தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 15.01.2010 அன்று தஞ்சையில் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் நடந்தது.

கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ. மணியரசன் மற்றும் தோழர்கள் கி.வெங்கட்ராமன், நா.வைகறை, குழ.பால்ராசு, அ.மகிழ்நன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்கக் கூடாது.

தெலங்கானா தனிமாநிலப் போராட்டத்தை ஒட்டி இந்திய அரசு இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்க முனைவதாகத் தெரிகிறது.

1956 இல் அமைக்கப்பட்ட முதல் மாநிலச் சீரமைப்புக் குழு, பல்வேறு தேசிய இனங்கள் தங்கள் தாயக அடிப்படையில் மாநிலம் அமைக்கக் கோரிப் போராடி, பலர் உயிர்த் தியாகம் செய்தபின் உருவானது. ஆனால் இப்பொழுது மொழிவாரி மாநில அமைப்பைச் சீர்குலைக்கும் வகையில் தேசிய இனத்தாயகங்களை வெறும் நிர்வாக அமைப்புகளாகத் துண்டாடும் உள்நோக்கத்துடன் மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்க முயல்கிறது இந்திய அரசு.

மாநிலத் தன்னாட்சியை மறுத்து மேலும் மேலும் தில்லி மையத்தில் அதிகாரங்களைக் குவித்து வரும் இந்திய அரசு தனது ஒற்றையாட்சி நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள தெலங்கானாப் போராட்டத்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது.

இரண்டாவது சீரமைப்பு ஆணையத்தின் ஆய்வுப் பரிந்துரைப் பொருள் பட்டியலில் மொழிவாரி மாநில அமைப்பை முழுமைப்படுத்துவதோ அல்லது தேசிய இனத்தாயக அடி ப்படையோ இடம் பெறாது என்பது உறுதியாகத் தெரிகிறது.

இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையம் நிறுவப்பட்டால் புதிய போராட்டங்கள் உருவாகுமே தவிர, சிக்கலுக்குத் தீர்வு ஏற்படாது.

ஏதாவது ஒரு மாநிலத்தில் மாநிலத்தைப் பிரிக்கும் கோரிக்கை எழுந்தால் அம்மக்களுடன் பேசி அதற்குத் தீர்வு காண வேண்டுமே தவிர ஒட்டு மொத்த இந்தியாவுக்கு மாநிலச் சீரமைப்பு ஆணையம் போட வேண்டிய தேவை இல்லை.

தமிழ்நாட்டைத் துண்டாடக் கூடாது

தெலங்கானாப் போராட்டத்தைச் சாக்காக வைத்துக் கொண்டு சில தன்னல சக்திகள் தமிழ்நாட்டைத் துண்டாட வேண்டும் என்று குரல் எழுப்புகின்றன.

தமிழ்நாட்டைத் துண்டாடுவது தமிழ் இனத்தின் அழிவில்தான் போய்முடியும்.

தமிழ்த்தேசிய இன மறுப்பாகவும் தமிழர் தாயக மறுப்பாகவும் இத்துண்டாடுதல் அமைந்துவிடும். இத்தன்னல சக்திகளின் துண்டாடும் கோரிக்கை மொழிவாரித் தாயக உரிமை பறிக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கு இனிக்கும் செய்தியாகும்.

எனவே தமிழ்நாட்டு மக்கள் இரண்டாவது மாநிலச் சீரமைப்பு ஆணையத்தையும் தமிழ் நாட்டைத் துண்டாடும் கோரிக்கையையும் எதிர்க்குமாறு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது.

2. மரபீனி மாற்றுக் கத்தரிக்காயைத் தடுப்போம்

பன்னாட்டுப் பகாசுரக் கொள்ளை நிறுவனமான மான்சான்டோவும் அதன் கூட்டாளி அமைப்புகளும் மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை இந்தியச் சந்தையில் விற்பனை செய்ய அனுமதி அளிக்க இந்திய அரசு முடிவு செய்துவிட்டது. ஒப்புக்குக் கருத்துக் கேட்பு நாடகம் நடத்துகிறது இந்தியா. வெளிநாட்டு நிறுவனங்களின் இந்திய முகவ ர் போல் செயல்படும் இணைஅமைச்சர் ஜெய்ராம் ரமேசு கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்துவது வெறும் கண்துடைப்பே.

தமிழக வேளாண் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தமிழ்நாட்டில் மரபீனி மாற்றுக் கத்தரிக்காய் விற்பனைக்கு வருமென்றும் அது மான்சான்டோ உருவாக்கியது அன்று என்றும் தமிழ் நாட்டு வேளாண் பல்கலைக்கழகம் உருவாக்கியது என்றும் அண்மையில் சட்டப் பேரவையில் கூறினார்.

மரபீனி மாற்றுக்கான மூலசூத்திரத்தை மான்சான்டோவிடம் இருந்துதான் தமிழ்நாட்டு வேளாண் பல்கலைக் கழகம் வாங்கியுள்ளது.

தமிழக அரசின் முத்திரையை முகமூடியாகப் போட்டுக் கொண்ட மான்சான்டோ மரபீனி மாற்று கத்தரிக்காய் முதலில் வரும். பின்னர் முகமூடியை அகற்றிவிட்டு நேரடியாக மான்சான்டோ கத்தரிக்காயே விற்பனைக்கு வரும்

தமிழக அரசும் வீரபாண்டி ஆறுமுகமும் மான்சான்டோவின் நெருங்கிய கூட்டாளிகள் என்பது ஏற்கெனவே அம்பலப்பட்ட ரகசியமாகும். மான்சான்டோவின் மரபீனி மாற்று நெல் விதை நாற்றங்காலைத் தமிழ்நாட்டில் தமிழக அரசு ரகசியமாக அனுமதித்ததும் உழவர்கள் அந்நாற்றங்காலை அழித்ததும் ஊரறிந்த செய்தி.

எந்தப் பெயர் ஒட்டிக் கொண்டு வந்தாலும் மரபீனி மாற்றுக் கத்தரிக்காயை தமிழ்நாட்டில் அனுமதிக்கக் கூடாது. மரபீனி மாற்றுப் பருத்தியைச் சாகுபடி செய்து உரிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்டு கடன் தொல்லையில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட விதர்ப்பா, ஆந்திரப் பிரதேச உழவர்களின் எலும்புக் கூடுகள் நமக்கு எச்சரிக்கைச் சின்னமாகும். மரபீனி மாற்று உணவுப் பண்டங்களை உண்போர்க்கு பலவகை நோய்கள் வருகின்றன.

எனவே என்ன விலை கொடுத்தேனும் மரபீனி மாற்றுக் கத்தரிக்காய்களைத் தமிழ்நாட்டில் நம் மக்கள் அனுமதிக்கக் கூடாது. மரபீனி மாற்றுக் கத்தரிக்காய் சந்தைக்கு வந்தால் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அவற்றை அழிப்பதற்குத் உறுதி ஏற்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

3. தஞ்சைப் பெரிய கோயில் 1000 மாநாடு

ஒப்புவமை அற்ற உலகப் பெரும் கலைப் படைப்பான தஞ்சைப் பெரிய கோயிலைச் சோழப் பேரரசன் இராசராசன் எழுப்பி 1000 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

இதனைக் கொண்டாடும் வகையில் தஞ்சையில் வரும் சூலை மாதம் தஞ்சைப் பெரிய கோயில் 1000 மாநாடு நடத்துவது என்று முடிவு செய்யப்படுகிறது.

அம்மாநாட்டில் சோழர்கால ஆட்சி நிர்வாக முறை, பாசன முறை, கட்டடக் கலை, ஓவியம், நாட்டியம், இசை, இலக்கியம், மக்கள் வாழ்வியல் எனப் பல்வேறு தலைப்புகளில் பன்முகக் கருத்தரங்குகளும் ஆடல் பாடல்களும் நடைபெறும்.

தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வறிஞர்களும் கலைஞர்களும் இம்மாநாட்டில் கலந்து கொள்வார்கள்

- தமிழர் கண்ணோட்டம் செய்தியாளர்

Pin It