தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகத்திற்குள் 62 ஏக்கர் நிலத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் ஆகியவற்றைத் தமிழக அரசு கட்ட அரசாணைப் போட்டுப் பணிகளைத் தொடக்கி உள்ளது.

உலகெங்கும் வாழும் 12 கோடி தமிழர்களின் தாய்மொழியான தமிழுக்குள்ள ஒற்றைப் பல்கலைக்கழகம் தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக் கழகம் ஆகும். இப்பல்கலைக் கழகம் 1981 செப்டம்பர் 15ஆம் நாள் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. 972 ஏக்கர் நிலம் இப்பல்கலைக்கு ஒப்படைக்கப்பட்டது.

25 துறைகளின் உயராய்வுக்காகத் தொடங்கப்பட்ட இப்பல்கலைக் கழகம் தொடங்கப் பட்ட நோக்கங்களைச் செயல்படுத்துவதற்கு மாறாகப் பின்னர் வந்த அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. ஆட்சிகள் அதனை நலிவடையச் செய்து விட்டன. மாதச் சம்பளத்திற்கே திண்டாடுகிறது இப்பல்கலைக் கழகம்.

அதுமட்டுமின்றி, தொடர்ந்து தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குரிய நிலத்தைப் பறித்துப் பறித்து பல்கலைக் கழகத்திற்குத் தொடர்பில்லாத பணிகளுக்கு ஒப்படைத்து வருகிறது தமிழக அரசு. முதலில் 26 ஏக்கர் நிலத்தைத் தென்னகப் பண்பாட்டு மையத்திற்கும், பிறகு 50 ஏக்கர் நிலத்தைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்கும் கொடுத்தது.

இப்பொழுது, வேறு பணிகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ள 62 ஏக்கர் நிலத்தையும் மீண்டும் தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கே திருப்பித் தர வேண்டும் என்று தமிழ்ப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு இயக்கம் தஞ்சையில் போராட்டங்கள் நடத்தி வருகிறது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, சென்னை சேப்பாக்கத்தில், 15.10.2012 திங்கள் கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாப் போராட்டம் நடந்தது. திருவள்ளுவர் தவச்சாலை நிறுவனர் முதுமுனைவர் இளங்குமரனார் தலைமை தாங்கினார். உலகத் தமிழ்க் கழக வழக்கறிஞர் கலைச்செழியன் வரவேற்றார். சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் முனைவர் பொற்கோ, பேராசிரியர் நன்னன், தமிழகத் தமிழாசிரியர் கழக முன்னாள் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

முனைவர் பொற்கோ பேசும் போது, “தமிழ் நமக்கு உயிர் என்று சொல்கிறோம். தமிழுக்கு உயிர் நாம்தான். நாம் உணர்வோடு, விழிப்போடு இருந்து தமிழைப் பாதுகாக்க வேண்டும்” என்றார். அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் முன்னாள் கல்வியமைச்சர் திரு. செ.அரங்கநாயகம் பேசும் போது, “எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் கல்வியமைச்சராக நான் இருந்த போதுதான் தமிழ்ப் பல்கலைக் கழகம், பாரதியார், பாரதிதாசன் பல்கலைக் கழகங்கள் உருவாயின. தமிழ்ப் பல்கலைக் கழகம் மட்டுமின்றி, பாரதியார், பாரதிதாசன் பல்கலைக் கழகங்களுக்கும் தலா 1000 ஏக்கர் கொடுத்தோம். மூன்று தமிழையும் வளர்க்கத்தான் தமிழ்ப் பல்கலைக் கழகம். அதற்குத் திட்டமிட்டு செயல்பட்டால் 1000 ஏக்கர் நிலமே போதாது. எனவே எடுத்த நிலத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

தமிழ்ப் பல்கலைக் கழகப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் அறிமுக உரையாற்றும் போது, “பேராசிரியர்களே இல்லாத தமிழ்த் துறைகள், பல்கலைக் கழகத்துக்கு வெளியே பழையக் கட்டிடத்தில் பாழடைந்து கிடக்கும் அச்சு மற்றும் பதிப்புத்துறை, துறைத் தலைவரே இல்லாத கல்வெட்டு ஆய்வுத்துறை, போதிய நிதி இல்லாமை என ஏற்கெனவே நொடிந்துபோயுள்ள தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகமாகவும், காவல்துறை அலுவலகமாகவும் மாற்றும் தமிழக அரசின் முயற்சி தமிழ்ப் பல்கலைக் கழகத்தை இயற்கை மரணம் அடைய செய்யும் திட்டம் ஆகும்” என்று பேசினார்.

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நடுவண் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் தோழர் இரா.நல்லக்கண்ணு தொடக்கவுரையாற்றிய போது, “எம்.ஜி.ஆர். தமது கனவுத் திட்டமாக தமிழ்ப் பல்கலைக் கழகம் தொடங்கினார். அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரின் கனவை நிறைவேற்ற வேண்டுமே தவிர, சிதைக்கக் கூடாது” எனப் பேசினார்.

உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சிப் பொதுச் செயலாளரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான தோழர் து.இரவிக்குமார், ம.தி.மு.க. வழக்கறிஞர் அத்தரிதாசு, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், விடுதலை தமிழ்ப்புலிகள் தலைவர் தோழர் குடந்தை அரசன், நாம் தமிழர் கட்சித் தோழர் அன்புத் தென்னரசன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் திரு. த.வெள்ளையன், புலவர் இறைக்குருவனார், பொதுப்பள்ளிக்கான மாநில மேடைப் பொதுச் செயலாளர் திரு. பிரின்சு கசேந்திர பாபு, பாவலர் தமிழேந்தி(மா.பெ.பொ.க.), தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் உள்ளிட்ட பலர் கருத்துரை வழங்கினர்.

நிறைவாகப் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாசு உரையாற்றி பழச்சாறு கொடுத்து உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்தார். அவர் பேசும்போது, “தமிழறிஞர்கள் போராட முன்வந்தது பாராட்டுக்குரியது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிலத்தை வேறு காரியங்களுக்குக் பயன்படுத்தக் கூடாது. அடுத்தகட்டமாக, தமிழறிஞர்கள் சட்டமன்றத்திற்குள் புகுந்து போராட வேண்டும். அப்படித் தமிழறிஞர்கள் போராட முன்வந்தால் நானும் உங்களுடன் வருகிறேன்” என்றார்.

போராட்டத்தில், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழுத் தோழர்கள் அ.ஆனந்தன், பழ.இராசேந்திரன், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, த.தே.பொ.க. பொதுக்குழுத் தோழர்கள் பெண்ணாடம் முருகன், பழ.நல். ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி மையக்குழு உறுப்பினர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பெருந்திரளான உணர்வாளர்களும், தமிழறிஞர்களும் பங்கேற்றனர். நிறை வில், திரு. அன்றில் பா.இறையெழிலன் நன்றி கூறினார்.

Pin It