‘தமிழகத்தில் சாதி -வரலாறும், புரிதல்களும்’ என்ற தலைப்பில் தமிழர் குடியரசு முன்னணியின் பண்பாட்டு அமைப்பான - தமிழ்த் தேசிய பண்பாட்டு இயக்கம் சார்பில், 24.08.2013 அன்று சென்னை இலயோலா கல்லூரியில் காலை 9.30 முதல் இரவு 8.30 வரை ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

கருத்தரங்கத்திற்கு, தமிழ்த் தேசியப் பண்பாட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தும்மா பிரான்சிஸ் தலை மையேற்றார். பேராசிரியர் பிரபு (தமிழ்த் தேசியப் பண்பாட்டு இயக்கம்) வரவேற்புரையாற்ற, காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கருத்தரங்கின் முதல் அமர்வு நடை பெற்றது. திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன், பேராசிரியர் ந.முத்து மோகன் (மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்), தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர் தோழர் அரங்க குணசேகரன், ஆய்வு மாணவர் தோழர் காமராசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

உணவு இடைவேளைக்குப் பின் மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இரண்டாம் அமர்வில், தோழர் செல்வி (பொதுச்செயலாளர், தமிழ்நாடு மக்கள் கட்சி), தோழர் தமிழ் வாணன் (விவசாய சங்க உருவாக்கக் குழு), பேராசிரியர் கோ.இரகுபதி (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம்) ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர்.

மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற நிறைவரங்கில், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள் விடுதலை தலைவர் தோழர் சிதம்பரநாதன், தமிழ்த் தேச மக்கள் கட்சி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தமிழ்நேயன், தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம. செயப்பிரகாசு நாராய ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

கருத்தரங்கின் நிறைவாக, தமிழ்த் தேசப் பொதுவுடை மைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரை நிகழ்த்தினார். அவரது பேச்சின் எழுத்து வடிவம்:

“காலை முதல் மாலை வரை நடைபெற்ற இக் கருத்தரங்கு சாதி குறித்த பகுப்பாய்வை வழங்கி யிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் செய்த அனைவ ருக்கும் பாராட்டுகள்!

‘சாதி என்பது தமிழ் இல்லை. சாதியைத் தமிழ் ஏற்பதில்லை’ என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஆனால் தமிழர்களிடத்தில் சாதி இருக்கிறது. ‘என் சாதிக்கு இவர் சாதி இழிவென்று சண்டையிட்டுப் பஞ்சாகிப் போனாரடி சகியே’ என அதே பாரதிதாசன் தான் வருந்திப் பாடினார்.

அன்றைக்கு அவர் பாடியதைவிட, இன்றைக்கு சாதி ஒடுக்குமுறைகள், இழிவுப்படுத்தல்கள், சண்டைகள் கூடுதலாக இருக்கின்றன. மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழுகின்ற தமிழ் நாட்டுத் தமிழர்களிடத்தில் கூட சாதிப்பற்று நீடிக் கிறது. அங்கும் சாதி அமைப்புகள் செயல்படு கின்றன. பாவலரேறு பெருஞ்சித்தி ரனார் மலேசியா சென்ற போது, அதைக் கண்டு கொதித்துக் கட்டுரைகள் எழுதினார். அவரைக் கூட ‘நீங்கள் என்ன சாதி’ என தமிழ் நாட்டில் சிலர் கேட்டிருக்கிறார்கள்.

சாதி இருக்கிறது, அதன் வடிவங்கள் இருக்கின்றன. எனில் அதை எப்படி ஒழிப்பது என்பதைத் தான் நாம் சிந்தித்தாக வேண்டும். கடந்த கால வரலாற்றைத் தெரிந்து கொண்டால்தான் நிகழ்கால வரலாற்றை நாம் படைக்க முடியும் என்ற வகையில் அது குறித்த ஆழ்ந் தப் புரிதல்கள் நமக்குத் தேவை.  சாதியை வெறும் மார்க்சியப் பொருளியல் கண்ணோட்டத்தில் மட்டும் ஆய்ந்து பார்த்தால் போதாது. அதையும் தாண்டி அதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்.

தொடக்கத்தில், இந்திய மார்க்சி யவாதிகள், சாதி - நிலப்பிரப்புத்து வப் பண்பாடு எனப் பேசி வந்தனர். ஆனால், நிலக்கிழமை ஒழிந்த பிறகும் அது நீடிக்கிறது. பெருந் தொழிற்சாலைகள் அமைந்து முதலாளிய வளர்ச்சி ஏற்பட்டு வர்க் கங்கள் வளர்ந்தால், சாதி ஒழிந்து விடும் என்றார்கள். ஆனால், தொழிற்சங்கங்கள் சாதியை ஒழித்து விடவில்லை. தொழிற்சங்கங்களில் கூட சாதி வளர்க்கப்பட்டது. சாதி அடிப்படையில் கூட, தொழிற்சங் கங்கள் தொடங்கப்பட்டன.

1952ஆம் ஆண்டு அனைவருக் கும் வாக்குரிமை வந்தது. அனை வருக்கும் வாக்குரிமை என்பது அனைவரையும் சமப்படுத்தி, சாதியை ஒழித்துவிடும் எனக் கருதி னார்கள். ஆனால், ஒவ்வொரு சாதிக்கும் தனி வாக்குவங்கி உரு வாகி, சாதிக் கட்டுமானத்தை அது மேலும் இறுக்கியது.

சாதியை ஒழிக்க இடஒதுக்கீடு தேவை. சாதி ஒடுக்குமுறைகள் நீடிக் கும் வரை, இட ஒதுக்கீடும் நீடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், அதன் பக்க விளைவாக, சாதி உணர்ச்சி தீவிரப் பட்டது. இட ஒதுக்கீட்டுக் கோரிக் கைகளை முன்வைத்து தன்சாதிப் பற்றும் சாதி சங்கங்களும் வளர்ந் தன.

இவ்வாறு, தன்னைக் கொல்ல வரும் நஞ்சு எதுவாகிலும் அதை உண்டு கொழுக்கிறது சாதி! நாளை, தமிழ்த்தேசியத்தைக் கூட சாதி பூதம் விழுங்க முயலும். நாம் தான் இதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நம்மைப் போன்ற செயல்பாட்டாளர்கள் இதில் கடும் எச்சரிக்கையோடு இருத்தல் வேண்டும்.

தமிழினப் பெருமிதத்தைக் தன்சாதிப் பெருமிதமாகச் கருதிக் கொள்வோர் தமிழ்த்தேசியத்தில் இருக்கக்கூடும்.

தமிழர்களிடத்தில் சாதியே கிடையாது, ஆரியர்கள் தான் சாதி யைக் கொண்டு வந்தனர் என்பது தவறு. தமிழர்களிடத்தில் சாதி இருந்தது, ஆனால், ஒவ்வொருவ ருக்கும் ஒரு நீதி சொல்லும் வர்ணா சிரம தர்மமாக இல்லாமல், தொழில் அடிப்படையில் தமிழர் களிடத்தில் சாதி இருந்தது. குலத் தொழில் அடிப்படையில் அது நீடித்தது. தமிழ்ச்சமூகத்தில் அன் றைக்கிருந்த ஒவ்வொரு குலத் தொழிலும் சமமாக இருந்தனவே அன்றி, அவைகளுக்குள் இழிவான தென்றோ உயர்வானதென்றோ இல்லை. அவை மேல் கீழாக அடுக் கப்படவில்லை.

குலத்தொழிலை ஒருவர் மாற் றிக் கொள்ள வேண்டுமெனில் அதற்கு தடையேதுமில்லை. ஆனா லும், அது இயல்பாகவே மிகக் குறைவாக நடைபெற்றது. தச்சர், மண்பாண்டத் தொழிலுக்குப் போக தடையேதுமில்லை. ஆனா லும், வழிவழியாக தச்சுத் தொழில் செய்து வந்ததால் அவர்கள் மண் பாண்டத் தொழிலுக்கு எளிதில் மாறிவிடுவதில்லை. இக்குலத் தொழில்தான் சமூக வளர்ச்சிப் போக்கில் இறுகி இறுகி வர்க்கப் பிரிவினைகளாக உருமாறி சாதியாக நிலை பெற்றது.

உலகின் எல்லா இனங்களுக் குள்ளும் ஒடுக்குமுறைகள் இருக் கின்றன. வர்க்க ஒடுக்குமுறை, சமய ஒடுக்குமுறை, பாலின ஒடுக்குமுறை என பல்வேறு ஒடுக்குமுறைகள் இருக்கின்றன. அதைப் போல, தமிழ்ச்சமூகத்தில் நிலவிய வர்க்க ஒடுக்கமுறை சாதி வடிவத்தில் நீடித்தது. அதே நேரத்தில், வர்க்கம் தான் சாதி என்றோ சாதி தான் வர்க்கம் என்றோ புரிந்து கொள்ளக் கூடாது.

பொது நோக்கில் வர்க்கம் உள்ளடக்கமாகவும் சாதி அதன் உருவமாகவும் இருக்கிறது. வர்க் கத்தை உள்ளடக்கமாகக் கொண் டாலும் சாதிக்கென்று தனித்தன் மையும் சேர்ந்தே இருக்கிறது. விவசாயிகள் வளர்ச்சி பெற்று நிலவுடைமைச் சமூகமாக மாறிய நிலையில் அது மேலும் இறுகியது. சிறு சிறு வணிகக் கூட்டமாக இருந்த மக்கள் சாதியாக நிலை பெற்றனர்.

மா சே துங், சீன மக்கள் குறித்து ஆராய்ந்த போது அங்கு 8 வகை யான குட்டி முதலாளிகள் இருந்த தாகக் குறிப்பிடுகிறார். அதைப் போல, நம் தமிழ்ச் சமூகத்தில் சிறிய சிறிய உழைப்புப் பிரிவினர், உடை மைப் பிரிவினர், வணிகப் பிரிவினர் சிறிய சிறிய சாதிகளாக நீடித்தனர்.

சாதிக்கென்று தனித் தத்துவம் எதுவுமில்லை. ஆரியர்கள் கொண்டு வந்த வர்ணாசிரம தர்மத் திற்கு மெய்யியல் உண்டு. அது தமிழ்ச் சமூகத்தின் சாதியை இறுகப் பற்றி அதன் மேல் அமர்ந்தது. பின்னர், 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வர் ணாசிரம தர்மம் தமிழகத் தமிழர் களிடையே ஆதிக்கம் செலுத்தியது.

தொல்காப்பியர் குறிப்பிட்ட அரசர், அந்தணர், வணிகர், வேளா ளர் ஆகிய பிரிவுகள் வர்க்க அடிப் படையிலானவை. பிறப்பு அடிப் படையானவை அல்ல. ஏனெனில், அப்போது பிறப்பு அடிப்படையில் மனிதர்களைப் பிரிக்கும் ஆரியர் களின் வர்ணாசிரம தர்மம் இங்கு மேலாதிக்கம் செலுத்தவில்லை. அதே போல, தமிழ்ச்சமூகத்தில் பிராமணர்கள் என்றும் சூத்திரர் கள் என்றும் யாரும் கிடையாது.

‘கர்மம் - தர்மம் - தண்டம்’ என் பதுதான் வர்ணாசிரம தர்மத்தின் மெய்யியல். முற்பிறப்பில் செய்த பாவங்களுக்காகத்தான் இப்பிறப் பில் சூத்திரனாகப் பிறந்து துன்பம் அனுபவிக்கிறாய் என்பது கர்மம். இப்பிறப்பில் நீ இவ்வாறு சூத்திர னாக பிறந்த காரணத்தால் உடல் உழைப்பு செலுத்து; அது தான் உனக்கான தர்மம்! இதை மீறினால் சூத்திரனை அரசும், தெய்வமும் தண்டிக்கும் என்பது ‘தண்டம்’. அதைப் போல் முற்பிறப்பில் சிறப் பாகத் தர்மத்தைக் கடைபிடித் தோர் இப்பிறப்பில் பிராமணர் களாகப் பிறந்துள்ளார்கள் என்றது. இதுவே வர்ணாசிரம தர்மத்தின் மெய்யியல். இதுவே பார்ப்பனியம். இந்த மெய்யியலைத் தான், பின்னர் தமிழ்ச் சமூகத்தின் சாதியோடு பொருத்தினார்கள்.

ஆரியமும் அதன் வர்ணாசிரம தர்மமும் தமிழ்ச்சமூகத்தில் ஆதிக் கம் செலுத்தியதற்கான வரலாற்றுக் பின்னணியைப் பார்க்க வேண்டும். வெறும் மூடநம்பிக்கையால் மட் டும் தமிழர்கள் ஆரியத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்று கருதக்கூடாது. ஆரியம் கோலோச் சத் தொடங்கிய காலம் தமிழர்கள் அயல் இனத்தார்க்கு அடிமைப் படத் தொடங்கிய காலம் ஆகும்.

சங்க காலத்திற்குப்பின் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு வாக்கில் களப்பிரர்கள் தமிழ்நாட்டைப் பிடித்தனர். அவர்கள் அயல் இனத் தார். தமிழைப் புறக்கணித் தனர். ஆரியம் தமிழ்நாட்டில் செல்வாக் குப் பெற்றது. புத்த மதம் முற்போக் கான மதம் தான். ஆனால் அது ஆரியர்களின் தலைமையில் இயங்கி யது. களப்பிரர் காலத்தில் புத்தம் செல்வாக்குப் பெற்றது. புத்தம் தமிழைப் புறக்கணித்து பாலி மொழியை முதன்மைப்படுத்தியது.

அடுத்துப் பல்லவர்கள் அவர் கள் தெலுங்கர்கள். தமிழைப் புறக் கணித்தனர். அவர்கள் ஆட்சியில் சமணம் கோலோச்சியது. சமண மும் முற்போக்கானதுதான். ஆனால் ஆரியர்களின் தலைமையில் இயங் கியது. பிராகிருதம், சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகள் பல்ல வர் காலத்தில் கோலோச்சின. அர சின் ஆணைகள், ஆவணங்கள், கல் வெட்டுகள் பிராகிருதம், சமஸ்கிரு தம், தெலுங்கு ஆகியவற்றில் வெளி யிடப்பட்டன.

பல்லவ மன்னர்கள் பிற்காலத் தில் சைவத்திற்கு மாறிய பின், தமிழிலும் சில ஆவணங்களை வெளியிட்டனர். இடையில் பிற் காலச் சோழர்களில் இராச ராசன், இராசேந்திரன் காலம் தான் தமி ழின உணர்வுக்கு, தமிழுக்கு ஓரளவு வாய்ப்பளித்த காலம். இராசேந் திரன் மகன் போரில் மடிந்த பின், சோழர்களின் பெண் வழி வாரிசா கத் தெலுங்குச் சோழர்கள் சோழ நாட்டை ஆண்டனர். குலோத்துங் கச் சோழன் தொடங்கி அவ்வாட்சி நடந்தது.

பாண்டியரும் சோழரும் ஒரு வரை ஒருவர் தாக்கிக் கொண்டு அழிந்தனர். பின்னர் நவாபுகள் ஆட்சி! அவர்கள் அயல்மொழி யைத் திணித்தனர். அடுத்து விசய நகர - நாயக்க மன்னர்களின் ஆட்சி! தெலுங்கும் சமஸ்கிருதமும் கோ லோச்சின, தமிழ் புறக்கணிக்கப் பட்டது.

நாயக்க மன்னர்கள் ஆட்சியில் பார்ப்பனர்கள் கோலோச்சினர்; வர்ணாசிரம தர்மம் ஆட்சி செலுத் தியது. சாதிப் பிளவுகள் - சாதி இழிவுகள் - தீண்டாமை போன் றவை கொடிய வடிவெடுத்தன. தமிழர்களில் வளர்ச்சியடைந் திருந்த சமூகப் பிரிவினரே அய லாரை அண்டிப் பிழைக்கும் நிலை ஏற்பட்டது.

வர்ணாசிரம தர்மத்திற்குத் தங்களை உட்படுத்திக் கொண்டு - அதற்குள் தங்கள் உயர்வைக் காட்டிக் கொள்ளும் நிலை ஏற் பட்டது.

பார்ப்பனர்கள் -தமிழர்கள் அனைவரையும் சூத்திரர்கள் என்ற னர். நாயக்க அரசர்களைச் சத்திரி யர்கள் என்று போற்றினர்.

தமிழர்களால் முதன்மையான வர்கள் என்று சொல்லிக் கொண்டி ருந்த, வளர்ச்சியடைந்த பிரிவின ரான சைவ வேளாளர்கள் - தங் களை சற்சூத்திரர்கள் (உயர்ந்த- சிறந்த சூத்திரர்கள்) என்று கூறிக் கொண்டனர். இவ்வாறு வர்ணா சிரம தர்மம் தமிழர்களைத் தனது கோட்பாடுக்குள் கொண்டு வந்து நிறுத்தியது.

பின்னர், வெள்ளையராட்சி. வெள்ளையராட்சி நிலை நிறுத்தப் பட்ட பிறகு, போர் அற்ற சூழல் நிலவியது. அக்காலத்தில் தமிழர்கள் தங்கள் தங்கள் சாதிகளை உயர்த் திக்காட்ட, வர்ணாசிரம அடிப் படையில் புராணங்கள் - வரலாறு என்று பெயரில் கதைகள் புனைந்து கொண்டனர்.

தமிழ்ச்சாதி எதற்கும் தத்துவ மும் கிடையாது; கோத்திரமும் கிடையாது. தமிழினத்திற்கு - மெய் யியல் இருந்து, அது வேறு. சாதித் தத்துவம் கிடையாது. தமிழ்ச் சாதிகள் கோத்திர புராணங்கள் உரு வாக்கிக் கொண்டன.

இவை பற்றி ஆய்வாளர் நா.வானமாமலை அவர்கள், “தமிழ கத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துகள்” என்ற நூலில் சுருக்க மாகக் கூறியுள்ளார்.

வேளாளர் உயர்வைக் கூறும் ‘வருணசிந்தாமணி’ நூல் 1901-இல் வெளியிடப்பட்டது. இதன் கடை சிப் பகுதி வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக் கொண்டு - வேளாளரை வைசியர் என்று கூறுகிறது. இந் நூலாசிரியர் கூட லூர் கனகசபைப் பிள்ளை. இந்நூல் 1901-இல் வெளியி டப்பட்டது.

வேளாளர்களுக்குள்ளேயே தங்களின் கார்காத்தார் பிரிவு தான் உயர்ந்தது என்று கூறும் நூல் கிளை வளப்ப மாலை. இந் நூலா சிரியர் பெயர் தெரியவில்லை.

1904-இல் நாடார் வகுப்பில் ஒரு பிரிவினராக உள்ள கிராமணிகள் தாங்கள் சத்திரியர்கள் என்று கூறும் “சத்திரிய குல விளக்கம்” நூல் வெளிவந்தது.

தென்னாட்டு நாடார்களுடைய உயர்வைக் கூறும், “நாடார் மன்ன ரும் நாயக்க மன்னரும்” என்ற நூல் 1937-இல் வெளிவந்தது. சம்பரனைக் கொன்ற தசரதன், ஈழத்தை வென்ற இராமன், இலங்கை வேந்தன் இரா வணன், பாண்டிய மரபினன், பத்ர காளி வரபுத்திரன், சப்தகன்னி புத்திரன் - முதலிய இவர்களின் வழி வந்தோராக நாடார்களைக் கூறு கிறது இந்நூல்.

கத்தோலிக்க கிறித்தவராகிய அருளப்ப முதலியார், கடலோரப் பரதவர்கள் இந்துப் புராணங் களின்படி அரசவம்சத்தைச் சேர்ந்த வர்கள் என்று கூறி ‘பரவர் புரா ணம்’ எழுதினார். இது 1909-இல் வெளியிடப்பட்டது. பரதவர் கிறித்துவரான பின்பும் சாதித் தலைவரை ஏற்படுத்திக் கொண்டு அவரை பாண்டிய மன்னர் பரம் பரை என்று கூறியது. அவரைப் “பரத பாண்டியர்” என்று அந்நூல் அழைக்கிறது.

வன்னியர்கள் சத்திரிய வர்ணத் தைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் நூல்களும் இருக்கின்றன. இப்படிப் பட்ட வர்ணாசிரம - புராணப் புனைவு சார்ந்த “சாதி வரலாற்று” நூல்கள் 19-ஆம் நூற்றாண்டில் அச்சு வடிவம் வந்த பிறகு அதிகம் வெளிப்பட்டன.

ஆனால் தமிழ்ச்சாதிகளுக்கும் வர்ணாசிரம தர்மத்திற்கும் - வர் ணப்பிரிவுகளுக்கும் எந்தத் தொடர் பும் கிடையாது. அனைத்திந்தியச் சாதி என்று எதுவும் கிடையாது. ‘யாதவர்கள்’ என்று அனைத்திந்திய சாதி இருப்பதாக மதுரையில் ‘கோனார்கள்’ மாநாடு போட்டுத் தீர்மானம் நிறைவேற்றியதை அறிந்து நெஞ்சம் பதைத்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

ஒருவகைத் தொழில்களை செய் வோர் உலகெங்கும் இருக்கலாம். அதற்காக அவர்கள் எல்லாம் ஓர்மை ஒரு சாதி ஆகிவிட முடி யாது. “தமிழர்கள் ஏன் இவ்வாறு தங்கள் மரபை மறுக்கிறார்கள்” என்று பெருஞ்சித்திரனார் கவலை தெரிவித்தார். “சாதி ஒழிப்பு” என்ற தலைப்பில் வந்துள்ள பெருஞ்சித்தி ரனாரின் நூலில் இக்கட்டுரை உள்ளது.

அடுத்து தலித்துகள் என்று ஓர் அனைத்திந்திய சாதி இருப்பதாக தமிழ்நாட்டிலே நண்பர்கள் சிலர் பேசி வருகிறார்கள். அனைத்திந்திய தலித் சாதி கிடையாது. வட நாட்டில் தலித் என்று சொல்லப் படும் மக்களுக்கும் தமிழ்நாட்டில் தலித் என்று சொல்லப்படும் மக்க ளுக்கும் இடையே திருமண உறவு கிடையாது.

சொல்லப்போனால், வடநாட் டுப் பிற்படுத்தப்பட்டவர் தமிழ் நாட்டுப் பிற்படுத்தப்பட்ட வரை, இன அடிப்படையில் ஆதிக்கம் செலுத்துகிறார்; சுரண்டுகிறார். வடநாட்டுத் தலித் தமிழ்நாட்டுத் தலித்தை ஆதிக்கம் செலுத்துகிறார்; சுரண்டுகிறார். வங்கி வேலைக்கான தேர்வுகளும் நடுவண் அரசு வேலை களுக்கான தேர்வும் (யு.பி.எஸ்.சி.) இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டு மே நடக்கின்றன.

இவ்வேலைகளுக்கு வடநாட்டுப் பிற்படுத்தப்பட்டவரும் தலித்தும் தங்களின் இந்தி மொழியில் தேர் வெழுதுவார்கள். தமிழ்நாட்டுப் பிற்படுத்தப்பட்டவரும் தலித்து களும் தங்களுக்கு அயல் மொழி யாய் உள்ள ஆங்கிலத்தில் அல்லது இந்தியில்தான் எழுத வேண்டும். இது மொழி ஆதிக்கம் மட்டுமல்ல, வேலை வாய்ப்புப் பறிப்பும் ஆகும்.

(எழுத்துவடிவம்: க.அருணபாரதி)

(அடுத்த இதழில் முடியும்)

Pin It