இந்தியாவின் பிற எல்லா மாநிலங்களிலும் ஒரே பொதுப் பாடத்திட்டம் தான் இன்று வரை அமலில் இருந்து வருகின்றது. ஆனால் தமிழகத்தில் மட்டும் நான்கு வகை கல்வித் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு வரை தமிழக அரசால் நடத்தப்பட்டு வந்தன. இதில் 1.20 கோடி மாணவர்கள் படித்துவந்துள்ளனர். இதில் 45,000 பள்ளிகள் மாநிலக் கல்வித் திட்டத்தையும், 11,000 பள்ளிகள் மெட்ரிக் எனும் பதின்மக் கல்வித் திட்டத் தையும், 50 பள்ளிகள் ஆங்கிலோ இந்திய கல்வித் திட்டத்தையும், 25 பள்ளிகள் ஓரியண்டல் என்னும் கீழ்த்திசைக் கல்வித்திட்டத்தையும் ஏற்று அவற்றுக் கென தனி பாடநூல்களையும், தேர்வு முறைகளையும் கொண்டிருந்தன.

இந்த வெவ்வேறு பாடத் திட்ட வேறுபட்டால் கிராமப்புற மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் உயர் கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய வற்றில் புறக்கணிக்கப் படும் நிலை இருந்தது. இது சமூகத்தில் வேற்றுமையும் ஏற்றத்தாழ்வும் நிலவிடச் செய்தது. இந்த வேற்றுமையை நீக்கி ஒரே சீரான பள்ளிக் கல்வியை ஏற்படுத்த வேண் டும் என்ற கோரிக்கை வலுத்தது.

இந்தக் கோரிக்கை நிறைவேறாமல் பல காலமாக பல்வேறு முட்டுக்கட்டைகள் அரசியலர் மற்றும் தனி யார் பள்ளிகளால் ஏற்படுத்தப்பட்டன. நீண்ட போராட்டத்திற்குப் பின்பு வழக்கத்திலிருந்த நான்கு வெவ்வேறு பாடத்திட்டங்களும் நிறுத்தப்பட்டு தமிழ் நாடு சமச்சீர் கல்விச் சட்டம் 2010 இன்படி சமச்சீர் கல்வி தமிழ்நாட்டில் நடைமுறையானது.

செயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் வேலையாக சமச்சீர் பாடத்திட்டத்தை நிறுத்தி னார். அதை எதிர்த்து மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத் திலும் போராட்டம் நடந்தது. கடைசியில் உச்சநீதிமன்ற ஆணைப்படி சமச்சீர் பாடத்திட்டம் செயலுக்கு வந்தது.

அதே நேரம், தனியார் பள்ளி களில் கட்டணக் கொள்ளையைத் தடுக்க பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு ஒன்று ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டு அக்குழுவின் பரிந் துரைப்படி ஒவ்வொரு பள்ளியும் எவ்வளவு கட்ட ணத்தை ஒவ் வொரு மாணவரின் கல்விக்காக தண்டல் செய்யலாம் என்ற அறிக்கை தரப்பட்டு அமலில் உள்ளது.

சமச்சீர் கல்வி, பள்ளிக் கட்டண நிர்ணயம் ஆகிய வற்றால் தம் கட்டணக் கொள்ளை நின்று விட்டதே என்று பரிதவித்த தனியார் பள்ளிகள் சில கடந்த ஆண்டே சமச்சீர் கல்வியை பின் பற்றவில்லை என்ற செய்தி வெளி வந்தது. ஆனாலும் கல்வித்துறை அதற்கு எந்த எதிர் நடவடிக்கையையும் அப்பள்ளிகள் மேல் எடுத்ததாகத் தெரியவில்லை.

இதனால் துணிச்சலுற்ற, சென்னையில் உள்ள மேலும் சில பள்ளிகள் இந்த ஆண்டு முதல் சமச்சீர் பாடத்திட்டத்தைக் கைவிட்டு தமிழ் மொழிப் பாட நூல் தவிர்த்து மற்ற எல்லாப் பாடத்திற்கும் தாமே ஒரு தனிப் பாடத்திட்டத்தை தேர்ந்து கொண்டு அதைத் தம் பள்ளி மாண வர்க்கு புகட்டி வருகின்றன. இந்தி மொழியையும் மாணவர்க்கு ஒரு கட்டாயப் பாடம் ஆக்கி தம் பாடக் கல்வி நடுவண் இடைநிலைப் பாடத்திட்டதிற்கு இணையானது என்று சொல்லி பெற்றோரை ஏமாற்றி பள்ளிக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்த கட்டணத்திற்கும் கூடுதலாக கட்டணம் திரட்டத் தொடங்கி விட்டன.

மாநில அரசுக் கல்வித்துறை, உயர்நீதிமன்ற உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றை அப் படியே புறந்தள்ளிவிட்டு எந்த அமைப்பையும் மதிக்காமல் அடா வடியாகத் தம் மனம் போன போக் கில் தனியார் பள்ளிகள் எதன் அடிப்படையில் இப்படி பாடத் திட்டத்தை மாற்றின என்று கேட் டதற்கு “எட்டாம் வகுப்பு வரை யார் ஒருவரும் பள்ளியில் சேராமல் தனிக் கல்வி படிக்கலாம் என்று ஆங்கிலர் ஆட்சிக் காலம் முதலே இருந்து வரும் ஒரு கல்வித்தர நிர்ணய நடைமுறையைக் காட்டு கின்றனர். இதன்படி ஒருவர் எட் டாம் வகுப்பு வரை தனிக் கல்வி கற்கலாம் என்று சட்டம் உரிமை தந்துள்ளது” என்று சுட்டுகின்றனர். இதன் அடிப்படையிலேயே தனி யார் பள்ளிகள் சமச்சீர் பாடத் திட்டத்தை கைவிட்டு தமக்கென உகந்த ஒரு தனி பாடத்திட்டத்தை தம் மாணவர்களுக்கு பயிற்றுவிக் கின்றன என்று சொல்கிறார்கள்.

 நாம் ஆங்கிலர் ஆட்சியில் இருந்து விடுபட்டு 66 ஆண்டுகள் ஆகிவிட்டாலும் போகூழாக, நம்மை இன்னமும் சில ஆங்கிலர்ச் சட்டங்களும் நடைமுறைகளும் ஆண்டு கொண்டிருக்கின்றன என்பதே நடைமுறை உண்மை. மேலைக் கல்விமுறை பரவாத திண்னைக் கல்வி வழங்கிய அக் காலத்தே மேலைக் கல்வியை நம் மக்களிடையே ஊக்குவிக்க அன்றைய ஆங்கில அரசு பள்ளியில் சேர விரும்பும் மாணவனின் அறிவுத்திறம் நோக்கி ஒரு ஆசிரியர் அளிக்கும் சான்றிதழின் அடிப் படையில் அம்மாணவனை எட் டாம் வகுப்பு வரை எந்த வகுப்பில் வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம் என்ற நடைமுறை யைப் பின்பற்றியது. இது அந்த காலத்திற்கு ஏற்றதாய் இருந்தாலும் இக்காலத்தே அரிதினும் அரிதாக ஒருசில நிகழ்வுகளில் தவிர பொது வாக இந்த நடைமுறையைப் பின் பற்றுவது சமூகத்தில் ஒழுங்கின் மையை ஏற்படுத்தும். இந்த நடை முறை தனிஒரு ஆள் என்ற அடிப் படையில் பின்பற்றப்பட்டு வந்தது என்றாலும் திரளானோர் படிக்கும் பள்ளிக்கூடம் போன்ற ஒரு பொது அமைப்பிற்கு எவ்வாறு பொருந் தும்?

இந்த தனி ஆள் கல்வி உரி மையை இப்போது தனியார்ப் பள்ளிகள் தம்கையில் எடுத்துக் கொண்டதன் மூலம் கல்வியால், கல்வித்தரத்தால் எந்த ஏற்றத் தாழ்வும் நிலவக் கூடாது என்ற நோக்கில் போராடிக் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை தன்னல வணிக நோக்கத்திற்காகப் புறக்கணிக்கின்றன. தனிப் பாடத் திட்டத்தை தேர்ந்ததன் மூலம் தனி யார் பள்ளிகள் அதன் உயரிய நோக் கத்தை நீர்த்துப்போகச் செய்த செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

பாடத்திட்டம் குறித்த தனியார் பள்ளிகளின் இந்த அத்துமீறல் பள்ளிக் கல்வித்துறைக்கும் தமிழக அரசிற்கும் தெரிந்து தான் இருக்கின் றது. ஆயினும் அதற்கான எதிர் நட வடிக்கை ஏதும் இதுவரை எடுக்கப் படவில்லை. கல்வித்துறை வட்டா ரத்தில் இந்த அத்துமீறல் மீதான நடவடிக்கை குறித்து அறிந்த போது “இது தான் தரமான கல்விமுறை என்று திட்டமாக எந்தப் பாடத் திட்டத்தையும் கூறிடமுடியாது, அதற்கு எந்த அளவு கோலும் கிடையாது” என்று சமச்சீர் கல் வியை ஓரங்கட்டும் வகையில் விடையிறுக்கின்றனர். அதோடு, பாடத்திட்டத் தேர்வு ஒரு மாண வனின் தனி உரிமை அதைப் பெற் றோர் முடிவு செய்கின்றனர். இதில் கல்வித்துறை தலையிட முடியாது. இது வழக்கு மன்றம் போனால் பெற்றோர் சார்பாகவே தீர்ப்பு அமையும் என்று நீக்குபோக்காகப் பொறுப்புக் கூறுகின்றனர்.

தான் கொண்டு வந்த சமச்சீர் பாடத்திட்டம் புறக்கணிக்கப்பட தானே மறைமுகமாய் ஆதரவாக செயற்படும் தமிழ்நாட்டரசினதும், கல்வித்துறையினதும் இந்த மாறு பட்ட செயல் பிற மாநிலங்களுக்கு ஒரு தவறான முன்மாதிரியாக உள்ளது.

இது இப்படியே தொடர்ந்தால் சமச்சீர் கல்வி என்பது அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுமே நடைமுறைப்படும் நிலை உருவாகும். பின் சமச்சீர் கல்வி கொண்டுவந்ததன் நோக்கம் சிதறடிக்கப்பட்டு நகைப்பிற்கு இட மாகிவிடும்.

அரசுப் பள்ளிகளில் தாய் மொழியை புறக்கணித்து விட்டு ஆங்கில வகுப்பைப் திணிக்கும் தமிழக அரசை கண்டித்து தொடர்ந்து போராடுவோம். அதோடு மட்டுமின்றி சமச்சீர்க் கல்வியை மறுக்கும் இந்த தனியார் பள்ளிகளின் அடா வடிச் செயலை எதிர்த்தும், ஆங்கிலர் ஆட்சிக் காலத்தின் கல்வியைத் தேர்ந்து கொள்ளும் நடைமுறையை நீக்கக் கோரியும் இடையறாப் போராட் டம் நடத்தவேண்டும். நீதிமன் றத்தை அணுகி இந்த ஏதம் (ஆபத்து) நிகழாதவாறு உடனடி யாக தடுத்து நிறுத்த வேண்டும்.

Pin It