“பசியால் வாடும் மக்கள் அதிகம் உள்ள நாடு என்பதால் ஒரு உணவுத் தானியத்தை வீணாக்குவதுகூடக் குற்றம்” -போதுமான இடவசதி இல்லாததால் பெருமளவு உணவுப் பொருள்கள் வீணாகின்றன என்று மத்திய அரசு தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியுள்ளதைக் குறிப்பிட்டு அண்மையில் உச்ச நீதிமன்றம் இவ்வாறு கண்டித்தது.

அடுத்து-பஞ்சாப் மற்றும் இதர வடமாநிலங்களில் பெய்த கனமழை வெள்ளத்தின்போது முன்னெச்சரிக்கையோ உரிய பாதுகாப்போ இல்லாத நிலையில் உணவுத் தானியக் கிடங்குகளில் இந்திய உணவுக் கழகம் சேமித்து வைத்திருந்த உணவுத் தானியங்கள் நீரில் மூழ்கி வீணாகிவிட்டது தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றின்போது, இப்படி வீணாகும் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாகவோ குறைந்த விலையிலோ தரலாம் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

வெயிலிலும் மழையிலும் விவசாயிகள் மேனி நோக, வியர்வை சிந்தி உழைத்து விளைவித்த உணவுத் தானியங்கள் இப்படி பாதுகாத்து வைக்க அக்கறையற்று, ஆளுவோரின் அலட்சியத்தால் வீணாகிப் போவது ஒரு மன்னிக்க முடியாத கொடுமை! அழிவிலிருந்து பயிரைக் காப்பதில் விவசாயிக்கு உள்ள அக்கறை அவர்கள் விளைச்சல் செய்து தந்த உணவுத் தானியங்களைப் பாதுகாப்பதில் ஆட்சியாளர்களுக்கு இல்லை.

1997 முதல் 2007 வரையான பத்தாண்டுகளில் இந்திய உணவுக் கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் அரிசி, கோதுமை உட்பட 10 லட்சம் டன் உணவுத் தானியங்கள் பயன்படுத்த முடியாத விதத்தில் சேதமடைந் துள்ளன என்று 2008 ஜூலையில் இந்திய உணவுக்கழகம் வெட்கங்கெட்டுச் சொன்னது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், சேதமாகிக் கெட்டுப் போன இந்தத் தானியக் குவியல்களை அப்புறப்படுத்த ஆன செலவு ரூ 2 கோடியே 59 லட்சமாம்! இதைச் சொன்னதும் மத்திய அரசின் அதே உணவுக்கழகம் தான். விவசாயிகள் அரும்பாடுகள் பட்டு விளைவித்துத் தரும் உணவுத் தானியங்களை மக்களுக்குப் பாழ்படுத்தித் தருவதற்கென்றே சேமிப்புக் கிடங்குகள் போலும்!

இவர்களிடம் தேசத்தின் சொத்து பாழாகிறது. வீணாகும் உணவுத் தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்கலாம் என்று தற்போது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடிச் செய்வது சாத்தியமல்ல என்றார் மத்திய உணவு மந்திரி சரத்பவார். உணவுத் தானியங்களைக் கெட்டுப் போகச் செய்து வீணாக்குவதுதான் இவர்களுக்குச் சாத்தியம் போலும்! எலிகளே தின்று தீர்த்தாலும் சரி, ஏழைகளுக்கு இலவசமாய் இல்லை என்பது இவர்களின் உணவுக் கொள்கையாக உள்ளது.

அரிசி, கோதுமைகளை மலிவான விலைக்குத்தான் ஏழைகளுக்குத் தருகிறோம் என்று அந்த மந்திரி பெருமை பேசியுள்ளார். இவர் சொல்லுகிற விலைக்குறைவான அரிசியும் கோதுமையும் விவசாயி விளைவித்த தரத்தில் இருப்பவையல்ல, பொது வினியோகத்தில் ரேஷன் கடை மூலமாக வழங்கப்படும் தானியங்களை வாங்கிச் சமைத்து ருசித்திருந்தால் அவர்களுக்கு அவற்றின் தரங்கெட்ட தரம் தெரிந்திருக்கும். இவர்களால் வீணாக்கப்பட்ட உணவுத் தானியக் குவியலை இவர்கள் குறைந்த விலையின் பேரால் ஏழைகளிடம் தள்ளி விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். பாதுகாக்க முடியாத நிலையில் கெட்டுப் போவதற்கு முன்பே நல்ல நிலையில் உணவுத்தானியங்களை ஏழைகளுக்குக் குறைந்த விலையில் வழங்கினால் அது கண்டு பெருமைப்படலாம்.

இந்த ஆட்சியாளர்களிடம் உணவுகூடப் பாதுகாப்பாக இல்லை.