மொழிப்போர் நாளான 25.01.2012 அன்று காஞ்சிபுரத்தில் உரையாற்றிய தி.மு.க. தலைவர்  கருணாநிதி வழக்கம் போல் திராவிடப் பல்லவி பாடியுள்ளார்.

“தமிழர்களைத் திராவிடர்கள் என்று கூறியபோது அதை ஒப்புக் கொள்ள மாட்டோம் என்றார்கள். அந்தச் சொல் பெரியார் திணித்த சொல் எனவும், அண்ணா கொண்டு வந்த சொல் எனவும் கூறினார்கள். அப்படிச் சொல்பவர்கள் தயவு செய்து இந்தியாவின் தேசிய கீதத்தைக் கேட்க வேண்டும் அல்லது படித்துப் பார்க்க வேண்டும். சென்னையில் மாநிலக் கல்லூரியில் உ.வே.சாமிநாத அய்யர் சிலையின் பீடத்தில் ‘திராவிட வித்யா பூசண’ என்று எழுதப்பட்டிருக்கும். அதில் ‘திராவிட’ என்பது எப்படி வந்தது? அது ஒரு கலாச்சாரம், இனம். ஒரு இனத்தின் பண்பாடு”(தினமணி, 26.01.2012) என்று பேசியுள்ளார்.

‘திராவிடர்’ என்ற சொல் தமிழின் சங்க இலக்கியங்களில் இருந்து வந்தது என்றோ சான்று காட்ட முடியாத கலைஞர் கருணாநிதி ஆரியச் சான்றுகளையே தெரிவித்துள்ளார்.

சமற்கிருதத்தில் உள்ள ஆரிய நூல்களிலிருந்து தான் ‘திராவிட’ என்ற சொல்லை கால்டுவெல்லும், ஐரோப்பிய வரலாற்று ஆசிரியர்களும் எடுத்தார்கள். அதைத் தான் இரவீந்திரநாத் தாகூர் ‘ஜன கன மன’ பாட்டில் சேர்த்தார். திராவிடத்திற்குத் தமிழிலிருந்து கருணாநிதியால் கூட சான்று காட்ட முடியவில்லை என்ற ஒன்றே அப்பெயர் தமிழினத்திற்கு உரியதன்று என்பதை தெளிவுபடுத்தும்.

வெளியிலிருந்து வந்த ஆரியர்கள் சிந்துச் சமவெளியில் வாழ்ந்த தமிழர்களை ‘த்ரமிள’, ‘த்ராவிட’ என்று கொச்சையாக அழைத்தனர். தமிழர்கள் தம்மைத் ‘த்ராவிட’ என்று அழைப்பதை இழிவாகக் கருதியதால் தங்கள் இலக்கியங்களில் ‘திராவிட’ என்ற சொல்லை எங்கேயும் பயன்படுத்த வில்லை.

பிற்காலத்தில், தென்னகத்தில் வாழும் பிராமணர் களைத் ‘திராவிடர்கள்’ என்று வடநாட்டு பிராமணர்கள் அழைத்தனர். பிராமணரான திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று ஆதி சங்கரர் குறிப்பிட்டார். அதே வழியில், உ.வே.சாமிநாதய்யர் அவர்களை ‘திராவிட வித்யா பூசண’ என்று சிறப்பித்திருக்கலாம்.

திராவிடத்தை நிலைநிறுத்த ஆரியம் தான் துணை நிற்குமே தவிர, தமிழ் ஒருபோதும் துணை நிற்காது.

Pin It