அந்தி சாயும் வேளையில்
அனிச்சையாய் திரும்புகிறோம்
அவரவர் கூட்டுக்கு.

பறவைகள் மகிழ்ச்சியை
சுமந்து திரும்பும்!
நாம்
அன்றைய பொழுதின்
எச்சங்களைச்
சுமந்து திரும்புகிறோம்.

கூடு அடைந்ததும்
கொத்தித் தீர்க்கிறோம்
குரோத மொழிகளால்.
வார்த்தைகளை
வீசி எறிந்த
ஆயாசத்தில்
சுருண்டு கிடக்கிறோம்
மூலைக்கொருவராய்.

கனவிலும்
விசும்பல் ஒலி.
முந்தைய பொழுதின்
ரணங்களை
நீவிடவும் நேரமின்றி
அதிகாலைப் பரபரப்பு.

நிதமும் மென்று
துப்பிய வார்த்தைகளை
மீண்டும் துப்புகிறோம்
வீடெங்கும்.

நிமிட நேரத்தில்
செல்லரித்த சிறகுகளை
மாட்டி
பறக்கத் துவங்குகிறோம்.

ஏன் பறக்கிறோம்
கேள்வி எழும்முன்
மறைந்து விடுகிறோம்
வெளிச்சப் புள்ளியாய்.

பறவைகள்
நம்மைப் பார்த்து
சிரிக்கின்றன.

- கோவை மீ. உமாமகேஸ்வரி

Pin It