‘ஆரியர்’- ‘திராவிடர்’ என அடையாளப் படுத்தப்படும் மாந்தத் தொகுப்புகளை பண்பாட்டு இனங்கள்(Cultural Races) என அடையாளப்படுத்தலாம். உடங்கூறு அடிப்படையில் உடல்சார் மரபினம் (Physiological Race) என்றும் அவ்வினங்களின் உடல் மற்றும் மரபுக்கூறுகளின் அடிப்படையில் உயிரியல்சார் மரபினம் (Biological Race) என்றும், அவ்வினங்களின் வாழும் நிலப்பகுதியின் அடிப்படையில் புவிசார் மரபினங்கள் என்றும் (Geographical Races) என்றும் பேசுகிறோம். இவ்வகைப் பாகுபாட்டில் அவ்வினத்தின் மொழி, பண்பாடு, வாழ்வியல் போன்ற கூறுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை அல்லது பண்பாட்டுக் கூறுகள் வளர்ச்சியடையாத நிலையிலும் மேற்குறித்த மரபினங்களை அடையாளப்படுத்த முடியும். இத்தகைய மாந்தத் தொகுப்புகள் தங்களுக்கென ஒரு மொழி, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றுடன் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் வாழும் போது, அவை பண்பாட்டு இனங்களாக(சிutuக்ஷீணீறீ ஸிணீநீமீs) அடையாளம் பெறுகின்றன.

பண்பாட்டு இனங்களுள் மரபினக் கலப்புகள் ஏற்பட்டவையாககக் கூட இருக்கும். பண்பாட்டு இனங்களை அவற்றின் நிறமோ, உடற்கூறோ, அவை வாழும் நிலப்பகுதியோ அடையாளப்படுத்துவதில்லை. அவற்றை அவ்வினங்களின் மொழியும், பண்பாட்டுக் கூறுகளும் அடையாளப்படுத்துகின்றன. இத்தகைய பண்பாட்டு இனங்கள் அருகாமையிலுள்ள பிற பண்பாட்டு இனங்களுடன் ஊடாடுகின்றன, மோதுகின்றன, கலக்கின்றன, கரைகின்றன. பண்பாட்டு இனங்களுக்குள் பிற இனக்கலப்புகளையும் ஏற்றுக் கொண்டு, ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில், ஒரு மொழி - முகத்துடன் குறிப்பிட்ட பொருளியல் வாழ்வினால் விளைந்த பண்பாட்டுடன், வரலாற்றில் ஒரு நிலைத்த சமூகமாக நின்று விட்ட ஓரினம், தான் ‘ஓர் இனம்’ என உணர்ந்து தன்னைத் தானே ஆண்டு கொள்ள வேண்டும், பிறிதோர் இனம் தன்னை ஆள அனுமதிக்க முடியாது என்று உரிமைக்குரல் எழுப்பும் போது அது ‘தேசிய இனம்’(Nation) என்ற நிலை அடைகிறது.. ஒரு தேசிய இனம் விடுதலை பெற்றும் இருக்கலாம்; அடிமைப்பட்டும் கிடக்கலாம்.

ஆனால், அந்த இனம் தன்னை ‘ஓர் இனம்’ என்று உணர்ந்திருக்கும். மற்றொரு இனத்தின் மேலாண்மையை எதிர்த்து முழுக்கமிடாவிட்டாலும் முனகவாவது செய்யும்.

பல்வேறு தேசிய இனங்களாகப் பரிமாண மாற்றம் பெற்று விட்ட ‘ஆரியம்’, ‘திராவிடம்’ என்ற மாந்தத் தொகுப்புகள் பண்பாட்டு இனங்கள். இவை பண்பாட்டு நிலையை மீறி அரசியல் வடிவம் பெறும் போது அவை ஆளும் சக்தியாக மாறுகின்றன. கடந்த நூற்றாண்டில் ஆரியர் - திராவிடர் ஆகியவை இருவேறு அரசியல் சொற்களாக, அரசியல் சக்திகளாக உருவெடுத்தன. இந்திய துணைக் கண்டத்தில், ‘ஆரியம்’ என்ற ஆரிய இனவெறி பார்ப்பனியம், இந்தியப் பெரு முதலாளியப் பனியா கூட்டாளியுடன், ‘இந்திய தேசியம்’ என்ற அனைத்து தேசிய இன உரிமை மறுப்புத் தத்துவத்தை முன்னிறுத்தி, வஞ்சகமாக வெற்றி கண்டது. ஆரிய தேசமாக இந்தியாவை அறிவித்துக் கொண்டது.

ஆரியத்தின் எதிர் சக்தியாக இந்தியத் துணைக் கண்டத்தின் தென் கோடியில் உருவெடுத்த ‘திராவிடம்’ என்ற அரசியல் கருத்தியல், சமூகத் தளத்தில் பல நன்மைகளை சாதித்துக் கொடுத்ததே அன்றி அரசியல் களத்தில் சரிந்து விழுந்தது. வெற்றி பெற்ற ஆரியம் ‘இந்திய ஓர்மை’ பற்றிக் கதைக்கிறது; மேலாண்மை செய்கிறது. திராவிடத்தில் உறுப்புகளான கன்னட, தெலுங்க, மலையாளி இனங்கள் ஆரியத்துடன் கலந்து, புறவய தேசிய இன அடையாளங் களுடனும் அகவயமாக ஆரிய உள்ளீட்டுடனும் இந்திய ஆரியத்துடன் கொஞ்சிக் குலாவு கின்றன.

கடந்த காலத்திய பண்பாட்டு இனமாக அடையாளப் படுத்தப்பட்ட திராவிடரில், தமிழினம் மட்டுமே தனித்து விடப் பட்டிருக்கிறது. சரிந்து விழுந்த நிலையிலிருந்து மீண்டும் எழுந்து தன் இனஅடையாளப் போரைத் தொடர வேண்டியிருக்கிறது. இனவிடுதலைப் போரை சமரசமின்றி நடத்தியப் போராளி தந்தை பெரியார் பல சமூக உரிமைகளைப் பெற்றுத் தந்திருந்தாலும், தன் மக்களுக்கான அரசியல் விடுதலையைப் பெற்றுத் தர இயலாமலே போனது.

தந்தை பெரியாருக்குப் பின் மீண்டும் போரைத் தொடர வேண்டிய நிலையிலுள்ள தமிழர்கள், கடந்தகாலப் போராட்டங்களின் போதாமைகள், செய்த தவறுகள், செய்யத் தவறிய செயல்பாடுகள், செயல்பட வேண்டிய தளங்கள், உயர்த்திப் பிடிக்க வேண்டிய அடையாளம், கைக் கொளள்ள வேண்டிய உத்திகள் - ஆகியவற்றை உணர்ந்து களமாட வேண்டிய தேவை இருக்கிறது. கடந்த காலத்தின் ஆரியர் - திராவிடர் என்ற சொற்கள் அரசியல் சொற்களாக, இன ஆதிக்க மற்றும் இன உரிமைக் குறியீடுகளாகப் பயன்பட்டது போல், இந்த நூற்றாண்டில் அடிமைப் பட்டுக் கிடக்கும் மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கும் போது, தங்களுக்கான இலக்கையும், நடைமுறையையும், தங்களுக்கான இன அடையாள அரசியல் சொற்களையும் வரையறுத்துக் கொள்ள வேண்டும். விடுதலை கோரும் ஓர் இனம் தன்னை யார் என உணர வேண்டும்.

தமிழினம் தன்னை தமிழர்களாக உணர்ந் திருக்கிறது; திராவிடர்களாவும் உணர்ந் திருக்கிறது. இனவியல் அடிப்படையில் ஆரியர் - திராவிடர் - தமிழர் பற்றி ஆய்வு செய்யும் போது, இந்த சொற்கள் இன்று எந்த பொருளுடன் வழங்கப்படுகிறது என்று பார்ப்பது மட்டுமின்றி, எந்தெந்த காலங்களில் என்னென்ன பொருளில் இச்சொற்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை யும் அறிந்து கொள்ள வேண்டும்.

ரிக் வேதம் அவ்வேதத்திற்குச் சொந்தக்காரர் களை ஆரியர் என்றும் மற்றவர்களை ‘அனாரியர்’ என்றும் குறிப்பிடுகிறது. ஆரியரை எதிர்த்த மக்களை ‘தாசர்’ என்று குறிப்பிடுகிறது. தோற்கடிக்கப்பட்ட அனாரியர் (ஆரியர் அல்லாதவர்) சமூகத்தின் நாலாம் பிரிவாக சூத்திரர்(Sudra) ஆக்கப்பட்ட சூத்திரர்களும் இழிந்த பிரிவனர் ஆவர். தைத்ரேய பார்ப்பனத்தில் திவ்யா - அசுரர் என இரண்டு பிரிவுகளாக அவர்கள் சுட்டப் படுகிறார்கள். ‘தெய்வ வர்ணம்’ என்பது பார்ப்பனர்கள் என்றும், அசுரர்கள் சூத்திரர்கள் என்றும் தைத்ரேய பார்ப்பனம் கூறுகிறது. (Daivai Varnau Brahmnah Asura Sudrah)

அனாரியர் என்றும், தாசர் என்றும், அசுரர் என்றும் பின்னர் வர்ண சாதி முறையில் சூத்திரர் - பஞ்சமர் என்றும் ஒடுக்குமுறைக்கு இந்தியத் துணைக் கண்டத்து மக்கள் உள்ளாகியுள்ளமைக்கு இலக்கியப் பதிவுகள் இருக்கின்றன. சமஸ்கிருத இலக்கியங்களில் ஆரியருக்கு எதிராக திராவிடர்கள் என்ற பதிவு இருக்கிறதா எனத் தேடினால் அத்தகைய பதிவு ஏதும். இல்லை. ‘திராவிட’ என்ற சொல் மகாபாரதத்தில் வருகிறது. அது தென்னகப் பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. திராவிடர் பற்றி மனுதர்மம் பேசுகிறது. மனு சாஸ்திரத்தில் (X,43, 44) சாதி இறக்கம் செய்யப்பட்ட சத்திரியர்களைப் பற்றி வருகிறது. திராவிடர்கள் சத்திரியர்களாக இருந்தனர் என்றும், பின்னர் விருசாலர்களாக (சூத்திரர்கள்) தாழ்ந்தார்கள் என்றும், “திராவிடச் சத்திரியர்கள், புனிதச் சடங்குகளை விட்டுவிட்டனர் என்றும் அதனாலேயே தாழ்ந்தார்கள் என்றும் மனுநூல் குறிப்பிடுகிறது. (க.ப.அறவாணன்(மொ.பெ.), ‘டி.ஆர்.சேசையங்காரின் திராவிட இந்தியா’, தமிழ்க்கோட்டம், சென்னை, 2007, பக். 42) திராவிடச் சத்திரியர்கள் என்போர் யார் என்பது நாம் அறியாத ஒன்று. அது தென்னகச் சத்திரியர்களைக் குறிக்கும் என்று மட்டுமே கொள்ளலாம். சத்திரியர் என்போர் ஆரிய இனத்தின் ஒரு வருணத்தார் ஆவர். ஒரு விராட்ய சத்திரிய (ஆரிய இனம்) தந்தைக்குப் பிறந்தவர்களாக ஜல்லேயர்(Jhalleya) , மல்ல(Malla) நிச்சிவி(Nicc hivi) நட (Nata) , கேரன (Kerana), காச (Khasa) மற்றும் திராவிட (Dravida) ஆகியோரை மனு குறிப்பிடுகிறது. இவர்கள் வெவ்வேறு நிலப்பகுதியைச் சேர்ந்தவர்கள். ஆனால் ஆரியத் தொடக்கம் கொண்டவர்கள். இழிநிலை அடைந்த சத்திரியர்களாக ‘திராவிடர், காம்போஜர், யவனர், சாகர், பஹ்லவர், சின, கிராதர், துரதர், காசர் ஆகியோரைக் குறிப்பிடுகிறது.

1856-இல் இராபர்ட் கால்டுவெல்லின் மொழி ஆய்வுக்குப்பின் திராவிடர் என்ற சொல் யாரைக் குறிக்கும் சொல்லாகப் புழக்கத்துக்கு வந்தது என்பது தெரியும். ஆனால், 19ஆம் நூற்றாண்டுக்கு முன் திராவிடர் என்ற சொல் எவரைக் குறித்தது என்பதையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்தியத் துணைக் கண்டத்தின் தென்பகுதியை ‘திராவிடம்’ என்று வடமொழி யாளர்கள் அழைக்கும் போக்கு நீண்டகாலமாக, மகாபாரதம் உள்ளிட்ட நூல்களில் பேசப்பட்ட ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. ஆனால் திராவிடர்கள் என்று தென்னிந்திய மக்கள் அழைக்கப் பட்டதில்லை. தமிழ் மொழி ‘திராவிடம்’ என்று வடவர்களால், சமஸ்கிருதம் பேசிய ஆரியர்களால் அழைக்கப்பட்டது. தமிழ் அறிஞர்களே தமிழை ‘திராவிடம்’ என்று அழைக்கும் போக்கு கி.பி. 17ஆம் நூற்றாண்டு அளவிலே பரவலானது. கி.பி. 17ஆம் நூற்றாண்டில், தாயுமானவர் தமிழைத் ‘திராவிடர்’ என்று குறிப்பிடுகிறார். கால்டுவெல்லின் ஒப்பிலக்கணம்(1856) வெளிவரும் முன்பு, தமிழ்மொழி ‘திராவிடம்’ என்றே தமிழறிஞர்களால் வழங்கப்பட்டது.

1844ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்து அறிஞர் சிவத்திரு. சபாபதி நாவலர் எழுதிய தமிழ் மொழி வரலாற்றின் பெயர் ‘திராவிட பிரகாசிகை- என்றும் தமிழ்வரலாறு’. இவ்வாறு, தமிழைத் தான் ‘திராவிடம்’ என்றனர். ஆனால் தமிழரைத் திராவிடர் என்று அழைக்கவில்லை. தமிழ்ப் பெருங்குடிமக்கள் தமிழர் எனவோ, சூத்திரர் அல்லது பல்வேறு சாதிகளாகவோ அறியப்பட்டனர். ஆனால் தென்னிந்தியப் பார்ப் பனர்கள் மட்டுமே ‘திராவிடர்’ என்று வடவரால் அழைக்கப் பட்டனர்.

திராவிடத்தில்(தென்னந்தியாவில்) வாழ்வோர் திராவிடர் என்றும், திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழிகளைப் பேசுவோர் திராவிடர் என்றும் அல்லது ‘திராவிடம்’ என்ற தமிழைப் பேசியோர் திராவிடர் என்றும் ஐரோப்பியர் தம் மொழியியல், இனவியல் ஆய்வுக்கு ஏற்ப அடையாளப்படுத்தத் தொடங்கினர். ஏனைய அறிஞர்களும், அதை ஏற்றுப் பயன்படுத்தத் தொடங்கினார். 19-நூற்றாண்டின் பிற்பகுதியில் அதுகாறும் ‘திராவிடம்’ என அறியப்பட்ட பார்ப்பனர் ‘ஆரியர்’ என அடையாளம் ஏற்றனர். பரந்தபட்ட தென்னக மக்கள் ‘திராவிடர்’ ஆயினர். இம்மாற்றம் மற்றும் இம்மாற்றத்தைக் கொண்டு வந்த வரலாற்றுச் சூழல்கள் இக்கட்டுரையில் பின்னால் பேசத்தக்கன.

தென்னிந்தியப் பார்ப்பனர்கள் திராவிடர் என நீண்ட நெடுங்காலம் அழைக்கப் பட்டமைக்கான சான்றுகள் சிலவே எஞ்சியிருக்கின்றன. திராவிடர் என்று தம்மை அழைத்துக் கொண்ட பார்ப்பன முதுகிழவர்கள் இன்று இல்லை.

ஆனால், இது குறித்து என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா தனது 15வது பதிப்பில் ஒரு வரலாற்றுப் பதிவை ஏற்படுத்தியிருக்கிறது.

“திராவிடர்” என்ற பெயர் இந்திய வழக்கில் பார்ப்பனர்களின் தென்னகப் பிரிவை மட்டுமே குறிக்கும் பெயர் ஆகும். ஆனால், ‘திராவிடர்’ என்ற சொல், ‘துரதிர்ஷ்ட்வசமாக’ (Unfortunately) இந்தியாவில் விந்திய மலைகளுக்குத் தெற்கேயும், இலங்கையின் வடக்குப் பாதிப் பகுதியிலும் வாழும் மண்ணின் மக்களுக்கு (Indigenous peoples) பயன்படுத்தப் படுகிறது. அது (திராவிடம் என்ற சொல்) இப்பகுதிகளின் மொழிகளைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்”

இவ்வாறு கருத்துரைக்கும் என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா ‘திரவிடியன்’ (Dravidian) என்ற சொல் ஒர் இனத்தைக் குறிக்கப் பயன்படுத்தும் புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு, தென்னிந்திய மக்களின் உடற்கூறுகளையும் அவர்களது நிலப்பகுதியையும் சிறந்து விளங்கும் பண்பாட்டு நிலையையும் விவரிக்கிறது.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தனது கருத்துக்களை தகைமை சான்ற இனவியல் மற்றும் வரலாற்றறிஞர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் முன் வைக்கிறது. என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகாவின் இக்கூற்று 1947-இல் பதிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படைச் சான்றுகள் திராவிட இயக்கம் முழு வளர்ச்சியை அடைவதற்கு முன் பதியப் பெற்றவை. இக்கலைக்களஞ்சியம் இவ்வாறு பேசுகிறது.

DRAVIDIAN, a name only applied in Indian usage to the ‘Southern’ group of the Brahmans q.v. But “Dravidian” is applied, unfortunately, to the indigineous peoples of India South of the Vidhyas and to the Nothern half of Ceylon; it should be confined to the languages of this area. At least four different stocks have contributed elements in their population. The earliest is dark, short with wavy hair, broad noses and long heads, so that some have detected affinities with Negroids. This stock represented by Kadirs and Kurumbas, is akin to the Veddas and to Australian peoples and to the Semang and Sakai (see Asia: Farther Asia) Other elements are physically distinct and we have in the Nambutiri Brahmans the purest Aryan stock. The range of culture is equally wide. The Dravidians occupy the oldest geological formation in India, the medley of forest – clad ranges, terraced plateaux, and undulating plains, from the Vindhyas to CapeComorin, and among them we find the construction of dolmens, the use of the boomerang, kinship in the female line, totemism and many primitive usages. But in the same are found a high degree of civilization, with a remarkable literature and evidence of artistic skill,

E.Thurston, Castes and Tribes of Southern Indian, i. (exhaustive introduction), 1999; Cambridge History of India vol I. (1923) ; R.D. Dixon, Racial History of Mankind (1921).

(Encylopaedia Britannica, Vol. 7. Edn. 15, (1947), p. 624)

தென்னிந்தியப் பார்ப்பனர்களை ‘திராவிடர்’ என்று அழைக்கும் மரபுக்கு சான்றுகள் ஏதேனும் உள்ளனவா? பழைய சமஸ்கிருத நூல்களில் இதற்கான சான்றுகள் இன்றும் காணக் கிடைக்கின்றன.

இந்தியத் துணைக் கண்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் குடியேற மேலாண்மை செலுத்தும் சாதியினராக, வர்ணப்பிரிவினராகப் ‘பார்ப்பனர்கள்’ (தமிழில் பார்ப்பனர்கள்) இருந்து வந்திருக்கின்றனர். இந்தியத் துணைக் கண்டத்தின் எப்பகுதியில் வாழ்ந்திருந்தாலும் கூட, பார்ப்பனர்களிடையே ஓர் ஓர்மைத்தனம் காலாகாலமாக விளங்கி வந்திருக்கிறது. பிறசாதியினருடன் தங்களை வைத்துப் பேசும் போது ‘பார்ப்பனர்’ என்ற அடையாளத்தையும், பார்ப்பனர்கள் என்று ஒட்டுமொத்தமாகப் பேசும் போது தாங்கள் வாழும் நிலப்பகுதியையே தங்கள் இனப்பெயராகவும் வழங்கி வந்திருக்கின்றனர். ஏனைய மக்கள் சத்திரிய, வைசிய, சூத்திர, பஞ்சமராக அடையாளப்படுத்தப் பட்டனர்.

இந்தியத் துணைக் கண்டத்துப் பார்ப்பனர்களை நிலப்பகுதி அடிப்படையில் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கும் மரபு நீண்டகாலமாக இருந்து வந்தது. வட இந்தியப் பார்ப்பனர்களை ‘பஞ்ச - கௌடர்’ (Pancha-gauda) என்றும் தென்னிந்திய பார்ப்பனர்களை ‘பஞ்ச-திராவிடர்’ (Pancha-Dravida) என்றும் குறித்தனர். பழைய நூல்களுக்கு உரை எழுதுபவர்கள் நல்ல புரிதலைத் தரும் எண்ணத்துடன், வடஇந்திய பார்ப்பனர்களை ‘பஞ்ச-கௌட பார்ப்பனர்’ என்றும் தென்னிந்திய பார்ப்பனர்களை ‘பஞ்ச - திராவிட பார்ப்பனர்கள்’ என்றும் பார்ப்பனர் என்றும் சொல்லை சேர்த்து எழுதுவர். இதில் ‘பஞ்ச திராவிட’ என்று எழுதினாலே அது ஐந்து நிலப்பகுதிகளைச் சேர்ந்த தென்னிந்திய பார்ப்பனர்கள் என்று பொருள்படும்.

‘பஞ்ச - திராவிட’ என்ற சொல்லில் வரும் ‘திராவிட’ என்ற சொல் தென்னிந்தியப் பகுதியைக் குறிப்பது அன்று. அதற்கு ‘தென்னிந்திய பார்ப்பனர்’ என்றே பொருள். ஏனெனில், சமஸ்கிருத சுலோகங்களில் தென்னிந்தியப் பார்ப்பனர்களைக் குறிக்க ‘பஞ்ச-திராவிட’ என்று மட்டுமே வருகின்றது.

 

இராஜதரங்கினி (Rajatarangi) என்னும் நூல் கல்ஹனரால் எழுதப்பட்டது. இது காஷ்மீரின் வரலாற்றைப் பேசும் 12-ம் நூற்றாண்டு நூலாகும். இந்நூல் இந்தியத் துணைக் கண்டத்துப் பார்ப்பனர்கள் வாழும் பெருநிலப் பகுதிகளின் அடிப்படையிலான சாதிப் பிரிவை விவரிக்கிறது. இதைக் கூர்ந்து படிக்கும் எவரும், ‘பிரமணர்’ என்ற சொல்லே பயன்படுத்தாமல் ‘திராவிட’ என்ற சொல்லால் மட்டுமே தென்னிந்திய பார்ப்பனர்கள் குறிக்கப்படுவதை அறிந்து கொள்ளலாம்.

இராஜதரங்கினி இவ்வாறு பேசுகிறது.

கர்னாடகஆஸ்ச்ச தைலங்கா திராவிட மஹாராஷ்ட்ரகஹா|

குர்ஜராஷ்சேத்தி பஞ்சைவ திராவிட விந்தியதக்ஷஜீனே||

சாரஸ்வதாஹா கான்யகுப்ஜா கௌடா உத்கலமைதிலஹா|

பஞ்சகௌடா இத்தி கியாதா விந்ஸ்யோதரவாசினஹா||

(சமஸ்கிருத சுலோகம்: Brahmin Communities – Wikipedia,a, the Free Encyclopedia1.htm)

இதன் பொருளாவது: ‘கர்னாடகா, தைலங்கர், திராவிடா, மஹாராஷ்ட்ரகர், குர்ஜரா ஆகிய ஐவரும் விந்தியத்துக்குத் தெற்கே வாழும் திராவிடர்; சரஸ்வதர், கன்யாகுப்ஜா, கௌடா, உத்கலா மற்றும் மைதிலா ஆகிய விந்தியத்துக்கு வடக்கே வாழ்பவர் ‘பஞ்ச கௌடா’.

இந்த சுலோகத்தில் ‘கௌடா’ என்ற சொல் பொதுவில், வடஇந்தியப் பார்ப்பனர்களையும், ‘திராவிடர்’ என்ற சொல் தென்னிந்தியப் பார்ப்பனர்களையும் குறித்து நிற்பதைக் காணலாம்.

1896ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஜொகேந்திர நாத் பட்டாசார்யா எழுதிய ‘Hindu castes and sectsஎன்னும் நூல், இந்தியத் துணைக் கண்டத்துப் பார்ப் பனர்களை “சாஸ்திரங்கள் அடிப்படையிலும், மக்கள் நம்பிக்கையின் அடிப்படையிலும்”, இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கிறது. அவை,

1. பஞ்ச கௌர் (Panch Gaur) , 2. பஞ்ச திராவிட(Panch Dravida).

பஞ்ச திராவிட என்னும் பிரிவில்,

1. ஆந்திர (Andhra)

2. திராவிட (Tamils and Kerala)

3. கர்னாடகா (Karnataka)

4. மகாராஷ்ட்ரா (Maharasthra)

5. குஜராத் (Gujarat)

ஆகியவை அடங்குவதாக இந்நூல் குறிப்பிடுகிறது. ‘பஞ்ச கௌர்’ என்பதிலும் ‘பஞ்ச திராவிட’ என்பதிலும் பார்ப்பனர் என்ற பின்னொட்டு காணப்படாமையைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

புராணங்களிலும் திராவிடம் பற்றிய சில பதிவுகள் இருப்பதாக அறிய முடிகிறது. தொன்மங்கள் மிகைப்படுத்தப் பட்டவையாகவும், கட்டுக்கதைகள் நிரம்பியவையாகவும் இருக்கக் கூடியவை. ஆனால் அவற்றுள் சில வரலாற்றுச் செய்திகள் உள்ளீடாக இருக்கும். இணையத்தள கட்டுரை ஒன்று According to the Puranas, the Dravida people are the descendants of the Vedic Turvasha people” (http://www.indianetzone.com/9/ dravidian_race.htm)

திராவிடர் என்போர் துர்வாச மக்களின் வழித்தோன்றல்கள் என்று கூறும் இச்செய்தி வேத ஆரியர்களுடன் திராவிடர்களைத் தொடர்பு படுத்துகிறது. இது மேலும் நுணுகிப் பார்க்க வேண்டிய ஒன்று ஆகும்.

தென்னிந்திய பார்ப்பனர்கள் தாம் ‘திராவிடர்’ என அறியப்பட்டனர் என்பதற்கு மேலும் சில சான்றுகள் உள்ளன. ‘ஆதிசங்கரர் திருஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என்று அழைத்துள்ளார்; அதாவது, ‘தென்னகக் குழந்தை’ என்று அதற்குப் பொருள்’ என்று எளிமையாகப் பொருள் சொல்லி திருஞானசம்பந்தரை தென்னக நாயகனாக சில தமிழறிஞர்கள் ஒப்பனை செய்வதுண்டு. ஆனால், ‘திராவிட சிசு’ என்ற சொல்லாடல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்று.

ஆதிசங்கரர் என்னும் கேரளத்தைச் சேர்ந்த நம்பூதிரிப் பார்ப்பனர்(8ஆம் நூற்றாண்டு) தாம் எழுதிய சௌந்தர்ய லகரி என்னும் நூலின் 75வது பாடலில் திராவிட சிசு என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறார். அப்பாடலின் பொருள் இதுதான்.

“ஓ, மலையரசனின் மகளே, உனது மார்பிலிருந்து(Breast) வாங்கி வரும் பால், உண்மையில் அலையாக எழுந்துவரும் அருந்தேன் ஆகிய கல்விக் கடவுள் சரஸ்வதி என்றே நான் நினைக்கிறேன். ஏனெனில், அருள் நிறைந்த உன்னால் அளிக்கப்பட்ட பால், இந்த ‘திராவிட சிசு’வை, ஒருவரின் மனத்தைக் கொள்ளையிடும் படைப்புகளை உருவாக்கும் மாபெரும் மாபெரும் புலவர்களுக்குள் மன்னன் ஆக்கியது” (பாடலின் பொருள் கட்டுரையாளரின் நடையில்)

ஆதிசங்கரர் குறிப்பிடும் ‘திராவிட சிசு’ என்பதற்கு என்ன பொருள்? அவர் எவரைக் குறிப்பிடுகிறார்? ஆதிசங்கரர் திராவிட சிசு என்று தன்னைத் தான் சுட்டுகிறார் என்று சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள் (http:// www.hindunet.com – The Roots of the Word Dravida – Hindunet Forums). திராவிட என்பதற்கு ‘தமிழ்’ என்று பொருள் கொண்டு அது திருஞான சம்பந்தரைக் குறிக்கும் சொல் என்று கருதுவோரும் உண்டு. ஆனால், தமிழ் மொழியையோ அல்லது பிறந்த நிலப்பகுதியையோ ஒருவரின் அடையாளமாகக் கருதக் கூடிய மனிதனாக வர்ண சாதி மதவாத உணர்வு படைத்த, ஆதிசங்கரரைக் கருதமுடியாது. ‘திராவிட’ என்ற சொல்லுக்கு பார்ப்பனர்களைப் பொறுத்தவரை ‘தென்னகப் பார்ப்பனர்’ என்பதே முதற்பொருள். ‘திராவிட சிசு’ என்பதற்கு ‘தென்னகப் பார்ப்பனக் குழந்தை’ என்பதே பொருள். அது ஆதிசங்கராக இருந்தாலும், திருஞானசம்பந்தராக இருந்தாலும் பொருந்தக் கூடியதே.

திராவிடர் என்ற சொல் பார்ப்பனர்களை ஏற்காத சொல் என்றும், பார்ப்பனர் - ஆரியர்களுக்கு எதிரான சொல் என்றும் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால், திராவிடர் என்ற சொல்லின் மீது முதல் உரிமை பார்ப்பனர்களுக்கே உரியது. அந்த சொல்லும் சமஸ்கிருதச் சொல்லே. அதைப் பயன்படுத்தத் தொடங்கி யவர்களும், வடமொழி யாளர்களே. திராவிடம் என்ற சொற்பயன்பாடும் சமஸ்கிருத நூல்களிலேயே தொடக்கம் பெற்றது. அது மக்களின் ஒருபிரிவைக் குறிக்கும் சொல் என்ற வகையிலும் அது கி.பி. ஏழாம் அல்லது எட்டாம் நூற்றாண்டி லிருந்து 19ஆம் நூற்றாண்டு வரை பார்ப்பனர்களின் தென் கிளையைக் குறிக்கும் சொல்லாகவே வழங்கி வந்திருக்கிறது. ‘தமிழர்’ என்ற சொல்லை விட ‘திராவிடர்’ என்ற சொல் பார்ப்பனர்களுக்கு மிக உவப்பான சொல் ஆகும்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ‘திராவிடர்’ என்ற சொல் என்ன பயன்பாட்டில் இருந்து வந்தது என்று ஆய்வு செய்ய வேண்டும். 1856-இல் வெளியான திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் வெளியிட்ட கால்டுவெல் ‘தென்னிந்திய மக்களை வடமொழியாளர்கள் இப்பெயரால் அழைத்து வந்தனர் எனக் கருத இடம் உண்டு’ என்ற கருத்தைக் கொண்டிருந்தார். ஆனால், அவர் காலத்திலும், அவர் காலத்திற்குப் பின்னரும் கூட, திராவிடர் என்ற சொல்லைப் பார்ப்பனர்கள் பயன்படுத்தி வந்தனர்.

புகழ்பெற்ற ‘தென்னிந்தியக் குலங்களும் குடிகளும்’ என்ற களஆய்வுத் தொகுப்புகளை வெளியிட்ட எட்கர் தர்ஸ்டன் 1885-இல் சென்னை அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராக நியமிக்கப் பட்டார். கால் நூற்றாண்டு அப்பணியில் இருந்தார். மாகாணங்களில் இன இயல் ஆய்வை மேற்கொள்ளுமாறு ஆங்கிலேய இந்திய அரசு ஆணை பிறப்பித்தது. சென்னை மாகாணத்தல் அப்பொறுப்பு எட்கர் தர்ஸ்டனிடம் அளிக்கப்பட்டது. எட்கர் தர்ஸ்டனின் களஆய்வு ஆங்கிலத்தில் 7-தொகுதிகளாக 1909ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. எட்கர் தர்ஸ்டனின் காலத்தில், திராவிடர் என்ற சொல் தென்னிந்திய மக்கள் இனத்தைக் குறிக்கும் சொல்லாக மேலை நாட்டு அறிஞர்களால் ஏற்கப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. நூல்கள் பல எழுதப்பட்டன. எட்கர் தர்ஸ்டனும் திராவிடர் என்ற சொல்லை தென்னிந்திய மக்களைக் குறிக்கும் சொல்லாகவே தமது ஆய்வுத் தொகுப்புகளில் பயன்படுதியுள்ளார்.

ஆனால், அவருடைய காலத்திலும் ‘தென்னிந்தியப் பார்ப்பனர்கள் தங்களைத் திராவிடர் என அழைத்துக் கொள்கின்றனர்’ என்ற பதிவையும் செய்து வைத்திருக்கிறார். (எட்கர் தர்ஸ்டன், குலங்களும் குடிகளும், தொகுதி - மிமி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1987, பக். 251)

எட்கர் தர்ஸ்டன் இந்தியாவில் உள்ள பார்ப்பனர் களின் பல்வேறு பிரிவுகளைப் பற்றியும் விவரிக்கிறார்:

“இவர்களுள் தமிழ்ப் பார்ப்பனர்கள் அல்லது திராவிடர் என்ற பிரிவினைச் சேர்ந்தவர்களே தென் மாவட்டங்களில் (அன்றைய சென்னை மாகாணத்தில்) மிகுதியாகக் காணப்படுபவர்கள்”. (எட்கர் தாஸ்டன், தென்னிந்தியக் குலங்களும் குடிகளும், தொகுதி மி, பக். 425-, 426)

திராவிடர் எனப்படும் அவர்கள் 1. ஸ்மார்த்தர் என்றும் 2. வைணவர்கள் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப் பட்டுள்ளனர்.

ஸ்மார்த்தர் என்னும் முதற்பிரிவுக்குள் வடமர், தேசிகன், பிரகசரணம், வாத்திமர், அஷ்டசகஸ்ரம், தீட்சிதர், சோழியர், முக்காணி, காணியாளர், சங்கேதி, பிரதமசாகை, குருக்கள் - ஆகிய 12 பிரிவினர் அடங்குவர். இவற்றில் முதற்பிரிவான வடமர் பிரிவில் 5 உட்பிரிவினர் அடங்குவர். அந்த உட்பிரிவுகளுள் ஒன்று - ‘தும்ம குண்ட திராவிடர்’ என்பது.

அது போன்று ‘பிரகசணம்’ என்றும் பிரிவின் 9 உட்பிரிவு களுக்குள் ஒன்று ‘புதூர் திராவிடர்’ என்பது.

தெலுங்கு பிரமணர் களிடையே 1. வைதிகி 2. நியோகி 3. தம்பல 4. குடியேறியவர் என நான்கு பிரிவுகள் உள்ளன. இதில் நான்காவது பிரிவான குடியேறியவர் என்ற பிரிவில் ‘புதூர் திராவிடர்’, ‘தும்ம குண்ட திராவிடர்’ என்ற உட்பிரிவுகள் உள்ளன.

கடந்த 100 ஆண்டுகளுக்குள் சமூகம் பெருத்த மாற்றங்களை அடைந்துள்ளது. எட்கார் தர்ஸ்டன் வந்த போது இலை, நார் உடைகளை அணிந்த மக்கள் மலையகங்களில் இருந்தார்கள். இன்று மலைப் பகுதிகளிலும் கூட சல்வார் கம்மீசுகள் குடியேறி இருக்கின்றன. பார்ப்பன சமூகமும், பார்ப்பனர் அல்லாத சமூகப் பிரிவுகளும் பெருத்த மாற்றங்களைச் சந்தித்துள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட பொருளைக் கொண்டிருக்கும் சொல், பிறிதொரு காலக் கட்டத்தில் தன் பொருளை இழந்து விடுகிறது; புதிய பயன்பாட்டைப் பெற்று விடுகிறது. அப்படித்தான் திராவிடர் என்ற சொல்லும் 19-20ஆம் நூற்றாண்டுகளில் ஒரு புதிய பொருளையும் அடையாளத்தையும் பெற்றது.

திராவிடர் என்ற சொல் மட்டுமல்ல, திராவிடம் என்ற சொல்லும் கூட பொருள் மாற்றம் பெற்றிருக்கிறது. திராவிடம் என்ற சொல் தென்னிந்தியாவைக் குறிக்கும் சொல்லாக நீண்டகாலம் வடவர்களால் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 20-ஆம் நூற்றாண்டில், தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய நிலப்பகுதிகளை இணைத்து ஒரு விடுதலை பெற்ற தேசத்தை உருவாக்கி விட தமிழகத் தலைவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோர் இயங்கினர். குறைபாடுள்ள அக்கோரிக்கை தமிழகத்தின் கோரிக்கையாக மட்டுமே இருந்து இறந்தது.

ஆனால் தென்னிந்தியாவில் ஒரு திராவிட தேசம் இருந்ததாகவும், புராதன இந்தியாவின் 56 தேசங்களுள் அதுவும் ஒன்று என்றும் வடமொழிச் சார்பு நூல்கள் குறிப்பிடுகின்றன. பாண்டிய தேசம், சோள தேசம், கர்னாடக தேசம், கேரள தேசம் ஆகியவை அல்லாத அந்த திராவிட தேசத்தை இதிகாச நாயகர்களுடன் தொடர்புபடுத்திப் புராணங்கள் பேசுகின்றன. தமிழினத்தின் எதிரியாகப் பெரியாரால் அடையாளங் காட்டப்பட்ட ஆரிய இனக் குறியீடு இராமன். அந்த இராமனின் மூதாதையர் ஆண்டநாடு தென்னிந்தியாவில் விளங்கிய அத்திராவிட தேசம் என்று ஸ்ரீமத் பாகவதம் பேசுகிறது.

(வரும்)

-முனைவர் த.செயராமன்