(1)
கோடைக் காலத்தின் திக்குத் தெரியாத பறவைகள்
என் ஜன்னலுக்கு வந்து பாடிவிட்டுப் பறந்து செல்லும்.
இலையுதிர்காலத்து மஞ்சள் இலைகள்
பாடல்களில்லாமல் சிறகடித்துப்
பெருமூச்சுடன் வீழ்கின்றன
 (2)
ஓ! உலகின் ஊர்சுற்றிக் கூட்டமே
எனது வார்த்தைகளில் உங்கள்
காலடித்தடங்களை விட்டுச் செல்லுங்கள்

(3)
உலகம் தனது காதலருக்காக
பரந்துவிரிந்த முக மூடியைக்
கழற்றிக் காட்டுகிறது.
அது ஒரு பாடலைப் போலச் சிறிதாய் வருகிறது
ஆதியும் அந்தமுமற்ற ஒரு முத்தம் போல.

(4)
பூமியின் கண்ணீர்த் துளிகள் அவளது
புன்னகையை மலரச் செய்கிறது.
(5)
வல்லமை கொண்ட பாலைவனம் எரிகிறது
நீண்ட புல்லின் காதலுக்காக,
அது தனது தலையை ஆட்டிச் சிரித்து
விட்டுப் பறந்தோடும்.
(6)
நீ கண்ணீர் விட்டால்
சூரியனைக் காண முடியாது
மேலும் நட்சத்திரங்களையும் கூட.

(7)
உன் வழியில் கிடக்கும் மணல்வெளி
உன் பாடலையும் சிறகடிப்பையும்
நாட்டியமாடும் வெள்ளத்தையும்
யாசகம் கேட்கிறது
மணலின் செயலற்ற சுமைகளை
நீ சுமந்து செல்வாயா?
(8)
அவளின் பெருஆவலுடைய முகம்
இரவு மழைபோல எனது கனவுகளை
அடிக்கடி தூண்டுகிறது
(9)
ஒரு காலத்தில் நமது கனவில்
அந்நியமாய் உணர்ந்தோம்
கண்டுபிடிக்க நாம் கண்விழித்தோம்
நாம் ஒருவரை ஒருவர் நேசித்தோம்
(10)
அமைதி மரங்களுக்கிடையே
மாலைநேரம் தவழுதல் போல்
கவலைகள் என் இதயத்தில்
அமைதியாய் அடங்கிவிட்டன
(11)
சில கண்காணா விரல்கள்
சோம்பேறித் தென்றலைப் போல்
என் இதயத்தின் மீது சிற்றலைகளாய்
கீதமிசைக்கின்றன.
(12)
உன்மொழி என்ன, ஓ! கடலே?
“ஆதியும் அந்தமுமற்ற மொழி”
உன்மொழி என்ன, ஓ! வானமே?
“ஆதியும் அந்தமுமற்ற மௌனம்.”
(13)
என் இதயமே,கவனி
உன்னிடம் காதலை உருவாக்கும்
உலகின் கிசுகிசுப்பை
(14)
படைப்பின் ரகசியம் மர்மமானது
இரவின் இருளைப் போல -
அது மகத்தானது
அறிவின் மாயத் தோற்றங்கள்
காலை நேரத்தின் மூடு பனிபோல
(15)
உன் காதலை மலையுச்சியில் வைக்காதே
ஏனெனில் அது உயரமானது
(16)
இன்று காலையில் என் ஜன்னலில் அமர்கிறேன்
ஒருகணம் இந்த உலகம்
நிறுத்தங்களோடு பயணிக்கிறது
எனக்குத் தலையசைத்துக் செல்கிறது
(17)
இந்தச் சிறுசிறு சிந்தனைகள்
இலைகளின் சலசலப்பைப் போல
என் மனதில் அவை மகிழ்வை
மெதுவாய்க் கிசுகிசுக்கின்றன
(18)
நீ பார்க்காதது எதை?
நீ பார்ப்பது உன் நிழலைத்தான்
(19)
எனது விருப்பங்கள் முட்டாள்கள்
அவை என் பாடல்களுக்கிடையே
கத்திக் குவிக்கின்றன
என் தலைவனே என்னைவிடு; ஆனால் கவனி.
(20)
நல்லதைத் தேர்வு செய்யத்
தெரியாது எனக்கு
நல்லவை என்னைத் தேர்வு செய்கிறது.
(21)
முதுகில் விளக்கைச் சுமந்து செல்லும்
அவை தங்களின் நிழல்களை
முன்னால் வீசிச் செல்கின்றன
(22)
அதுதான் நான், வாழ்வு
எது என்றறிந்ததாள்
தொடர்ந்து வியந்து வாழ்கிறேன்.
(23)
“நாங்கள், சலசலக்கும் இலைகள்
புயல்களுக்கு விடைகூறிக்
குரல் கொடுக்கிறோம். ஆனால்
நீ யார் மௌனமாய்?
நான் மொட்டவிழ்ந்த மலர்.”
(24)
கண்ணுக்கு இமைகள் போல
உழைப்புக்கு ஓய்வு உள்ளது
(25)
மனிதன் ஒரு பிறந்த குழந்தை
வளரும் சக்தியே அவன் சக்தி
(26)
கடவுள் நமக்கு அனுப்பும் மலர்களுக்கு
விடைகளை எதிர்பார்க்கிறார்
சூரியனுக்கும் பூமிக்கும் அல்ல
(27)
நிர்வாணக் குழந்தையைப்போல்
பச்சை இலைகளினூடே
ஒளி-அது விளையாடுகிறது
அந்த மனிதன் பொய்யனல்ல
மகிழ்வாய்த் தெரிகிறது.
(28)
ஓ அழகே நீ காதல் கண்டாய்
உன் கண்ணாடி காட்டும் முகத்துதியல்ல
(29)
உலகின் கரையில் அவளது இதயம்
அலைகளை வீசி அடிக்கிறது
அவளது கையெழுத்தில் கண்ணீரால்
“நான் உன்னைக் காதலிக்கிறேன்”
அதன்மீது அவள் எழுதினாள்.
(30)
நிலவே நீ ஏன் காத்திருக்கிறாய்?
நான் சூரியனுக்கு வணக்கம் செலுத்தி
யாருக்கு வழிவிட வேண்டும்?
(31)
ஊமை பூமியின் ஆவல்குரல் போல்
மரங்கள் என் ஜன்னலுக்கு வருகின்றன
(32)
அவனது சொந்தக் காலைப் பொழுதுகள்
கடவுளுக்குப் புதிய ஆச்சரியங்கள்
(33)
உலகம் உரிமை கொண்டாடும் செல்வத்தை
வாழ்க்கை கண்டுபிடிக்கிறது
அது காதல் உரிமை கொண்டாடும்
செல்வத்துக்கு நிகரானது
(34)
வற்றிக் காய்ந்த நதிப்படுகை
அதன் கடந்த காலத்திற்கு நன்றியில்லை
(35)
பறவை மேகமாயிருக்க விரும்புகிறது
மேகம் பறவையாயிருக்க விரும்புகிறது
(36)
நீர்வீழ்ச்சி பாடுகிறது,
“நான் எனது பாடலைக் காண்கிறேன்,
நான் எனது சுதந்திரத்தைக் காணும்போது”
(37)
இந்த இதயம் ஏன் மௌனித்து ஏங்குகிறது
என்னால் சொல்ல முடியவில்லை
சிறிய தேவைகளுக்காக அது
ஒருபோதும் கேட்பதில்லை, அல்லது
அறிவது அல்லது நினைவு கொள்வது
(38)
பெண்ணே நீ உன் வீட்டு வேலைகளை
சேவையாய்க் கருதி செய்யும்போது
உன் கைகள் பாடலைப் பாடும்
நுரையோடு பாயும் மலையருவி போல
(39)
சூரியன் மேற்குக் கடலை நோக்கித்
தாவப் போகிறது, கடைசி வணக்கம்
கிழக்குக் கடலுக்குத் தெரிவித்து விட்டு.
(40)
உன் உணவைக் குற்றம் சொல்லாதே
ஏனெனில் உனக்குப் பசிஆவல் இல்லை
(41)
பூமியின் ஆசைகளாய் மரங்கள்
ஒரு கால்விரலில் நின்று
சொர்க்கத்தில் சப்தமிடுகிறது
(42)
நீ புன்னகைத்து என்னிடம் பேசியது
ஒன்றுமில்லை, நான் உணர்ந்தேன்
இதற்காகவா நான் நெடுங்காலம்
காத்திருந்தேன்.
(43)
நீரில் மீன் மௌனமாய்
பூமியில் மிருகம் சத்தமாய்
காற்றில் பறவை கீதமயமாய்
ஆனால் மனிதன் கடலின் அமைதிபோல்
தனக்குள் மௌனமாய்
பூமியின் சத்தத்தையும், காற்றின்
சங்கீதத்தையும் கேட்டவாறு.
(44)
தயங்கும் இதயம் துயரஇசையை
மீட்டும்போது அதைத்தேடி
உலகம் வேகமாய் ஓடுகிறது
(45)
அவன் ஆயுதங்களையும் கடவுள்களையும்
படைத்துக் கொண்டான்
அவனது ஆயுதங்கள் வெல்லும்போது
அவனே தோற்றுப் போகிறான்
(46)
கடவுள் தானே படைக்கப்பட்டதை
தானே உணருகிறார்
(47)
நிழல், அவள் முகத்திரை இழுபடுகிறது
ரகசிய சாதுவாய் ஒளி தொடர்கிறது
அவளது காதலின் மெல்லடிகளோடு
(48)
நட்சத்திரங்கள் தீப்பறவைகள் போல்
தோன்றுவதற்குப் பயப்படுவதில்லை
(49)
உனக்கு நான் நன்றி சொல்கிறேன்
நான் அதிகார சக்கரங்களில் ஒன்றல்ல
ஆனால் சக்கரங்களில் நசுக்கப்படும்
உயிரினங்களில் நானும் ஒருவன்
(50)
அறிவு கூர்மையானது ஆனால்
பரந்துபட்டதல்ல - ஒவ்வொரு
முனையிலும் அடி, ஆனால் நகராது.

தமிழில் எஸ்.ஏ.பி.