நான் அடிதடி அராஜகம் பண்ணின காவல்துறையினரைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டேன்.எங்கள் மக்கள் ஒரு ஆயுதம் கூட வைத்துக் கொள்ளவில்லை அவர்களை ஒன்றும் செய்யாதீர்கள் என்று அழுது புரண்டேன்.காலாவதியான கண்ணீர் புகைக் குண்டெண்பதால் எனக்கு மயக்க நிலை வந்தது.பிறகு அங்கு என்ன நடந்ததென்பது ஒன்றும் தெரியவில்லை.என் காலில் செருப்புக்கூட இல்லை.அதை கூட பாராமல் முள்ளின் மீது தரதரவென இழுத்துக் கொண்டு வண்டியில் ஏற்றினார்கள். சுந்தரி, செல்வி, பெட்லின்,கூட்டப்புளி தாத்தா சந்திர போஸ் ஆகியோர் வண்டியில் இருந்ததை அப்போதுதான் பார்த்தேன்.எனக்கு அப்போது நினைவெல்லாம் குழந்தைகள் மீதுதான். எத்தனை குழந்தைகள் தண்ணீருக்குச் சென்றதோ தெரியவில்லையே என்று கதறினேன். 11 மணிக்கு கைது பண்ணின எங்களை கடற்கரையிலே வண்டிக்குள் வைத்திருந்தார்கள். அதன் பிறகு நோயிலிருந்த அத்தை ரோஸ்லினை 5 காவலர்கள் சேர்ந்து தூக்கிக் கொண்டு வந்தார்கள்.வாந்தி வருது என்று கத்தியபோது,“வாந்தி வந்தால் முழுங்க வேண்டியதுதானே” என்று சொல்லி காவல் துறையினர் கதவை அடைத்தனர். தண்ணீர் கேட்டால் தண்ணீர் தர மறுத்தார்கள். இவ்வளவு கொடுமைகள் செய்ய நாங்கள் என்ன குற்றம் செய்தோம். எங்கள் உரிமைக்காகவும் எங்களு மண்ணுக்காகவும்தானே போராடினோம். இது பெரிய குற்றமா?

 காலை 11 மணிக்கு கைது செய்தவர்களை மாலை 4 மணிக்குத்தான் இராதாபுரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தார்கள்.எங்கள் சேலைகளை களைந்து அருவறுக்கும் வகையில் சோதனை செய்தார்கள்.எங்களுக்கு அவமானமாகிவிட்டது. பிறகு கூத்தங்குழியில் இருந்து ஏற்கெனவே சுகமில்லாமல் இருந்தவர்கள் ஊரில் நடந்த காவல் துறை வன்முறையால் அவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு 108ஆம்புலன்ஸ் வண்டிக்கு தொடர்பு கொண்டு சவேரியாள் அக்காவை அவர் தங்கை எஸ்கலின் கூத்தங்குழியிலிருந்து ராதாபுரம் அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது எப்படியோ காவல் துறை மோப்பம் பிடித்து அவர்களையும் கைது செய்து எங்களோடு 7 பேராக சேர்த்து விட்டார்கள். அப்போதுதான் சகோதரி சவேரியாள், சொன்னாள் ஊரில் கடற்கரையிலிருந்து ஊர்வரை காவல்துறையினர் மக்களை அடித்து விரட்டுகிறார்களாம்.கடற்கரையில் சமையலுக்கு வைத்திருந்த பொருட்களை எல்லாம் கொட்டிஅரிசி பையில் மணலை அள்ளி வைத்தார்களாம்.மின்சாரத்திற்காகவைத்திருந்தஜெனரேட்டர்களைஅடித்துநொறுக்கினார்களாம். கடலுக்கு கொண்டு செல்கிற படகு, மற்றும் சாதனங்களை உடைத்தார்களாம்.

 இவ்வளவு நாள் உண்ணாநிலை இருந்து அற வழியில் போராடிய மக்கள் மீது வன்முறையை ஏவிவிட்டார்களே என்று கண்ணீர் விட்டுப் புலம்பினோம். 6மணிக்கு வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பி நசுரேனை அடித்து கூட்டி வந்தார்கள்.சேசு என்பவரை லத்தியால் மண்டயை உடைத்து அவர் மருத்துவமனைக்கு காயத்திற்கு மருந்து வைக்கச் சென்றவரை கைது செய்து கூட்டிவந்தார்கள்.ஒரு அண்ணன் நடக்க முடியாதவர், ஊர்க்காட்டுக்குள் ஆடு மேய்த்த 70வயது ஆன அவரையும் அடித்து கைது செய்து கூட்டி வந்தார்கள். இப்படி எண்ணற்ற அராஜகத்தை அரங்கேற்றியது காவல்துறை.

 அதோடு மட்டுமல்ல, கூத்தங்குழியைச் சேர்ந்த ஒரு படிக்கும் தம்பியை பூட்ஸ்காலால் மிதித்து அவன் நடக்க முடியாத அளவுக்கு அடித்து கைது செய்து கூட்டி வந்தார்கள்.

 எங்களுக்கு சிறை முதல் அனுபவம். ஆதலால் எங்களுக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை.மாலை 4மணிக்கு காவல் நிலையம் கொண்டு வந்த எங்களை இரவு 11 மணிக்கு வள்ளியூர் மகளிர் சிறைக்கு கொண்டு சென்று தங்க வைத்தார்கள்.பிறகு காலையில் 7பேருக்கும் உணவு வாங்கிக் கொடுத்து காலை 9மணிக்கு திரும்பவும் இராதாபுரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தார்கள். அதன் பிறகுதான் எங்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டார்கள். பெண்கள் என்றும் கூட பாராமல் எங்களை 24 மணி நேரத்திற்குள் நேர் நிறுத்தாமல் அலைக்கழித்தார்கள்.கடற்கரையிலே மாவட்ட ஆட்சியரிடம் பேச்சு வார்த்தை நடத்தும் போது எங்களை கைது செய்து வண்டியில் ஏற்றிவிட்டார்கள். பிறகு எங்கள் மீது காவல் வாகனத்தை உடைத்ததாகவும், கண்ணாடி பாட்டில் எரிந்தோம் நாட்டு வெடி குண்டு வீசினோம் என்று பொய் வழக்கு எழுதினார்கள்.அதன் பிறகு கூடங்குளம் சகோதர்களை அடித்து சட்டை இல்லாமல் கொண்டு வந்தார்கள்.எங்கள் முன்பாகவே “தேவடியாள் மகனே”என்று மாறி மாறி காறித்துப்பினார்கள்.அந்தக் கொடுமையை செய்த காவலர்களை ஆண்டவனிடம் சொல்லி முறையிட்டோம்.

 அந்த மக்கள் இடிந்தகரை மக்கள் வெடி குண்டு வீசியதாகவும், கல் எரிந்ததாகவும், அரிவாள் கொண்டு வெட்டியதாகவும் பெண் காவலர்களை பலவந்தம் படுத்தியதாகவும் பொய் வழக்கு ஜோடித்தார்கள்.எங்கள் மக்கள் சிலர் பெண் காவலர்கள் வெயிலில் நின்றவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள் என்றார்கள்.வேறு சிலர் அவர்கள் நம்மை கொடுமை செய்யத்தான் நிற்கிறார்கள் தண்ணீர் கொடுக்காதீர் என்றனர். உடனே எங்கள் சகோதரர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா “ அவர்களும் நம்ம மனிதர்களுதான் நம்ம சகோதரிகள். நம் தமிழ் மக்கள்”என்றார்கள்.ஊருக்குள் குடம் குடமாக தண்ணீர் சுமந்து வந்து தாகம் தணித்தார்கள் “ என்றனர். அவர்களை பார்த்து பெண் காவலர்களை பலவந்தம் செய்தார்கள் என்று பொய் வழக்குப் போட்டார்கள். இது கடவுளுக்கே அடுக்காது.

 எங்களை கைது செய்தது 10 ஆம் திகதி காலை 11 மணி. 11 ஆம் திகதி இரவு 12 மணி அளவில் வள்ளியூர் நீதி மன்றத்தில் நேர் நிறுத்தினார்கள்.அப்போது கூத்தங்குழி அக்கா இருவரையும், மருத்துவமனைக்கு உடல் நிலை சரியில்லாமல் வந்தவர்களையும் விட்டு விடுங்கள் என்று நீதிபதியிடம் கெஞ்சினோம்.“நீங்கள் சொல்வதை எழுதியிருக்கிறோம்” என்றார்களே தவிர விடவில்லை.அதன் பிறகு 1மணிக்கு திருச்சி மகளிர் சிறைக்கு பெண்களையும் பாதி ஆண்களை வேலூர்க்கும் மீதமுள்ள ஆட்களை திருச்சி நடுவண் சிறைக்கும் கொண்டு வந்தார்கள்.

 12 ஆம் திகதி காலை 11.30க்கு எங்களை மகளிர் சிறைக்கு கொண்டு வந்தார்கள் அங்கு உள்ளுக்குள் நுழைந்ததும் வாசலில் ஒரு அறைக்குள் கூட்டிச் சென்று எங்கள் துணிகளை அவிழ்த்து எங்களைசோதனை செய்தார்கள்.பெண்களே பெண்களைஅவிழ்த்துப் பார்த்தார்கள். அவமானமாக இருந்தது. வாசலில் மட்டுமல்ல எங்களை 2 ஆம் எண் அறையில் வாசலில் நின்ற காவலர் அங்கும் சேலைகளை அவிழ்த்தது அவமானமாகிவிட்டது. 2 ஆம் அறையில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த அக்கா ஒருத்தி (மீனவப் பெண்)சாராய வழக்கில் கைதாகி இருந்தார்.அவர்கள்எங்களுக்குசோறு தந்து எங்களை குளிக்க வைத்து பாசமாக நடத்தினார்.நாங்கள் உடுத்தியிருந்த துணியோடு வந்திருந்ததால் வள்ளியூரில் வைத்து பெட்லின் அண்ணன் எல்லோருக்கும் ஒரு சேலை வாங்கித் தந்தார்கள்.சட்டையையும் பாவாடையையும் ஈரமாகவே போட்டுக் கொண்டோம்.மாலை ஐந்து மணி அளவில் இரவு உணவு தந்து 4பேரை 2எண் அறையிலும்,3பேரை3எண்அறையிலும் இருக்கச் சொன்னார்கள். எங்கள் 7 பேரையும் ஒரே அறையில் வையுங்கள் என்று கூறினோம். அதன் படி3ஆம் எண் அறையில்7பேரையும்அடைத்தார்கள்.கொசுக்கடியுடன் தூங்க ஆரம்பித்தோம்.ஆனால் தூக்கம் வரவில்லை ஊரை நினைத்து.

 அடுத்த நாள் 10 மணி அளவில் வழக்கறிஞர் சகோதர்கள் பார்க்க வந்தார்கள். 7 பேருக்கும் சேலை பாவாடை நைட்டிகள் கொண்டு வந்து கொடுத்தார்கள்.மனு பார்க்க போகிற இடத்திற்குநைட்டிபோட்டுக் கொண்டு போகக் கூடாது.அதனால் போட்ட சட்டையைத்தானே போட வேண்டும் என்று நினைத்தோம்.ஆனால் சகோதர்கள் அளவு சட்டை இருந்தால்தான் அடித்துத் தர முடியும் என்றார்கள்.நாங்கள் நைட்டியைப் போட்டுக்கொண்டு சட்டைகளைக் கொடுத்தோம்.பாசமுள்ள சகோதர்கள் உடனே ஆளுக்கொரு சட்டை அடித்து தந்து விட்டார்கள். கென்னடி, வின்சென்ட்,ஹம்ருதின் சகேஷ் உள்ளிட்ட சகோதர்கள் எங்களிடம் பாசத்தைப் பொழிந்தார்கள்.

 ரோஸ்லின் அத்தை ஒரு வாய் சாப்பிட்டாலும் வாந்திதான் எடுப்பார்கள். அவர்களுக்குத்தான் ரொம்ப முடியாமல் போனது.ஆனால் மருத்துவ மனையில் தங்க வைத்து குளுக்கோஸ் போட்டார்கள்.கையில் தட்டு வைத்துக் கொண்டு உணவுக்கு வரிசையில் நிற்பதற்கு வெட்கமாக இருந்தது. சாப்பிட்டால் வாடை அடிக்கும். சாப்பிடாமலே கொண்டு கொட்டுவோம். காலையில் ஒரு மடக்கு காபி, 8 மணிக்கு ஒரு உப்புமா, அல்லது கஞ்சி, பொங்கல். அதற்கு சட்னி 1 ஸ்பூன். இப்படியே 15 நாள் கழிந்தது. வழக்கறிஞர் சகோதர்கள் பழ வகைகள் என்று ஏழுபேருக்கும் வாங்கித் தந்தார்கள்.பிறகு எங்கள் 7 பேருக்கும் பிடிவராண்ட் வந்தது.கைது பண்ணின பிறகு எதற்கு வாரண்ட் என்று வழக்கறிஞர்களிடம் கேட்டோம். பழைய வழக்குகள் உங்கள் மீது உள்ளதாம். அதற்குதான் வாய்தாவுக்கு வள்ளியூர் செல்ல வேண்டும்.7பேரையும் நீதிமன்றத்திற்கு பாதுகாப்பு வண்டியில் கொண்டுச் சென்றார்கள். திருச்சியிலிருந்து 7 மணி நேர பயணம். போக 7 மணி நேரம்., வர 7 மணி நேரம். ரொம்பவும் கஷ்டமாக இருந்தது.

 வள்ளியூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் நேர் நிறுத்தினார்கள். எல்லோரும் பார்த்தார்கள் எங்களுக்கு அவமானமாக இருந்தது.எங்களை கொலை திருட்டு மற்ற வழக்குகள் என்று நினைப்பார்களோ என்று நினைத்தோம். ஆனால் ஒரு கணம் நாம் எதுக்கு அப்படி நினைக்க வேண்டும்.நாம்போராளிகளாகத்தானேசிறைக்குப்போனோம்.நம்மண்ணுக்குநம்மக்களுக்காகத்தானே போராடினோம் என்று மனதை தேற்றிக்கொண்டோம்.

 நீதிபதி கேட்டார் “உங்களை அழைத்து வந்தது எதற்குத் தெரியுமா?” என்றார். நாங்கள் தெரியாது என்றோம். அதற்கு அவர்கள் “ முன்னாள் உள்ள வழக்கு” என்றார். நாங்கள் என்ன குற்றம் செய்தோம்.கொலை செய்தோமா?களவு செய்தோமா?பிராத்தல் செய்தோமா? இல்லை அரசாங்க பொருட்களுக்கு சேதம் விளைவித்தோமா?என்ன குற்றம் செய்தோம். நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்திற்காகவும்,எங்கள் சந்ததிகளை இந்த மண்ணில் நோய் நொடி இல்லாமல் சுதந்திரமாக வாழ வைக்கவும்தான் போராடினோம்” என்றோம். உடனே “ நான்நீங்கள்சொன்னதைஎழுதிக் கொள்கிறேன்”என்றார்கள்.உடனே மருத்துவமனையிலிருந்து வந்த சகோதரிகள் இருவரும் கத்தினார்கள்.“உடல் நிலை சரியில்லாமல் இராதாபுரம் மருத்துவமனைக்கு108ஆம்புலனஸில் சென்ற எங்களை இங்கே கொண்டு வந்துவிட்டார்கள். எங்களை விடச் சொல்லுங்க என்றார்கள். அதையும் கேட்டு எழுதிக் கொண்டார்களே தவிர ஒரு நடவடிக்கையும் எடுக்க வில்லை.

 எங்கள் ஊர் மக்கள் எங்களை பார்க்க வந்தார்கள். அவர்கள் அழ.. நாங்கள் அழ… மிகவும் துன்பப்பட்டோம். அவர்களிடம் பேசக் கூட அனுமதி வழங்க வில்லை. அவர்கள் கொண்டு வந்த உணவை சாப்பிடவிடவில்லை.காசு வாங்கித் தாருங்கள் நாங்கள் கடையில் வாங்கித் தருகிறோம் என்றார்கள். எங்கள் மக்கள் காசுக் கொடுத்தார்கள்.பழமெல்லாம் வாங்கித் தந்தார்கள். பிறகு வண்டியில் ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு புறப்பட்டார்கள். வரும் வழியில் உணவு வங்கித் தந்தார்கள் காவலர்கள்.மீண்டும்7மணி நேரபயணம்.அங்கு 12 மணிக்குத்தான் சேர முடிந்தது.

 அந்த நேரம் தான் எங்களுக்கு பெரும் கொடுமை நடந்தது. முதல் வாசலில் எங்களை சேலைகள் களைந்து சோதனை செய்தார்கள்.பிறகு எங்கள் அறைக்கு போகிற வாசலில் நின்ற வார்டன், சேலை சட்டைகளை கழற்றி சோதனைப் போட்டார்கள். 8 மணிக்குப் பிறகு நீதிமன்றம் சென்று வந்த கைதிகளை (லேட் ரூம்) 5 ஆம் எண் அறையில் அடைப்பார்களாம். அங்கு எங்களை அடைத்தார்கள். ஆள் இல்லாத அறை என்பதால் கொசு எங்களை கடித்துக் குதறிவிட்டது.யாரும் தூங்கவில்லை.பிறகு 6மணிக்கு வந்து கதவை திறந்து விட்டு மறுபடியும் கொடுமை.திரும்பவும் மூன்றாவது முறையாக எங்கள் சேலை சட்டைகளை அவிழ்த்து பாவடை நாடவையும் உறுவி சோதனை செய்தார்கள். செத்திடலாம் என்று கூட தோணியது. பிறகு எங்கள் அறைக்கு கூட்டிச் சென்றார்கள். சேலை அவிழ்க்கும் சோதனை எங்கள் மனதை மிகவும் வேதனைப் படுத்தியது. அன்று பயணம் செய்த களைப்பு கால் வலி உடல் வலி மிகவும் அதிகமாக இருந்தது.சிறை மருத்துவமனைக்கு சென்றால் ஏழு பேருக்கும் உடல் நிலை சரியில்லை என்றோம். ஒரே மாத்திரைதான் தந்தார்கள் சிரிப்புதான் வந்தது.

 வழக்கறிஞர்கள் எங்களை ஒவ்வொரு நாளும் பார்க்க வந்தார்கள். அவர்களுடன் எங்கள் குரு மடத்திலுள்ள சகோதரரும் பார்க்க வந்தார். அவர்கள் வந்து பேசி செல்வது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது.

 ஒரு நாள் திருச்சிக்கு முதல் அமைச்சர் அம்மா அவர்கள் வந்தார்கள் என்று மக்கள் கலை இலக்கிய கழகம் அமைப்புச் சார்ந்தவர்கள் “ கூடங்குளம் மக்களை விடுதலை செய் ” என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்து திருச்சி நடுவண் சிறையில் அடைத்தார்கள். வந்த அவர்களிடம் இங்கே சோதனை செய்வதை சொல்லி அழுதோம்.“அவர்களை ஏன் சோதிக்க விட்டீர்கள்.இனிமேல் சோதனை போட்டால் போட விடாதீங்க.நாமெல்லாம் அரசியல் கைதிகள் எங்களை சோதனைப் போடக்கூடாது என்று சொல்லுங்கள்”என்று கூறினர்.எங்களுக்கு அதன் பிறகு ஒரு துணிச்சல் வந்தது.அவர்கள் மூன்று நாளில் விடுதலை ஆகிச் சென்றார்கள்.அதன் பிறகுதான் நாங்கள் சிறையைப் பற்றி புரிந்து கொண்டோம்.ரோஸ்லின் அத்தைக்குத்தான் வாந்தி நிற்கவே இல்லை. ஒரு வாய் சோறு போட்டவுடன் வெளியில் ஓடுவார்கள்.அவர்கள் நிலைமையைப் பார்த்துதான் கொஞ்சம் பயமாக இருந்தது.

 இப்படி இருக்க மறுபடியும் எல்லோர் மீதும் ஒரு பிடிவாரண்ட் வந்தது. அதற்கும் வள்ளியூர் நீதிமன்றம்தான் போக வேண்டும்.அந்த நீண்ட தூரத்தை வழக்கறிஞர்களிடம் கூறினோம். “இந்த கஷ்டத்தைப் புரிந்துகொண்டால் நீங்கள் இனிமேல் போராட மாட்டீர்கள் என்பதற்காகதான் உங்களை இப்படி அலைக்கழிக்கிறார்கள்” என்றார். “எங்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் பரவாயில்லை,சுட்டுக்கொன்றாலும்பரவாயில்லை.நாங்கள் போராட்டத்தை நிறுத்த மாட்டோம்.”என்றோம் வழக்கறிஞர்கள் எங்களுக்கு பெயில் எடுக்கும் போதெல்லாம் எங்களுக்கு வழக்குப் போட்டார்கள்.எங்களை திரும்பவும் வள்ளியூர் நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்றார்கள்.

 நீதிபதியிடம் நான் கேட்டேன். “ எங்களுக்கு உரிமை உண்டா என்றேன். அதற்கு “ உண்டு” என்றார்கள் “நாங்கள் எங்கள் மண்ணுக்காக எங்கள் மக்களுக்காகத்தானே போராடினோம் எங்கள் மீது ஏன் திரும்ப திரும்ப வழக்குப் போடுகிறார்கள்.“என்று அழுதேன்.அதற்கு அவர்கள் “இதையெல்லாம் உங்கள் வழக்கறிஞர் பார்த்துக் கொள்வார்” உங்களை சிறையில் எப்படி வைத்துள்ளார்கள் என்பதை சொல்லுங்கள். அதனை நான் சரி செய்கிறேன்” என்றார். எங்கள் ஊர் மக்கள் எங்களை பார்க்க வந்தார்கள்.என்னதான் சிறையில் துணிச்சலாக இருந்தாலும் அவர்களைப் பார்த்ததும் சங்கடமாக இருந்தது.அப்போதுதான் கூறினார்கள் “பெண்களையெல்லாம் கைது செய்தவுடன் உதயகுமார் அண்ணன் காவல் நிலையத்தில் சரண்டர் ஆகப்போறார் களாம். உடனே பந்தலில் இருந்த பெண்கள் அவரை சரண்டர் ஆகக் கூடாது. நாங்கள் இருக்கும் வரை காவல் துறையை உங்களிடம் நெருங்க விட மாட்டோம்.” என்று கதறினார்களாம். உடனே போராட்டக் குழுவைச் சேர்ந்த சகோதரர்கள் உதயகுமாரை கடலுக்குள் தூக்கிச் சென்றார்களாம். நாங்களும் “எந்த காரணத்தைக் கொண்டும் அண்ணன் சரண்டர் ஆகக் கூடாது. போராட்டத்தையும் கைவிடக் கூடாது” என்று கூறினோம்.

 அதுவரை ஊருக்குள் நுழையாத காவல் துறையினர் போராட்டப் பந்தலையெல்லாம் பிரித்து விட்டு கோயிலுக்குள் சென்று லூர்து மாதா சுருபத்தை உடைத்து அதில் சிறு நீர் கழித்து கொச்சைப் படுத்தியிருக்கிறார்கள். ஆனால் மாதா அவர்களையெல்லாம் கட்டாயம் கேட்பார்கள். இதையெல்லாம் கேட்டவுடன் எங்கள் உள்ளம் கொதித்தது. பிறகு திருச்சி நடுவண் சிறைக்கு எங்களை கொண்டு சென்றார்கள்.அங்கு சென்றவுடன் இரவு வழக்கம் போல சோதனைப் போட்டார்கள்.லேட் அறையில் அடைத்தார்கள்.இப்படி ஒவ்வொரு தடவையும் நீதிமன்றம் போய் வரும் போதெல்லாம் சித்திரவதை அனுபவித்தோம். விடியும் வேளை அறையைத் திறந்தவுடன் ஒரு வார்டன் வந்து சேலையை உருவி சட்டையையும் களைந்து சுந்தரியிடம் பாவடையை அவிழ்க்கச் சொன்னார்கள்.எங்களுக்கு கோபமும் ஆத்திரமும் துணிச்சலும் வந்து விட்டது. “நீ ஒரு பொம்பளயா..!பொம்பளக்கிட்டேயே துணிய அவிழ்க்கச் சொல்லுறியே.. நாங்கள் அவிழ்க்க மட்டோம்” என்று துணிச்சலாக பேசினோம். அதற்கு “ நாங்கள் அப்படித்தான் சோதனை போடுவோம். நீங்கள் சட்டைக்குள் பிளேடு, கத்தி எதாவது வைத்துக் கொண்டு வருவீர்கள்” என்றாள். நாங்கள் இதையெல்லாம் கொண்டுவரும் பழக்கம் கிடையாது.நாங்கள் போராட்டத்திற்கே ஆயுதம் எடுக்காமல் அறவழியில்தான் போராடிகைதுஆகியிருக்கிறோம்.எங்களைஇதற்குமேல்சோதனைபோடவிடமாட்டோம்.நாங்கள் அரசியல் கைதிகள்”என்றுசொல்லிவிட்டு எங்கள் அறைக்குச் சென்றோம்.

 அன்று நாங்கள் உணவு வாங்க போகவில்லை.அதன் பிறகு எங்களைத் தேடி பெரிய அம்மா வந்தார்கள். “ஏம்மா சாப்பாடு வாங்க வர்ல” என்று கேட்டார்கள். எங்களுக்கு சாப்பாடு வேண்டாம் எங்கள் வழக்கறிஞர் வந்த பிறகுதான் சாப்பிடுவோம்.“எங்களை சோதனை செய்வது பிடிக்க வில்லை”என்றோம்.அப்போது அவர்கள் “நீங்கள் கூடங்குளம் மக்கள் என்று சொல்ல வேண்டியதுதானே அவள் விடுமுறைக்குச் சென்று விட்டு இன்றுதான் வந்திருக்கிறாள்.ஆகையால் உங்களைப் பற்றி அவளுக்குத் தெரியாது”என்றார்.அதற்கு நாங்கள் “கவிதா மேடம் பக்கத்தில் நின்றார்களே அவர்கள் சொல்ல வேண்டியதுதானே” என்றோம்.பிறகு அவர்களே சிறைக்கு காபி,சாப்பாடு கொண்டு வந்தார்கள்.எங்கள் வழக்கறிஞரிடம் சொன்ன பிரகுதன் நாங்கள் சாப்பிடுவோம் என்றோம். அவளை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறேன் என்றார்கள்.பிறகுதான் பெரியவர்களுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமே என்று சாப்பிட்டோம்.11மணி அளவில் கென்னடி அய்யாவும்,ஹம்ருத்தின் சகோதரரும் எங்களை பார்க்க வந்தார்கள்.அவர்களிடம் எங்களை சோதனை போட்ட முறையை சொல்லி அழுதோம்.அவர் உடனே “எந்த வார்டன் பெயர் என்னவென்று” கேட்டார்.உடனே பெரியம்மா அவளை வரவழைத்தார்கள்.அவள் பெயர் ஜெயலெட்சுமி என்றும்.அவள் விடுமுறையில் இருந்ததால் அவர்களைப் பற்றி தெரியவில்லை என்றும் மன்னிப்புக் கேட்க வைத்தார்கள்.பிறகு வழக்கறிஞர் “அவர்களை சோதனைப் போடக் கூடாது அவர்கள் அரசியல் கைதிகள்.அவர்கள் எவ்வளவு பெரிய தியாகத்தை செய்து விட்டு வந்திருக்கிறார்கள்.” என்று கூறினார்கள். இதற்கு மேல் இப்படி நடந்தால் நாங்கள் வழக்குக் கொடுப்போம்என்று கூறினார்கள்.அதன் பிறகு எல்லா வார்டனும் எங்களிடம் நல்லமுறையில் நடந்து கொண்டார்கள்.

 சிறையில் இருக்கும் போதே எங்கள் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்குப் போட்டார்கள். நாங்கள் பயப்பட வில்லை.45நாட்களில் மற்ற நால்வருக்கும் பெயில் கிடைத்தது.( சவேரியாள், எஸ்கலின், ரோஷ்லின், பெட்லின்) அவர்களை மதுரையில் ஒவ்வொரு நாளும் நிபந்தனை கையெழுத்துப் போட வைத்தார்கள்.நாங்கள் சிறையில் சும்மா இருக்க வில்லை. கைதிகளை நடத்துகிற விதத்தைத் தட்டிக் கேட்டோம்.ஒவ்வொருக் குற்றங்களையும் தட்டிக் கேட்டவுடன் எங்களை 3ஆம் அறையிலிருந்து நிர்வாக அலுவலகம் அருகில் கொண்டு வைத்தார்கள்.அடுத்த அடுத்த வழக்கு நாங்கள் மூன்று பேர் மட்டும் என்பதால் எங்களை காவல் வண்டியில் கொண்டு செல்லாமல் எங்களை பேருந்தில் கொண்டுச் சென்றார்கள். துப்பாக்கி ஏந்திய 4பெண்காவலர்கள் எங்களை அழைத்துச் சென்றார்கள் மிகவும் வேதனையாக இருந்தது.ஆனாலும் சகித்துக் கொண்டோம்.நாம் கொலையா செஞ்சிட்டு வந்திருக்கோம்.நாட்டுக்காகத்தானே போராடி வந்திருக்கோம் என்று மனதில் நினைத்துக் கொண்டோம்.இடையில் பேருந்து நிற்கும் போது சிறுநீர் கழிக்க இரண்டு பெண் காவலர்கள் இறங்கினார்கள்.அவர்கள் போகும் போது எங்களைக் கூட்டிக் கொண்டு போகாமல் போய்விட்டார்கள்.அப்போது சுந்தரி “எங்களிடமும் கேட்டு கூட்டிட்டு போயிருக்காலம் இல்லியா”என்று சொன்னதற்கு,“உங்களுக்கு வருது என்று ஸ்கேன் எடுத்து பார்த்துக் கொண்டா கூட்டிப் போகனும்என்று அவ்வளவு கூட்டத்திற்கு நடுவில் எங்களை அருவருப்பாக பேசிவிட்டார்கள் அந்த பெண் காவலர்கள்.எங்களுக்கு அழுகையா வந்தது. நாங்கள் “உடனே கொலை செய்தவன் கூட நாட்டில் பகிரங்கமாக அலையுறான். நாட்டிற்காக போராடி வந்த எங்களை இப்படியும் பேசுவார்களா”என்று வேதனையாக இருந்தது. இதைப் பார்த்த முன் இருக்கையில் இருந்த பொறுக்கி ஒருத்தன் எங்கள பாத்து “ உங்க போராட்டம் தெரியாதா?500ரூபாய் பாய்க்கும் சிக்கன் பிரியாணிக்குந்தானே போராட்டம் நடத்துகிறீர்கள் தெரியாதா” என்றானே எனக்கு கோபம் பொங்கிவிட்டது. நான் உடனே எழும்பி “ஏ…. பொறுக்கி யார் போராட்டத்தை யார் பேசுறது..கேட்டுப்பாருடா உலகம் முழுவதும் எங்கள் உண்மையான அறவழி போராட்டம்பேசப்படுது.நீ..எங்கப் போராட்டத்தையா கொச்சப் படுத்திப் பேசுற” என்று எழும்பிவிட்டேன்.

 அந்த ஏட்டம்மா எங்கள் தூண்டி விட்டு பேச வைத்த கதைய நினைத்தேன். அந்த பொறுக்கியதட்டிக்கேட்கவில்லை.நாங்கள்காவலரை பேசினோம்.“நாங்கள் உங்களிடம்தானே கழிவறைக்கு கூட்டிப் போக கேட்டோம்.அவனுக்குப் பேச என்ன இருக்கிறது”என்று சண்டைப் போட்டோம். பாருங்கள்.. பெண்களை இந்த அடிப்படை வசதி கூட செய்து தராத அரசாங்கம்.அணு உலை விபத்து வந்தால் எங்களை எப்படி பாதுகாப்பார்கள் என்று கூறினோம். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு நீதிமன்றம் சென்று வந்தோம்.

 அந்த வாரம் பெயில் போட்டுவிடலாம் என்று வழக்கறிஞர் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே.. சுந்தரிக்கு இரண்டு பிடிவாரண்ட் வந்தது. அதற்குஅவள் தனியே நீதிமன்றம் சென்று வந்தாள்.திரும்பவும் சுந்தரிக்கும் எனக்கும் இரண்டு வழக்குப் போட்டார்கள்.அதற்கும் நாங்கள் இருவரும் நீதிமன்றம் சென்றோம். எனக்கு கோபம் கோபமாக வந்தது. நீதிபதியிடம் இன்று பேசியே தீரணும் என்று முடிவெடுத்தோம்.ஆனால் அங்கு சென்றவுடன் நீதிபதி அவர்கள் கூடங்குளம் ஏட்டிடம் “சும்மா.. சும்மா.. இவங்க மேல் வழக்கு போடுகிறீர்கள். இந்த வழக்குக்கு நான் பெயில் கொடுத்திட்டேன்.இந்த மக்களை நிரந்தரமா சிறையில் வைக்க ஆசையா? இந்த மக்கள் மீது எத்தனை வழக்குகள் இருக்கோ அத்தனையும் மொத்தமாகப் போடுங்கள். அவங்க மொத்தமாக பெயில் எடுப்பாங்க.” என்று திட்டினார். நான் நீதிபதியிடம் கேட்டேன் “எங்களை காவல்துறை கைது பண்ணி சிறையில் அடைத்தப் பிறகு எங்கள் மீது எப்படி திரும்ப திரும்ப வழக்குப் போடுகிறார்கள்.எங்களை சிறையில் அடைத்த பிறகு காவலர்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை.நீதிமன்றமும் எங்களுக்குபெயில் போடுகிற வழக்கறிஞருக்கும் தானே சம்மந்தம்.”என்று நீதிபதியிடம்கேட்டேன்.அவர்கள் புன் சிரிப்புடன் “அவங்க கேட்கிற கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்”என்று சொன்னார்கள்.

 சுந்தரிக்கு தனியே போட்ட வழக்கு இரண்டு நாளில் பதில் சொல்கிறேன் என்றார்கள். எனக்கு பெயில் தந்தவுடன் ஜாமின் தாரர்களை நிறுத்தி தந்துவிட்டார்கள்.நானும் செல்வியும் மூவருக்கும் சேர்த்தே பெயில் போடுங்க.. சுந்தரியை தனியே விடாதீங்க.. என்று அழுதோம். அவர்கள் வேண்டாம் நீங்கள் இருவரும் முதலில் ஊருக்கு வாருங்கள். திரும்ப வழக்குப் போட்டுவிடுவார்கள்.சுந்தரிக்கு இரண்டு நாளில் நாங்கள் வெளியே எடுத்து விடுவோம் என்று ஆறுதல் கூறினார்கள்.அதனால்நாங்கள்அவளை தனியே விடுகிறோமோ என்று கவலையோடு புறப்பட்டோம்.

 எங்களையும் மதுரையில்தான் கையெழுத்துப் போட வைத்தார்கள். நாங்கள் ஊரில் இரண்டு நாள் தங்கிவிட்டு மதுரைக்கு கிளம்பினோம்.எங்களை சிஸ்டர் விடுதியில் தங்க வைத்தார்கள்.இங்கு வந்த பிறகுதான் எங்களை சிஸ்டர் அம்மா,இங்கு தங்கி உள்ள பிள்ளைகள் சமையல்கார அக்காள் எல்லோரும் பாசத்துடன் நடத்தினார்கள்.இங்குள்ள மக்கள், பெண்கள் அமைப்பு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் எங்கள் மீது மிகவும் பிரியத்துடன் நடந்துகொண்டார்கள்.எங்களை செராபினா அக்கா,அருணா அக்கா, கமேஷ்வரி அக்கா இளமதி அக்கா, மேரி அக்கா பாண்டியன் அண்ணன், அவங்க மனைவி மேரி அக்கா,ஆனந்தன் அண்ணன்,இராசு அண்ணன் எல்லோரும் எங்களை சந்தித்தார்கள். அதன் பிறகு, சகோதரி சுந்தரியும் சேர்ந்து விட்டாள். அவள் சிறையில் கூட பதினான்கு நாள்கள் அனுபவித்து விட்டு வந்து விட்டாள். எங்கள் மூவரையும் ஒவ்வொரு அக்காவும் அவர்கள் வீட்டில் ஒவ்வொரு நாள் விருந்து வைத்தார்கள்.எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

 ஆண்டு கணக்கில் எங்களை கையெழுத்துப் போட வைத்தாலும் நாங்கள் போராடிக் கொண்டேதான் இருப்போம்.போராட்டத்தை கைவிடமாட்டோம்.ஆனந்தன் அண்ணன் வீட்டில் எங்கள் மூவருக்கும் பாராட்டு விழா நடத்துவதாக எங்களை அழைத்தார்கள். அங்கு மகளிர் ஆயம் பெண்கள் அமைப்பைச் சேர்ந்த அக்கா எல்லோரும் கலந்து கொண்டார்கள். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியில் உள்ள இளைஞர்களும்,சகோதர்களும் கலந்து கொண்டார்கள். எங்கள் போராட்ட அனுபவங்கள், ஆபத்துகள், சிறை அனுபவம் பற்றி கூறச் சொன்னார்கள் நாங்கள் அது பற்றிக் கூறினோம்.இளைஞர்கள் நாங்கள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்றார்கள். நாங்களும், அணு உலைப் போராட்டம் மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் கொடுமை, பெண்கள் கொடுமை, எங்கெல்லாம் அநீதி நடக்குதோ அங்கெல்லாம் எங்கள் போராட்டம் இருக்கும்.யார் இருப்பார்களோ இல்லையோ நான் இருப்பேன்.ஏனென்றால்சிறைஅனுபவம்எனக்குதுணிச்சலையும்வீரத்தையும் தந்திருக்கின்றது.

 இன்றைக்கு முல்லைப் பெரியாறு தண்ணீரை கேரளா தமிழ்நாட்டுக்கு தர மறுக்குது. காவிரி நீரை கர்நாடகம் தர மறுக்குது.நம்ம தமிழர்களை அழித்து மட்டும் மின்சாரம் அவங்க நாட்டிற்கு கொடுக்கணுமா?ஆபத்தான மின்சாரம் வேண்டாம்.மாற்று வழியில் மின்சாரம் வேண்டும் என்று குரல் கொடுபோம்.தமிழர் ஒற்றுமை ஓங்குக!தமிழர்களாய் ஒன்று சேர்ந்து அநீதிகளை அகற்றுவோம்.

 

Pin It