கம்யூனிசம் என்பது மனித நேயத்தின் சிகரம். சங்ககாலத் தமிழ்ச் சான்றோர்கள் வகுத்த ‘அறம்’ என்பதன் சமூக அறிவியல் வடிவம் தான் கம்யூனிசம்.

கம்யூனிசம் நோக்கிய பயணத்தில் முதல் கட்டம் சனநாயகம்; அடுத்த கட்டம் நிகரமை (சோசலிசம்); நிகரமையின் முதிர்வு கம்யூனிசம்.

புரட்சிக்குப் பின் ரசியாவின் அதிகாரம் லெனின்கைக்கு வந்தது. இனம், மொழி குறித்த கூறுகளில் அவர் மிகப்பெரிய சனநாயகவாதியாக நடந்து கொண்டார். ஆனால் ஸ்டாலின், மா சே துங் போன்ற தலைவர்கள் இனம், மொழி பற்றிய சிக்கல்களில் பெருந்தேசிய வாதத்துடன் இணைந்து கொண்டார்கள். பெருந் தேசியத்துடன் சிறு தேசியங்கள் கரைந்து ஒரு தேசியம் வளரட்டும் என்பதும் அவர்களது கருத்தாக இருந்தது.

சீனத்தில் 96% மக்கள் சீன (ஹன்) தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு தேசிய இனச்சிக்கல் கம்யூனிஸ்ட்டு கட்சியில் பெரிதாக விவாதிக்கப்பட வில்லை.

ருசிய இனத்தில் பிறந்த லெனின் ருசிய இன மேலாதிக்கவாதத்தைக் கடு மையாகச் சாடினார். தங்களை மகாருசியர் (The Great Russians) என்று கருதிக் கொள்ளும் தற் செருக்கு, புரட்சிக்குப் பின்னரும்கூட ரசியர்களிடம் தொடர்ந்தது. ருசியர் அல்லாத தேசிய இனத்திற்குப் பிரிந்து செல்லும் உரிமையை ஏட்டளவில் எழுதி வைத்திருந்தால் மட்டும் போதாது. அது ருசியப் பேரினவாதிகளிட மிருந்து அவர்களைப் பாதுகாக்காது என்பதைக் கூறவந்தபோது லெனின் பின்வருமாறு கனல் கக்கினார்.

“ஒன்றியத்திலிருந்து பிரிந்து செல்லும் உரிமை என்பது வெறும் காகிதத் துண்டே. ருசியர் அல்லாதவர்களை மகாருசிய தேசிய வெறியனிடமிருந்து, ருசிய அதிகார வர்க்கப் பேர்வழியிட மிருந்து, கொடுங்கோலனாக உள்ள அந்தக் கயவனிடமிருந்து இந்த உரிமையால் பாதுகாக்க முடியாது’’. (லெனின் தேர்வு நூல்கள் - தமிழ், தொகுதி 12, பக்கம் 274).

காகஸ் பகுதியில் சோசலிஸ்டு “தேசியவாதிகள்’’ என்ற அமைப் பினர் ருசிய தேசிய வாதத்தை மறுத்து, ஜார்ஜிய தேசியவாதம் பேசினர். அவர்கள்’’ மீது அடக்கு முறையை ஏவிவிடக் காரணமான வர்களில் ஒருவர் ஸ்டாலின். ஸ்டாலின் ருசிய இனத்தவர் அல்லர். ஜார்ஜிய தேசிய இனத் தவர். ஆனால் ருசியர்களை விஞ்சிய மகாருசியராக ஜார்ஜியரான ஸ்டாலின் இருக்கிறார் என்று லெனின் சாடினார். காகஸ் நிகழ்வுக்காக ஸ்டாலினைப் பின்வருமாறு விமர்சித்தார் லெனின்.

“ஸ்டாலினது அவசரம் மற்றும் தூய நிர்வாகத்தின் மீது அவருக்குள்ள ‘மோகம்’, சோச லிஸ்டு -தேசியவாதத்தினை எதிர்த்த அவரது வன்மம் ஆகியவை பேராபத்தை உண்டாக்கியுள்ளன என்று கருதுகிறேன். பொதுவாக, அரசியலில் வன்மம் என்பது மிகவும் இழி வான பாத்திரத்தையே வகிக்கி றது’’. (லெனின் மேற்படி தொகுதி 12, பக்கம் 275).

ஜார் மன்னன், பக்கத்து நாடுகளான ஜார்ஜியா, பைலோ ரசியா, பின்லாந்து, உக்ரைன் போன்ற பலவற்றை படை வலிமையால் ரசியாவுடன் இணைத்திருந்தான். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தேசிய இனங்களுக்கு விடுதலை கொடுப்பது பற்றியும், ரசியாவுக்கான ஆட்சி மொழி பற்றியும் புரட்சிக்கு முன்பாக ரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் விவாதம் நடந்தது.

ஜார் மன்னனால் வலுக்கட்டாயமாக இணைக்கப்பட்டுள்ள சிறுபான்மைத் தேசிய இனங்கள் விரும்பினால் பிரிந்து செல்ல அனுமதிக்க வேண்டும். சோசலிச ரசியாவுடன் சேர்ந்திருக்க அவை விரும்பினால் சேர்ந்திருக்கலாம். பிரிந்து போகும் உரிமையைக் கொண்ட தன்னுரிமையை (சுயநிர்ணய உரிமையை) அவற்றுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார் லெனின். 1917 நவம்பர் 7-இல் ரசியப் புரட்சி வெற்றி பெற்றது. லெனின் கையில் அதிகாரம் வந்தது. பின்லாந்து நாடு, பிரிந்து போக வேண்டும் என்று கோரியது. ரசியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் ஒரு சாரார் பின்லாந்து பிரிந்து செல்ல அனுமதிக்கக் கூடாது. ரசியாவில் சமத்துவக் கொள் கையான சோசலிசம் செயல்படப் போகிறது. எந்த ஒடுக்குமுறையும் இருக்காது. எனவே பின்லாந்து பிரிந்து போக அனுமதிக்கக் கூடாது என்றனர்.

லெனின் சொன்னார், “பொதுப் பகைவனான ஜார் மன்னனை வீழ்த்த வேண்டியிருப் பதால், புரட்சிக்கு முன் பிரிந்து செல்லாதீர்கள் என்று கூறினீர்கள். இப்போது ஜார் மன்னன் போய் விட்டான். சமத்துவம் வந்துவிட்டது, எனவே பிரிந்து செல்ல வேண்டிய தேவை இல்லை என்கிறீர்கள். உங்கள் வாதத்தை ஏற்றுக் கொண்டால், ஒடுக்கப் பட்ட தேசிய இனம் ஒருபோதும் பிரிந்து சென்று தனிநாட்டை அமைத்துக் கொள்ள முடியாது. பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை(Right to Self determination with the Right to Secede)) என்பது உங்கள் கட்சித் திட்டத்தில் துண்டுக் காகிதமாகத் தான் இருக்கும்” என்றார். பின்லாந்து பிரிந்து செல்ல அனுமதித்தார்.

புரட்சிக்குப் பிந்தைய, ரசியக் கூட்டாட்சியில் ஆட்சி மொழி எது என்ற கேள்வி, புரட்சிக்கு முன்பே வந்தது. பல்வேறு மொழிகளைப் பேசக்கூடிய, பல்வேறு தேசிய இனங்களின் கூட்டரசாக ரசியக்கூட்டரசு விளங்க வேண்டும். அவ்வாறான கூட்டாட்சியில் ஒரு தேசிய இனத்தின் மொழி, ஆட்சி மொழியாக இருந்தால் அது மற்ற தேசிய இனங்களின் மொழிகள் மீது ஆதிக்கம் செலுத்தும். அந்நிலை, ஒரு தேசிய இன ஆதிக்கமாக மாறும் என்றார் லெனின். அனைத்துத் தேசிய இனங்களின் மொழியும் ஆட்சி மொழிதான். சின்னஞ்சிறு சுவிட்சர்லாந்தில் 4 மொழிகள் ஆட்சிமொழிகளாக இருப்பதைப் பாருங்கள் என்றார்.

“ரசிய மொழி பேசுவோர் 44 விழுக்காட்டினர். எனவே பெரும் பான்மை என்ற அடிப்படையில் சனநாயக முறைப்படி ரசிய மொழியை ஆட்சி மொழியாக்கலாம்” என்றனர் ஒரு சாரார். அப்பொழுது லெனின், “தோழர்களே நீங்கள் சொல்லித்தான் எனக்குப் புதிய கணக்கு ஒன்று தெரிய வந்துள்ளது. ரசிய மொழி பேசும் 44 விழுக்காட்டினர் பெரும்பான்மையினர், ரசிய மொழி தெரியாத 56 விழுக் காட்டினர் சிறுபான்மையினர் என்பது புதிய கணக்குதான்” என்று கேலியாக விடையிறுத்தார்.

அதன்பிறகு ரசியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்படி பிரிவினர், ரசிய மொழி வளமான மொழி; இலக்கியச் செறிவுமிக்கது. அதனை மற்ற இனத்தவர் கற்றுக் கொண்டால், வளர்ச்சியடையாத அவர்களின் மொழிகள் வளரும். அதற்காகவாவது ரசிய மொழியை ஆட்சி மொழியாக் கலாம் என்றனர். லெனின் சொன்னார், “தோழர்களே, உங்களைப் போலவே நானும் டால்ஸ்டாயை, துருக்மனோவைப் படித்திருக்கிறேன். ரசிய மொழி வளமானது. மற்ற மொழிகளை வளர்க்க அது பயன்படும் என்பது உண்மைதான். ஆனால் ரசிய மொழியில் ஒரு பழமொழி இருக்கிறதே, அது உங்களுக்குத் தெரியுமா? ‘சொர்க்கத்திற்கு யாரையும் தடியால் அடித்து விரட்டாதீர்கள்’ என்கிறதே அப் பழமொழி என்றார்.

அவர்கள் விரும்பினால் ரசிய மொழியைக் கற்றுக் கொள்ளட்டும். நீங்கள் சட்டம் போட்டு அதனைக் கட்டாயம் ஆக்கக் கூடாது என்றார். (லெனினுக்குப் பின் சோவியத் ஒன்றியத்தில் ரசிய மொழி திணிக்கப்பட்டது. அந் நாடு 15 நாடுகளாகப் பிரிவதற்கு ரசிய ஆதிக்கமும் முக்கியக் காரணமாகும்).

ஸ்டாலின், மாசேதுங் ஆகிய மாபெரும் தலைவர்கள், லெனின் போல் சிறுபான்மைத் தேசிய இனங்கள்பால் சனநாயகத்துடன் நடந்து கொள்ளவில்லை. 1949-இல் சீனப்புரட்சி வெற்றி பெற்றதும், 1950இல் முதல் வேலையாக சீனப்புரட்சிப் படை சிறுபான்மைத் தேசிய இன நாடான திபெத்தை ஆக்கிரமித்துக் கைப்பற்றியது. தொடர்ந்து திபெத்திய மக்கள் தங்கள் விடுதலையைக் கோரி வந்தனர். அதனால் அவர்களின் மத ஆட்சித் தலைவரான தலாய் லாமாவை சிறைப்பிடிக்க சீனக் கம்யூனிஸ்ட் ஆட்சி ஏற்பாடு செய்தது. இதை அறிந்த தலாய் லாமா 1959 மார்ச் 30ஆம் நாள் திபெத்தை விட்டு வெளி யேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

இன்றுவரை சீனா, திபெத்தி யர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை நசுக்கி வருகிறது. சீனாவின் வடமேற்குப் பகுதியில் வாழும் சிறுபான்மைத் தேசிய இனமாகிய துர்க்கிஸ் (உய்கூர்) மக்களை சீனா, இராணுவம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அம் மக்கள் விடுதலை கோருகிறார் கள்.

ரசியாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்தபோதே சிறுபான் மைத் தேசிய இனமாகிய செ சன்யா மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியது. அந்த ஒடுக்குமுறை இன்று முத லாளிய ரசியாவிலும் தொடர்கிறது.

ஆனால், வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகளான கனடா வும், பிரிட்டனும் தேசிய இன விடுதலைக் கோரிக்கைக்கு சன நாயக வழியில் தீர்வுகாண வாய்ப்பளித்துள்ளன. கனடாவில் கியூபெக் மாநிலத்தில் பிரஞ்சு மக்கள் வாழ்கிறார்கள். எஞ்சிய கனடாவின் பெரும்பரப்பில் ஆங்கிலேயர்கள் வாழ்கிறார்கள். கியூபெக் மக்கள் விடுதலை கோரிப் போராடினார்கள். பத் தாண்டுகளுக்கு முன் கனடா அரசு கியூபெக் மக்களிடம் தனிநாடு குறித்துக் கருத்து வாக்கெடுப்பு நடத்தியது. ஒரு விழுக்காடு வாக்குகள் குறை வாகப் பெற்று, கியூபெக் விடு தலைக் கோரிக்கை தோற்றுப் போனது.

பிரிட்டனில் உள்ள ஸ்காட் லாந்து மாநிலம் தனிநாடு கேட் கிறது. 2014 ஆம் ஆண்டு, ஸ்காட் லாந்தில் கருத்து வாக்கெடுப்பு நடத்த பிரிட்டன் ஒப்புக் கொண்டுள்ளது. 19ஆம் நூற் றாண்டில் பிரிட்டனிலிருந்து பிரிந்து தனி அரசு அமைத்துக் கொள்ள அயர்லாந்து போராடி யது. தெற்கு அயர்லாந்து பிரிந்து போக அனுமதித்த பிரிட்டன் தெற்கு அயர்லாந்து விடுதலைப் போராட்டத்தைக் கொடூரமாக ஒடுக்கியது. ஆனால், இப்பொ ழுது ஸ்காட்லாந்தில் பிரிந்து போவதற்கான கருத்து வாக்கெ டுப்பு நடத்த எளிதில் ஒப்புக் கொண்டுள்ளது.

ஸ்காட்லாந்து மக்களுக்கெதிரான கொடூர இனக் கொலையோ, இன ஒடுக்குமுறையோ இல்லை. தங்கள் மொழி அடையாளம், வரலாற்றுப் பெருமிதம், - இன முகவரி, சாதனைகள் முதலியவை ஆங்கிலேயர்களால், ஆங்கில மொழியால் மறைக்கப்படுகின்றன. என்பதுதான் ஸ்காட்லாந்து தனிநாடு கோருவதற்கான முதன் மைக் காரணம்.

கனடாவுக்கும் பிரிட்ட னுக்கும் முன்னோடியாக 1905ஆம் ஆண்டு சுவீடன் நாட்டி லிருந்து நார்வே அமைதியாகப் பிரிந்த நிகழ்வு இருக்கிறது. ஒருங்கிணைந்த சுவீடன் நாடாளுமன்றத்தில் நார்வே நாட்டின் பிரிவி னைக் கோரிக்கை வாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்கப்பட்டது.

வளர்ச்சியடைந்த முதலாளிய நாடுகள் கடைபிடிக்கும் இந்த சனநாயக அணுகுமுறையை, கம்யூனிஸ்டுகள் ஆளும் நாடுகள் ஏன் கடைபிடிக்கவில்லை? மாபெரும் சனநாயகவாதியான லெனின் மட்டுமே விதிவிலக்காக நிற்கிறார்.

இந்தியாவில் உள்ள மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் அனைத்திந்தியத் தலைமையும் தமிழீழ விடுதலையை எதிர்க்கின்றன. ஓர் ஆண்டில் (2008--2009) ஒன்றரை இலட்சம் தமிழ் மக்களை சிங்கள இன வெறியர்கள் இனஅழிப்பு செய்த பின்னரும் சிங்களரோடு தமிழர்கள் சேர்ந்து வாழ வேண்டும் என்கின்றன.

இதற்குக் காரணம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற பெயரால், வரித்துக் கொண்ட சனநாயக மறுப்பு மனப்பான்மையா? ஸ்டாலினைப் போல் மாவோ வைப் போல் பெருந்தேசிய வாதப் போக்கா? ஸ்டாலினும், மாவோவும் அவர்கள் ஆண்ட நாட்டில் தான் பெருந்தேசியவாதத்துடன் இணைந்திருந்தனர். ஆனால், இந்தியாவின் கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவை ஆளவில்லை. அடுத்த நாட்டில் விடுதலைக்குப் போராடும் சிறுபான்மைத் தேசிய இனத்திற்கு எதிராகவும் பெருந் தேசிய இனவாதத்திற்கு ஆதரவாகவும் இருப்பது ஏன்? ஒருவேளை இந்திய அரசின் நிலைபாட்டை ஏற்றுக் கொள்ளும் விசுவாசமாக இருக்குமோ?

கிழக்குப் பாகிஸ்தானின் விடுதலைக்குப் போராடிய மக்களுக்கு ஆதரவாக தனது இராணுவத்தை அனுப்பிப் போர் செய்து, வங்காள தேசத்தை உருவாக்கித் தந்தது இந்தியஅரசு. இந்திய அரசின் இந்நடவடிக்கையை முழுக்க முழுக்க ஆதரித்தன மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்!

ஒருவேளை இந்திய அரசு, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரித்திருந்தால் இவ்விரு கட்சிகளும் ஒடுக்கப்பட்ட தமிழீழத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்திருக்குமோ?

தீவிரமான சிங்கள இன வெறிக்கட்சியான ஜே.வி.பி.யுடன் சகோதரக் கட்சி உறவு வைத்துள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. தனது அனைத்திந்திய மாநாட்டிற்கு ஜே.வி.பி. பிரிதிநிதிகளை அழைத்தது சி.பி.எம். கட்சி. அதே போல் ஜே.வி.பி. மாநாட்டிற்குத் தனது கட்சிப் பிரதிநிதிகளை அனுப்பி வைத்தது.

இதன் பெயரா கம்யூனிசம்? இல்லை. கம்யூனிசம் மனித நேயத்தின் சிகரம். இக்கட்சிகளின் பெயரில் கம்யூனிசம் இருக்கிறது; செயலில் சர்வாதிகாரம் இருக்கிறது.

Pin It