மூன்று தமிழர் கருணை மனு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து தனது விசாரணைக்கு மாற்றிக் கொண்டதில் உச்சநீதிமன்றம் அப்பட்டமான சட்டமீறல்களில் ஈடுபட்டுள்ளது.

எல்.கே.வெங்கட்- எதிர் -இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில் (மாற்றல் மனு எண் 383- 385/2011) என்ற வழக்கில் தான் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்.

இத்தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்க்வி, எஸ்.ஜே.முகபாத்யாயா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றப் பிரிவு தன்னுடைய முடிவுக்குக் கூறும் காரணங்கள் வியப்பானவை.

“சீறிதரன் என்ற முருகன் மற்றும் இருவர் கருணை மனுக்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டப் பிறகு மாநிலத்தில் நிலவிய சூழ்நிலைகள், குறித்த வழக்கின் இரண்டு தரப்பார்களின் வெளியில் முற்றிலும் மாறுபட்ட எதிர் எதிர் கருத்துகள் முன்வைக்கப்பட்டன. முன்னாள் பிரதமர் இராசீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு அரசியல் அமைப்புகளும் பிறரும் அளித்துவந்த ஆதரவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை பாதிக்குமா என்பது பற்றி இம்மன்றத்தில் கூறப்பட்ட கருத்துகள் குறித்து முடிவு செய்ய வேண்டியத் தேவை எழவில்லை என்று கருதுகிறோம். இருப்பினும், இதே நீதிமன்றத்தில் விசாரணையில் நிலுவையில் உள்ள தேவேந்திர பால்சிங் புல்லார் எதிர் தில்லி மாநில அரசு என்ற வழக்கிலும், இந்த வழக்கிலும் ஒத்தத் தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படு வதால் அரசமைப்புச் சட்டவிதி 139(கி)(1)இல் வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தலாம் என நாங்கள் கருதுகிறோம்”.

“கருணை மனு அளித்து மிக நீண்டகாலத்திற்குப் பிறகு அதனை குடியரசுத் தலைவர் நிராகரித்தது சட்ட விரோதமானது என்ற நிலைப்பாட்டை தேவேந்திர பால் சிங் புல்லார் மற்றும் மகேந்திரநாத்தாஸ் ஆகியோரது வழக்குகளில் முன்வைத்தது போலவே இவ்வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. பெரிதும் ஒத்தத் தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படுவதால் இவற்றை ஒன்றிணைத்து விசாரித்து முடிவு செய்வது பொருத்தமாக இருக்கும் என்று இந்நீதிமன்றம் கருதுகிறது. எனவே, வி.சிறீதரன் (என்ற) முருகன் எதிர் இந்திய ஒன்றியம், டி.சுசேந்திர ராஜா என்ற சாந்தன் எதிர் இந்திய ஒன்றியம், மற்றும் ஏ.ஜி.பேரறிவாளன் (என்ற) அறிவு எதிர் இந்திய ஒன்றியம் ஆகிய சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள மூன்று மனுக்களையும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு மாற்றல் செய்வது என முடிவு செய்கிறோம்” என்று அத்தீர்ப்புக் கூறுகிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 139(கி)(1) விதி, உயர்நீதி மன்றங்களிலிருந்து உச்சநீதிமன்றத்திற்கு  வழக்குகளை மாற்றம் செய்வது பற்றி பேசுகிறது. உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றல் செய்வ தென்றால் அதற்கு சில நிபந்தனைகளை அது கூறுகிறது.

1. உச்சநீதிமன்றம் தானாகவோ, அல்லது இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் மனு அளித்தாலோ, அல்லது தொடர்புடைய வழக்குதாரர்கள் மனு செய்தாலோ விசாரித்து உச்சநீதி மன்றத்திற்கு மாற்றல் செய்து கொள்ளலாம்.

2. அவ்வாறு மாற்றல் செய்வதற்கான வழக்குகள் பொது முக்கியத்துவம் வாய்ந்த ஒத்தத் தன்மையுள்ள, அல்லது பெரிதும் ஒத்தத்தன்மையுள்ள சிக்கல்கள் விவாதிக்கப்படுகிற வழக்குகளாக இருந்தால், அவற்றை உச்சநீதி மன்றம் தனது விசாரணைக்கு மாற்றிக் கொள்ளலாம்.

விதி 139(கி)(1) சொல்லக்கூடிய இரண்டு நிபந்தனைகளுமே மூன்று தமிழர் வழக்கில்  நிறைவாக வில்லை.

1.உச்சநீதிமன்றம் தானாகவோ, அல்லது இந்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கோரியதற்கு இணங்கவோ மூவர் வழக்கை மாற்றல் செய்யவில்லை. எல்.கே.வெங்கட் என்பவர் அளித்த மனுவின் அடிப்படையிலேயே இம்முடிவுக்கு வந்திருக்கிறது. இத்தீர்ப்பின் பத்தி 11, அதனை உறுதி செய்கிறது. “மாற்றல் மனு ஏற்கப்பட்டு மூன்று பேர் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையிலுள்ள வழக்குகள் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றல் செய்யப்படுகின்றன” என்று அது கூறுகிறது.

மூன்று தமிழர் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர்கள் இராம் ஜெத்மலானி மற்றும் அனில் திவான் ஆகியோர் இவ்வழக்கில் ‘எல்.கே.வெங்கட் என்ற நபர் எந்த தொடர்பும் இல்லாதவர். திடீர் விளம்பரம் பெறுவதற்காக இம் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்’ என்று வாதிட்டனர்.

உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் இவ்வாதத்தைக் கண்டு கொள்ளவேயில்லை. இவர்கள் எழுப்பியக் கேள்விக்கு எந்த விடையும் இல்லை. இதற்கு விடையளித்திருக்க வேண்டியது மிக அவசியமானது. ஏனெனில், 139(கி)(1)இன்படி, மனுதாரர் வழக்கில் நேரடியாக பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். இது ஒரு கொலை வழக்கு. தூக்குத் தண்டனை வழங்கிய உச்சநீதிமன்றமும் இதனை உறுதி செய்திருக்கிறது.

இந்நிலையில், கொலையுண்ட இராசீவ் காந்தியின் குடும்பத்தினர் அல்லது உறவினர்களில் ஒருவர் தான் வழக்குத் தாக்கல் செய்ய முடியும். அவரது கோரிக்கையை தான் உச்சநீதி மன்றம் பரிசீலிக்க முடியும். நேரடியாக தொடர்பே இல்லாத ஒருவர் மனு செய்ய வாய்ப்பளிக்கிற பொதுநல வழக்கு அல்ல இது. இது ஒரு கொலை வழக்கு.

இந்நிலையில், எல்.கே. வெங்கட் மனுவின் அடிப்படையில் இம்முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்ததே அரசமைப்புச் சட்ட விதி 139(கி)(1)க்கு எதிரானது. தனது அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்துகிறது.

2. விதி 139(A)(1) கூறுகிற அடுத்த நிபந்தனை ஒத்தத் தன்மையுள்ள சிக்கல் முன்வைக்கப் பட்டிருக்கிறதா என்பது. புல்லார் வழக்கு, மகேந்திரநாத் தாஸ் வழக்கு ஆகியவை உச்சநீதி மன்றத்திற்கு வந்துள்ளதற்கும் மூன்று தமிழர் வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளதற்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உண்டு.

பேராசிரியர் தேவேந்திர பால் சிங் புல்லார் தில்லியில் 1990இல் நடந்த குண்டு வெடிப்புக் குறித்த வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு 2003இல் குடியரசுத் தலைவருக்கு கருணைமனு அளிக்கப்பட்டு, 2011இல் கருணை மனு நிராகரிக்கப்பட்டவர். அந்த நிராகரிப்பை எதிர்த்து நேரடியாக உச்சநீதி மன்றத்தில் மனு செய்தவர்.

மகேந்திரநாத் தாஸ் 1996இல் ஒரு கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு பல்வேறு கருணை மனுக்கள் பல வாய்ப்புகளில் நிராகரிக்கப்பட்டு, அதனை எதிர்த்து கவுகாத்தி உயர்நீதிமன்றத்தில் மனு செய்து, கவுகாத்தி உயர்நீதிமன்றமும் கருணை மனு நிராகரிக்கப் பட்டது சரி என தீர்ப்புரைத்த பிறகு அதனை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்தவர்.

ஆக, மேற்கண்ட இரண்டு வழக்குகளும் சட்டமுறைப்படி மனுதாரர்களாக விரும்பி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததன் வழி விசாரணையில் இருப்பவை. மூன்று தமிழர் வழக்கு அப்படிப்பட்டதல்ல. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர்களுடைய கருணைமனு நிராகரிப்பு வழக்கு விசாரணையில் உள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அது குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. எனவே, இது அடிப்படையிலேயே வேறு தன்மையானது.

மேலும், இது ஒரு அரசமைப்புச் சட்டம் தொடர்பான அல்லது அடிப்படை சட்ட நிலை தொடர்பான வழக்கு அல்ல. ஒரு கொலை வழக்கின் மேல்முறையீடு. உச்சநீதிமன்றம் குறிப்பிடுகிற 3 கொலை வழக்குகளிலும், அவை நடந்த காரணங்கள், பின்னணிகள், நிகழ்வுகள் அவ்வழக்குகளின் மேல்முறையீட்டில் விவாதிக்கப்பட்ட சட்ட நிலைகள் ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபாடானவை.

கருணை மனு நிராகரிக்கப்பட்டப் பிறகு அதுதொடர்பான நீதிமன்ற மேல்முறையீடுதான் தொடர்புடையோர் உயிர் வாழ்வதற்கான கடைசிக்கும் கடைசியான வாய்ப்பு. இந்த வாய்ப்பை அவர்கள் முழுமையாக பயன் படுத்திக் கொள்ள நீதிமன்றம் ஒத்துழைக்கவேண்டும். அது தான் இயற்கை நீதி.

கருணை மனுவை ஆய்வு செய்யும் போது, குடியரசுத் தலைவரோ அல்லது மாநில ஆளுநரோ உச்சநீதிமன்றத்தின் மேல் முறையீட்டு மன்றமாக செயல்பட முடியாது என்றாலும் வழக்கின் சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் முழுவதையும் சுதந்திரமாக மறு ஆய்வு செய்து முற்றிலும் வேறுபட்ட முடிவுக்கு வந்து அதனுடைய அடிப்படையில் கருணை மனு மீதான ஒரு புதிய முடிவை மேற்கொள்ளலாம். அவ்வாறு குடியரசுத் தலைவரோ, மாநில ஆளுநரோ சுதந்திரமாக ஆய்வு செய்து முடிவெடுத்துவிட்டார்களா என்பதை உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு உட்படுத்தலாம். இதனை கேஹர் சிங்(1989 SCC) மற்றும், சுவரன் சிங்(1998, 4 SCC p 75) வழக்குத் தீர்ப்புகள் கூறு கின்றன.

மூன்று தமிழர் சாவுத் தண்டனை வழக்கில் வழக்குத் தொடர்பான ஆவணங்கள், சாட்சியங்கள் ஆகியவற்றை சுயேச்சையான முறையில் கருணை மனுவின் போது இந்திய அரசு அதாவது குடியரசுத் தலைவர் ஆய்வு செய்திருந்தால் கருணை மனுக்களை ஏற்பதைத் தவிர வேறு வழியில்லை என ஏற்கெனவே நாம் விரிவாக விளக்கியிருக்கிறோம் (காண்க: மூன்று தமிழர் மரண தண்டனையை நீக்கு, கி.வெங்கட் ராமன், தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சி வெளியீடு, ஆகஸ்ட் 2011).

நீதிமன்ற ஆய்வின் போது இது பற்றிய ஆய்வை மேற் கொண்டால் மூன்று தமிழர் வழக்கும் புல்லார் மற்றும் மகேந்திரநாத் வழக்கும் சற்றும் தொடர்பில்லாதவை என்று விளங்கும்.

இந்த 3 கருணை மனு வழக்குகளிலும், ‘குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளித்த பின் நீண்டகால காத்திருப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்’ என்பது முக்கியமான வாதமாக முன்வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஒன்றில் மட்டும் தான் இம்மூன்று வழக்குகளிலும் ஒத்தத்தன்மை இருக்கிறது. மற்றபடி இம்மூன்று வழக்குகளும் வெவ்வேறு தன்மை கொண்டுள்ளவை. விதி 139(கி)(1) இல் கூறப்பட்டுள்ள ஒரே தன்மையான அல்லது பெரிதும் ஒரேத் தன்மையான சட்டக் கேள்விகள் (Same or substantially the same question of Law) என்பது இந்த மூன்று வழக்கு களுக்கிடையே இல்லை. ஒரே ஒரு கேள்வியில் மட்டும் தான்-- நீண்டகால காத்திருப்பு என்ற ஒன்றில் மட்டும்-தான் ஒரே தன்மையுள்ளது.

உயர்நீதிமன்றத்தில் முதல் நிலை விசாரணையின் போது உடனடியாக தடையாணை கோருவதற்கு முதன்மையான ஏதாவதொரு காரணத்தை முன்வைத்தால் போதுமானது. அந்த அடிப்படையில் தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூவரும் நீண்ட காலமாக கருணை மனு அளித்துக் காத்திருக்கிறார்கள் என்று முன்வைக்கப்பட்டுத் தடையாணை பெறப்பட்டது.

முதன்மை வழக்கு விசாரணைக்கு வரும்போது, கருணை மனு நிராகரித்ததை எதிர்த்து விரிவான வாதங்கள் செய்யப் படும். அந்த வாதங்களுக்கும் புல்லா வழக்கு, மகேந்திரநாத் தாஸ் வழக்கு ஆகியவற்றுக்கும் ஒத்தத்தன்மைஇருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இவை தனித்தனி கொலை வழக்குகள். இதில் கருணை மனு அளித்துக்காத் திருப்பவர்களும் அவர்களது நடத்தையும் அவர்களது சிறை நடத்தையும், வெவ் வேறானவை. கருணை மனுவை ஆய்வு செய்யும் போது குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டிய நிபந்தனைகளாக எப்புருசுதாகர் வழக்கில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் மூன்று தமிழர் வழக்கில் பொருந்தி வருவது போல், அதே அளவிற்கு பிறர் வழக்கில் பொருந்தி வருமா என்பது தெரியாது. எனவே, இவை தனித்தனியாக பரிசீலிக்க வேண்டிய தனித்தனித் தன்மை வாய்ந்த வழக்குகள். ஒரே விதமான சட்டப் பிரச்சினை இவற்றில் முன்வைக்கப்பட வில்லை.

எனவே, விதி 139(A)(1)இல் கூறப்பட்டுள்ள ஒரே தன்மை அல்லது பெரிதும் ஒரே தன்மை என்ற நிபந்தனை மூன்று தமிழர் வழக்கில் பொருந்தி வராத போது, உச்ச நீதிமன்றம் அவ்விதியை பயன்படுத்தி விசாரணையை தனக்கு மாற்றிக் கொண்டது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.

ஒரு கூட்டாட்சி முறை மையில் உயர்நீதி மன்றத்தின் விசாரணை வாய்ப்பை பாதுகாக்க வேண்டியது உச்சநீதி மன்றத்தின் நீங்காக் கடமையாகும். ஆனால் இந்த வழக்கில் கூட்டாட்சி முறைமையின் உயிரான இந்த வாய்ப்பை உச்சநீதிமன்றமே தட்டிப் பறித்துள்ளது.

இவ்வழக்கை விசாரிக்கும் சிங்க்வி - முகபாத்யாயா ஆகியோரின் மனநிலையைப் புரிந்து கொண்டால் இதிலுள்ள ஆபத்து இன்னும் தெளிவாகும்.

கருணை மனு தொடர்பாக இவர்களது கருத்துகள் வேறு சில வழக்குகளில் திறந்த நீதி மன்றத்தில் அவர்களே உதிர்த்து வெளிவந்துள்ளன. எடுத்துக் காட்டாக, பல்வந்த சிங் ராஜோனா என்பவரது வழக்கை எடுத்துக் கொள்ளலாம்.

பல்வந்த சிங் ராஜோனா 1995இல் பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங்கை கொலை செய்ததாக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர். அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்து அவருக்கு 28.03.2012இல் தூக்கிற்கான நாளும் குறிக்கப்பட்ட நிலையில், பஞ்சாபே கொந்தளித்து எழுந்தது. இச்சூழலில், எதிர் கட்சித் தலைவர்கள் புடைசூழ பஞ்சாப் முதலமைச்சரே நேரில் சென்று பிரதமரைச் சந்தித்து மனு அளித்து ராஜோனாவின் தூக்குத் தண்டனையை கடைசி நிமிடத்தில் நிறுத்தினார்கள்.

சிரோன்மணி குருத்வாரா பிரபந்த கமிட்டி சார்பில், இக் கருணை மனு தொடர்பான வழக்கும் தொடுக்கப்பட்டு இதே இரண்டு நீதிபதிகள் முன்னால் வந்தது. அப்போது, நீதிபதி சிங்க்வி கூறியது வருமாறு: “பயங்கரவாதிகளின் ஆதரவில் பதவிக்கு வந்தவர்கள் இவர்கள். அப்பயங்கரவாதிகளுக்கு நன்றிக் கடன் பெற்றுள்ள இவர்கள் எப்படி அவர்களைக் கைவிடுவார்கள்? இது பட்டப்பகலில் நடந்த படுகொலை. அதுவும் கொல்லப்பட்டவர் மாநிலத்தின் முதலமைச்சர். அரசு விரைவாக செயல்பட்டிருந்தால் இந்த மனுவுக்கு தேவையே எழுந்திருக்காது. இது தொடர்பான அரசின் பணமும் பெருந்தொகையாக செலவாகியிருக்காது”.

“ஏன் முதலிலேயே தூக்கில் போடவில்லை” என்று கவலைப்படும் இவர்கள், கருணை மனு அளித்தவர்கள் ஒரு அந்தஸ்த்தில் இருந்த தலைவர்களைக் கொன்றவர்கள் என துடிக்கிறார்கள். பட்டப்பகலில் அதுவும் முதலமைச்சரை கொன்றவர்களுக்குக் கருணையா என்று கேட்கும் நீதிபதிகளுக்கு முன்னால்தான் இராசீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள மூவர் வழக்கு வருகிறது.

கருணை மனுவை நிராகரித்து தண்டனை வழங்கியே தீர வேண்டும் என்ற மனநிலை இந்த நீதிபதிகளின் உள்ளக் கிடக்கை என்பது தெளிவான பின், நமது மூன்று தமிழர் வழக்கு இவர்கள் முன்னால் விசாரணைக்கு வருவது கூடுதல் கவலையளிக்கிறது.

இந்த வழக்கில் மட்டுமின்றி, முல்லைப் பெரியாறு சிக்கல், மண்டல்குழு வழக்கு ஆகிய வற்றிலும் உச்சநீதிமன்றத்தில் நிலை தமிழ் இனத்திற்கு எதிராகவே இருந்ததை பார்த்திருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை உடனடியாகத் தேக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதை முறியடிக்கும் நோக்கோடு, கேரள அரசு அணைப்பாதுகாப்புச் சட்டம் இயற்றியது. இச்சட்டத்தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இதை விசாரித்த உச்சநீதி மன்றம் கேரளச் சட்டம் செல்லும் அல்லது செல்லாது என்று முடிவெடுப்பதற்கு மாறாக, அணைப் பாதுகாப்புக் குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஆனந்த் குழுவை நியமித்தது. இது வழக்கில் கேட்கப்படாத கேள்வி. வேண்டுமென்றே ஏற்கெனவே அளிக்கப்பட்ட தீர்ப்பையும் மறுஆய்வுக்கு உட்படுத்தியது உச்சநீதிமன்றம்.

மண்டல் குழு வழக்கிலும் இதுதான் நிகழ்ந்தது. பிற்படுத் தப்பட்டோருக்கு இந்திய அரசு நிறுவனங்களின் கல்வி, வேலை வாய்ப்புகளில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து இந்திராசகாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில் தமிழ்நாடு தொடர்பாக எந்தக் கேள்வியும் எழுப்பப்படவில்லை. ஆனால், உச்சநீதிமன்றமோ தானடித்த மூப்பாகதானே முன்வந்து தமிழ்நாட்டின் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு இடைக்காலத் தடை விதித்தது.

அதே போல், சந்தன வீரப்பன் தொடர்பான வழக்கில், சிவப்பிரகாசம் மற்றும் மூவருக்கு உயர்நீதிமன்றம் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கியதை எதிர்த்து எந்த மேல் முறையீடும் இல்லாத நிலையில், தானே முன்வந்து உச்சநீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்தது.

தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக் கட்டுத் தொடர்பான வழக்கில், ஞாயிற்றுக்கிழமை கூட அமர்ந்து விசாரணை செய்து தடை போட்டது உச்சநீதிமன்றம்.

இவையெல்லாம், உச்சநீதி மன்றத்தின் தமிழினப் பகைப் போக்கிற்கு எடுத்துக்காட்டுகள்.

இந்த வரிசையில், நமது மூன்று தமிழர் கருணை மனு வழக்கும் சேர்ந்துள்ளது.

சட்டவிரோதமாக தமிழினப் பகைப் போக்கோடு மூன்று தமிழர் கருணை மனு வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திலிருந்து தனது விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து தமிழர்கள் மீண்டும் களம் அமைக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திலும், சட்டவழியில் முறையீடு செய்து மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்கு இவ்வழக்கை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Pin It