சூழப் பலரிருக்கும் அவையில்
ஒரு கண்ணுமறியாமல்
அதிகாரத்தின் காலணிகளைத் துடைக்க
மென்மயிர் குச்சம் அல்லது கைக்குட்டையை விடவும்
நாக்கே உகந்ததென்றறிக

துடைத்துப் பழக்கமில்லாத கற்றுக்குட்டிகள்
நாக்குக்கு பதிலாக கைக்குட்டையைப் பயன்படுத்துவதால்
குனிந்து நிமிர்ந்து அல்லலுறுவதோடு
24 மணிநேர செய்திச் சேனல்களுக்கும் அவலாகிப்போகின்றனர்

கைக்குட்டைக்குப் பதிலாக
நாக்கைப் பயன்படுத்தும் சூட்சுமமறிந்த கனவான்கள்
ரகசிய கேமராவிலொ ஒற்றரிடமோ அகப்படுவதில்லை
நின்ற இடத்திலிருந்தே நீளும் நாவு கொண்டு
நக்கித்துடைத்து பளபளப்பேற்றிவிடுகின்றனர்

காலணிகள் உருவாகாத காலத்தில்
கால்களை நக்கிப் பயிற்சியெடுத்திருக்கும் இவர்கள்
தேவையையொட்டி
ஒன்றுக்கும் மேற்பட்ட நாவுகளுடையோராயுள்ளனர்

நாக்கால் என்றதுமே
சுழற்றிச்சுழற்றி நக்கித் துடைப்பதெனப் பொருளில்லை
புகழ்ந்து பேசலாம் பொய் சொல்லலாம்
பாராட்டி எழுதலாம் பட்டம் வழங்கலாம்
பணிந்து நடக்கலாம் பணிவிடை செய்யலாம்
அல்லது
பற்களுக்கிடையில் நாக்கைக் கிடத்தி பிணம்போலுமிருக்கலாம்

முகங்களைத் தவிர்த்து
கால்களையே தேடும் இந்த நாக்காட்டிகள்
இறுதியாய் என்னிடத்தில் வந்தபோது
நான் பதறவுமில்லை தடுக்கவுமில்லை
எனக்குத்தெரியும்
அவர்களது நக்கும் கணக்கின் தொடக்கமோ முடிவோ
எனது காலணியிலிருந்தல்ல

தவிரவும்
மாற்றார் அழுக்கைத் துடைக்க நேர்வதை
அவமானமாயுணர்ந்து குமையுமளவுக்கு
என் சுற்றத்தாரைப்போல
அப்படியொன்றும் சுயமரியாதையுள்ளவர்களுமல்ல
இவர்கள்.