பெருவெள்ளம் வந்தாலும் பற்றாக்குறை மழைப் பெய்தாலும் எந்தச் சூழலிலும் தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரை தரக்கூடாது என்பதில் கர்நாடகம் பிடிவாதமாக இருக்கிறது. காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் மூன்று அணைகள் கட்டி நீர் மின்சாரம் மற்றும் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என கர்நாடக அரசு அறிவித்திருப்பது இந்த வரிசையில் அண்மையில் வந்த ஒன்று.

கர்நாடகத்தின் மேகத்தாட்டு வனப்பகுதியில் காவிரியின் குறுக்கே 600 கோடி ரூபாய் செலவில் மொத்தம் 50 ஆ.மி.க. (டி.எம்.சி.) கொள்ளளவு கொண்ட மூன்று நீர்த்தேக்கங்கள் கட்டப்படும் என கர்நாடக மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா 21.08.2013 அன்று பெங்களுருவில் அறிவித்தார்.

காவிரியின் உபரிநீரைத் தேக்கி மின்சாரம் எடுக்கவும் குடிநீருக்குப் பயன்படுத்திக் கொள்ளவும் இவ்வணைகள் கட்டப்படவுள்ளதாக அவர் கூறினார்.

50 டி.எம்.சி. அணை என்பது கிருட்டிணராஜசாகர் அணையை விட கூடுதல் கொள்ளளவு கொண்டதாகும். கிருட்டிண ராஜசாகர் அணையின் முழுக் கொள்ளளவு 44 டி.எம்.சி.

இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டு மூன்று அணைகளும் கட்டப்பட்டுவிட்டால், ஒரு சொட்டுத் தண்ணீர் கூட காவிரியில் தமிழ்நாட்டிற்கு வராது. காவிரியும் இன்னொரு பாலாறாக மாறிவிடும்.

கேரளப் பகுதியில் உற்பத்தியாகி கர்நாடக எல்லைக்குள் சற்றே நுழைந்து வரும் கபினியின் உபரி நீர் முழுவதும் நேரடியாக மேட்டூர் அணைக்கு இப்போது வந்து கொண்டுள்ளது. இந்த கபினி அணை உபரிநீரும் தமிழகத்திற்கு வந்துவிடாமல் தடுக்கும் சதித்திட்டம் தான் கர்நாடகத்தின் மேகத்தாட்டு நீர்த்தேக்கத் திட்டம்.

ஏற்கெனவே, காவிரி நீராவாரித் திட்டம் என்ற பெயரில் காவிரி நீர் முழுவதையும் அங்கங்கே முடக்கிப் போட்டு கிருட்டிணராஜசாகர் முழுக் கொள்ளளவு நிரம்பாமல் பார்த்துக் கொண்டு, காவிரி நீர் தமிழகத்திற்குக் கிடைக்காமல் செய்ய பல்லாயிரம் கோடியில் திட்டம் தீட்டி அவற்றுள் பலவற்றை கர்நாடகம் நிறைவேற்றிவிட்டது.

எப்போதாவது கிருட்டிணராஜசாகர் நிரம்பினால் வரும் உபரிநீரும், கபினியில் இருந்தும் அர்காவதி ஆற்றிலிருந்தும் வரும் உபரிநீரும் மேட்டூருக்கு இப்போது வந்து கொண்டுள்ளது. இந்நீர் முழுவதையும் தடுத்துத் தேக்கி வைத்துக் கொள்வதற்காகத் தான், தமிழக - கர்நாடக எல்லையான பில்லிகுண்டுலுவுக்கு மேலே 35 கி.மீ. தொலைவிலுள்ள மேகத்தாட்டுவில் புதிய அணைகள் கட்டும் இத்திட்டத்தை கர்நாடக அரசு செயல்படுத்த முனைகிறது.

வெள்ளக் காலத்தில், இப்பொழுதுள்ள கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீராக 50 டி.எம்.சி. வெளியேறுவதற்கு வாய்ப்பே இல்லை. காவிரி நீர் ஒரு சொட்டும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் செய்வதற்குத் தான் இவ்வளவு உபரி நீர் கிடைப்பதாக பொய்யுரைக்கிறது கர்நாடகம்.

இதே கர்நாடக அரசு, சில வாரங்களுக்கு முன்னால் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்புப்படி குறுவைக்கு 137 டி.எம்.சி. காவிரி நீர் தமிழகத்திற்குத் தர வாய்ப்பில்லை என்றும், வெள்ளம் வந்தால் 97 டி.எம்.சி. அளவுக்குத்தான் கொடுக்க முடியும் என்றும் இதற்கு ஏற்ப இறுதித் தீர்ப்பை திருத்தி எழுத வேண்டுமென்றும் வழக்குரைத்தது.

வெவ்வேறு வாய்ப்புகளில் வெவ்வேறு பொய்களை சொன்னாலும், கர்நாடகத்தின் ஒரே நோக்கம் ஒரு சொட்டுக் காவிரி நீரும் தமிழகத்திற்குக் கிடைக்காமல் செய்வது தான்.

கர்நாடக அமைச்சர் சொல்வது போல் காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு உபரித் தண்ணீரைக் கர்நாடகம் தேக்கிக் கொள்ள அனுமதியளித்துவிடவும் இல்லை. ஒதுக்கப்பட்டுள்ள 270 டி.எம்.சி. தண்ணீரைத் தான் கர்நாடகம் பயன்படுத்திக் கொள்ள உரிமையுண்டு. அப்பொழுதும் கூட, தமிழ்நாட்டிற்குரிய பங்கான 192 டி.எம்.சி.யை கொடுத்து விட்டுத்தான் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எந்த வல்லடியாவது பேசி காவிரியை முழுவதுமாக மடக்கிப்போடும் தனது இனப்பகைத் திட்டத்தில் கர்நாடகம் முனைப்பாக உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும், தீர்ப்பாயத்தின் தீர்ப்புரைகளையும் கொஞ்சமும் அச்சமின்றி காலில் போட்டு மிதிக்கிறது.

கர்நாடகத்தின் இந்தத் துணிச்சலுக்கு அடிப்படை இந்திய அரசு தான். கர்நாடகத்தின் அத்துணை அநீதித் திட்டங்களுக்கும் பக்க வலுவாக இந்திய அரசு இருக்கிறது.

இந்திய அரசின் இந்தப் போக்கு உச்சநீதிமன்றத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக அரசு தொடுத்த வழக்கை உச்சநீதிமன்றம் 5.8.2013 அன்று தள்ளுபடி செய்தது இதற்கொரு சான்று.

 காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு 19.02.2013 அன்று இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டது.

இத்தீர்ப்பின்படி தண்ணீர் வழங்க தற்சார்பான காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் பொறுப்பில் காவிரி அணைகளின் நீர் நிர்வாகத்தை ஒப்படைக்க வேண்டுமென்று இந்த இறுதித் தீர்ப்பு இந்திய அரசை வலியுறுத்தியது.

ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்று இந்திய அரசு தட்டிக் கழித்ததையடுத்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது.

உச்சநீதிமன்றமோ தீர்ப்பாயத் தீர்ப்பின்படி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு ஆணையிடுவதற்கு பதிலாக, மேற்பார்வைக் குழு என்ற ஒன்றை அமைத்தது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் போதிய மழைப் பொழியாததால் பற்றாக்குறை நிலவுவதாக கர்நாடகம் சொன்னதை ஏற்று, கர்நாடகத் தரப்பு வழக்குரைஞர் சொன்ன ஆலோசனைப்படியே மேற்பார்வைக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

இதே உச்சநீதிமன்றம் கர்நாடகத்தில் அடை மழைப் பொழிந்து பெருவெள்ளம் ஏற்பட்டு, கர்நாடக அணைகள் உடையாமல் பாதுகாத்துக் கொள்ள, கிராமங்கள் மூழ்காமல் பார்த்துக் கொள்ள வேறுவழியில்லாமல் உபரி நீரைத் திறந்துவிட்டதையே காரணமாகக் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது.

“பற்றாக்குறை இருந்தால் மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது. உபரி நீர் வந்தால் மேலாண்மை வாரியம் தேவையில்லை” என்பது தான் உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடாக உள்ளது.

இந்திய அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை தமிழ்நாட்டிற்கு மட்டும் கிடையாது என்பதைத்தான் இந்திய அரசின் நிலைப்பாடும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பும் எடுத்துக் கூறுகின்றன.

தீர்ப்பாயத் தீர்ப்புகள் கிருஷ்ணா ஆற்றுநீர்ப் பகிர்விலும், நர்மதை ஆற்றுநீர்ப் பகிர்விலும் இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் போது, தமிழகத்திற்குரிய காவிரித் தீர்ப்பாயத் தீர்ப்புரை மட்டும் செயல்படுத்தப்படுவதில்லை.

கர்நாடகம் செய்த அனைத்து அடாவடிகளுக்கும் மேலாக இப்போது அறிவித்துள்ள மேகத்தாட்டு அணைத்திட்டம் என்பது உச்சநிலை அத்து மீறலாகும். அப்பட்டமான சட்ட மீறலாகும்.

இச்சட்ட மீறலுக்கு இந்திய அரசு துணை போவது இந்திய அரசமைப்புச் சட்டம் தமிழ்நாட்டிற்கு செல்லுமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

அரசமைப்புச் சட்டத்தின்படி உறுதி செய்யப்பட்டுள்ள சட்டத்தின் ஆட்சி தமிழ்நாட்டிற்கு மட்டும் செயலாக்க வில்லை.

இந்தியாவிற்குள் தமிழ்நாடு நீடிக்க முடியுமா என்ற கேள்வியையும் இது எழுப்பியுள்ளது.

இந்தக் கேள்விக்கு விடையளிக்கும் வகையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டி கர்நாடகத்தின் மேகதாட்டுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டியது இந்திய அரசின் கடமை.

இந்தக் கடமையை நிறைவேற்ற இந்திய அரசு தவறுமானால், பல்லாயிரக் கணக்கில் தமிழர்கள் கர்நாடகத்திற்குத் திரண்டு சென்று மேகத்தாட்டு அணைத் திட்டத்தைத் தடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

Pin It