தமிழக முதல்வர் கருணாநிதி, பிரபாகரனின் தவறுகளால்தான் ஈழத்தில் இவ்வளவு பேரழிவு வந்து விட்டது என்று அடுக்கடுக்காய் நிகழ்ச்சிகளை சுட்டிக் காட்டியுள்ளாரே, அது பற்றி உங்கள் கருத்தென்ன?

விடுதலைப்புலிகளையும் ஈழத்தமிழர்களையும் அழிப்பதற்கு இந்திய அரசு செய்த குற்றச் செயல்களில் ஒன்றைக் கூட கருணாநிதி சுட்டிக்காட்டவில்லையே ஏன்?

ஆயுதங்கள் கொடுத்தது, ரேடார்கள் கொடுத்தது, பலாலி விமானப் படைத்தளத்தைப் பழுது நீக்கிக் கொடுத்தது, எப்படிக்குண்டுபோட்டு அழிப்பது என்பதற்குத் திட்டங்களைத் தீட்டிக் கொடுக்க இந்தியத் தளபதிகளை அனுப்பியது. விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் ஏற்றி வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது, இலங்கையுடன் கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து கொண்டு, விடுதலைப்புலிகளின் நகர்வுகளை வேவு பார்த்து சிங்கள அரசுக்கு அவ்வப் போது சொன்னது, செயற்கைக்கோள் மூலம் கிடைக்கும் தகவல்களை இலங்கைப்படைக்கு கொடுத்தது, சிங்களப்படை ஆயுதங்கள் வாங்க ஓர் ஆயிரம் கோடி ரூபாயைக் வட்டியில்லாக் கடனாகக் கொடுத்தது, போர் நிறுத்தம் கோரி, உலக நாடுகள் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்காமல் தடுத்துக்கொண்டது உள்ளிட்டு எத்தனையோ கேடுகளை ஈழத்தமிழர்களுக்கு இந்தியா செய்தது.

தில்லி ஏகாதிபத்தியம் நடத்திய தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகள் இவ்வளவு இருக்கின்றன. இவற்றையெல்லாம் அடுக்காவிட்டாலும், இவற்றில் ஒன்றைக் கூட சுட்டிக்காட்டவில்லையே கருணாநிதி ஏன்?

ஏனெனில் இவை அத்துணைக்கும் துணை நின்று இனத்துரோகம் புரிந்தவர் கருணாநிதி.

இந்திய உளவுத்துறையுடன் சேர்ந்து சதி செய்து பிரபாகரனைக் கொல்லத் திட்டம் தீட்டிச் செயல்பட்ட மாத்தையாவைக் கையும் களவுமாகப்பிடித்தார் பொட்டு அம்மான். முறைப்படி விசாரணை நடத்திய போது மாத்தையா தம் சதித்திட்டதை ஒத்துக்கொண்டார். மாத்தையாவின் ஒப்புதல் வாக்கு மூலம் ஒளிப்படமாக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. அந்த மாத்தையாவை ‘மாவீரன் மாத்தையா’ என்று வர்ணித்து, அவருக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக ஒப்பாரி வைக்கிறார் கருணாநிதி. “பிரபாகரன் படையணிகளும் கருணாவின் படையணிகளும் மோதின” என்று குறிப்பிட்டு துரோகி கருணாவைப் பிரபாகரனுடன் சமப்படுத்திக் கூறுகிறார்.

ராஜீவ்காந்தி கொலையைச் சுட்டிக்காட்டி பொருமுகிறார் கருணாநிதி. ராசிவ் காந்தி அனுப்பிய படை ஆறாயிரம் தமிழர்களை ஆண்கள், பெண்கள், குழந்தைகளைக் கொன்ற செய்திப்பற்றி ஒரு சொல் கூட சொல்ல மறுக்கிறார். 1991-ஆம் ஆண்டு ராஜீவ்படை இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய போது சென்னைத் துறைமுகத்தில் வரவேற்க அன்று முதல்வராக இருங்த கருணாநிதி போகவில்லை. அது பற்றி எதிர்க்கட்சியினர் சட்டப் பேரவையில் கேள்வி கேட்டப்போது “என் சாதி மக்களை கொன்றுவிட்டு வந்த படையை நான் எப்படி வரவேற்க முடியும்” என்று இதே கருணாநிதி விடையளித்தார். அன்று வி.பி.சிங் பிரதமராக இருந்தார். அதனால் வசதியாக, தமிழ் இனப்பற்றாளர் போல் வேடம் போட்டார் கருணாநிதி. இன்று அதுபற்றி வாய்திறப்பதில்லை.

பிரபாகரனைக் கொலை செய்ய ராஜீவ்காந்தி திட்டம் தீட்டியதை, இந்திய அமைதிப்படைக்குத் தலைமை தாங்கிச் சென்ற தளபதி ஹர்கிரத் சிங் தம் நூலில் அம்பலப் படுத்தியுள்ளார். இவற்றையெல்லாம் மூடிமறைக்கிறார் கருணாநிதி. ஏன்?

இப்பொழுது மாவீரர் நாளை ஒட்டி, பிரபாகரனுக்கு உலககெங்கும் வாழும் தமிழர்களிடம் மேலும் மேலும் புகழ் சேர்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொறாமைத் தீயால் நெஞ்சம் வெந்து வெந்து புலம்புகிறார். ஏற்கெனவே இந்திய ஏகாதிபத்தியத்திற்கு மட்டும் கங்காணி வேலை பார்த்து வந்த அவர் இப்பொழுது சிங்களப் பாசிச அரசுக்கும் கங்காணி வேலை பார்க்கிறார். ஈழத்தமிழர்கள் அழிந்ததை நினைத்து மௌனமாக அழுகிறாராம். சத்தமாக அழுதால் அவருடைய எசமானர்கள் அவரைக் கண்டிப்பார்களோ என்னவோ?

என்ன பசப்பு பசப்பினாலும், கருணாநிதியின் இனத்துரோகம் குவிஸ்லிங்கைப் போல் வரலாற்றில் நிலைத்துவிடும்.

காவிரி, முல்லைப் பெரியாறு உரிமைகளைக் கருணாநிதி தமது பதவி அரசியலுக்குப் பலியிட்டுவிட்டார். தமிழக மீனவர்களையும் அவர் காக்கவில்லை. ஈழத் தமிழர் இன அழிப்பிற்கும் இந்திய இலங் கை அரசுகளுக்குத் துணை போனார். இவ்வளவு துரோகங்கள் செய்தும் அவருக்குச் செல்வாக்கு இருக்கிறதே எப்படி?

அவருடைய செல்வாக்கு குறைந்து கொண்டே வருகிறது. ஈழத்தமிழர் இனப் படுகொலைக்குத் துணை போனது அவரது செல்வாக்கில் பெரும் சரிவை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அவருடைய பலம் செயலலிதா. செயலலிதா பார்ப்பனியக் கோட்பாட்டை செயல்படுத்தும் தலைவி, தற்செருக்கின் உச்சம். அவரது அட்டூழியங்களுக்கு அஞ்சுவோர் கருணாநிதியை ஆதாரிக்கின்றனர்.

கருணாநிதியின் குடும்பம் நடத்தும் அரசியல் கொட்டம், ஊழல், துரோகம் ஆகியவற்றைக் கண்டு அருவருப்போர் செயலலிதாவை ஆதரிக்கின்றனர். இவர்கள் இருவரும் ஒருவருக்கு வலிமையாக இன்னொருவர் எதிர்வினைத் துணை புரிகிறார்கள். மக்களிடையே உணர்வில் பின் தங்கியோராய் இருப்பவர்கள், புரட்சிகர மாற்று ஒன்றை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமற்றோர், அதிகாரத்தை அண்டிப் பிழைக்கும் தன்னல சக்திகள் எனப்பலரும் கருணாநிதிக்குத் துணையாக உள்ளனர்.

புரட்சிகரத் தமிழ்த் தேசிய எழுச்சி தான் கருணாநிதி, செயலலிதா போன்றோரை வெல்லும்.

தி.மு.க, அ.இ.தி.மு.க. மேடைகளில் பேசுவோர் “ஏழையின் சிரிப்பில் இறைவனைப் பார்க்கிறோம்” என்று அடிக்கடி கூறுகிறார்களே அதன் பொருள் என்ன?

ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறோம் பணக்காரன் சிரிப்பில் பணத்தைப் பார்க்கிறோம் என்று பொருள்.

மக்களவை இடைத்தேர்தலில் மேற்கு வங்கத்தில் படுதோல்வியடைந்த சி.பி.எம். கட்சி கேரளத்தில் சட்டமன்ற இடைத்தேர்தலில் படுதோல்வி கண்டுள்ளது. இத்தோல்விகள் தற்காலிகமான பின்னடைவு என்று சி,பி.எம். சொல்வது சரியா?

நீண்ட காலத்திற்கு நீடிக்கக் கூடிய வீழ்ச்சியின் தொடக்கம் இது என்பதை அவர்கள் எப்படி ஒப்புக் கொள்வார்கள்? இந்தியாவுக்கு ஒரு காங்கிரசு கட்சி போதும் என்று மக்கள் கருதுகிறார்கள். இன்னொரு காங்கிரசு கட்சியாக சி.பி.எம் செயல்படுகிறது. அதை தேவையற்ற இன்னொரு சுமையாக மேற்கு வங்க, கேரள மக்கள் நினைக்கிறார்கள்.

இந்தியத் தேசிய வெறி, உலகமய ஆதரவு, பார்ப்பனிய ஆதரவு முதலியவற்றில் காங்கிரசுக்கும் சி.பி.எம் கட்சிக்கும் வேறுபாடு கிடையாது. ஒரு வேளை வேறுபாடு இருந்தால் இவற்றில் காங்கிரசை விட சி,பி.எம். தீவிரமாக இருக்கிறது என்ற வேறுபாடாகத் தான் இருக்கும். இந்திய மற்றும் வெளிநாட்டு முதலாளிகளுக்காக சொந்த மக்களை மேற்கு வங்க சி.பி.எம். அரசைப் போல் காங்கிரசு ஆளும் மாநிலங்களில் கூட சுட்டுக் கொல்லவில்லை.

லிப்ரான் ஆணையம், பாபர்மசூதி இடிப்பில் வாஜ்பாயி, அத்வானி, முரளி மனோகர் ஜோசி உள்ளிட்ட பா.ச.க தலைவர்கள் குற்றவாளிகள் என்று கூறியிருக்கிறதே? அவர்கள் மீது நடவடிக்கை வருமா?

அப்படியெல்லாம் சட்டம் தன் வேலையைச் செய்யும் படி விட்டு விடுவார்களா? பா.ச.க.வை அச்சுறுத்தவும், அதனோடு, எதிர்வாதம் புரியவும் லிப்ரான் முடிவுகளைக் காங்கிரஸ் கட்சி பயன்படுத்திக் கொள்ளும். பதவி பறிபோனதைத் தாங்கிக் கொள்ள முடியாத பா.ச.க. தலைவர்கள் ஏற்கெனவே தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். லிப்ரான் முடிவுகள் இக்குழுச் சண்டையைத் தீவிரப்படுத்தினால் வியப்பில்லை. பா.ச.க தலைவர்கள் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பதை லிப்ரான் முடிவுகள் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளன.

மாவோயிஸ்டுகள் மீது இராணுவத்தை ஏவுவது சரியா?

சரியல்ல. நிபந்தனையின்றி மாவோயிஸ்டுகளுடன் இந்திய அரசும், தொடர்புடைய மாநில அரசுகளும் பேச்சு நடத்த வேண்டும்.

மராத்தியில் பதவி உறுதிமொழி எடுக்காமல் இந்தியில் எடுத்ததற்காக அபுஆஸ்மி என்பவரை, ராஜ்தாக்கரே கட்சியினர் சட்டப்பேரவைக்குள் தாக்கியது சரியா?

இந்தியில் உறுதிமொழி எடுத்தது சரியா? தவறு. கருத்தளவில் பேசியிருந்தால் அனைத்திந்தியர் கவனத்தை ஈர்த்திருக்குமா?

Pin It