தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம் லிமிடெட் என்று வழங்கப்படும் தமிழ்நாடு மின்சார வாரியம் மும்முனை மின்சாரம் வழங்கு வதில் இரண்டு நடைமுறைகளை கடைப்பிடித்து வருகிறது.

1. நகர்ப்புற மின்விநியோக முறை (Unban Feeders), 2. கிராமப்புற மின் விநியோக முறை (Rural Feeders)

இதில், நகர்ப்புறப்பகுதி 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் பெறுவதாகும். கிராமப்புற பகுதிக்கு பகலில் மும்முனை மின்சாரம் 6 மணி நேரமும் நள்ளிரவில் 3 மணி நேரமும் ஆக 9 மணி நேரம் கொடுக்கப்படுகிறது. மீதியுள்ள 15 மணி நேரமும் இருமுனை மின்சாரமே கொடுக்கப்படும். இந்தக் கிராப்புற மும்முனை மின் வழங்கல் கட்டுப்பாட்டு முறை(Restricted 3 Phase Power Supply For Rural Feeders) 1980 ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

அன்றைய காலச்சூழலில் இருந்த விவசாய நீர் ஆதார நிலைகளுக்கும், வேளாண் நீர்ப்பாசன தொழில்நுட்ப முறைக்கும் அது பொருந்துவதாக இருந்திருக்கலாம்.

பின்னர் கால மாற்றத்தில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் விட்டதால் திறந்த வெளிக்கிணறு களுக்கு மாறாக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டி தண்ணீர் எடுக்கும் சூழ்நிலை உருவாகி விட்டது. அதுமட்டுமின்றி மேலும், மேலும் நீர் மேலாண்மையில் நடைபெற்ற மாற்றத்தில் தற்போது சொட்டு நீர்ப்பாசன முறை எனும் புதிய தொழில்நுட்ப பாசன முறையை நோக்கியும் வேளாண்துறை மாறி வருகிறது.

30 ஆண்டுகளுக்குப் பின்னர் உருவாகியுள்ள இந்தப் புதிய நிலைமைகளில் நிலத்தடி நீரை எடுத்து பாசனம் செய்து உணவு உற்பத்தி செய்ய விவசாயிகளுக்குப் பழைய கட்டுப்பாட்டு முறை யில் பகலில் 6 மணி நேரமும் இரவு 3 மணி நேரமும் ஆக 9 மணி நேரம் மட்டும் மும்முனை மின்சாரம் கொடுத்தால் தமது பாசனத் தேவையை நிறைவு செய்யவே முடியாது.

இது குறித்து ஈரோடு மின் மண்டலத் தலைமைப் பொறியாளர் அலுவலகமும் 2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து பல்வேறு கள ஆய்வுகள் செய்து மின்வாரியத் தலைமைக்கு கிராமப்புற மும்முனை மின் வழங்கல் கட்டுப் பாட்டு முறை தோல்வி அடைந்துவிட்ட்து, அதை மாற்ற வேண்டும் என்று ஆய்வு அறிக்கைகளையும், பரிந்துரை கடிதங்களையும் அளித்துள்ளன. தற்போது நடைமுறையிலுள்ள கிராமப்புற மும்முனை மின்சாரக் கட்டுப்பாட்டு முறையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் வருமாறு:

1.விவசாயத் துறையை வணிக நோக்கமற்றது என(Non Commer cial Sector) மின்விநியோகத் திற்காக தமிழக அரசும், தமிழ் நாடு மின்வாரியமும் வகைப் படுத்தியது தவறானதாகும். அனைத்து மக்களும் உயிர் வாழ்வதற்குத் தேவையான உணவு உற்பத்தியைச் செய்து அதனைச் சந்தைப்படுத்தி வரும் வேளாண் துறையை வணிக நோக்கமற்றது (Non Commer cial Sector) என வகைப்படுத்துவது தவறானது. உழவர்கள் பெரிதும் சந்தைக் காகத்தான் உற்பத்தி செய்கின்றனர். அதனை வணிக மல்லாத துறை என்பது தவறு. இவ்வாறு தவறாக வகைப்படுத்தி ஒதுக்கி மும்முனை மின் விநியோகத்திலிருந்து புறக்கணிப்பது நாட்டின் உணவு உற்பத்தியையே புறக்கணிக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது.

உணவு உற்பத்தியுடன் பெரும்பான்மையான மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வாழ் வாதாரத் தொழிலாக வேளாண்மைத் தொழில் இருந்து வருகிறது. எனவே வேளாண் துறையை அவசியமானது மற்றும் அடிப்படையானது (Basic and Essential Sector) என வகைப்படுத்தி முன்னுரிமை கொடுத்து கட்டுப் பாடற்ற மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்.

2.மாறி வரும் புதிய சூழலில் விவசாயத் துறையில் தண்ணீரைச் சேமிக்கவும், உற்பத்தியைப் பெருக்கவும், ஆள் பற்றாக் குறையைப் போக்கவும் சொட்டு நீர்ப்பாசன முறை என்னும் புதிய தொழில் நுட்பம் அறிமுகமானது. அரசு மானியம் கொடுத்தும், வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து கொடுத்தும் இதனை ஊக்குவிக்கிறது. முன்னோடி விவசாயிகள் பலர் சொட்டு நீர்ப்பாசன முறையானது சிறந்த நீர் மேலாண் மைக்கும், திறன்மிக்க உரநிர்வாகத்திற்கும் ஏற்றது என்பதாலும், உற்பத்தியை பெருக்கக் கூடியது என்பதாலும் பெரும் தொகையை கடனாகப் பெற்று இந்தத்தொழிநுட்பத்தை செயல்படுத்த ஊக்கமுடன் முன் வருகின்றனர். மேலும் சொட்டு நீர்ப்பாசன அமைப்புகள் தானியங்கி முறையிலும் நீர்பாய்ச்ச ஏற்றதாக உள்ளது. ஈரோடு மாவட்டம் சொட்டு நீர் பாசன முறையில் அனைத்துப் பயிர்களும் குறிப்பாக கரும்பு பயிர் செய்வதற்கு மிக வேகமாக மாறி வருகிறது.

உயர் தொழிநுட்ப சொட்டு நீர்ப்பாசன அமைப்புகள் வெற்றி கரமாகச் செயல்பட அதிக நேரம் மும்முனை மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போதைய நடப்பிலுள்ள மின்வாரிய அறிவிப்பின்படி பகலில் கிடைக்கும் ஆறுமணி நேர மும்முனை மின் சாரத்தைக் கொண்டே சொட்டு நீர் அமைப்புகளை வெற்றிகரமாக செயல்படுத்த முடியவில்லை. இவ்வாறு இருக்க ஆண்டு தோறும் கோடை காலத்தில் நான்கு மாத காலம் கிராமப்புற பகுதியில் (Rural Feeders) அறிவிக்காமல் செயல் படுத்தப்படும் 80% முதல் 90% மின்வெட்டால் சொட்டு நீர்ப் பாசன உயர் தொழில்நுட்பம் செயலிழந்து விடுகிறது. மேலும் இதனால் விவசாயிகள் பெரும் கடன் சுமைக்கு ஆளாக்கட்டு வருகின்றனர்.

3.தமிழக விவாசயிகளில் பெரும் பகுதியினர் சிறு, குறு விவசாயிகளாவர் இவர்கள் தனிக்கிணறு வைத்து தனியான பம்செட் வைத்திருப்பது இல்லை. கூட்டுக் கிணற்றில் முறை வைத்து நீர்ப்பாய்ச்சும் நடை முறையின்மூலமே வேளாண்மை செய்துவருகின்றனர். கடுமையான மின்வெட்டுக் காலங்களில் தண்ணீர் பாய்ச்சுவதற்கான சுழற்சி முறையினால் பயிர்களுக்கு உரிய அளவு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகிபெரும் நட்டப்பட்டு வருகின்றனர்.

மேலும் தமிழ்நாடு மின்வாரி யத்தால் அறிவிக்கப்பட்ட 27.03. 2010 நாளிட்ட 261/10 ஆணைப் படி விவசாயப் பகுதிக்கு 63% மின்வெட்டு உறுதி செயப் பட்டுவிட்டது. எனவே கட்டாயம் 37% மின்சாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஒரு ஏக்கருக்கு ரூ. 50,000/-க்கு மேல் செலவு செய்து ஆண்டுப் பயிர்களான கரும்பு, வாழை, மஞ்சள் போன்ற பயிர்களை விவசாயிகள் பயிரிட்னர். தமிழ்நாடு மின்வாரியம் தனது அறிவிப்பிற்கு மாறாக 80% முதல் 90% மின்வெட்டை 2011 பிப்ரவரி முதல் விவசாயத் துறையின் மீது திணித்து வருகிறது. இதனால் பயிர்கள் கருகியது.

4.சீரான, தடையற்ற கிராமப்புற விவசாய மின்வழங்கலுக்கு இன்றைய மும்முனை மின்விநியோக நடைமுறை பெரும் தடையாக உள்ளது. கிராமப்புற விவசாயிகளுக்குப் பகலில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மும்முனை மின்சாரம் கொடுக்கப்படுகிறது. அனைத்து மின்நுகர்வோரும் ஒரே நேரத்தில் தமது மின் மோட்டார்களை இயக்குகின்றனர். அத்துடன் கோடை காலத்தில் கடும் தட்டுப்பாடு ஏற்படும் பொழுது கிடைக்கும் சில மணிநேர மின்சாரத்தை அனைவரும் பகிர்ந்து கொள்ள ஒரே காலத்தில் இயக்குவதால் மின் அழுத்தக் குறைபாடு பெருமளவில் ஏற்படுகிறது. இதனால் கிராமப்புற மின்மாற்றிகள் (Transformers) அடிக்கடி கடும் வெப்பமடைந்து பழுதடைந்து விடுகின்றன. மின்அழுத்தம் தாங்காமல் மின்மாற்றிகளில் பியூஸ் கம்பிகள் கருகி அடிக்கடி மின்துண்டிப்பு ஏற்படுகிறது. விவசாயிகளின் மின்மோட்டார்கள் பல இயங்குவதில்லை, குறைவான "வோல்டேஜ்" காரணமாக மோட்டர்களின் கம்பிச் சுருள் (Coil) கருகி விடுகின்றன. இந்தப் பிரச்சினைகளினால் மின்சார வாரியமும் சீரான மின் வழங்கல் செய்ய முடியாமலும், மின்மாற்றிகளை பராமரிப்பு செய்ய முடியாமலும் திணறிவருகின்றது. ஏழை விவசாயிகள் ஒரு பக்கம் பயிர்கள் காய்ந்து உண்டாகும் இழப்பினாலும், இன்னொரு பக்கம் மோட்டார் பழுதுபார்க்கும் செலவினாலும் பெரும் நட்டப்பட்டு சொல்ல வொண்ண துயருக்கு ஆளாகி வருகின்றனர்.

மேலும் தற்போது கிடைக்கும் இருமுனை மின்சாரத்தையே மும்முனை மின்சாரமாக மாற்றி மோட்டார் பம்செட்டுகளை இயக்கும் தொழில் நுட்ப கருவிகளை கண்டு பிடித்து விட்டனர். வசதியுள்ள விவசாயிகள் பல்லாயிரக்கணக் கான ரூபாய் செலவு செய்து அது போன்ற கருவிகளை பொருத்தும் பொழுது வசதியற்ற விவசாயிகள் கைபிசைந்து நிற்கின்றனர். மேலும் மின்வாரியத்திற்கே பெரிய நெருக்கடியாக மாறும் என்பதை த.நா. மி.வா.தலைமையகத்திற்கு ஈரோடு மண்டல மின்சாரியத் தலைமைப் பொறியாளர் அனுப்பிய அறிக்கை (நாள்: 09.04.2009) சான்றுகளுடன் எடுத்துக் காட்டியது. இவ்வகையில் இருமுனை மின்சாரம் மும்முனையாக மாற் றப்படுவதால் ஏற்படும் எதிர் மின்அலைத்தாக்கத்தால் இராசாத்தி வலசு, மூலனூர், குளத்துப்பாளையம் மின்னூட்டிகளும், திருமூர்த்திஅணை சிறுமின் உற்பத்தி நிலையமும் பாதிப்புக்குள்ளானதை விளக்கியது.

5.விவசாயிகள் விளை வித்துக் கொடுக்கும் கரும்பிலிருந்து கிடைக்கும் கரும்புச்சக்கையிலிருந்து சர்க்கரை ஆலைகள் தமது இணை மின் நிலையங்கள்(Co-generation) மூலம் தமிழகத்தில் சற்றொப்ப 400 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. ஈரோடு மாவட்டத்திலுள்ள சர்க்கரை ஆலைகள் மட்டுமே 105 மெ.வா. மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. இவ்வாறு மின்உற்பத்திக் கான எரிபொருளான சக்கையைக் கொடுக்கும் விவசாயிகளுக்கு அதற்கான கரும்பை உற்பத்தி செய்யப் போதுமான மும்முனை மின்சாரம் கொடுப்பதில்லை.

6.தற்போதைய கிராமப் புற விவசாய மும்முனை மின் விநியோக நடைமுறைக்கான ஆணை தமிழகத்திலுள்ள அனைத்து விவசாயிகளுக்கு மானது என்று தான் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நடை முறையில் அனைத்து விவசாயி களுக்கும் ஒரே மாதிரியான கால அளவில் மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதில்லை. தமிழ கத்தின் அனைத்துப் பகுதி களிலுமுள்ள ஒரு பிரிவு விவசா யிகள் நகர்ப்புற மின்னூட்டி கள்(Urban feeders) மூலம் விவசாயத் தேவைக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் பெற்று வருகின்றனர். மற்றொரு பிரிவு விவசாயிகள் கிராமப்புற மின்னூட்டிகள்(Rural feeders) மூலம் 9 மணிநேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் பெறுகின்றனர்.

24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் விவசாயத்திற்கு வழங்கினால் ஏற்படும் நன்மை குறித்து 15.06.2007லேயே ஈரோடு மண்டல தலைமைப் பொறியாளர் மின்வாரியத் தலை வருக்கு தெளிவான அறிக்கை அளித்து விட்டார். அதன்படி, 1980ம் ஆண்டு சூழ்நிலை மைகளில் கொண்டுவரப்பட்ட கிராமப்புற கட்டுப்பாட்டு மும்முனை மின்வழங்கல் முறை காலவதியாகிவிட்டது, தோல்வியுற்றுவிட்டது. அத்துடன் கிராமப்புற மின்னூட்டிகளையும் (Rural feeders) 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குமாறு மாற்றுவதால் கூடுதலான மின்நுகர்வோ, பொருட்செலவோ ஏற்படுவதில்லை. மாறாக குறைவான மின் அழுத்தமே தேவைப்படுகிறது. மின்மாற்றிகள் அடிக்கடி பழுதடைவது மிகவும் குறைந்து விடுகிறது.

கிராமப்புற தொழில்துறையின் மின்நுகர்வு அதிகரிப்பதன் மூலம் மின்சாரியத்திற்கு வருமானம் பெருகுகிறது. இருமுனை மின்சாரத்தை மும்முனை மின் சாரமாக மாற்றி பயன்படுத்து வதால் உருவாகும் தொழில் நுட்ப நெருக்கடி தவிர்க்கப்படும்.

எனவே, தமிழக அரசு தற்போதைய கிராமப்புற கட்டுப்பாட்டு மும்முனை மின்வழங்கல் முறையை மாற்றி 24 மணி நேரமும் தொடர்ச்சியான மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். (Lifting the restriction of Power supply in Rural feeders and converting all the HT feeders as 24 hours 3 phase supply feeder).

இது வேளாண்மையை இலாபமான தொழிலாக மாற்றி, கிராமங்களை முன்னேற்றத் தேவையான முக்கிய நடவடிக்கை ஆகும்.

Pin It