விளம்பரம் இல்லாமல் விவாதம் இல்லாமல் தமிழக வேளாண்மையை தமிழ்நாட்டு உழவர்களைக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு போவதற்கான சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றச் சட்டம். 2009 (Tamil Nadu State Agricultural Council act, 2009) என்பதே அது. தமிழக சட்டமன்றத்தில். 2009 சூன் 23 ஆம் நாள் முன்வைக்கப்பட்டு எந்த விவாதமும் இன்றி இந்தச் சட்ட முன் வழவு நிறைவேற்றப்பட்டுள்ளது. “தமிழ்நாடு மாநிலத்தில் வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்துவதற்கு வகைசெய்வதற்கான சட்டம் எதுவும் தற்போது இல்லை. எனவே வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்துவதும். இம்மாநிலத்தின் வேளாண்மைத் தொழிலாளர்களை பதிவுசெய்வதும். தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம் என அழைக்கப்படும் மன்றம் ஒன்றை அமைத்து உருவாக்குவதும் தேவையானதெனக் கருதப்பட்டுள்ளது. அரசானது இந்நோக்கத்திற்காக சட்டமொன்றை இயற்றுவதென முழவு செய்துள்ளது” என்று இந்த சட்டத்தின் நோக்க காரண விளக்கவுரை கூறுகிறது.

வேளாண்மைத் தொழிலை முறைப்படுத்துவது என்ற பெயரால் ”தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம்” என்ற அமைப்பை தமிழக அரசு நிறுவுகிறது. (சட்ட விதி 3(1)) இந்த மன்றத்தின் பதிவுச் சான்றிதழ் பெற்றவர் தான் வேளாண்மைத் தொழிலாளற்றுநர்களாக இருக்கலாம் என்று இச்சட்டத்தின் விதி 29 கூறுகிறது.
 
இவ்வாறு பதிவு பெற்றவர்கள் தாம் வேளாண்மை ஆலோசனையோ. வேளாண்மைப் பணியோ செய்யலாம் என இது நிபந்தனை விதிக்கிறது. கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வேளாண்மையில் பட்டம் பெற்ற பட்டதாரிகள் தாம். அதாவது பி.எஸ்.சி. (அகிரி).(BSc., Agri) போன்ற பட்டம் பெற்றவர்கள் தாம். இவ்வாறு பதிவு பெறத் தகுதியுடையவர்கள் என இச்சட்டம் வரையறுக்கிறது. (விதி 2(4)) பதிவு பெற்றவர்களைத் தவிர பிற யாரும் ”பயிர் வளர்ப்பு,. அறுவடைக்கு முன்னதான தொழில்நுட்பம், விதைத் தொழில்நுட்பம், மண் பரிசோதனை, நீர் பரிசோதனை, செடி வளர்ச்சி முறைப்படுத்தி, களைக்கொல்லிகள், பயிர்காக்கும் பொருள்கள், ஆகியவற்றைப் பொருத்தவரையிலான பரிந்துரை, வழங்குதல், அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பம், விதை நேர்த்தி செய்தல், விதை உற்பத்தித் தொழில்நுட்பம், வேளாண்மை உயிரியல் தொழில்நுட்பம்” ஆகிய எதிலும் ஈடுபடக் கூடாது எனத் தடை விதிக்கிறது (விதி 29).
 
மீறி மேற்கண்டவற்றில் ஆலோசனை அல்லது பரிந்துரை வழங்கினால் அது தண்டனைக் குரிய குற்றமாகும். இந்தக் “குற்றத்தை” முதல் முறை செய்தால் ஐந்தாயிரம் ரு:பாய் அபராதம் கட்ட வேண்டும். மீண்டும் அவ்வாறு செய்பவர்களுக்கு ரு.10000 தண்டம் அல்லது 6 மாத சிறை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனை வழங்கப்படும் (விதி 31).
 
குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கை தொடுப்பதற்கு வேளாண்மை மன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு. மன்றத்தில் பதிவு பெற்ற வேளாண் பட்டதாரிகளைத் தவிர வேறு யாரும் வேளாண்மை குறித்த ஆலோசனை வழங்கக்கூடாது எனத் தடை விதிப்பதன் உள்நோக்கம் இயற்கை வேளாண்மையைத் தடை செய்வதுதான்.
 
பசுமைப் புரட்சி என்ற பெயரால் நிலம், நீர், காற்று என எல்லாம் மாசு அடைந்துவிட்டது. பெரு நிறுவனங்களின் இரசாயன உரங்கள். புச்சிக்கொல்லிகள் ஆகியவற்றை அதிக விலை கொடுத்து வாங்கி பயிரிட்டு அந்த செலவுகளுக்கு ஏற்ப விளைபொருள்களுக்கு இலாப விலை கிடைக்காமல் உழவர்கள் கடனாளியாகி வருகின்றனர்.
 
இது போதாதென்று பன்னாட்டுப் பெருநிறுவனங்கள், மரபீனி மாற்று விதைகளை பரவலாக்கி விதை ஆதிக்கத்தில் கோலொச்சி வருகின்றன. இவற்றிலெல்லாம் சிக்கிச் சீரழிந்த உழவர்களில் பலர் சிக்கனமான ஆரோக்கியமான சுற்றுச் சூழலுக்கு இயைந்த இயற்கை வேளாண்மைக்குத் திரும்பி வருகின்றனர். உரக்கம்பெனிகள், புச்சிக் கொல்லி நிறுவனங்கள், விதை பகாசுரர்கள் ஆகியோரின் ஆதிக்கத்திலிருந்து வேளாண்மையைத் தற்காத்துக் கொள்வதற்கு மரவழி நுட்பங்கள் சார்ந்த நீடித்த வேளாண்மை முறை பெரிதும் பயன்படுகிறது மக்களுக்கு நச்சில்லா உணவை இந்தத் தற்கார்பு வேளாண்மை வழங்குகிறது. சுற்றுச் சூழலைக் காக்கிறது.
 
பல்கலைக் கழகங்களில் இந்த மரபுசார் வேளாண்மை முறை சொல்லித்தரப்படுவதில்லை. வேளாண் பட்டதாரிகள் படிப்பதில் 98 விழுக்காடு இரசாயன வேளாண்மையும், மரபீனி மாற்ற வேளாண்மையும்தான். மேலும் இயற்கை வேளாண்மை நுட்பம் என்பது எல்லா மாநிலத்திற்கும் ஒரே மாதிரியானதல்ல. மாவட்டத்திற்கு மாவட்டம், பகுதிக்குப் பகுதி வேறுபடும். அதன் தனிச் சிறப்பே மண்ணிற்கேற்ற வேளாண்மை என்பதுதான். இவ்வாறான மண்ணின் வேளாண் முறை தெரியாத வேளாண் பட்டதாரிகள் மட்டும் தான் வேளாண் ஆலோசனை வழங்கலாம் என்று வரம்பு கட்டுவதன் வழி தற்சார்பு வேளாண்மையைத் தடை செய்கிறது தமிழக அரசின் வேளாண்மன்றச் சட்டம்.
 
இந்த மண்ணையும், மண்ணின் உழவர்களையும் நேசிக்கிற மாற்றுத் தொழில்நுட்ப வல்லுனர்களையும். அவர்களது கருத்தை பரப்புகிற ஏடுகளையும், அதற்கு ஏற்பாடு செய்கிற அமைப்புகளையும் குற்றவாளி களாக்குகிறது இச்சட்டம். கம்பெனிகளின் ஆதிக்கத்திற்கு எதிராக அமைதியாக ஏற்பட்டு வரும் கருத்தியல் மாற்றத்தை இச்சட்டம் தடை செய்ய முயல்கிறது.
 
நிரந்தரமாக பெரு முதலாளிகளின் பிடியில் தமிழக உழவர்களைச் சிறை பிடித்து வைப்பதை உள்நோக்கமாகக் கொண்டுள்ளது. இன்றைக்கு அரசே ஏற்றுப் பரப்பி வரும் ஒன்றை நாற்று நடவு முறையோ, மண்புழு உரமோ பல்கலைக்கழகங்களின் கண்டு பிடிப்பல்ல. எல்லாம் உழவர்களின் அனுபவ அறிவின் விளைச்சல். ஆடு:ட்டம். அமிர்தக்கரைசல், தேமோர் கரைசல். முலிகைப் புச்சி விரட்டி, நன்மை தரும் புச்சிவளர்ப்பு முதலான தொழில்நுட்பங்கள் எதுவும் ஆராய்ச்சிக் கூட கண்டுபிடிப்பல்ல.
 
காடுகளை ஒட்டிய பகுதிகளில் காட்டு யானைகளிடமிருந்து விளைநிலங்களைப் பாதுகாப்பதற்கு மின்சாரவேலி அமைக்கச் சொல்வதுதான் பட்டதாரிகளின் பரிந்துரை. தேனி வளர்த்தால் யானைகளும் அண்டாது. கூடுதல் வருமானத்திற்கும் வழி ஏற்படும் என்ற மாற்று யோசனை உழவர்களின் அனுபவக் கண்டுபிடிப்பு. இவ்வாறான மண்ணிற்கேற்ற மாற்று வேளாண் தொழில்நுட்ப அறிவுப் பரப்பலைத் தமிழக அரசு தடைசெய்கிறது. கருத்து உரிமையைப் பறிக்கிறது.
 
வழக்குரைஞர் தொழில்செய்வதற்கு சட்டப்படிப்புப் படித்து வழக்குரைஞர் மன்றத்தில் (பார் கவுன்சில்) பதிவு செய்தவர்களுக்கு மட்டும்தான் உரிமை உண்டு என்று சொல்வதுபோல் மருத்துவப்பட்டதாரிகள் மருத்துவ மன்றத்தில் (மெடிக்கல் கவுன்சிலில்) பதிவு பெற்றால்தான் மருத்துவத் தொழிலில் ஈடுபடலாம் என்று சட்டம் இருப்பதுபோல் இதுவும் முறைப்படுத்தல் சட்டம்தான் என வாதிடுகிறது தமிழக அரசு.
 
இது தவறானது. ஏனெனில் இங்கு மருத்துவம் படித்தவர்கள் மட்டுமே மருத்துவம் செய்கின்றனர். சட்டம் படித்தவர் மட்டுமே வழக்குரைஞர் ஆகின்றனர். ஆனால் வேளாண்மை படித்தவர்கள் பெரும்பாலோர் வேளாண்மை செய்வதில்லை. உழவர்கள்தான் வேளாண்மை செய்கின்றனர். இந்த உழவர்கள் தமக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தை அடுத்த உழவருக்குச் சொல்லித்தருவது இயல்பாக நடக்கிறசெயல். இதனை ஒழுங்குபடுத்துவது என்ற பெயரால் தடை செய்கிறது இச்சட்டம்.
 
வேளாண்மைப் பரவலைத் தடுப்பது மட்டுமல்ல. ஒட்டு மொத்தத் தமிழக வேளாண்மையையே கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள்ளும். ஆளுங்கட்சியின் ஆதிக்கத்திற்குள்ளும் வைப்பதை நுட்பமாகச் செய்கிறது இந்த வேளாண்மை மன்றச் சட்டம். மன்றத்தின் அமைப்பு முறை, அதிகாரங்கள் ஆகியவற்றை உற்று நோக்கினால் தான் இது புரியும்.
 
வேளாண்மை மன்றத்தின் உறுப்பினர்கள் பற்றி இச்சட்டத்தின் பிரிவு 3 பேசுகிறது. இதன்படி இம்மன்றத்தில் மொத்தம் 30 உறுப்பினர்கள் இருப்பார்கள். இவர்களில் 20 பேர் பதிவு பெற்ற வேளாண் பட்டதாரிகளிடமிருந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் வேளாண்மை, தோட்டக் கலை, வனவியல், வேளாண்மைப் பொறியியல், மனையியல் ஆகிய பிரிவுகளிலிருந்து பிரிவுக்கு ஒருவராக முதுநிலை பிரிவு உறுப்பினர்கள் ஐந்துபேர். அரசின் வேளாண்மைத் துறையிலிருந்து இரண்டு பேர். தோட்டக் கலைத் துறையிலிருந்து ஒருவர். வேளாண் பொறியியல் துறையிலிருந்து ஒருவர். முன்னணி வேளாண் தொழில்முனைவர் ஒருவர். இந்த பத்துபேரும் அரசால் நியமிக்கப் படுபவர்கள். இம்மன்றத்தில் வேளாண் தொழில்நிறுவனத்திற்கு இடம் உண்டு. ஆனால் உர்வர்களுக்கோ உழவர் சங்கப் பிரதிநிதிகளுக்கோ இதில் இடமில்லை.
 
ஏற்கெனவெ ஆசிரியர்களின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தமிழக சட்டமேலவையில் இடம் பெற்றிருந்தார்கள். அவர்களுக்குத் தொழிற்சங்கங்கள் இருந்ததால் அச்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மேலவையில் இடம் பெறவாவது முடிந்தது. ஆனால் வேளாண் பட்டதாரிகளுக்கு சங்கம் ஏதுமில்லை. எனவே அரசியல் கட்சிகளின் குறிப்பாக ஆளுங்கட்சியின் செல்வாக்கிற்கு உட்பட்ட வேளாண் பட்டதாரிகள்தான் வேளாண்மை மன்ற உறுப்பினர்களாக தேர்தெடுக்கப்பட பெரிதும் வாய்ப்பிருக்கிறது. நியமன உறுப்பினர்களைப் பற்றி கேட்கவெ வேண்டாம்.
 
ஏற்கெனவெ உயர் கல்விக்கு பல்கலைக் கழகங்களுக்கு அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்துவிட்டது. அங்கு நடக்கும் வேளாண் ஆராய்ச்சிகள் மான்சான்டொ, பாயர், ராக்பெல்லர் பவுண்டெசன், டாடா போன்ற பன்னாட்டுப் பெரு நிறுவனங்களிடமிருந்து நிதி உதவி பெற்றெ நடக்கின்றன. எடுத்துக்காட்டாக. இந்தியாவிலேயெ அதிகம் மரபீனி மாற்றப் பயிர்களுக்கு ஆராய்ச்சி நடை பெறும் இடம் கோவை வேளாண் பல்கலைக்கழகம் தான். இங்கு 30 மரபீனி மாற்றுப் பயிர் ஆய்வுகள் நடக்கின்றன. அவற்றுக்கான பண்ணைகள் உள்ளன.
 
இவற்றில் கிட்டதட்ட அனைத்துமே அமெரிக்கப் பன்னாட்டு பகாசுர விதை நிறுவனமான மான்சான்டொ நிதி உதவியில் இயங்குபவை. சிதம்பரம். அண்ணாமலை பல்கலைக்கழகத்திலும் மான்சான்டொ நிதி உதவி பெற்று ஆராய்ச்சிகள் பலவும் நடக்கின்றன.
 
இந்நிலையில் இவற்றிலிருந்து உருவாகும் பட்டதாரிகளும். முதுநிலை பிரிவு உறுப்பினர்களும் இந்நிறுவனங்களின் செல்வாக்கிற்கு உட்படுவது இயல்பானதே. இவர்களிடமிருந்து உருவாக்கப்படும் தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்றம் இந்தக் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிலும். ஆளுங்கட்சியின் ஆதிக்கத்திலும் இருக்கும் என்பது தெளிவு. தொடக்கத்தில் மேற்சொன்ன மூன்று பல்கலைக்கழகப் பட்டதாரிகள்தான் பதிவு பெறத் தகுதிப்பாடு உடையவர்களாக அமைக்கப் பட்டாலும். பின்னாளில் அரசு சாராத. பன்னாட்டு நிறுவனங்கள் நடத்தும் ஆராய்ச்சிக் கூடங்களில் பட்டம் பெறுபவர்களும் பதிவு பெற தகுதிப்பாடு வழங்கப்படலாம்.
 
அதற்கு இம்மன்றத்திற்கு அதிகாரம் வழங்கப் பெற்றுள்ளது (பிரிவு 16(1)) இந்த வேளாண் மன்றத்தின் ஆலோசனை அடிப்படையில் அரசு அதற்கான ஆணையை வழங்க வேண்டும் என்பது சட்ட ஏற்பாடு. அவ்வாறு தகுதிப்பாடு வழங்கப் பெற்றவர்கள் மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படலாம். ஆயினும் அவ்வாறான உறுப்பினர்கள் அந்த ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றுகிறவரைதான் பதிவும், பதவியும் நீடிக்கும் என சட்டப்பிரிவு 16(2)(பி) கூறுகிறது.
 
இதன் பொருள் என்ன, பன்னாட்டு நிறுவன ஆய்வு மையத்தின் பிரதிநிதிகளாக மட்டுமே அவர்கள் இயங்க வேண்டும். கம்பெனிகளின் கட்டுப்பாட்டை மன்றத்தில் உறுதி செய்வதற்கு இது ஒரு சட்ட ஏற்பாடு. இது மட்டுமல்ல, வேளாண் பல்கலைக்கழகம், பல்கலைக் கழகங்களின் வேளாண் புலங்கள், வேளாண் ஆராய்ச்சிக் கல்வி நிலையங்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஒருவகை அதிகாரத்தை வேளாண்மை மன்றத்திற்கு இச்சட்டம் வழங்குகிறது.
 
இச்சட்டத்தின் பிரிவு 17 தமிழகத்தில் வழங்கப்படும் வேளாண் பாடப்பிரிவு. தேர்வு முறை ஆகியவை குறித்து தலையிடும் அதிகாரத்தை வேளாண்மை மன்றத்திற்கு வழங்குகிறது. தேர்வு நடக்கும் மையங்களை நேரடி ஆய்வு செய்யும் உரிமையையும் வழங்குகிறது. வேளாண்மை தொடர்பான கல்வி இந்த மன்றத்தின் வழியாக மான்சான்டொ. சின்டிகூன்டா. பாயர் போன்ற வேளாண் பெருந்தொழில்நிறுவனங்களின் கண்காணிப்பில் வைக்கப்படுகின்றது.
 
ஒரு பல்கலைக்கழகம். அல்லது ஆராய்ச்சிக் கல்வி மையம் வழங்ககும் பட்டம் அல்லது அங்கு நடத்தும் பாடப் பிரிவு அல்லது அங்குள்ள ஆராய்ச்சிக் கூடத்தின் கருவிகள், கட்டடங்களின் தரம் ஆகியவை குறித்து இந்த வேளாண் மன்றம் அரசுக்கு அறிக்கை அளிக்கலாம். அந்த அறிக்கைக்கு இணங்க அப்பல்கலைக் கழகம் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று அரசு கோரலாம். பாடப்பிரிவுகளுக்கு வழங்கப்படும் ஏற்பிசைவை நிறுத்த முடிவெடுக்கலாம். இச்சட்டத்தின் பிரிவு 19 இதனை விரிவாகக் கூறுகிறது.
 
கம்பெனிகளின் தேவைக்கு ஏற்ப கல்வியை வளைக்கிற ஏற்பாடு இது. இந்தச்சட்டம் ஏதோ திடீரன்று உருவாகிவிட்ட ஒன்றல்ல. இது உலகமய முதலாளியத்தின் பிடியில் இந்நாட்டு வேளாண்மையை சிக்க வைக்கும் நீண்ட காலத் திட்டத்தின் ஒரு கட்டம். அவ்வளவே. இதற்கான வரையறைப்படி 2005ஆம் ஆண்டே உருவாகிவிட்டது.
 
அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டனில் 2005 ஜூலை 25 அன்று கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் கருவாகி 2006 மார்ச் 2 அன்று தில்லியில் கையெழுத்தான ஒப்பந்தத்தில் இது இறுதி செய்யப்பட்டது. அப்போது ஒரே நாளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
 
அவற்றில் அணு ஒப்பந்தம் பற்றிதான் பலரும் பேசினர். அதைவிட மோசமான வேளாண்மை குறித்த அறிவுசார் முன்முயற்சி என்ற ஒப்பந்தத்தை பலரும் கவனிக்கத் தவறினர். இந்த ஒப்பந்தத்தின் முபுப்பெயர் வேளாண் கல்வி ஆராய்ச்சி சேவை மற்றும் வணிகப் பயன்பாடுகள் குறித்த அமெரிக்க இந்திய அறிவுசார் முன்முயற்சி (US-India Knowledge initiative on Agricultural Education, Research, service and commercial linkages) என்பதாகும்.

இரு நாட்டு பல்கலைக் கழகங்கள். தொழில்நுட்பக் கல்வியகங்கள். வேளாண் தொழில்நிறுவனங்களிடையே ஒரு இணைப்பை ஏற்படுத்த வேளாண்மை குறித்த அறிவுசார் முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. வேளாண் கல்வி, கூட்டுஆய்வு, உயிரித் தொழில்நுட்பம் உள்ளிட்ட தொழில்முனைப்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இது துணைபுரியும் என்று அந்த ஒப்பந்தம் அறிவித்தது. இதற்கென்று இரு நாட்டு அறிவியல் தொழில்நுட்ப ஆணையம் உருவாக்கப்பட்டது.
 
அந்த ஆணையத்தில் ஆறுபேர் உறுப்பினர்கள். அதில் மூன்றுபெர் பன்னாட்டு நிறுவனங்களான மான்சான்டொ. சின்டிகூன்டா. வால்மார்ட் ஆகியவற்றின் பிரதிநிதிகள். நான்காமவர் உழவர்களின் எதிரி எம்.எஸ்.சுவாமிநாதன் மற்ற இருவர் இந்திய வேளாண் துறை அதிகாரிகள். இவர்கள் கூடி இந்தியாவின் வேளாண்மைக் கல்வித்திட்டம், ஆராய்ச்சியின் திசைவழி போன்றவற்றை முடிவு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது (விரிவிற்கு காண்க ஆகஸ்ட் 2005 ஏப்ரல், 2006 தமிழர் கண்ணோட்டம் இதழ்கள்).
 
இந்த வேளாண்மை குறித்த அறிவுசார் முன் முயற்சியை நிறைவேற்றும் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. பல்லாயிரம் கோடி ரூபாய்கள் கைமாறும் வாய்ப்பு இதில் உள்ளபோது முன்னோடாமல் என்ன செய்வார்கள் ஆட்சியாளர்கள், இவ்வாறான சட்டமியற்றும் முதல் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது. அடிமரிக்க - இந்திய ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளவாறு வேளாண்மை மன்ற சட்டத்தின் மூலம் இரு நாட்டு நிறுவனங்களுக்கும் ‘இணைப்பை’ ஏற்படுத்திவிட்டது தமிழக அரசு. இந்த சட்டம் இயற்கை சாகுபடி சார்ந்த தற்சார்பு வேளாண்மையைத் தடுப்பதோடு ஒட்டுமொத்தமாகத் தமிழக வேளாண்மையை, வேளாண்மைக் கல்வியை கம்பெனிகள் காலடியில் வைப்பதாக இருக்கிறது.
 
கருத்துரிமையைப் பறிக்கிற சர்வாதிகார சட்டமாகவும் இது உள்ளது. எனவே தமிழ்நாடு மாநில வேளாண்மை மன்ற சட்டத்தைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அதற்கு தமிழ்நாட்டு உழவர்களும், அறிவாளர்களும், நுகர்வோரும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்; போராட வேண்டும்.

Pin It