தமிழ்நாட்டில் போராடும் சக்திகளுக்கு எதிராக ஒரு சார் நெறுக்கடி நிலை செயலில் இருப்பதாக குற்றம் சாட்டிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், தமிழ்நாட்டுச் சிறைகளில் வாடும் இஸ்லாமியர்கள் மற்றும் அரசியல் நீண்ட நாள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தினார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழ்நாட்டில் ஒருசார் நெருக்கடி நிலை (selective emergency) செயலில் உள்ளது தமிழ்த் தேசியர்கள், தமிழீழ ஆதரவாளர்கள், தாராளமய வளர்ச்சி முறைக்கு எதிராகப் போராடுபவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரின் அடிப்படை சனநாயக உரிமைகளை தமிழக அரசின் இந்த ஒரு சார் நெருக்கடி நிலை தட்டிப்பறிக்கிறது தமிழக அரசு. இவர்களை குற்றப்பரம்பரையினர் போல் நடத்துகிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கும் சனநாயக உரிமைகள் அனைத்தும் இவர்களுக்கு கேள்விக்குறி யாக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது 1975 இல் பிறப்பித்த நெருக்கடி நிலை அனைத்து எதிர்க்கட்சிகளையும், பெரும்பாலான ஊடகங்களையும் கடுமையாகப் பாதித்ததால் அதன் கொடுமை மக்கள் அனைவருக்கும் தெரிந்து வலுவான எதிர்ப்புக் கிளம்பியது. அதன் விளைவாக நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்டது. அதனைப் பிறப்பித்த இந்திரகாந்தி ஆட்சியே தூக்கியெறியப்பட்டது.

ஆனால் இப்போது தமிழ்நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை சட்டப்படி அறிவிக்கப்படாததும் அடிப்படை மக்களுக்காக தேர்தல் அரசியலுக்கு வெளியே போராடும் பகுதியினரை மட்டும் குறிவைத்துள்ளதுமான ஒரு சார் நெருக்கடி நிலையாகும்.

இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியினர் இஸ்லாமியர் ஆவர். 1998 கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 166 இஸ்லாமியர்கள் அனைவரும் விசாரணை சிறைவாசிகளாகவே 4 ஆண்டுகளிலிருந்து 9 ஆண்டுகள் வரை கொடுஞ்சிறையில் வாழ்க்கையை கழித்தனர். குற்றவியல் சட்டப்படி இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பிணைக்கூட மறுக்கப்பட்டது.

இவ்வாறு கொடுஞ்சிறையில் 9 ஆண்டுகள் வரை இருந்தவர்களில் 71 பேர் குற்றமற்றவர்கள் என உறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். அதாவது எந்த குற்றமும் செய்யாமல் இஸ்லாமியராக பிறந்த காரணத்திற்காகவே விசாரணை என்ற பெயரில் 9 ஆண்டு சிறைவாசத்தில் இருந்துள்ளனர். ஈடுகட்ட முடியாத இந்த சிறைவாசக் காலத்திற்கு எந்த வகை இழப்பீடும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

தண்டனை பெற்று 13 ஆண்டுகளாக சிறையில் உள்ள பிறருக்கும் இடைக் காலப் பிணைவிடுமுறை (பரோல்) கூட வழங்கப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே கேலிக்குள்ளாக்கப்பட்டு விட்டது.

இஸ்லாமியர் என்றாலே தீவரவாதிகள், இந்தியாவிற்கு எதிரானவர்கள், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்ற படிமம் ஊடகங்களாலும் திரைப்படங்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளதால் அதில் மூழ்கியுள்ள பெரும்பாலான மக்களுக்கு இது உறுத்தலாக படவில்லை. எனவே கேள்விமுறையற்று இந்த சனநாயக மீறல் தொடர்கிறது.

அண்ணா பிறந்த நாளையொட்டி அவ்வபோது நீண்ட நாள் சிறைவாசிகளுக்கு முன் விடுதலை வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு அண்ணா பிறந்த நாளில் 8 ஆண்டு தண்டனை முடித்த சிறைவாசிகள் கூட விடுதலை ஆயினர். ஆனால் அப்போதும் இஸ்லாமிய சிறையாளி களுக்கும், இராசீவ்காந்தி கொலைவழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்றவர்களுக்கும் அவ்வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்த ஒருதலைச் சார்பு நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இனியும் இந்த அநீதித் தொடரக்கூடாது.

எனவே வரும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளையொட்டி 10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், இராசிவ்காந்தி கொலைவழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்றுள்ள சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் தமிழக அரசு முன் விடுதலை செய்ய வேண்டும்.

பிற வாழ்நாள் தண்டனைக் கைதிகளும் பத்தாண்டுகள் முடிந்திருந்தால் அவர்களது சிறை நடத்தைகளைக் கணக்கில் கொண்டு முன்விடுதலை செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் எந்த சிறைவாசியையும் 14 ஆண்டுகளுக்கு மேல் சிறை வைத்திருக்கக் கூடாது அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

Pin It