அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீ ரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை.
- “ஏதும் செய்வதற்குத் திராணியற்ற ஏழைகளின் கண்ணீர் செல்வத்தைத் தேய்த்துவிடும் படை!” - என்று ஈராயிரமாண்டுகளுக்கு முன்னரே வள்ளுவப் பேராசான் சொல்லிச் சென்றுள்ளான். அதாவது, ஏழைகளின் சார்பாக நின்று பணக்காரர்களுக்கு எச்சரிக்கிறான் வள்ளுவன். அதாவது, உழைப்பவர்களுக்காகக் குரல் கொடுக்கிறான் அந்த நமது முப் பாட்டன். ஆனால், அந்த உழைப்பவர்களே தங்களுக்காகக் குரலெழுப்பியதற்கும் ஒரு மிக நீண்ட வரலாறு இருக்கவே செய்கிறது. இன்னும் சொல்லப்போனால் வரலாறு என்பதே உழைப்பவர்களுக்கும், அவர்களை ஒடுக்கிவந்த சுரண்டல்காரர்களுக்கு மிடையிலான முரண் போராட்டம்தானே? உழைப்பவர்களின் குரல் காலகாலமாக ஒலித்தே வந்திருக்கிறது. அதன் ஒரு நீட்சியாக - தொடர்ச்சியாக நமது தமிழ் திரைஇசைப் பாடல்களிலும் அது பன்முகத்தன்மையோடு பதிவாகியிருப்பதை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது. அத்தகைய பாடல்களில் சிலவற்றைப் பற்றி நாம் இங்கே பேசுவோம்.

ஆண்டவன் உலகத்தின் முதலாளி -
அவனுக்கு நானெரு தொழிலாளி
அன்னை உலகின் மடியின்மீது
அனைவரும் எனது கூட்டாளி... (பாடலாசிரியர் ஆலங்குடி சோமு, படம் - தொழிலாளி)

 - இது ஒரு பாடல். இன்னொரு பாடலும் இதுபோல உண்டு, அது -
 கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி... (பாடலாசிரியர் மருதகாசி, படம் - விவசாயி)

-இவை இரண்டும் தொழிலாளியையும் விவசாயியையும் குறித்துப் பாடுகின்றன. ஆனால், இந்த உலகைப் படைத்தது கடவுள் என்ற மரபார்ந்த பழமைச் சிந்தனையை அடியொற்றி கடவுளை முதலாளியாக்கிவிட்டன இப்பாடல்கள். அப்படி யென்றால் முதலாளி குறித்தே இங்கே சரியான பார்வை இல்லாமல் போகிறது. சுரண்ட லால் உருவான உபரிச் செல்வமே மூலதனம் ஆகிறது என்னும் உண்மையை மறைக் கின்றன இப்பாடல்கள். அதே சமயம் தொழிலாளியையும், விவசாயியையும் போற்றவும் முயல்கின்றன. அந்தப் போற்றுதல்களும்கூட முதலாளியின் நலன்சார்ந்து அமைந்து விடுகின்றன. அவற்றைப் பார்ப்போம்.

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும்
இலக்கணம் படித்தவன் தொழிலாளி
உருக்குப்போன்ற தன் கரத்தைக் கொண்டு
ஓங்கி நிற்பவன் தொழிலாளி...

- கிடைத்த கூலியை - அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் அதனைக்கொண்டு வாழக் கற்றுக்கொள்ள ஏற்கெனவே வறுமை தாண்டவமாடும் தொழிலாளிக்கு அறிவுரை வழங்குகிறது இப்பாடல். அதுதான் தொழிலாளிக்கு அழகு என்கிறது. அதாவது, அப்படி தொழிலாளிகள் இருந்து விட்டால் லாபம் எனும் உபரி நிரம்பச் சேரும் என்ற முதலாளியின் ஆசைக் கனவை நடைமுறைப் படுத்தத் தந்திரம் செய்கிற சிந்தனையிது. அதே நேரத்தில் தொழிலாளியைப் போற்றி உயர்த்தவும் தவறவில்லை. அது, தாஜா செய்து காரியம் சாதித்துக்கொள்ளும் தந்திரமல்லவா?

முன்னேற்றப் பாதையிலே மனசவச்சு
முழுமூச்சாய் அதற்காக தினம் உழைச்சு
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி...

- அரைகுறையாக அல்ல... முழுமூச்சாய் தினமும் உழைப்பானாம் விவசாயி. எதற்காக? மண்ணிலே முத்தெடுப்பதற்காக. அதுவும் யாருக் காகவாம்? தான் வாழ்வதற்காக அல்லவாம், பிறர் வாழ்வதற்காகவாம். இப்படித் தியாகிப் பட்டம் கொடுத்துக் கொடுத்துத்தான் இந்த நாட்டில் லட்சக் கணக்கான விவசாயிகளைத் தற்கொலை செய்து கொள்ளத் தள்ளியிருக்கிறது இந்தச் சமூகம்.

மேற்சொன்ன இரு பாடல்களும் காலத்தால் முந்தியவையல்ல. ஆனால் அவை முன்வைக்கும் சிந்தனையால் பழமையானவை. அதாவது தொழி லாளிகளையும் விவசாயிகளையும் இந்தச் சமூக அமைப்புக்குக் கட்டுப்பட்டு நடக்கக் கட்டளையிடு பவை. சமூக மாற்றம் வந்துவிடக்கூடாது என்ற எச்சரிக்கையோடும், அந்த நோக்கத்தின் பொருட் டும் உழைப்பவர்களை அணுகுகின்றன இப்பாடல் கள். சமூக மாற்றம் என்பது தொழிலாளி மற்றும் விவசாயிகளின் ஒற்றுமையினால்தான் சாத்தியம் எனும் அறிவியலுக்கு எதிரானதாகவும் இருக்கின் றன இப்பாடல்கள்.

அழுத்தும் துயரத்தினால் உழைப்பவர்கள் அழுங்குரலை தமிழ்த் திரைஇசைப் பாடல்கள் நிறையவே பதிவு செய்திருக்கின்றன.

உலகத்தின் தூக்கம் கலையாதோ
உள்ளத்தின் ஏக்கம் தொலையாதோ
உழைப்பவர் வாழ்க்கை மலராதோ
ஒருநாள் பொழுதும் புலராதோ..? (வாலி, படம் - படகோட்டி)

- உழைப்பவர் வாழ்க்கை மலரவேண்டு மானால் உலகத்தின் தூக்கம் கலையவேண்டுமாம். “ஒரு ஜான் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்” - எனும்போது உழைப்பவர் கள் குறித்தான ஊராரின் கருத்து எத்தன்மையதாக இருக்கிறது என்பது தெரிகிறது.

உழைப்பாளிகள்தான் இந்த உலகத்தை நடத்திச் செல்கின்றனர். அவர்களே சமூகத்தின் ஆகப் பெரும் பான்மையோர். உழைப்பைக் கூலியென்னும் விலை கொடுத்து வாங்கி, அதனால் உல்லாசம் அனுபவிப்போர் குறைந்த எண்ணிக்கையிலான சிறுபான்மையோர்தான். ஆக, துயரம் பெரும் பான்மை உழைப்பவர்களிடத்திலும், சுகம் ஒரு சிறு கூட்டத்திடமும் என்ற இந்த அசமத்துவ சமூகமே ஒரு தீங்காகத்தானிருக்கிறது. இதுதான் சமூக யதார்த்தம். இதனையொரு பாடல் இப்படிச் சித்தரிக்கிறது.

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ..? (மருதகாசி, படம்- சபாஷ் மப்ளே)

இதைத்தான் கண்ணதாசன்-

பொன்னகை அணிந்த மாளிகைகள்
புன்னகை மறந்த மண்குடிசை
பசி வர அங்கே மாத்திரைகள்
பட்டினியால் இங்கு யாத்திரைகள்
இருவேறுலகம் இதுவென்றால்
இறைவன் என்பவன் எதற்காக..?

- என்றெல்லாம் விவரித்து வினாத் தொடுக் கிறார். அதோடு மட்டும் நிற்கவில்லை. உழைப் பாளியால்தான் சுரண்டும் வர்க்கம் பிழைத்துக் கிடக்கிறது, தொழிலாளியோ இளைத்துக் கிடக் கிறான் என்பதை அவர் இப்படியும் விரிக்கிறார்:

உயரே பறக்கும் காற்றாடி
உதவும் ஏழை நூல்போலே
பட்டம்போல் அவர் பளபளப்பார்
நூல்போலே இவர் இளைத்திருப்பார்.

மழையைப் பாடாத கவிஞர் உண்டோ? இங்கே ஒரு திரைப்பாடல் மழை கொட்டுவதைப் புதுவிதமான உவமையோடு சொல்வதைக் கண்டு வியப்பேற்படுகிறது. அது இதுதான்:

முட்டாப்பயலே மூளையிருக்கா
என்று ஏழைமேலே துட்டுபடைச்ச
சீமான் அள்ளி கொட்டுற வார்த்தைபோலே -        மழை
கொட்டு கொட்டுன்னு கொட்டுது பாரு         அங்கே...

- தன்னிடம் வேலை செய்கிற தொழிலாளியை முதலாளி திட்டுவதுபோல மழை கொட்டுகிறது என்று பாட, தமிழறிவோடு இந்தக் கவிஞனுக்குச் சமூக உணர்வும் வேண்டுமல்லவா?

காதலியின் முகம் குறித்து எத்தனையோ விதமாக விதந்தோதியிருக்கிறார்கள் கவிஞர்கள். நிலவு, மலர், பளிங்குக் கல் என்று தோன்றிய வற்றையெல்லாம் காதலியின் முகத்தோடு பொருத்திப் பார்க்க இந்தக் கவிஞர்களுக்குச் சலிக்க வேயில்லைதான். ஆனால், கோபமாக இருக்கிற காதலியின் முகத்தை இப்படிச் சொல்கிறது இதே பாடலின் பிந்தைய வரிகள்:

பழுக்கப் பழுக்க உலையில் காய்ச்சும்
இரும்பைப்போலவே - முகம்
சிவக்குது இப்போ -அது
சிரிப்பதும் எப்போ?

-இப்படிச் சொல்கிற காதலனின் குரல் உலைக் களத்தில் பழுத்த அனுபவக் குரலாகவும் தெரிகிறது.

இருப்பவன்-இல்லாதவன் எனும் அவலம் தீர இப்படித் தீர்வு தருகிறது இந்தப் பாடல் -
உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமய்யா...

- அதாவது, பள்ளத்தை மண்ணிட்டு நிரப்பிச் சமப்படுத்த இன்னொரு மேட்டைக் கரைக்கத் தேவையில்லையாம். இது எப்படியிருக்கு?

இப்படியொரு தீர்வைச் சொன்ன தமிழ்த் திரை இசைப் பாடல்தான் இப்படியும் இன்னொரு இடத்தில் புலம்புகிறது. ஆனால் அது வெறும் புலம்பல் இல்லை. இந்த ஏற்றத் தாழ்வுகளுக்குச் சரியான காரணத்தைக் கண்டுபிடித்தும் சொல்கிற காரியார்த்தப் புலம்பல். அது இதோ-

வானம் பொழியுது பூமி வெளையுது தம்பிப்       பயலே - நாம
வாடிவதங்கி வளப்படுத்தினோம் வயல -         ஆனா
தானியமெல்லாம் வலுத்தவனுடைய கையிலே        - இது
தகாதுயின்னு எடுத்துச்சொல்லியும் புரியல...

வயலை வளப்படுத்துகிற உழைப்பாளி வாடி வதங்கிப்போய்த்தான் கிடக்கிறான். உழைப்பால் விளைந்த தானியச்செல்வம் வலுத்தவன் கைக்குப் போய்விட்டதுதான் அதற்குக் காரணம். இப்படி உழைப்பிருக்கிற இடத்தில் வறுமையும், உழைக் காத இடத்தில் வளமையும் என்று முரண்பட்டிருக் கிற சமூகத்திற்கு அது தகாது என்று எத்தனை முறை எடுத்துச்சொன்னோம், அது மண்டையில் ஏறவில் லையே!

அழுபவர் சிரிப்பதும் சிரிப்பவர் அழுவதும்
விதி வழி வந்ததில்லை
ஒருவருக்கென்றே உள்ளதையெல்லாம்
இறைவனும் தந்ததில்லை (வாலி, படம்- சந்திரோதயம்)

- என்று இறைவனைத் துணைக்கு வைத்துக் கொண்டே அதே சமயம் எதுவும் விதிப்படிதான் நடக்கும் என்ற சித்தாந்தத்தை மறுக்கிறது இன்னொரு பாடல்.

இந்த இடத்தில் இந்தியாவின் மிகச்சிறந்த மார்க்சிய அறிஞரும் தொழிலாளி வர்க்கத்தின் உன்னதமான தலைவருமான தோழர் இ.எம்.எஸ். அவர்கள் தமது மார்க்சியமும் இலக்கியமும் என்ற நூலில் குறிப்பிட்டிருப்பதை நினைவுகூர்வது சாலப் பொருத்தமானது. அவர் சொல்கிறார்:

“சுரண்டுவோரின் பிரச்சாரகராக மாறும் படிக்கு தத்துவார்த்தரீதியில் பயிற்றுவிக்கப் பட்டிருக்கும் இந்தத் திறமையான கலைஞர் களும் எழுத்தாளர்களும்கூட தம்மையறியாம லேயே சுரண்டப்படுகிறவர்களின் தத்துவத்துக்கு உருவம் தருகிறவர்களாக மாறிவிடுகிறார்கள். அழகியல் படைப்பிலுள்ள முரண்பாடு இப்படித்தான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது.”

உண்மையில் இந்த சமூகத்தில் படைப்பாளிகள் ஆளும் வர்க்கங்களின் நலனுக்காகவே பணியிலமர்த்தப்பட்டிருக்கின்றனர். அப்படிப்பட்ட படைப்பாளிகளைத்தான் பெரும்பாலான வெகு சன ஊடகங்கள் வாய்ப்பளித்துப் பயன்படுத்திக் கொள்ளும். சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல தான். இந்த நிபந்தனைகளையெல்லாம் மீறித்தான் உழைப்பவர்களின் குரல் மிகத்துல்லியமாக இல்லா விட்டாலும் உண்மைக்கு மிக அருகில் வந்துசென்றி ருப்பதை நம்மால் உணர்ந்து ரசிக்கவும் போற்றவும் முடிகிறது.

இதிலும் விதிவிலக்கு உண்டு. உதாரணம், பட்டுக்கோட்டையார். அவர் மட்டுமே தன்னைத் தொழிலாளிவர்க்கத்தின் கவிஞனென அறிவித்துக் கொண்டு எழுதியவர். அதனாலும் தமிழ் சினிமா பயனடையத்தான் செய்தது, அதே நேரத்தில் தொழிலாளி வர்க்கமும்.

விடுதலைப் போராட்ட காலத்திலேயே மகா கவி பாரதி இப்படி எழுதிவிட்டான்:

இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே
யந்திரங்கள் வகுத்திடுவீரே
கரும்பைச் சாறு பிழிந்திடுவீரே
கடலில் மூழ்கி நன்முத்தெடுப்பீரே
அரும்பு வேர்வை உதிர்த்துப் புவிமேல்
ஆயிரந்தொழில் செய்திடுவீரே
பெரும்புகழ் நுமக்கே யிசைக்கின்றேன்
பிரம தேவன் கலையிங்கு நீரே!

உண்மையில் உழைப்போரே படைப்பாளராக இருப்பதால் பிரம தேவன் எனும் பெயர் பொருத்த முடையதுதானே? பாரதியை அடியொற்றியும் அவரின் தோளில் அமர்ந்தும் இன்னமும் பார்வை யை அகல விரிக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் இப்படி:

சித்திரச்சோலைகளே உமை நன்கு
திருத்த இப்பாரினிலே முன்னர்
எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே?

- இப்படித் தொடங்கி,

தாரணியே தொழிலாளர் உழைப்புக்கு
சாட்சியும் நீரன்றோ? -பசி
தீருமென்றால் உயிர் போகுமெனச் சொல்லும்
செல்வர்கள் நீதி நன்றோ?

- என்று கோபமாகக் கேட்கிறார்.

பாவேந்தரின் இந்தப் பாடலைத் தமிழ் சினிமா பயன்படுத்திக்கொண்டது. அதனால் இப்பாடல் மக்களிடையே பரவியது.

மாடா உழைச்சவன் வாழ்க்கையிலே - பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்?

- எனும் காதலியின் நியாயமான கேள்விக்கு காதலன் இப்படி பதிலளிக்கிறான்:

அவன் தேடிய செல்வங்கள் வேறயிடத்தினில்
சேர்ந்ததினால் வந்த தொல்லையடி.

- பட்டுக்கோட்டையாரின் இந்தத் தெளிவை நாம் புரிந்துகொள்ள முடிகிறது.

“இலக்கியத்திற்கும் கலைக்கும் மூலப் பொருள்களின் சுரங்க மலைபோல் உதவு வது மக்களின் வாழ்க்கையாகும்!” - என்றார் மாவோ.

அத்தகைய பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் துயரங்கள் மலிந்திருக்கிற இந்த சமூக அமைப்பில் அவற்றைப் பதிவு செய்து, மாற்றத் தைக் கோருகிற பல பாடல்கள் இன்னுமிருக் கின்றன. இதோ ஒன்று:

கல்லைக் கனியாக மாற்றும் தொழிலாளி
கவனம் ஒருநாள் திரும்பும் - அதில்
நல்லவர் வாழும் இனிய சமுதாயம்
நிச்சயம் ஒருநாள் அரும்பும்.

- சமுதாய மாற்றத்திற்குத் தலைமை தாங்குவதற் கான தகுதி தொழிலாளிக்குத்தான் உண்டு என்பதை இப்பாடல் கோடிகாட்டுகிறதல்லவா?

தருமத்தின் வாழ்வுதன்னை சூது கவ்வும்
தருமம் மறுபடி வெல்லும் - என்றான் பாரதி. இங்கே அந்தச் சிந்தனை வேறுவிதத்தில்...
ஒருசில பேர்கள் ஒருசில நாட்கள்
உண்மையின் கண்களை மறைத்துவைப்பார்
பொறுத்தவரெல்லாம் பொங்கியெழுந்தே
மூடிய கண்களைத் திறந்துவைப்பார். (வாலி, படம்- தாழம்பூ) - என்கிறது.
உழைத்து வாழ வேண்டும் - பிறர்
உழைப்பில் வாழ்ந்திடாதே!

- என்று சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அறிவுறுத்துகிறது ஒரு பாடல். அதேபோல, சுரண்டு பவனை இப்படித் தயவுதாட்சண்யமின்றி இன்னொரு பாடல் சாடுகிறது:

ஊரார் வேர்வையில் உடலை வளர்ப்பவன்
உலகத்தில் கோழைகள் தலைவன்.

உழைப்பவன் உயிரோடு மட்டும் இருந்து, தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருந்தால் அதனால் சிலருக்கு லாபம். ஆனால், அந்த உழைப்பாளியிடம் செல்வம் ஏதும் மிஞ்சி விடக்கூடாது என்பதுதான் சுரண்டலின் அடிப் படை இலக்கணம். தொழிலாளிகள் இதனை உணர்ந்துவிடக் கூடாதென்பதற்காகவே பல்வேறு தத்துவங்களும் நீதிநெறிகளும் கற்பிக்கப்பட்டன. ஒரு நீண்ட நெடிய வரலாற்றையுடைய இந்த வர்க்க முரணையும் சமுதாயத்தில் இதனால் எழுந்த எல்லாவகைச் சிந்தனை மரபுகளையும் நமது தமிழ் சினிமா தன்னாலியன்ற அளவு பதிவு செய்திருக் கிறது என்றே சொல்ல வேண்டும். இதை இன்ன மும் விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். சுவைக்க சுவைக்கத் திகட்டாத அந்த அமுதகானக் களஞ்சியத்தை முழுமையாகப் பருகவும் முயல்வோம்.