்று சொன்னால் தமிழனை மட்டும் குறிக்கும், திராவிடன் என்று சொன்னால் தமிழனையும், தெலுங்கர், கன்னடர், மலையாளி, துளுவர் ஆகியோரையும் குறிக்கும் என்கிறார் முருகேசன். எதற்காக தெலுங்கர், கன்னடர், மலையாளிகளைத் தமிழருடன் இணைத்து ஒன்றாகப் பேச வேண்டும். தமிழர்களின் காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை, பாலாற்று உரிமை ஆகியவற்றைப் பறித்தது போதாதா? கர்நாடகத்திலும்,கேரளத்திலும் காலம்காலமாக வாழும் தமிழர்களைத் தாக்கி அகதிகளாக விரட்டியது போதாதா? தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தியது போதாதா? தமிழர் தாயக ஊர்களையும், நகரங்களையும் ஆயிரக்கணக்கில் மேற் படி மூன்று இனத்தாரும் அபகரித்துக் கொண்டது போதாதா?

அந்த மூன்று மாநிலத்தவர்களும் தமிழர்களையும் இணைத்துக்கொண்டு தங்களைத் திராவிடர் என்று கூறுகிறார்களா? இல்லை. பின்னர் தமிழ் நாட்டில் மட்டும் திராவிடத் தலைவர்கள் தெலுங்கர், கன்னடர், மலையாளிகளுக்காகப் பரிந்து பேசுவதும், திராவிடர் என்று தான் இனப்பெயர் வைத்துக் கொள்ளவேண்டும் என்று வரிந்து கட்டுவதும் ஏன்? இதிலுள்ள சூழ்ச்சி என்ன? தெலுங்கர், கன்னடர், மலையாளிகளிடம் தமிழர்கள் இதுவரை ஏமாந்தது போதாதா? இனியும் ஏமாற்றத் துடிப்பதேன் திராவிடக் கட்சிகள்?

தமிழ்த் தேசியம் என்ற மிகச்சரியான தேசிய இன, அரசியல் விடுதலை முழக்கம் தமிழர்களிடையே எழுச்சிப் பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாமல்தான் திராவிடத் திரிபுவாதிகள் குறுக்குச்சால் ஓட்டுகிறார்கள். இனியும் தமிழர்கள் திராவிடத்தைச் சுமக்க மாட்டார்கள்; தன்னழிவுப் பாதையில் போக மாட் டார்கள்.

கடைசியாக ஒன்று, பிற்காலத்தில் “திராவிடர்’ என்ற சொல் தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே குறித்தது என்று பிரித்தானியக் கலைக்களஞ்சியம் விளக்குவதை முனைவர் த. செயராமன் சுட்டியுள்ளார்.

Pin It