நாட்டார் வழக்காறுகள் குறித்த ஆய்வுகள் கடந்த சில பத்து ஆண்டுகளாக அதிகமாக நடைபெற்று ஆவணங்களாக்கப்பட்டு வருகின்றன. கல்விப்புலங்களில் இதுகுறித்த துறைகள் உருவாக்கப்பட்டு, ஆய்வுகள் முடுக்கி விடப்படுகின்றன. வரலாற்றாய்வாளர்களுக்கு இந்த ஆவணங்கள் குறித்து கவனம் ஏற்படுவதில்லை. மன்னர்கள், குறுநில மன்னர்கள், பாதுஷாக்கள், படைத்தளபதிகள், நிலவுடைமையாளர்கள் ஆகியோரின் போர்வெறி, வெற்றிக் களிப்பு வழங்கிய கொடைகள், கட்டிய கோயில்கள், அவர்களின் மேன்மை ஆகியனக் குறித்த வரலாறுகளைக் கட்டமைப்பதே தங்களின் வரலாற்றாய்வின் பணியாகக் கொள்கின்றனர். இவைகளுக்கெல்லாம் பெரும் பங்களிப்பைச் செய்த அடித்தள மக்களின் வரலாறு குறித்து எந்தக் கவலையும் படுவதில்லை. நாட்டார் வழக்காறு குறித்த இவர்களின் மதிப்பீடுகள் அல்லது புரிதல் ஆகியவைகளே இதற்குக் காரணம் ஆகும். நாட்டார் வழக்காறுகளை தனது ஆய்வுக்கான சான்றாவணங்களாக ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டுகின்றனர். இது ஒரு பக்கம், மறுபக்கம் ஆவணப்படுத்தப்பட்ட நாட்டார் வழக்காறுகள், எல்லாம் வரலாற்றுச் சான்றாக ஏற்றுக் கொள்ளத்தக்கனவாக உள்ளவை என்பது குறித்தும் நாம் விவாதிப்பது அவசியமாகும்.

தமிழகத்தில் 7-ஆம் நூற்றாண்டு முதல் நீடித்து வந்த பார்ப்பனியமும், அதன் அறக்கட்டுமானமும், அரசியலும், உழைக்கும் வெகுமக்களை அடித்தள மக்களாக மாற்றியமைத்தது. மனுதர்ம கோட்பாடுகள் இவர்களை சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் வரையறுத்தது, தீண்டாமைக் கொடுமைகளும், பாலியல் வன்முறைகளும் சமூக வரலாறு நெடுக பயணித்து வந்தன. அடித்தள மக்களின் நியாயமான விருப்பங்களும் எதிர்பார்ப்புகளும் அவற்றை அடைய மேற்கொண்ட முயற்சிகளும் இதனால் அவர்கள் பெற்ற இடையூறுகளும் துன்பங்களும் ஏட்டில் அடங்காதவையாகும்.

இவைகளை எதிர்த்து அடித்தள மக்கள் நடத்திய போராட்டங்கள், அவர்களின் வழிபாட்டு நெறிகள், ஒழுக்க நெறிகளில் ஆதிக்க சக்திகள் ஏற்படுத்திய சுயநல நோக்குடைய குறுக்கீடுகள் குறித்த உண்மைகளைக் கண்டறிவதே நாட்டார் வழக்காறு குறித்த நமது அணுகுமுறையாகும். ``தலித், பழங்குடி மக்கள் மற்றும் உழைக்கும் மக்களின் பழக்கவழக்கங்கள், சமயச் சடங்குகள் மூலம் இவர்களின் வரலாற்றைக் கட்டமைக்க முடியும்'' என மார்க்சிய அறிஞர் தேவிப் பிரசாத் சட்டோபாத்யாய தெரிவிக்கிறார். சைவ, வைணவப் பெருங்கோவில்களில் இவர்களை அனுமதிக்க மறுத்ததும், வரலாறு நெடுக இம்மக்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுத்து வந்ததும் ஆன ஆதிக்க வன்முறைகள் இவர்களின் சமூக வாழ்வின் தளத்தில் உளவியல் நெருக்கடியை தோற்றுவித்த வண்ணம் இருந்தது.

``பக்தி என்பது ஒடுக்கப்பட்டவனின் புலம்பல்'' என்பார் கார்ல்மார்க்ஸ். பெருங்கோவில்களுக்குள் சென்று கடவுளிடம் புலம்பி, தனது உளவியல் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள ஆதிக்க சக்திகளுக்கு உரிமையளிக்கப்பட்டிருந்தது. ஆனால் உழைக்கும் அடித்தள மக்கள் தங்களின் உளவியல் நெருக்கடியை தீர்த்துக் கொள்ளும் இடமாக சங்க காலத்தில் ``நடுகல் வழிபாடு'' என்றும், பின்னால் ``நாட்டார் வழிபாடு'' என்றும் தங்களுக்கான வழிமுறைகளைக் கட்டமைத்துக் கொண்டனர். "சென்று சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்" எனத் திருநாவுக்கரசர் பாடியது. இவர்களின் மீது எந்தளவு வெறுப்பு இருந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. எனினும் ஒன்று மற்றொன்றின் கூறுகளை உள்வாங்கிக் கொண்டும் வரலாற்றில் பயணித்தது. கல்வி, அறிவுள்ள ஆதிக்க சக்திகள், தங்களது அனுபவங்களையும், எண்ணங்களையும் கல்வெட்டு, இலக்கியம், செப்பேடு போன்றவற்றில் பதிவு செய்தபோது, கல்வி மறுக்கப்பட்ட இவர்கள் தங்களது அனுபவங்களையும், எண்ணங்களையும், ``வாய்மொழி வரலாறாகவும்'', வழக்காறுகளாகவும், சமயச் சடங்குகளாகவும் உருவாக்கிக் கொண்டனர். அவர்களது மனங்களின் பதிவுப்படிமங்களாக, நனவிலியில் தொன்மங்களாக, இயற்கை வாழ்வில் ஏற்படும் நெருக்கடியைத் தளர்த்தி, மீண்டும் கூட்டு மனத்தை உறுதிப்படுத்திக் கொள்ளும் பண்பாட்டுத்தளமாக, கட்டமைப்பு செய்து கொண்டனர்.

கல்வெட்டு, அகழ்வாய்வு, தொல்லியல், இலக்கியம், செப்பேடு, கைபீது போன்றவை பதிவு செய்யப்பட்ட புறச்சான்றுகள் என்பதால், நாட்டார் வழக்காறுகள், நனவிலிச் செயல்பாடாகவும், தொன்மமாகவும், வாய்மொழி வரலாறாகவும் உள்ளதால் இவற்றை பதிவு செய்யப்படாத அகச்சான்றுகள் என்று கூறலாம். இன்று இவைகள் மானுடவியல் நாட்டார் வழக்காற்றியல் மற்றும் இடதுசாரி ஆய்வாளர்களாலும் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. அடித்தள மக்களின் உண்மை வரலாற்றைக் கட்டமைக்க முயலும் வரலாற்றாய்வாளர்கள், நாட்டார் வழக்காறுகளை சான்றாவணமாக பயன்படுத்தாமல், உண்மை வரலாற்றை வென்றெடுக்க முடியாது. எனினும் இந்த ஆவணங்களை வரலாற்றுச் சான்றாக இணைத்துக் கொள்வதில், ஆய்வுகளின் கோட்பாட்டு முறைகள் தடங்கலாக நீடிக்கின்றன என்பதும் உண்மை.

பொருளியல் வாழ்வும் வழக்காறுகளும்

தனிமனிதன் சமூகத்தின் ஒரு அங்கம். இவன் முதலில் உயிர் வாழ வேண்டும். எனவே, சமூக உறுப்பினர்களுடன் இணைந்து உற்பத்தியில் ஈடுபடுகின்றான். அதன் மூலம் கிடைக்கும் ஆதாயத்தில் உயிர் வாழ்கிறான். பொருளியல் வாழ்வு அவனுக்கு அடிப்படையாக உள்ளது. இதன் மேல் கட்டப்பட்டுள்ள மேல் கட்டுமானமாக பண்பாடும், இதர விஷயங்களும் கட்டமைக்கப்பட்டுள்ளன. பொருளியல் வாழ்வும், பண்பாட்டு வாழ்வும் ஒன்றை ஒன்று சார்ந்தும், ஒன்றை ஒன்று பாதித்தும், ஒன்று மற்றொன்றின் மேல் வினைபுரிந்தும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. பொருளியல் வாழ்வும், பண்பாட்டு வாழ்வும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளன. பண்பாட்டின் ஒரு கூறாக, முக்கியமான கூறாக, நாட்டார் வழக்காறு நிலை பெற்றுள்ளது என்பது யதார்த்தம். சமூகம் மேடு பள்ளம் என்ற இரு கூறாக பிரிந்து நிற்கிறது. மேட்டுக்குடி, சுரண்டுபவனாகவும் ஆதிக்கம் புரிபவனாகவும், பள்ளத்தில் உள்ள அடித்தள மக்கள், சுரண்டப்படுபவர்களாகவும், ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாகவும், சாதி, அரசியல் நிலைப்பாடுகளால் கட்டமைக்கப்பட்டுள்ளவர்களாகவும் இருக்கிறார்கள். அறிவியல் வளர்ச்சியடைந்த இக்காலத்தில் கூட இக்கட்டமைப்பு, தன்னைத் தகவமைத்துக் கொண்டே வருகிறது.

மேட்டுக்குடி தங்களின் செவ்வியல் தெய்வசித்தாந்த நெறிப்படி, ஆன்மா, பரலோகம், மறுபிறப்பு என்பவைகளை இவன் மீது திணித்துக் கொண்டே இருக்கிறது. இக்கூறுகள் சிலவற்றை இவன் உள்வாங்கிக் கொண்டாலும், இவர்களுக்கான உளவியல் தளத்தை அமைத்துக் கொண்டு, சமுதாயத்தில் ஏற்பட்ட அவர்களுடைய உளவியல் நெருக்கடியை, பண்பாட்டுத் தளத்தில் தணித்துக் கொள்கிறார்கள். சமூகத்தில் ஒரு பொன்னுலகத்தை உருவாக்க வேண்டிய அவர்களுடைய சக்தி வீணடிக்கப்படுகிறது. ஆதிக்க சக்திகளுக்கு எதிரான இவர்களுடைய கோபம் ஒருங்கிணைக்கப்பட்டு, அமைப்பு வடிவம் பெறுவதற்குப் பதிலாக, தங்களை தங்களால் கட்டியமைக்கப்பட்ட உளவியல் தளத்திற்கு மாற்றிக் கொண்டு, கோபம் அல்லது நெருக்கடிகள் தணிக்கப்படுகின்றன. இது பொருளியல் வாழ்வில் அவர்கள் அடையும் துன்பத்திற்கு ஆன எதிர்வினையை இன்னொரு தளத்தில், உளவியல் தளத்தில் தீர்க்க முனைவதால் யதார்த்த தளத்தில் அவர்கள் எந்த அசைவுகளையும் உருவாக்க முடிவதில்லை.

இது ஆதிக்க சக்திகளுக்கு அடித்தள மக்களின் ஒப்புதலை மீண்டும் மீண்டும் அளிப்பதாகவே உள்ளது. எனவே அடித்தள மக்களை ஒருங்கிணைக்க முயலும் ஆய்வாளர்கள், நாட்டார் வழக்காறுகளை அணுகி, நெருங்கி ஆராயாமல் அவர்களின் உளவியல் பாங்கு குறித்த எந்தத் தகவலையும் அறிந்து கொள்ள இயலாது. பண்பாட்டுத் தளத்தில் இவர்கள் ஆற்றுகின்ற செயல்பாடுகள் சமூக வாழ்விலும் பிரதிபலிக்கவே செய்கிறது. நாட்டார் வழக்காறு என்ற பண்பாட்டுக் கூறுகளைக் கட்டவிழ்க்காமல், மாற்றுப் பண்பாடு குறித்த புரிதலை உருவாக்க இயலாது. பொருளாதார, அரசியல் எதிர்வினைகளோடு, பண்பாட்டு எதிர்வினைகளையும் இணைக்கும் பொழுதே புதிய மாற்றத்தை நோக்கி நகர்த்த இயலும்.

சமூகப் போராளியின் பார்வையில் வழக்காறுகள்:

அரசியல் மற்றும் பொருளாதாரத் தளத்தில் அடித்தள மக்களைத் திரட்டி, ஆதிக்கச் சக்திகளுக்கு எதிராக போராட முயலும் ஒரு போராளி கூட, தனது குடும்பம், சாதி, கிராமம் மற்றும் வட்டாரம் சார்ந்த பண்பாட்டு நிகழ்விற்கு அடி பணிந்து போகும் தன்மையைக் காண்கிறோம். திருமணச் சடங்கு, பூப்புச்சடங்கு, சவ அடக்கச் சடங்குகளில் ஐக்கியப்பட்டுப் போவதைக் காண முடியும். பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றான நாட்டார் தெய்வ வழிபாடுகளை செவ்வியல் தெய்வங்களைப் போல் இதையும் ஒரு கருத்துமுதல் கோட்பாடுகளைக் கொண்ட தெய்வ வழிபாடாகக் காணும் போக்கு உள்ளது. இதனால் அடித்தள மக்களின் மனவிலியில் அமுக்கம் பெற்று இருக்கும் தொன்மங்களையும், வரலாற்றையும் புரிந்து கொள்ள தவறி விடுகிறார். இதனால் ஆய்வுகளால் கட்டமைக்கப்பட்ட நாட்டார் வழக்காற்றியல் பனுவல்கள் கூட, இவருக்கு கருத்துமுதல் கோட்பாடுகளாகக் கண்டுணர முடிகிறது. அரசியல் மற்றும் பொருளாதார தளத்தில் இவரோடு நெருங்கி இருக்கும் அடித்தள மக்கள், பண்பாட்டு அசைவியக்கத்தால் அந்நியமாகிப் போகும் விந்தையும் நடைபெறுகிறது. இங்குதான் ஆதிக்க சக்திகள், அடித்தள மக்களை தங்கள் கட்டுப்பாட்டில் கட்டிப் போட்டு வைக்கிறார்கள். போராளி தனிமைப்படுத்தப்படுகிறார்.

நாட்டார் சமய வழிபாட்டில் இக்காலத்தில் ஆதிக்க சக்திகளும், அடித்தள மக்களும், சாதி, கிராம, வட்டார அளவில் ஒன்றிணைந்து செயலாற்றுவதைக் காண முடிகிறது. சமூக, அரசியலில் ஆதிக்க சக்திகளுக்கெதிராக அடித்தள மக்களை அணி திரட்டும் போராளி தனது அணுகுமுறையால் தனிமைப்பட்டு திகைத்துப் போய் நிற்கிறார். எனவே, புறச்சான்றுகளான கல்வெட்டு, தொல்லியல், அகழ்வு இவற்றுடன் அகச்சான்றுகளான நாட்டார் வழக்காற்றியல் ஆவணங்களையும் ஒரு சான்றாக ஏற்றுக் கொள்வதைத் தவிர்க்க இயலாது.

வழக்காறுகளின் கூறுகளும் வெளிப்பாடுகளும்

நாட்டார் வழக்காறுகளில் உள்ள வாய்மொழி வரலாறுகளானாலும் அல்லது வழிபாட்டு நெறிகளானாலும் அவைகள் அடித்தள மக்களின் உளவியல் நெருக்கடிகளால், உருவாக்கம் பெற்று, மரபு ரீதியாக தலைமுறை தலைமுறையாக கடத்தப்படும் உளவியலின் கூட்டு உற்பத்தியாகும். எனவே இதில் காலமும் இடமும் முக்கியப் பங்காற்றுகின்றன. மரபானது வரலாற்றில் பயணிக்கும்போது, சிலவற்றை இழந்தும், சிலவற்றை இணைத்துக் கொண்டும் செல்கிறது. அடித்தள மக்களால் வெளிப்படுத்தப்படும் இந்த வழக்காறுகள் அனைத்தும் அவர்களின் யதார்த்த வாழ்வுக்கு உறுதுணையாக நிற்கிறது என்றும் நாம் கொள்ள வேண்டியது இல்லை. இவ்வழக்காறுகளின் கூறுகளில் பார்ப்பனியத்தின் புராண இதிகாச சொல்லாடல்களும் இணைந்து செயல்படுவதையும் காண முடிகிறது. இந்துப் பெருவெளியின் ஒற்றைக் கலாச்சார உருவாக்கத்திற்கு இது பேருதவி புரிகிறது என்பதையும் நாம் புறக்கணிக்க இயலாது.

குறிஞ்சித் தெய்வமான முருகனும், கொற்றவையும் இந்துப் பெருங்கதையாடல்களாக மாற்றப்பட்டு, பார்ப்பனியத்தை வலுவாக்கியது போல், ஆதிக்கவாதிகளால் கொலையுண்டு, அல்லது தற்கொலை செய்து கொண்டு, அடித்தள மக்களால் நாட்டார் வழக்காறுகளாக கைக்கொண்டு வந்த சாமிகள், இன்று ஈசுவரிகளாகவும், ஈசுவரன்களாகவும் உருமாற்றம் அடைந்து வருகிறது. பார்ப்பனியம், பொருள் முதல்வாத சித்தாத்தங்களான சாங்கியம், வைசேடிகம், மீமாம்சை, உலோகாயுதம், சமணம், பௌத்தம் போன்ற பார்ப்பன எதிர்ப்புத் தத்துவங்களை சிதைத்து, சில கூறுகளை உட்கொண்டு தனதாக்கிக் கொண்டது. சிலவற்றை அழித்தது. அதன் சார்பாளர்களையும் அழித்தது. பார்ப்பனியத்தின் வல்லாண்மையை நெருங்க இயலாமல், கடந்த காலங்களில் தனக்கான ஒருவழியாக வழக்காறுகளைப் படைத்த அடித்தள மக்கள், மீண்டும் பார்ப்பனியத்தின் இன்றைய வடிவத்திற்குள் மூழ்கும் அபாயம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எனவே, சட்டகத்திற்குள் சிக்காத, அதிகார ஒழுங்கின் ஆய்வு எல்லையை மீறத்தகுதியுள்ள ஆய்வாளர்களே இதை எதிர்கொள்ள இயலும்.

வழக்காறுகளின் ஆய்வு முறைகள்

தொடக்க காலங்களில் வணிகர்களும், இந்த நாட்டிற்கு பயணிகளாக வந்த மார்கோபோலோ போன்றவர்களாலும், தனது அனுபவங்களையும் நேரில் கண்டவைகளையும் எழுத்து வடிவில் பதிவு செய்திருந்தனர். பின்பு மதம் பரப்ப வந்த கிறிஸ்துவ பாதிரியார்களின் மறைதள வரலாறுகள் மூலம் இந்நாட்டு மக்களின் வழக்காறுகளை இனங்கண்டு பதிவு செய்தனர். மரபார்ந்த காலம் என்று சொல்லக்கூடிய 1900 முதல் 45 வரையான காலங்களில் எட்கர்தர்கள் போன்றவர்கள், காலனி ஆட்சியாளர்களின் வசதி கருதி, மாவட்டக் குறிப்பேடுகளில் செய்திகளாகப் பதிவு செய்து வந்தனர். அதன் பின் நவீன காலமான 1945 முதல் 60 வரையான காலகட்டங்களில் ஆய்வு நுட்பங்கள் உருவான பின், ஏராளமான செய்திகள் பதிவு செய்யப்பட்டன. மானுடவியல் துறை உருவான பின், ஒரு தனித்த சமூகத்தின் பண்பாட்டைப் பற்றி, முழுமையாகப் புரிந்து கொண்டு, அவற்றை முறையாகத் தொகுத்து பதிவு செய்யும் முறை உருவானது. குறிப்பிட்ட சமூகத்துடன் ஒன்றி வாழ்ந்து, உற்றுநோக்கி, கலந்துரையாடி, அவர்களின் நிகழ்த்தலோடு, தானும் நிகழ்த்தி, எழுத்து வடிவில் பதிவு செய்தனர். இதுவே ``இன வரைவியல்'' என்று அழைக்கப்படுகிறது.

வர்ணனை முறையில் உள்ளதை உள்ளபடியே கொடுப்பது, ஒப்பீட்டு வகைக்கு இதில் இடமில்லை. அமைப்பியல் என்ற இந்தக் கோட்பாடு. மானுடவியல், தொன்மவியல் நாட்டார் வழக்காற்றியல், இலக்கியம் ஆகிய துறைகளில் கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ளது. மந்திரம், முன்னோர் வழிபாடு, ஆவி நம்பிக்கை, இனக்குறி வழிபாடு போன்ற மானுடவியல் விளக்கங்கள், புராதன மனிதனின் வாழ்க்கைக் கூறுகளைத் தனித்தனியாக உள் தொடர்பற்று விளக்க முயற்சிக்கின்றன. இதையே லெவிஸ்ட்ராஸ் புராதன மனிதனின் ``மொத்த சிந்தனையின் தாக்கவியலைக் கண்டறிய முயலவில்லை'' என்கிறார். இவ்வாய்வு முறைகளின் ஆசான்களாக, பெர்டினண்ட் - டி-சசூர், ரோமன் யாக்கப்சன், விளாதிமிர் பிராப், லேவிஸ்ட்ராஸ், மைக்கேல் பூக்கோ, ஜான் லக்கன், ரோலன் பார்த்தஸ் ஆகியோர் ஆகும். இவர்களின் ``அமைப்பியல் கோட்பாடு'' மற்றும் பின் நவீன தத்துவக் கோட்பாடு அடிப்படையில் வழக்காறுகள் ஆய்வு செய்யப்பட்டு, எழுத்து வடிவம் பெற்று ஆவணங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஒரு கண்டுபிடிப்பை உறுதிப்படுத்திக் கொள்ளும் நேரடிச் சான்றாக இந்த ஆவணங்களைக் கையாள முடியுமா? என்பது குறித்து விவாதிக்கலாம்.

அமைப்பியல் கோட்பாடு

அமைப்பியல் என்பதற்கு மற்றொரு தமிழ்ப்பெயர் ``வடிவியல்''. அதாவது ஒன்றின் வடிவம் குறித்து ஆய்வு செய்யும் முறை என்பதாகும். வடிவம் என்பது அந்தரத்தில், எந்தவிதமான தொடர்பும் இன்றி செயல்படுவதும் இல்லை. இதற்கான வேர், பொருளியல் தளத்துடன் தொடர்பு கொண்டுள்ளது என்பது யதார்த்தமானது. உள்ளடக்கத்தை நிராகரித்து விட்டு, வடிவத்தை மட்டும் ஆய்வு செய்யும் முறையாகும். இதையே லெவிஸ்ட்ராஸ் ``அமைப்பியல் கட்டுமானத்தில் தொன்மங்களை மனிதன் எவ்வாறு சிந்திக்கிறான், படைக்கிறான் என்பதல்ல என் விழைவு; மாறாக தொன்மங்கள் மனித மனத்தில் அவர்களை அறியாமலேயே எவ்வாறு வார்த்தெடுக்கப்படுகின்றன என்பதுதான் என் வேட்கை'' என்று கூறி உறுதிப்படுத்துகிறார். மனிதன் இயற்கையின் விளைபொருள். அவன் உயிர் வாழ்வதற்காக இயற்கையிலிருந்து நுகர்கிறான். பொருளியல் அடிப்படையில் அவ்வாறு அவன் நுகர்வதற்காக அவன் இயற்கையோடு எவ்வாறு உறவாடுகிறான், என்பதைப் பொறுத்தே மனித சமுதாயம் உருவெடுக்கிறது. இதைத்தான் மனிதருக்கும், இயற்கைக்குமான இயக்கவியலாக மார்க்சியர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த இயக்கவியல் உறவில் நான்கு அடிப்படைக் கூறுகள் முக்கியமானவையாகும். 1. உள் வாங்குதல், 2. தக்க வைத்தல், 3. ஆராய்தல், 4. கற்பனை செய்தல் என்பனவாகும். இந்த நான்கு கூறுகளை அடிப்படையாகக் கொண்டுதான் மனிதர் - இயற்கை உறவு கட்டமைக்கப்படுகிறது. இவற்றில் பெரும்பாலானவை பண்பாட்டோடும், மானுட உணர்வோடும் தொடர்புள்ளவையாகும்.

பண்பாட்டின் ஒரு கூறு என்ற அளவில், நாட்டார் வழக்காறுகளின் தொடக்கம், மனித சமுதாயத்தின் தொடக்கத்தோடு இணைந்தது என்பதைப் புரிந்து கொண்டால், மனித வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளையும் பண்பாட்டின் தோற்றத்தோடு இணைத்துப் பார்க்க முடியும். ``ஆளும் வர்க்கங்கள் சிந்தனையைக் கட்டுப்படுத்துவதின் மூலமாகவும் ஆள்கின்றன'' என மார்க்சும், எங்கெல்சும், ``ஜெர்மன் தத்துவம்'' என்ற நூலில் குறிப்பிடுகின்றனர். ஒரு சமூகத்தின் கருத்து என்பது ஆதிக்கசக்திகளின் கருத்தாகவே இருந்து வந்துள்ளது. உற்பத்திச் சக்திகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆளும் வர்க்கங்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு மனித மனத்தின் படைப்பாக்கத் திறனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் ஆதிக்க சக்திகளுக்கு முக்கியமாகும். இளையராசா இசையை பண்ணையாரும், பண்ணை அடிமையும் சேர்ந்து ரசிப்பதைப் போல, நாட்டார் சமய வழிபாட்டில், ஆதிக்க சக்திகளும், அடித்தள மக்களும் ஒன்றாகக் கலந்து வழிபாடு செய்வதைக் காண்கிறோம். இவர்களுக்கிடையே உள்ள முரண்பாடு பொருளியல் தளம் என்ற உள்ளடக்கத்தில்தான். பண்பாட்டு வடிவத்தில் வர்க்கப் போராட்டத்தைக் காண முடிவதில்லை. இதுவே பண்பாட்டு நடவடிக்கைகளின் முக்கியக் கூறு. எனவே, ஆதிக்கச் சக்திகள், அடித்தள மக்களின் படைப்புத் திறனான நாட்டார் வழக்காறுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சி செய்கிறது.

எனவே, வடிவம் சார்ந்த பொதுத்தன்மையையும் உள்ளடக்கம் சார்ந்த தனித்தன்மையையும் இணைப்பதுதான் யதார்த்தமான ஆய்வு முறையாகும். ஆனால் லெவி ஸ்ட்ராஸ், இயக்கவியலை நிராகரிப்பதன் மூலம் "தொன்மங்களை மனிதன் எவ்வாறு சிந்திக்கிறான், படைக்கிறான் என்பதல்ல என் விழைவு'' என்று வடிவம் சார்ந்த பொதுத்தன்மையை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு உள்ளடக்கம் சார்ந்த தனித்தன்மையை நிராகரித்து விடுகிறார்.

இரண்டாவதாக வெவிஸ்ட்ராஸின், கிடைதள அணுகுமுறையாகும். இதில் இரண்டு விதமான தளங்களை அறிமுகப்படுத்துகிறார். முதல் தளம் ஒவ்வொரு மனிதனும் உணர்வுப்பூர்வமாக, பிரக்ஞை பூர்வமாக தான் செய்வது இன்னதுதான் என்ற நினைவுடன் செயல்படும் வாழ்க்கை. இரண்டாம் தளம் என்பதை ``சிக்மண்ட் பிராய்டு'' அவர்களின் ஆழ்மனம் குறித்த கருத்துக்களையே சுவீகரித்துக் கொள்கிறார். இதையே லெவிஸ்ட்ராஸ் ``அமைப்பு'' என்பதில் முன்னுதாரணமாகக் கொள்கிறார். இக்கிடைதள அணுகுமுறையை இன்னும் எளிமையாக விளக்கிக் கொள்ள சசூரின் மொழியியல் கருத்தையும் இணைத்து அமைப்பியல் வாதிகள் விவாதிப்பதைக் காணலாம். மரம் என்ற சொல்லில் இரண்டு தளங்கள் உள்ளன. மரம் என்ற ஒலித்தளம், ஒருவன் ஒலிக்க இன்னொருவன் காதில் வந்து சேர்கிறது. இதைக் குறிப்பான் அல்லது ஒலித்தளம் என்கிறார். ஒலிப்பவனின் மனதில் மரம் என்ற மனப்படிமம் இருக்கிறது. இப்படிமத்தை குறிபடு பொருள் என்கிறார். இது இரண்டாவது தளம். மரம் என்ற ஒலிக்கும், மரம் என்ற மனப்படிமத்திற்கும் எந்த ஒரு நேரடித் தொடர்பும் கிடையாது. இவை வேறு வேறான, தொடர்பற்ற இரண்டு தளங்கள். இவற்றில் லெவிஸ்ட்ராஸ் குறிப்படு பொருள் என்ற இரண்டாம் தளத்தையே அமைப்பு என்ற சொல்லால் குறிப்பிடுகிறார். ரோமன் யாக்கப்சன் என்ற ஒளியியல் அறிஞரின் ``இருமை எதிர்வுகள்'' என்ற கோட்பாட்டையும் லெவிஸ்ட்ராஸ் தனது அமைப்பியல் கோட்பாட்டிற்கு வலு சேர்த்துக் கொள்கிறார். அதன்படி அம்மா, மாமா போன்ற சொற்களின் ஒலியில் ``ஆ'' என்ற முழுக்க திறந்த வாயொலியும், ``ம்'' என்ற முழுக்க மூடிய, வாயொலியும் இணைந்து ஒலியை எழுப்புகின்றன. எனினும் இவை எதிர்மறைத் தன்மை கொண்டவை. முழுக்க முழுக்க மூடிய முழுக்க முழுக்க திறந்த ஒலிகள் இணைவாக்கம் பெற்றுள்ளன. இக்கோட்பாடு மார்க்சின் முரண்பாடுகளின் ஒற்றுமை என்ற இயக்கவியல் சார்ந்ததாக இருந்தாலும், இவையனைத்தும் வடிவம் சார்ந்த பொதுத்தன்மையையே சுவீகரிக்கிறது. உள்ளடக்கம் சார்ந்த தனித்தன்மையை நிராகரித்து விடுகிறது. உதாரணமாக சசூரின் மரம் விளக்கத்தை அணுகலாம். மரம் - மரம் என்ற மனப்படிமம். ``மரம்'' என்ற வாயொலி. மரம் பருப்பொருள். மரத்தைப் பார்ப்பவனுடைய கண்ணின் மூலம் மூளைக்குச் செல்கிறது. மூளையும் ஒரு பருப்பொருள். மூளை, மரம் என்ற மனப்படிமத்தை விளைவிக்கிறது. பின்பு மூளையின் கட்டளையின் மூலம் வாய் மரம் என்று ஒலிக்கிறது. இவை மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புடையது. மூளை என்ற பொருள் விளைவிக்கும் விளைபொருளே ``மனப்படிமம்'' என்பது. மூளையையும், மனப்படிமத்தையும் பிரிக்க இயலாது. அதேபோல் மூளை இடும் கட்டளையே ``மரம்'' என்ற ஒலிப்பான். எனவே மூளையையும், ஒலிப்பானையும் பிரிக்க இயலாது.

ஒலிப்பானுக்கும் மனப்படிமத்திற்கும் அடிவேராக இருக்கின்ற பருப்பொருள்களான மரம், கண், மூளை, வாய் போன்ற உண்மைகளை, யதார்த்தத்தை பருப்பொருளை இக்கோட்பாடு நிராகரித்து விடுகிறது. இதன் மூலம் அமைப்பியல், வடிவம் சார்ந்த பொதுத்தன்மைகளையே கவனத்தில் கொண்டு, உள்ளடக்கம் சார்ந்த தனித்தன்மைகளை நிராகரித்து விடுகிறது. மேலும் கிடைதள ஆய்வு அணுகுமுறை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்பதை நிராகரித்து, அத்தனுடன் அக் கிடைதளமும் சதா இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதையும் நிராகரிக்கிறது. இதற்கு மாறாக, யதார்த்தவாத அணுகுமுறை என்பது உள்ளடக்கம், உள்ளடக்கத்தில் உள்ள பல்வேறு கூறுகளும், வடிவம் மற்றும் அதன் பல்வேறு கூறுகளும், ஒன்றோடொன்று தொடர்புடையன என்றும் அவைகள் ஒன்று, மற்றொன்றின் மேல் சதா வினை புரிந்து வருகின்றன என்றும், இவை அனைத்தும் சதா இயங்கிக் கொண்டிருக்கின்றன, மாறிக் கொண்டிருக்கின்றன வளர்ந்து கொண்டிருக்கின்றன என்றும் கூறுகிறது. மேலும், முரண்பாடுகளின் ஒத்திசைவுதான் வளர்ச்சிக்கும் மாற்றத்திற்கும் காரணம் என யதார்த்தவாத ஆய்வு முறை விளக்கம் அளிக்கிறது.

பின் நவீனத்துவக் கோட்பாடு

மேலும், பின் நவீனத்துவ ஆய்வுக் கோட்பாடுகளும் நாட்டார் வழக்காற்று ஆய்வில், பெரும் பங்கைச் செலுத்துகின்றன என்பதை மறுப்பதற்கில்லை. முதலில் ``மனதில் ஏற்படுத்திக் கொள்ளும் கட்டமைப்புதான் காட்சியாகிறது'' என பின் நவீனத்துவம் கூறுகிறது. அது ``எதை நம்புகிறோமோ, அதைத்தான் காண்கிறோம்'' என்கிறது. ஆனால் யதார்த்த வாதம் "எதைப் பார்க்கிறோமோ அதைத்தான் நம்ப முடியும்'' எனக் கூறுகிறது. பின் நவீனத்துவவாதிகளான பூக்கோ மற்றும் தெரிதா ஆகிய இருவரும் கூறுவது ஒரு படைப்பாளியின் படைப்பு வெளிவந்த உடனேயே அந்தப் படைப்பாளி இறந்து விடுகிறார். படைப்பு வெளிவந்தவுடன் படைப்பாளி முக்கியத்துவதமற்றுப் போய் விடுகிறார். ஏனெனில் அந்தப் படைப்பு பற்றிய கருத்து வாசிப்பவர் மனதில் முன்கூட்டியே உருவாகி விடுகிறது. அந்தப் படைப்பாளி படைத்தளித்த புறநிலை யதார்த்தம் என்ன என்பதற்கும், அந்தக் கருத்திற்கும் எந்தத் தொடர்பும் இருப்பதில்லை என்கிறார்கள். இதை அப்படியே வழக்காறுகளின் ஆய்விற்கும் பயன்படுத்துகின்றனர். வழக்காறுகளை உருவாக்கிய அடித்தள மக்கள் என்ற யதார்த்தத்தையும், அவர்கள் இவ்வழக்காறுகளைக் கட்டமைக்க காரணமான புறநிலை யதார்த்தத்தையும், பின் நவீனத்துவம் நிராகரித்து விடுகிறது.

ஒருவருக்கு வழக்காறு குறித்த கருத்து, முன்கூட்டியே மனதில் உருவாகி விடுவதால், வழக்காறுகள் நிகழ்கின்றன என்கிறார்கள். உள்ளடக்கம் புறக்கணிக்கப்படுகிறது. வழக்காறு உருவாவதற்கு காரணமான அடித்தள மக்களின் புறநிலை யதார்த்தத்தை பின் நவீனத்துவம் நிராகரித்து விடுகிறது. எனவே பின் நவீனத்துவம் என்பது பழைய பத்தாம்பசலி கருத்து முதல்வாதத்திற்கு திரும்பிச் செல்வதேயன்றி வேறொன்றுமில்லை. ``நான் எதை நம்புகிறேனோ, அதையே காண்கிறேன்'' என்பது பிரெஞ்சு நாட்டின் புகழ் பெற்ற தத்துவவாதி டிகோதே. ``நான் நினைக்கிறேன் அதனால் இருக்கிறேன்'' என்று சொன்னதைப் போன்றதுதான். இதற்குப் பதில் சொன்ன மார்க்ஸ், `` நான் இருக்கிறேன், அதனால் தான் நினைக்கிறேன்'' என்றார். இப்படி பின் நவீனத்துவம் என்பது வழக்காறுகளில் படைப்புத்திறன் பெற்ற அடித்தள மக்களையும், அவர்களின் படைப்புகளான வழக்காறுகளையும் உண்மை நிலைகளிலிருந்து அப்புறப்படுத்துகிறது அல்லது திசை திருப்புகிறது.

இவ்வாறு "திசை திருப்புவது" என்பது ஆளும் வர்க்கங்கள் தங்கள் திறமையை நிலைநாட்டிக் கொள்ளவும் வலுப்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது. பின் நவீனத்துவம் ஒட்டு மொத்தத்தின் ``பொதுவான அம்சம்'' என்பதையும் ``அனைவருக்குமான பொதுத்தத்துவங்களையும்'', ``பெருங்கதையாடல்'' என்று கூறி நிராகரித்து விடுகிறது. உலகப் பொது லட்சியங்களான, ``பகுத்தறிவு, சுதந்திரம், சமத்துவம்'' ஆகியவற்றை ``பெருங்கதையாடல்'' என்று கூறி நிராகரித்து விடுவதால், துண்டு துண்டான கூறுகளை மட்டுமே பின் நவீனத்துவம் ஏற்றுக் கொள்வதால், இத்தத்துவம் மக்கள் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கிறது. சாதி, மதம், இனம் என்ற அடையாள அரசியல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. இரு துருவ உலக வீழ்ச்சியும் ஒரு துருவ உலக வளர்ச்சியும் இதன் வளர்ச்சிக்கு தீனி போடுகிறது.

யதார்த்தவாத கோட்பாடு ஆய்வு

கொடைக்கானல் வட்டம், வில்பட்டி கிராமத்தில், ஊருக்கு வெளியே ``தள்ளறகவெ'' என்ற இடத்தில் பேச்சிம்மன் பொங்கல் விழா வைகாசியில் நடைபெறுகிறது. இதன் முக்கிய கூறுகள் 1) ஆண்கள் மட்டுமே சென்று பொங்கல் இட்டு, பிரார்த்தனை செய்வது, 2) பெண் ஆடுகளை பலி கொடுப்பது, யதார்த்தவாத அணுகுமுறையானது, ``தள்ளறகெவ'' என்பதற்கு தள்ளிவிடுகின்ற மலையுச்சி என்று காரணப் பெயரைக் கண்டறிந்து, இன்னொரு விழாவான ``கொப்பேரன் வெறியாட்டு'' மூலம் பெண்களை மலையுச்சியிலிருந்து தள்ளிக் கொன்றதால் ``தள்ளறகெவ'' என்று பெயர் பெற்றதை கண்டறிகிறது. எட்சர்தர்சன், வால்ஹவுஸ் என்ற மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்சன் ஆகியவர்களின் குறிப்பேட்டிலிருந்து இவைகளை உறுதி செய்து கொள்கிறது. அதன் மூலம் மூன்று வித காரணங்களை கண்டுபிடிக்கிறது. 18-ஆம் நூற்றாண்டில் இக்கிராமத்தில், ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கையில் மிகக் குறைந்து போனதால் 1) கதவு நிலவுக்கு தாலி கட்டிக் கொண்டு பல ஆண்களுடன் புணர்ச்சி நடத்தி குழந்தை பெற்றுக் கொள்வது, 2) 10 வயது பையன்களுக்கு 2 அல்லது 3 பெண்களை மணம் முடித்துக் கொண்டு பல ஆண்களுடன் புணர்ந்து குழந்தை பெற்றுக் கொள்வது, இத்திருமணங்களை மானுடவியல் ``நிலையற்ற மணக்குடும்பம்'' என்று கூறுகிறது. 3) கணவன் நினைவாக வெள்ளை ஆடை உடுத்த கிராம சமூகம் அனுமதியளிக்கவில்லை. இந்த மூன்று நடைமுறைகளையும் ஏற்றுக் கொள்ளாத பெண்கள் மலையுச்சியிலிருந்து தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவேதான் பேச்சியம்மன் பொங்கலில் ஆண்கள் மட்டும் (தள்ளி விடப்பட்ட மலையுச்சி) தள்ளற கெவ என்ற இடத்திற்கு சென்று பேச்சியம்மன்னுக்கு பெண் ஆடுகளை வெட்டி (குறியீடு) பொங்கலிட்டு, பிரார்த்தனை செய்கின்றனர் என்ற வரலாற்று உண்மையை களப்பணி மூலமும், ஒப்பீடு செய்வதின் மூலமும் கண்டறியப்பட்டது. இதுவே யதார்த்தவாத அணுகுமுறையாகும். (கள ஆய்வு- இக்கட்டுரையாளர்)

எனவே, அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம் என்ற ஆய்வு முறைகள் என்பது ஆதிக்க சக்திகளின் ஆய்வின் அதிகார எல்லைக்கு உட்பட்டதாகும். எனவே தான் அடித்தள மக்களின் உண்மை வரலாற்றைக் கட்டமைக்க விரும்பும் வரலாற்றாய்வாளர்கள் அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவ ஆய்வு முறைகளால் உருவாக்கப்பட்ட ஆவணங்களை சான்றாவணங்களாகக் கையாள மிகுதியான தயக்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

யதார்த்தவாத ஆய்வாளரின் பணிகள்

யதார்த்தவாத ஆய்வாளர்கள் ஒரு பக்கம் ஆதிக்க சக்திகளின் ஆய்வை கட்டமைத்து வரும் ஆய்வாளர்களாலும், மறுபக்கம் அமைப்பியல் ஆய்வு முறைகளில் நம்பிக்கை கொண்ட ஆய்வாளர்களாலும் உருப்பெற்ற பனுவல்கள் மூலம் அடித்தள மக்களின் உண்மை வரலாற்றை இனம் காண இயலாமல் திகைத்துப் போய் நிற்பதையும் காண்கிறோம். இதற்கு இரண்டு வழிகளே இருக்கின்றன. ஒன்று, நாட்டார் வழக்காறுகளை, ஒரு சாதி, சமய வழிபாடாகக் கருதாமல் அவற்றை நெருங்கியிருந்து. அதனோடு உறவாடி, தானே களப்பணி ஆய்வு செய்து சுய அனுபவத்தைப் பெற்று, இயக்கவியல் பொருள் முதல்வாத அணுகுமுறையில் ஆய்வு முறைகளை மேற்கொள்வது, இரண்டு கல்விப் புலங்களில் பேராளர்களால் ஆய்வு செய்யப்பட்ட பனுவல்களை யதார்த்தவாத அணுகுமுறை மூலம் மறுவாசிப்பு செய்வது என்ற இரண்டு நடவடிக்கைகளையும் தாமதமின்றி செய்வது. இதுவே நாம் அடித்தள மக்களின் மரபை மீட்டெடுக்க வாய்ப்புள்ள வழிகளாகும். யதார்த்தவாத ஆய்வுமுறையானது, வழக்காறுகளின் மேல்கட்டுமானத்தை அணுகி, ஆய்ந்து, அதன் அடிப்படைக் கட்டுமானத்தைக் கண்டறிந்து, ஒட்டுமொத்தத்தின் உள் இணைப்பு விதிகளை ஆய்வு செய்யும் ஒரு முறையாகும். கால, இடைவெளி மற்றும் ஒப்பீட்டு முறையில் ஆய்வு செய்வதாகும். அனைத்தும் ஒன்றோடொன்று சார்ந்துள்ளது. உட்கிடைதளம் உட்பட அனைத்தும் இயங்கிக் கொண்டிருக்கிறது. மாறிக் கொண்டிருக்கிறது. முரண்பாட்டின் ஒத்திசைவால் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்ற விதிகளுடன் ஆதிக்க சக்திகளின் அதிகார ஆய்வு எல்லையை உடைக்கும் சுதந்திரமான ஆய்வு முறைகளை மேற்கொள்வதே, யதார்த்தவாத அணுகுமுறையாகும். அமைப்பியல் மற்றும் பின் நவீனத்துவம் ஆகியவற்றின் வடிவம் சார்ந்த சில ஆய்வுகள் நமது ஆய்வுக்கு துணை செய்யுமானால், அவற்றை சுவீகரித்துக் கொள்வதிலும் தவறில்லை. மேற்கண்ட வழிமுறைகள் மூலம் வழக்காறுகளையும், பதிவு செய்யப்பட்ட பனுவல்களையும் மறுவாசிப்பு செய்வது மிக அவசியமாகும்.

மறுவாசிப்பு என்பது பனுவலை அர்த்தப்படுத்தும் ஒரு முறையாகும். பனுவலைக் கட்டுடைத்து, ஒவ்வொரு கூறுகளையும் விளக்கி, ஒப்புமைப்படுத்தி, மீண்டும் யதார்த்தவாதச் சொல்லாடல்களால் நிரப்பப் பெற்று, முற்போக்கு பனுவலாக உருமாற்றம் செய்வது, இதன் மூலம் பனுவலின் ஆழ்மனதைத் தொட்டுணர முடியும். இப்படி உருப்பெறும் பனுவலே, சான்றாவணமாக நிலைத்து நிற்கும்.

வழக்காறுகளும் பயன்பாடுகளும்

இன்றைய சமூகச் சூழல் என்பது ஏகாதிபத்தியவாதிகளால், உலகமயமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒரு துருவ உலகம் என்பதைக் கட்டமைக்க, அமெரிக்காவும் மற்றும் அதன் கூட்டாளி நாடுகளும் பெரும் முயற்சி எடுத்து வருகிறது. உச்சகட்டமான லாபமே உலகமயப் பொருளாதாரத்தின் ஒரே நோக்கம். லாபத்தை உச்சத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், மனிதச் செயல்பாட்டின் அவனின் படைப்பாக்க திறனின் அனைத்து அம்சங்களையும் வர்த்தகச் சரக்காக மாற்ற வேண்டும். ``பண்பாடும்'' வர்த்தகச் சரக்கமாக மாற்றம் பெறுகிறது. இது சந்தைப் பொருளாதாரத்தில் எப்போதும் நடப்பதுதான். ஆனால் வர்த்தகச் சரக்கமாக மாற்றப்படுவதையும் தாண்டி உலக மயமாக்கலின் மூலமாக அதை ஒற்றைத் தன்மை வாய்ந்ததாக மாற்றுவது என்பது நடக்கிறது. ஒற்றைத்தன்மை வாய்ந்ததாக மாற்றும்போதுதான், அதை மிகப்பெரும் அளவுக்கு உற்பத்தி செய்ய முடியும். ``போர்டு பவுண்டேசன்'' போன்ற அமைப்புகள் வழக்காறுகளின் ஆய்வுக்கு நிதியை அள்ளி வழங்குவதும் இதற்காகத்தான்.

ஸ் என்று சுருக்கமாகக் குறிப்பிடும் இன்பர்மேஷன், கம்யூனிகேசன், எண்டர்டெய்ன்மெண்ட் என்று மூன்று துறைகள் சார்ந்த நிறுவனங்கள் மதத்தையும், பண்பாட்டையும் வர்த்தகமயமாக்குகின்றன. அதற்காக ஒற்றைத்தன்மை உள்ளதாக மாற்றுகின்றன. ஐஸ்(ICE) ஆதாயமாக மாற்றுவதற்காக பண்பாடு, கலை, இலக்கியம் யாவும் தொழில்மயமாகப்படுகின்றன. உண்மை வரலாற்றை அப்புறப்படுத்தி விட்டு, அங்கே புராணத்தை வைப்பது, தத்துவத்தை அகற்றிவிட்டு, அங்கே இறையியலை வைப்பது என்று நமது நாட்டு மதவெறி சக்திகளின் ஒற்றை கலாச்சார சதியுடன், அனைத்தையும் விற்பனைக்கான சரக்காக்குவது என்ற உலகமய சக்திகளின் சதியும் இணைந்து, அடித்தள மக்களின் இயல்பு வாழ்க்கை மீது தாக்குதலைத் தொடுத்துள்ளன. அமைப்பியல் மற்றும் பின் நவீனத்து பனுவல்கள் வழக்காறுகளையும், அதைப் படைத்தளித்த அடித்தள மக்களையும் உண்மை நிலைகளிலிருந்து அப்புறப்படுத்துவதால், இம்மாதிரியான ஆவணங்களை, உலகமயமாக்கல் சக்திகளும் மற்றும் மதவெறியர்களும் பயன்படுத்திக் கொள்ள சுலபமான வாய்ப்புகளை அள்ளி வழங்குகின்றன.

ஆய்வு செய்யும் நோக்கம் என்ன? என்பதிலிருந்து தான் ஒரு ஆய்வாளர் தனக்கான கோட்பாடுகளைத் தேர்வு செய்து கொள்கிறார். நோக்கம்தான் வழிமுறையைக் கட்டமைக்கிறது. நாம் அடித்தள மக்களின் போராட்ட மரபை மீட்டுருவாக்கம் செய்து, அவர்களுக்கே வழங்கப் போகிறோமா? அல்லது உலகமய சக்திகளுக்கும், மதவெறி சக்திகளுக்கும் உதவப் போகிறோமா? என்பதே நம்முன் எழும் கேள்வியாக இருக்கிறது.

எந்த நாகரீகத்தைச் சேர்ந்த சமுதாயமானாலும், அதன் உள்ளடக்கமாக, உண்மையாக இருப்பது மனிதர்கள்தான். அந்த மனிதர்களே நமது வழக்காறுகளின் நாயகர்கள். அவர்களது வாழ்க்கையும், அவர்களது பிரச்சனைகளும் போராட்டங்களும், அவர்களது நிலைத்திருத்தலும்தான் உண்மையாக உள்ளது. வழக்காறுகளின் மையப் பொருளாக ``மனிதம்'' என்ற கூறுதான் இருக்க வேண்டும். வடிவம் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதிலிருந்து உள்ளடக்கத்தை வடிகட்டி எடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியமானது. பண்பாட்டுத்தளத்தில் வழக்காறுகளில் வடிவத்திற்கும், உள்ளடக்கத்திற்கும் இடையே நடைபெறும் விவாதத்தின் மையப் பொருள் இதுதான்.

எனவே, யதார்த்தவாத அணுகுமுறையில் ஆய்வு செய்யப்படும் நாட்டார் வழக்காறுகளே, உண்மைச் சான்றாவணமாக நிலை பெறும். வரலாற்றாய்வாளர்களும் இவற்றைக் கையாள்வதற்கு தயக்கம் காட்டமாட்டார்கள் என்பது உறுதியானது. இப்படிப்பட்ட ஆய்வுகள், அடித்தள மக்களை ஒருங்கிணைக்க முயலும் போராளிக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

(28.1.2009 அன்று நெல்லையில் நடைபெற்ற நாட்டார் வழக்காறு தேசிய கருத்தரங்கில் வாசிக்கப்பட்டது)

உதவிய நூல்கள்:

1.நாவாவின் ஆராய்ச்சி இதழ் 44 55-1993- 1.சி.பக்தவச்சல பாரதி, 2.அ.சிவசுப்பிரமணியன்

2.நாவாவின் ஆராய்ச்சி இதழ் 34-1990.- ந.முத்துமோகன்

3. பண்பாட்டுத் தளத்தில் படைப்பாளிகள் - சீத்தாராம் யெச்சூரி

4. அடையாள அரசியலும் பின் நவீனத்துவமும் - பிரகாஷ் காரத் (செம்மலர்)

5. லோகாயுதம் - தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய.

- ஈரோடு தி.தங்கவேல்