மு.க.அழகிரி தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினரி லிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மு.க.அழகிரியோ வரும் மக்களவைத் தேர்தலில் தி.மு.க. முழுமையாகத் தோற்றுவிடும் என்கிறார். இதுபற்றி என்ன கருதுகிறீர்கள்?

“தன்வினை தன்னைச் சுடும், வீட்டப்பம் ஓட்டைச் சுடும்’’ என்று பட்டினத்தார் பாடியது நினைவுக்கு வருகிறது.

அடுத்து “குங்குமம்“ திரைப்படத்தில் “மயக்கம் எனது தாயகம்“ என்ற பாடலில் “நானே எனக்குப் பகையானேன் - என் நாடகத்தில் நான் திரையானேன்“ என்ற பாடல் வரியைக் கலைஞர் கருணாநிதி இப்போது பாடுவது போல் தோன்றுகிறது.

அடுத்தவர் பெற்ற பிள்ளைகளுக்கு எத்தனை திறமை இருந்தாலும் எவ்வளவு தகுதி இருந்தாலும் அவர்கள் தி.மு.க. வின் தலைமைக்கு வந்துவிடக்கூடாது என்று எண்ணி தம் பிள்ளைகள் மட்டுமே தலைமைக்கு வரவேண்டும் என்று திட்டம் செய்தார், மக்கள் நாயகத்தில் மன்னர் நாயகத்தைத் திணித்தார் கருணா நிதி.

மக்கள் நாயகம் என்பது நாட்டு மக்கள் நாயகமன்று, தம்வீட்டு மக்கள் நாயகம் என்றாக்கினார். அதனால் ஏற்பட்ட “பலன்களை” இந்த முதுமையில் கலைஞர் கருணாநிதி அனுபவிக்கிறார்.

ஜெகத் கஸ்பார் நடத்தும் “சங்கம் 4’’ தமிழ்த் திருவிழாவில் ஓர் அமர்வுக்குத் “தமிழ்த் தேசியம் இன்று’’ என்று தலைப்புக் கொடுத்துள்ளார். “தமிழ்த் தேசியம் இன்று - பிரிக்கும் கதையாடலா; இணைக்கும் கதையாடலா, அகவிழிப்பின் முகிழ்ப்பா; பாசிச வெறியா, நண்பர்களை நாடுவதா; எதிரிகளை அதிகமாக்குவதா? குவலயத்தை ஆட்கொள்வதா; குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதா?” என்று மிக நீளமான தலைப்புக் கொடுத்துள்ளார். இவர் தமிழ்த் தேசியத்தை ஆதரிக்கிறாரா? எதிர்க்கிறாரா?

தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பதற்காகவே கொடுக் கப்பட்ட தலைப்பு இது. ஆனாலும் ஒரு விவாதம் செய்வது போல் பாசாங்கு செய்கிறது இத்தலைப்பு.

தமிழ்த் தேசியம் இன்று பிரிக்கும் கதையாடலா, இணைக்கும் கதையாடலா என்கிறார். தமிழ்த் தேசியம் என்பது வெறும் கதையாடல் அன்று அது போராடல்!

அகவிழிப்பின் முகிழ்ப்பா, பாசிச வெறியா என்று கேட்கிறார். தமிழ்த் தேசியம் தனிமனித அகவிழிப்போ - பாசிசமோ அன்று அது இனவிழிப்பு!

நண்பர்களை நாடுவதா எதிரிகளை அதிகமாக்கு வதா என்கிறார். துரோகிகளை அடையாளம் காட்டு வதும் எதிரிகளை வீழ்த்துவதும் தமிழ்த் தேசியம்!

குவலயத்தை ஆட்கொள்வதா குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதா என்கிறார். அது குண்டுச் சட்டிக் குள் குதிரை ஓட்டுவதும் அன்று அண்டாவுக்குள் ஆனை ஓட்டுவதும் அன்று இந்திய ஏகாதிபத்தியத் தைத் தமிழ்நாட்டை விட்டு ஓட்டுவது!

neekaran 600சென்னை மக்களின் குடிநீருக்காக மேட்டூரிலிருந்து குழாய் மூலம் ஆண்டுக்கு 15 ஆ.மி.க. காவிரி நீர் எடுப்பதற்கு செயலலிதா அரசு திட்டமிட்டுள்ளதை நீங்கள் எதிர்ப்பது சரியா?

சென்னை மக்களின் குடிநீருக்காகப் புதிதாக 15ஆ.மி.க. எடுக்கப்படவுள்ளதாகக் கூறுவது உண்மை யன்று. சென்னையைச் சுற்றியுள்ள பன்னாட்டு நிறுவ னங்களின் தேவைக்காகவே 15ஆ.மி.க. தண்ணீர் மேட்டூ ரிலிருந்து எடுக்கத் திட்டமிடுகிறார்கள். சுற்றுச் சூழலை மாசுபடுத்தி, நிலத்தடி நீரை உறிஞ்சி, பாலாற்று ஊற்று நீரை உறிஞ்சிக் காலிசெய்தவை பன்னாட்டுப் பெரு முதலாளிகளின் நிறுவனங்களே!

 ஒரே ஒரு கணக்கை மட்டும் பாருங்கள். வெளி நாட்டுக் கார் உற்பத்தி நிறுவனங்களான ஊண்டாய், நிசான், பிஎம்டபுள்யு, போர்டு, மிட்சுபிசி, போன்றவை சென்னையைச் சுற்றி உற்பத்தித் தொழிற்சாலைகள் வைத்துள்ளன. வடநாட்டு டாட்டா, மகிந்திரா போன்ற நிறுவனங்களும் உற்பத்தி செய்கின்றன.

சென்னையைச் சுற்றி மட்டும் ஓர் ஆண்டில் ஏழு இலட்சம் கார்கள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 90 விழுக்காடு கார்கள் வெளிநாடுகளுக்கும் வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியாகின்றன. 1.1 டன் எடையுள்ள ஒரு கார் உற்பத்தியாகும் போது அதற்கான மனித - தொழில் - வணிக நடவடிக்கைகளுக்கான தேவை 3.5 இலட்சம் லிட்டர் தண்ணீர்!

ஒரு நாளைக்கு 26 கோடி லிட்டர் தண்ணீர் கார் உற்பத்தி நிறுவனங்களில் மட்டும் செலவாகிறது. மற்ற பலவகையான பன்னாட்டு நிறுவனங்களும் இதேபோல் தண்ணீரைக் காலி செய்கின்றன. இந்த நிறுவனங்கள் சென்னை மக்களின் குடிநீரைத்தான் காலி செய்கின்றன. பாலாற்று ஊற்று நீரைக் காலி செய்கின்றன. வீராணத் திலிருந்து வரும் காவிரி நீரைக் காலி செய்கின்றன.

மேலும்மேலும் பன்னாட்டு நிறுவனங்களைப் போட்டி போட்டுக் கொண்டு தி.மு.க. ஆட்சியும் அ.இ. அ.தி.மு.க. ஆட்சியும் பன்னாட்டு - வடநாட்டுப் பெரு நிறுவனங்களைச் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரவழைத்து மழைநீரை, ஊற்றுநீரை, காவிரி நீரை, கிருஷ்ணா நீரை தேவைக்கதிகமாக விரயம் செய்கின்றன.

தமிழக முதலமைச்சர் செயலலிதா கார் உற்பத்தியில் சென்னையை “இந்தியாவின் டெட்ராய்டு“ நகரமாக மாற்றுவேன் என்று சூளுரைத்துள்ளார். அமெரிக்க நாட்டிலுள்ள டெட்ராய்டு உலகத்திலேயே மிக அதிக மாக கார் தயாரிக்கும் தொழிற்சாலைகளைக் கொண்டிருந்தது. அதனால் அங்குள்ள ஆற்று நீர், ஊற்று நீர் அனைத்தும் உறிஞ்சப்பட்டு முற்றிலுமாக அந்த நகரம் மக்கள் வாழ்வதற்குத் தகுதியற்ற நிலையில் மாசடைந்து போனது. இப்பொழுது அங்கு கார் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.

பெரும்பாலான மக்கள் அந்த நகரத்தை விட்டு வெளியேறிவிட்டார்கள். வெறும் ஏழாயிரம் பேர் மட்டுமே அங்கு வாழ்கிறார்கள். மிகப் பெரிய நகராட்சியாக இருந்த அந்நகரம் இப்பொழுது மிகச் சிறிய ஊராட்சியாக மாறிவிட்டது. ஏற்கெனவே கருணாநிதி ஆட்சியிலும் இப்பொழுது செயலலிதா ஆட்சியிலும் சென்னையை டெட்ராய்டாகவும், பன்னாட்டு நிறுவனங்களின் மையமாகவும் மாற்றியுள் ளனர். அமெரிக்க டெட்ராய்டுக்கு ஏற்பட்ட அதே கதி இந்தியாவின் டெட்ராய்டிற்கும் ஏற்படும் அவலம் காத்திருக்கிறது. இதற்குத்தான் 15 ஆ.மி.க. காவிரி நீரை மேட்டூரிலிருந்து குழாய் மூலம் எடுக்க செயலலிதா திட்டமிட்டுள்ளார்.

தெலுங்கு கங்கைத் திட்டத்தின் மூலம் கிருஷ்ணா ஆற்றிலிருந்து சென்னைக்கு ஓராண்டிற்கு 12 ஆ.மி.க. தண்ணீர் வரவேண்டும். இதுவரை அந்த முழு அளவுக்கு ஆந்திரப்பிரதேசத்திலிருந்து சென்னைக்குத் தண்ணீர் வந்ததே இல்லை. கடந்த ஆண்டு 1.7 ஆ.மி.க. தண்ணீர் மட்டுமே கிருஷ்ணா வாய்க்கால் வழியாகச் சென்னைக்கு வந்திருக்கிறது. அந்த வாய்க்காலை விரைந்து சரிசெய்யச் செய்து ஆந்திரப்பிரதேசத்தி லிருந்து 12 ஆ.மி.க. தண்ணீர் வாங்க தமிழக ஆட்சியா ளர்களுக்குத் துப்பில்லை.

பழவேற்காடு ஏரியில் கடல் நீர் உள்ளே வராமல் தடுப்புச் சுவர் எழுப்பி விட்டால் 50 ஆ.மி.க. அளவுக்குச் சென்னைக்குக் குடிநீர் எடுக்க லாம் என்று வல்லுனர்கள் திட்டம் கொடுத்துள் ளார்கள். அதைத் தமிழக ஆட்சியாளர்கள் நிறை வேற்றவில்லை. கூவம் தண்ணீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தலாம் என்று ஒரு திட்டம் வரையப்பட்டது. அதைத் தமிழக ஆட்சியாளர்கள் செயல்படுத்தவில்லை.

ஏற்கெனவே கர்நாடகம் தமிழகத்திற்குரிய தண்ணீரைத் தடுத்து வைத்துக் கொண்டு காவிரி ஆற்றைத் தண்ணீரில்லாத வறண்ட ஆறாக மாற்றிவிட்டது. அதில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடகத் திடமிருந்து பெற்றிடத் தமிழக ஆட்சியாளர்களுக்குத் துப்பில்லை. ஆனால் கொஞ்சநஞ்சம் வருகின்ற தண்ணீரைக் கொண்டுதான் இருபத்தெட்டு இலட்சம் ஏக்கரில் சாகுபடி நடைபெற வேண்டும்.

தமிழ்நாட்டின் முக்கால் பாகத்திற்குக் குடிநீர் பெற வேண்டும். ஏற்கெனவே வீராணத்திலிருந்து காவிரி நீர் சென்னைக் குப் போய்க் கொண்டுள்ளது. இப்பொழுது சென்னைப் பகுதியின் பன்னாட்டு நிறுவனங்களுக்காக மேட்டூர் அணையிலிருந்து நேரடியாக 15 ஆ.மி.க. தண்ணீர் எடுப்பது காம்பிலிருந்து பால் கறப்பதற்கு மாறாகக் காம்பையே அறுப்பது போன்ற செயலாகும். இத்திட் டத்தைத் தமிழக அரசு கைவிடவேண்டும்.

தமிழ்நாடு தனிநாடாக வேண்டும் என்கிறீர்கள், 120 கோடி மக்கள் தொகையுள்ள இந்தியாவிலிருந்து பிரிந்தால் தமிழகம் சின்னஞ்சிறு பிரதேசம் ஆகிவிடாதா?

தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7,21,00,000; பிரான்சின் மக்கள் தொகை 6,59,51,611; பிரித்தானியா வின் மக்கள் தொகை 6,33,95,574; இத்தாலியின் மக்கள் தொகை 6,14,82,297; கனடாவின் மக்கள் தொகை 3,45,68,211; கிரீஸ் மக்கள் தொகை 1,07,72,967; இஸ்ரேல் மக்கள் தொகை 77,07,042; டென்மார்க் மக்கள் தொகை 55,56,452; நார்வே மக்கள் தொகை 47,72,701.

ஒரு கோடிக்குக் கீழ் மக்கள் தொகை உள்ள நாடுகள் நூற்றுக்கு மேல் இருக்கின்றன. இப்பொழுது சொல்லுங்கள், இந்தியாவிலிருந்து பிரிந்தால் தமிழ்நாடு சின்னஞ்சிறு பிரதேசம் ஆகிவிடுமா?

Pin It