தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கிற கணிசமானவர்கள் இவ்வளவு வலுவான இந்திய ஏகாதிபத்திய அரசை எதிர் கொண்டு தமிழ்நாடு விடுதலை சாத்தியப்படுமா என்ற ஐயத்தை அடிக்கடி தெரிவிக்கின்றனர்.

இதே போன்ற கேள்விகளை எதிர்கொண்ட சீனத் தலைவர் மாசேதுங் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது. “ஏகாதிபத்தியம் காகிதப் புலி” என்றார் மாசேதுங்.

அதற்கு அவர் விளக்கமும் கூறினார். ஏகாதிபத்தியம் என்பது உடனடியாகப் பார்த்தால் அதாவது உடனடி நடைமுறை உத்திப்படிப் பார்த்தால் வலுவானதாகத் தோன்றும். ஆனால் தொலைநோக்கில் அது வலுவற்றது. எப்படி காகிதத்தால் செய்யப்பட்ட பொம்மைப் புலி தோற்றத்தில் புலியாக இருந்தாலும் உண்மையில் வெறும் காகிதம்தான் என்பது போல் ஏகாதிபத்தியம் இருக்கிறது என்றார் மாசேதுங்.

இது இந்திய ஏகாதிபத்தியத்திற்கும் பொருந்தும்.

படைவகைக் கணக்குகளை வைத்துப் பார்க்கும் போது இந்திய வல்லரசு வெல்லற்கரிய ஆற்றல் போல் தெரியும். ஆனால் அதற்குத் தலைமை தாங்கும் அரசியல் மிகவும் வலுவீனமாகத் திகழ்கிறது என்பதே உண்மை.

இந்த 2014ஆம் ஆண்டு குடியரசு நாளை ஒட்டி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ”மக்களைத் தடவிக் கொடுக்கும் அராஜகவாதம் பயன்தராது”( populist anarchism) என்று அரற்றினார்.

இந்திய அரசு பலவீனப்பட்டுக் கிடப்பதின் அவலக் குரல்தான் பிரணாப் முகர்ஜியின் இந்தச் சொற்கள்.

இவர் இவ்வாறு பேசியதற்கு உடனடிக் காரணமாக தில்லி மாநகர் பிரதேச முதலமைச்சர் கெஜ்ரிவால் நடத்திய தர்ணாவும், அவரும் வெவ்வேறு மாநில முதலமைச்சர்களும் அறிவித்து வரும் இலவசங்களும் காரணமாக அமைந்துள்ளன.

ஒரு மாநில முதலமைச்சர் இந்திய நாட்டின் தலைநகரத்தில் அனைத்துப் போக்குவரத்துகளும் முடங்கும் வகையில் இரண்டு நாள்கள் மறியல் போராட்டம் நடத்துகிறார் என்பது இந்திய அரசு அரசியல் வகையில் தனிமைப்பட்டு வருவதையும் நிர்வாக வகையில் திணறிக் கொண்டிருப்பதையும்தான் காட்டுகிறது.

இதே குடியரசு நாளில் சனவரி 26 அன்று காசுமீரின் ஆயுதம் தாங்காத விடுதலை அமைப்பான ஹூரியத் மாநாட்டுக் கட்சி அழைப்புவிடுத்து முழு அடைப்பு நடந்துள்ளது.ஒட்டு மொத்த காசுமீர் பள்ளத்தாக்கு மக்களும் இந்தியக் குடியரசு நாளைப் புறக்கணித்துள்ளனர்.

இதே போல் நாகாலாந்திலும் மணிப்பூரிலும் பொதுமக்களே பங்கேற்காத குடியரசு நாள் விழாக்கள் நடந்துள்ளன.

என்னதான் இந்தியத் தேசிய வாதியாக இருந்தாலும் இந்திய அரசைக் கண்டித்து செயலலிதா விடுக்கிற காட்டமான கண்டன அறிக்கைகள் ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் கருதிப் பார்க்க முடியாத செய்தியாகும்.

அண்மையில் இந்து இதழும் சிஎன்என்-ஐபிஎன்னும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் குறைவான இடங்களையே பெறும் என்றும், ஏகப்பட்ட ஆரவாரத்தோடு களமிறக்கப்பட்டுள்ள பாரதிய சனதாவின் மோடி தலைமை அவரது கட்சிக்கு மக்களவையில் பாதிக்கும் குறைவான இடத்தையே பெற்றுத்தரும் என்றும் கூறுகிறது. மாநிலக் கட்சிகள் வரும் நாடாளுமன்றத்தில் பெரும் அளவில் இடம் பெறும் என்றும் கூறுகிறது.

இது பலரும் அறிந்துள்ள வெளிப்படையான உண்மை நிலைதான்.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் அண்ணாதிமுக - திமுக இடையேதான் போட்டி இருக்கும். காங்கிரஸ், பா.ச.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் எங்கோ ஓர் ஓரத்தில் நிற்கும் நிலைதான்.

 உத்திரப்பிரதேசம் மிக அதிக அளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மாநிலம். அங்கும் அனைத்திந்திய கட்சிகள் கருதத் தக்க வலுவுடன் இல்லை. சமாஜ்வாடி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையில்தான் முதன்மைப் போட்டி.

இதுமட்டுமல்ல பல்வேறு பழங்குடியின மக்களும், ஒடுக்குண்ட மக்களும் இடைவிடாது போராடி இந்திய அரசை அரசியல் வழியில் தனிமைப்படுத்துவது ஒரு பொதுப் போக்காக இருக்கும் காலம் இது.

எனவேதான் தலைமை நிலையிலுள்ள படைத்தளபதிகள் தொடங்கி பல்வேறு உயர்நிலை அதிகாரிகளும் பதவிக்காலம் முடிந்த கையோடு இந்திய அரசை எதிர்த்த ஏதாவது ஒரு அரசியல் அணிவகுப்பில் இணைந்து கொள்கிறார்கள்.

இவ்வளவு பெரும் எண்ணிக்கையில் உயர்நிலை அதிகாரிகளாக இருந்தவர்கள் ஆட்சிக்கு எதிராக வெளிப்படையாகக் களமிறங்குவது ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் கருதிப் பார்க்க முடியாத செய்தி.

இந்த அரசியல் பலவீனத்தை சரிசெய்து கொள்வதற்காக இந்திய அரசு ஒரு தற்காலிக முயற்சியாக மேலும் மேலும் அடக்குமுறை நடவடிக்கைகளில் இறங்குகிறது.

இது ஒரு கட்டத்திற்கு மேல் தொடரமுடியாது.

ஒற்றை இந்தியாவாகக் கட்டிப் போட்டு வைக்க இந்துத்துவா, இந்திய தேசியம் என்று கருத்தியல் நிலையிலும், மேலும் மேலும் மையப்படுத்தப்படும் அரசு இயந்திரத்தை இறுக்கிக் கட்டுவது என்பது அரசு தளத்திலும் நடைபெற்றாலும் அவை உடனடி உத்தியாக இந்தியத் தேசியத்திற்குப் பயன்படுமே அல்லாமல் தொலைநோக்கில் அது முன்னை விட மேலும்மேலும் வலவிழந்து வருகிறது என்பதே உண்மை நிலை.

எனவே தமிழ்த் தேசியத்தை நேசிப்பவர்களும், அரசின் மக்கள் பகைக் கொள்கைகளுக்கு எதிராகப் போராடும் மக்கள் இயக்கத்தினரும் வலுவானது போல் தோற்றம் காட்டும் இந்திய ஏகாதிபத்தியக் காகிதப் புலியைக் கண்டு தயங்க வேண்டியதில்லை.

ஈழத் தமிழர் இனப்படுகொலை, மொழிச் சிக்கல், காவிரி முல்லைப் பெரியாறு சிக்கல், மீனவர் பிரச்சினை, அயலார் ஆக்கிரமிப்பு போன்ற பல களங்களில் பட்டறிவு பெற்று இந்திய வல்லாதிக்கத்திலிருந்து தமிழ்நாடு விடுபடுவதுதான் ஒரே வழி என்று கொள்கை வழியில் முடிவுக்கு வருகிறவர்கள் வெற்றி பெறுமா என்று தயங்க வேண்டியதில்லை.

எதிரியாக உள்ள இந்திய வல்லரசு தொலைநோக்கில் பலவீனமானது.

குட்டிச் சுவராக இருந்தாலும் எட்டி உதைத்தால்தான் அது வீழும்.

வெறும் தூசியாக இருந்தாலும் துடைப்பம் கொண்டு கூட்டினால்தான் அது அகலும்.

அடித்தளம் இற்று நிற்கும் வலுவிழந்த குட்டிச் சுவர், குவிந்துகிடக்கும் தூசி. ஆனால் அது தானாக விழாது. அதற்குரிய மக்கள் போராட்டங்களை அழுத்தமாக நடத்தினால் தடையாக நிற்கும் குட்டிச் சுவர் விழும்.  விடியலுக்கான பாதை கிடைக்கும்.

Pin It