சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு – 15

சென்ற வாரம் ஒரு நாள் சென்னையில் உதவி இயக்குநர்களிடையே ஒரு கூட்டத்தில் பேச நேர்ந்தபோது ஒருவர் கேட்டார், “ஒரு ஆவணப்படத்தை உருவாக்குவதற்கும் ஒரு கதைப்படத்தை உருவாக்குவதற்கும் அணுகுமுறையில் அடிப்படை வித்தியாசம் என்ன?’’

இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்ல முடியாது. கதைப்படத்தை பொறுத்தவரை இயக்குநர் எல்லா விஷயங்களையும் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க விரும்புவார். தான் சொல்ல விரும்பும் கதைக்காக, தன் சக்திக்கேற்ப, தன் சூழலுக்கேற்ப தன் கட்டுப்பாட்டிற்குள் வரக்கூடிய விஷயங்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார். ஆனால், ஆவணப் படங்களைப் பொறுத்தவரை எல்லா விஷயங்களையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது இயக்குநருக்கு முடியாத ஒன்று. ஆனால், தான் சொல்ல விரும்பும் விஷயத்தைக் கொண்டுவர இயக்குநருக்குத் தீவிர முனைப்பும், கடும் உழைப்பும் தேவைப்படுகிறது.

ஆனால், தற்போதைய காலகட்டத்தில் சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில், நமக்கு தினசரி கிடைக்கும் செய்திகள்கூட டெலிவிஷன் சேனல்களில் பல நேரங்களில் அள்ளி அள்ளித் தெளித்த ஆவணப்பட துளிகளாய்த்தான் வருகிறது. செய்திகளுக்கான டெலிவிஷன் சானல்களில் பணிபுரிகின்ற செய்தி தயாரிப்பாளர்கள் பல முக்கிய செய்தி களை ஓர் ஆவணப்பட அணுகலோடுதான் தருகிறார்கள். அவ்வாறு செய்யும்போது சுவை கூட்டவும், சுவாரஸ்யமாக்கவும், தெரிந்தே கூசாமல் பொய் சொல்லவும் செய்கிறார்கள்.

சமீபத்தில் பின்லேடன் கொல்லப் பட்ட செய்தி டெலிவிஷனில் வந்த போது கண்கூடாகப் பார்த்தோம். இறந்துபோன பின்லேடனின் முகம் என எல்லா சேனல்களும் ஒரு முகத்தைக் காட்டின. சில மணி நேரத் திற்குள் அதே சேனல்கள் அந்த முகம் இறந்த பின்லேடனின் முகம் அல்ல; மாறாக, உயிரோடு இருந்தபோது எடுக்கப்பட்ட பின்லேடனின் முகத் தில் சிதைக்கப்பட்ட கண்களும் ரத்தமும் புனையப்பட்டது என்று அறி வித்தன. அமெரிக்க அரசும் இறந்து போன பின்லேடனின் உருவத்தின் புகைப்படத்தை வெளியிடப்போவ தில்லை என அறிவித்தது. ஆனாலும், அதே சேனல் கள் பின்லேடனைப் பற்றி பேசும்பொழுதெல்லாம் புனையப் பட்ட அப்படத்தை தொடர்ந்து காண்பித்தன. இந்தப் போக்கு தற்போது ஆவணப்பட தயாரிப்பு களிலும் அதிகம் காணப்படுகிறது. யுத்தம் மற்றும் மிகமோசமான விபத்துகளைப் படம்பிடிக்கும் ஒளிப்பதிவாளர்கள் எப்போதும் தங்கள் பைகளில் குழந்தைகள் விளையாடும் கரடி பொம்மை, குழந்தைகளின் காலணிகள் மற்றும் குழந்தைகள் வாயில் சப்பும் ரப்பர்களை வைத்திருப்பர் என்றும், பல நேரங்களில் படம் பிடிக்கும்பொழுது அவற்றை பிரேமுக்குள் எறிந்து படம் பிடிப்பர் என்றும் பல முறை கேள்விப்பட்டிருக்கிறேன்.

யுத்தம் மற்றும் விபத்து காட்சிகளில் இது போன்ற குழந்தைகளோடு தொடர்புடைய பொருட்களைப் பார்க்கும்போது பார்வையாளன் மனது கனக்கும். பார்வையாளன் மனதில் அப்படி ஒரு பாதிப்பை, நெகிழ்வை ஏற்படுத்தத்தான் ஒளிப்பதிவாளர்கள் அப்படிச் செய்கிறார்கள். இதை நாம் முறையற்ற செயல், பொய் என்று சொல்வதா அல்லது சொல்ல வந்த விஷயத்தின் மீது ஈர்ப்பை கூட்டுவதற்கான செயல்பாடு என்று சொல்வதா? ஓர் ஆவணப்பட தயாரிப்பில் அவ்வாறு செய்யும் பொழுது, அதை தொழில் தர்மத்திற்கு எதிரான செயலாகத்தான் பார்க்க வேண்டும். ஆனால், இதையே யுத்தம் மற்றும் விபத்து பற்றிய கதைப் படத்தில் அவ்வாறு செய்தால் அது அழகியல், இயக்குநரின் திறமை என்று மெச்சப்படுகிறது.

அவணப்படங்கள் பார்வையாளன் மீது பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் காட்சிகளை ஜோடிப்பதற்குப் பதிலாக உண்மையில் கிடைக் கும் விஷயத்தின் ஆன்மாவுக்குள் புகவேண்டும். அதற்கு ஆவணப்படத்திற்கான விஷயத்தின் ஆழத் திற்குள் புகவேண்டும். ஆவணப்படங்களை புனையப்படாத படங்களாக எடுக்கும் பொழுது எப்போதும் சுவாரஸ்ய மான, பாதிப்பை ஏற்படுத்தும் காட்சி கள் கிடைக்கும் என்று சொல்ல முடி யாது. சந்தர்ப்பவசத்தால், அதிர்ஷ் டவசத்தால்(?) சில நேரங்களில் சுவாரஸ்யமான மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும் காட்சிகளைப் பெற லாம்.

சுனாமி பற்றிய ஓர் ஆவணப் படத்தில் அப்படியொரு காட்சியைப் பார்த்தேன். தூரத்தில் வரும் பேரலையை ஓர் ஒளிப்பதிவாளர் பாதுகாப்பான தூரத்தில் இருந்து படம் பிடிக்கிறார். அதை இன்னும் பாதுகாப்பான தூரத்தில் இருந்து இன்னொரு ஒளிப்பதிவாளர் படம் பிடிக்கிறார். அந்தப் பேரலை யாருமே எதிர்பாராத வண்ணம் ஒரு சில நொடிகளில் பெரும் சீற்றங்கொண்டு வெகுவேகமாக முன்னேறுகிறது. இதை சற்றே தாமதமாக உணர்ந்த முதல் ஒளிப்பதிவாளர் அலையிலிருந்து விலகி ஓட ஆரம்பிக்கிறார். ஆனால், கற்பனை செய்ய முடியாத அலையின் வேகம், ஒரு கண நேரத்தில் முதல் ஒளிப்பதிவாளரையும் அவரது கேமராவையும் கபளீகரம் செய்து விடுகிறது. பாதுகாப்பான உயரத்தில் இருந்து எடுக்கும் இரண்டாவது ஒளிப்பதிவாளரின் கேமராவில் இது அப்படியே பதிவாகிறது.

இதைப் பார்த்தபோது அந்தக் காட்சியின் பாதிப்பையும், அதிர்ச்சியையும் மீறி அந்த இரண் டாவது கேமராமேன் எத்தனை அதிர்ஷ்டக்காரன் என்று என் மனம் நினைத்தது. அவன் பிழைத்துக் கொண்டான் என்பதற்காக அல்ல. மாறாக, அவன் கேமரா முதல் கேமராமேனை சுனாமி அலை கபளீகரம் செய்ததை பதிவு செய்ததற்காக அவ்வாறு நினைத்தது. தொடர்ந்து அவ்வாறு நினைத்ததற்காக என் மனதிற்குள் ஒரு குற்ற உணர்வு.

நுட்பமான மனித பிரச்சினைகளை, சமூகப் பிரச்சினைகளைப் பற்றிய ஆவணப்படங்களை எடுக்கும்பொழுது அதன் இயக்குநரால் இந்தக் குற்றஉணர்விலிருந்து தப்பவே முடியாது. எத்தனை நுட்பமான மனித, சமூக பிரச்சினை குறித்து கதைப்படம் எடுத்தாலும், அது குறித்து குற்ற உணர்வு ஏற்படுவது என்பது அரிதான ஒன்று. ஆனால், ஆவணப்படங்கள் எடுக்கும்பொழுது இத்தகைய உணர்விலிருந்து தப்புவது கடினம். குற்ற உணர்வோடு, படம் எடுப்பவனுக்கு இது ஒரு போராட்டமுமாக அமைகிறது.

தமிழ்நாட்டில் சுனாமியால் பாதிக்கப்பட் டோருக்குச் சேரவேண்டிய உதவிகள் போய் சேர்ந்ததா, இல்லையா என ஆய்வு செய்யும் வகையில் சுனாமி முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் ஓர் ஆவணப்படம் எடுத்தேன். அப்போது நாகப் பட்டிணத்தில், சுனாமி முடிந்து நான்காண்டுகள் கழிந்த பின்னரும் சுனாமியால் பாதிக்கப்பட்ட பல மீனவர்கள், மிக மோசமான சூழலில் தற்காலிக குடியிருப்பில் வாழ்ந்து வந்தனர். அவர்களைப் படம் பிடித்துக் கொண்டிருந்த சமயத்தில் அன்றைய செய்தித்தாளில் இன்னொரு தற்காலிக குடியிருப் பில், மீனவர் ஒருவர் மாற்று ஏற்பாடு செய்து தராமலேயே அவரது தற்காலிக குடியிருப்பை அதிகாரிகள் இடித்ததால், தன் மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடு எங்கு செல்வது என்று பரிதவித்த அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் செய்தி. உடனே, அந்தக் குடியிருப்பைத் தேடிச் சென்றேன். அங்கு சோகமே வடிவாய் இருந்த தற்கொலை செய்து கொண்ட மீனவரின் மனைவியையும் குழந்தைகளையும் படம் பிடித்தேன். ஒருவித தயக்கத்தோடு மனைவி யிடம் “உங்களிடம் ஒரு பேட்டி எடுக்கலாமா?’’ எனக் கேட்டேன். அவர் ஒப்புக்கொண்டார்.

தற்கொலை முடிவுக்கு அவர் கணவர் எப்படி தள்ளப் பட்டார் என்று கேட்டபொழுது, அவர் தற்கொலை செய்துகொண்ட தினத்தின் நிகழ்வுகளை விவரிக்கத் தொடங்கினார். அவர் முகத்தையும், பேசுவதையும் உன்னிப்பாக கேமரா திரையில் பார்த்துக் கொண்டி ருந்தேன். ஒரு கட்டத்தில் அவர் உடைந்து அழப் போகிறார். அவ்வாறு அழவேண்டும் என்றும் என் மனம் விரும்பியது. அப்படி அழுதால் பார்வை யாளனை மிகவும் பாதிக்கும் என்றெல்லாம் என் மனம் நினைத்தது. நான் நினைத்தபடியே அவர் உடைந்து அழுதார். படப்பிடிப்பு நான் நினைத்தது போலவே நன்றாக நடந்ததாக நினைத்தேன். பின்னர் அதைத் தொடர்ந்து எழுந்த குற்ற உணர் வால் படத்தொகுப்பின்போது அவர் அழும் காட்சியை நான் பயன்படுத்தவில்லை.

தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சி யின் உச்சத்தில் இருக்கும் சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் டெலிவிஷன் நிகழ்ச்சிகள், ஆவணப் படங்கள் எல்லாமும் வியாபாரம் மற்றும் விறு விறுப்பான நாடகம் என்றாகிவிட்டன. எனவே, இங்கு குற்றவுணர்வு மற்றும் குழப்பங்களுக்கு இடம் கிடையாது. விரைவு, விறுவிறுப்பு இதில் தான் எல்லா கவனமும் செலுத்தப்படுகிறது.

சினிமாவின் முதல் நூற்றாண்டில் ஆவணப் படங்கள் உண்மையை ஊன்றுகோலாகக் கொண்டு உலாவந்த ஓர் உன்னத கலைவடிவமாகக் கருதப் பட்டது. ஆவணப்படங்களின் முன்னோடிகளில் ஒருவரான ஜான் கிரியர்ஸன் சொல்கிறார், “வாழ்க்கையை உன்னிப்பாக நோக்கி, தேவை யானதை மட்டும் எடுத்துக்கொண்டு அதன் மூலம் ஒரு புதிய கலை வடிவத்தை உருவாக்கும் சக்தி சினிமாவுக்கு உண்டு’’. இதையேதான் பிரபல எழுத்தாளர் சல்மான் ரஷ்டி வேறு மாதிரி சொல் கிறார், “இதுவரை சொல்லப்படாத கதைகளை சொல்வதற்கும் குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வும் ஒரு புதிய மொழி தேவைப்படுகிறது. அதை நாம் கண்டுபிடித்தாக வேண்டும். இது சினிமா, ஆவணப்படங்கள், வாழ்க்கை வரலாறு எல்லா வற்றிற்கும் பொருந்தும். இங்கு தவறான மொழியை உபயோகப்படுத்தினால் அப்படைப்பு கள் பார்வையற்ற, கேட்கும் திறனற்ற படைப்பு களாகத்தான் இருக்கும்.’’

சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில் பெரும்பாலானவர்களுக்கு இம்மொழி தேவை யற்று போனது. மாறாக, பரபரவென சொல், பட்டென சொல். அதற்கான மொழிக்கு உண்மை யை, வாழ்க்கையைவிட அலங்காரமும் ஜோடனை யும் அவசியம் என சொல்லப்படுகிறது.

இயக்குநர் சத்யஜித் ரே ஒரு முறை தன் முதல் படமான ‘பதேர் பாஞ்சாலி’ பற்றி பின்வருமாறு கூறினார்: “விபூதிபூஷன் பந்தோபாத்யாயாவின் நாவலை படித்த உடனே, அப்புத்தகம் ‘என்னை சினிமாவாக்கு, என்னை சினிமாவாக்கு’ என்று கதறி அழுதது. அதனாலேயே அப்புத்தகத்தை ‘பதேர் பாஞ்சாலி’ படமாக எடுத்தேன்.’’ இது முற்றிலும் உண்மை. பல பெரும் படைப்புகளுக்கு இது நிகழ்ந் துள்ளது.

சில விஷயங்களைப் பற்றிக் கேள்விபட்ட உடனேயே, சில விஷயங்களைக் குறித்து படித்த உடனேயே அதை தங்கள் படைப்பாகக் கொண்டு வரவேண்டும் என எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், கலைஞர்கள் நினைப்பது உண்டு.

எந்த ஒரு விஷயத்தையும் கேள்விபட்ட உடனேயே ஆவணப்படமாக்க வேண்டும் என்று நினைப்பதுண்டா? பெரும்பாலும் கதைப்படமாக உருவாக்குவதையே இயக்குநர்கள் விரும்பு கின்றனர்.

ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப் பட்டதாகச் சொல்லப்படும் விஷயத்தை பற்றி கேள்விபட்ட உடனேயே, அதை ஆவணப்படமாக் குவதைவிட, கதைப்படமாக ஆக்குவதற்கே சாத்தியம் அதிகம் உள்ளது என கருதினேன். பல லட்சம் கோடிகளை செலவு செய்து, பல ஆண்டுகள் உளவு பார்த்தபின், அவர்கள் முற்றிலும் எதிர்பாராத வகையில், பாகிஸ்தானின் மையப்பகுதியிலேயே பின்லேடன் வசித்து வருகிறான் என்பதை அறிந்த போது, அவர்களுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அவர்கள் அதை உறுதி செய்துகொள்ள பல மாதங் கள் நுணுக்கமாக உளவு பார்த்ததை அறிவிக்கும் போது, அது ஓர் அமெரிக்க த்ரில்லர் படக்கதை போலத்தான் இருந்தது. அதனால்தான் சென்ற ஆண்டு ஹர்ட் லாக்கர் படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற கேத்ரின் பிகாலோ பின்லேடன் சுட்டுக் கொல்லப் பட்ட விஷயத்தைக் கதைப்படமாக எடுக்கப் போவதாக அறிவித் துள்ளார்.

ஆனால், ஒரு சில விஷயங்கள் கதைப் படம், ஆவணப்படம் என்ற இரண்டுக்குமான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கும். அதில் எந்த வடிவம் வெற்றி பெறும் என்பது அதை உருவாக்கும் படைப் பாளியைப் பொறுத்தே அமைகிறது.

சமீபத்தில் நிகழ்ந்த சர்வதேச நிதியகத்தின் தலைவர் டொமினிக் ஸ்ட்ராஸ் கான் கைது பற்றிய விவரங்கள் செய்தித்தாள்களைப் படிப்போருக்கும், டெலிவிஷன் சானல்களைப் பார்ப்போருக்கும் நிச்சயம் தெரியும். அவரின் கைதுக்கான நிகழ்ச் சியை ஒரு திரைக்கதையைப்போல சுவாரஸ்ய மான முறையில் சர்வதேச டெலிவிஷன் சேனல்கள் ஒளிபரப்பி வந்தன.

டொமினிக் மிக சக்திவாய்ந்த பதவியில் இருப்ப வர். அடுத்த ஆண்டு பிரான்சு நாட்டு அதிபராகக் கூடிய எல்லா சாத்தியக் கூறுகளையும் உடையவர். 62 வயதான இவர் பெரும் செல்வந்தரும்கூட. மிகுந்த திறமைசாலி, புத்திசாலி என்று பலரால் பாராட்டப் படுபவர். இப்படிப்பட்ட ஒரு நபரை நியூயார்க் போலீஸ் ஒரு ஓட்டல் பணிப்பெண்ணை கற் பழிக்க முயன்றதாக கைது செய் துள்ளது.

அவர் கைது செய்யப்பட்ட அன்று நடந்ததாக சொல்லப் படும் நிகழ்வுகளை பத்திரிகை யில் படிக்கும்பொழுதும், டெலி விஷனில் பார்க்கும் போதும் ஒரு சுவாரஸ்யமான கதைப் படம் போலவே இருந்தது.

டொமினிக் தங்கியிருந்த அந்த சொகுசு ஓட்டலில் அவர் அறைக்கு ஒரு நாள் வாடகை ஒன்றரை லட்சம் ரூபாய். அன்றைய மதியப் பொழுதில் தன் அறையின் சொகுசு குளியலறை யில் நிர்வாணமாக குளித்துக்கொண்டிருக்கிறார். அறையில் யாரும் இல்லை என நினைத்து அறையைச் சுத்தம் செய்யும் பெண், அறைக்குள் செல்கிறாள். அப்போது டொமினிக் குளியலறை யில் இருந்து நிர்வாணமாக வெளியே வருகிறார். அப்பெண் அவரைப் பார்த்து அதிர்ச்சியடை கிறாள். டொமினிக் அவள் மீது பாய்ந்து பலாத் காரம் செய்ய முற்படுகிறார். அவள் எதிர்த்து போராடுகிறாள். டொமினிக் அறைக்கதவை தாளிட்டு விட்டு அவளை படுக்கையில் தள்ளி மீண்டும் பலாத்காரம் செய்ய முற்பட, அவள் திமிறி போராடி, அவர் பிடியிலிருந்து வெளியேறி அறைக் கதவைத் திறந்துகொண்டு ஓடுகிறாள். அதற்குள் டொமினிக் அவசர அவசரமாக அறை யைக் காலி செய்து விமான நிலையம் சென்று, பாரீஸ் செல்லும் விமானத்தில் முதல் வகுப்பில் அமருகிறார். அப்போதுதான் அவர் தன் செல் போனை அறையிலேயே விட்டுவிட்டு வந்ததை உணர்கிறார். ஓட்டலுக்குப் போன் செய்து விமான நிலையத்திற்கு செல்போனை எடுத்துவரச் சொல் கிறார். சிறிது நேரத்தில் இரு அமெரிக்க அதிகாரி கள் விமானத்திற்குள் நுழைகிறார்கள். தன் செல் போனைத்தான் ஓட்டல் சிப்பந்திகள் கொண்டு வருகிறார்கள் என்று நினைத்த டொமினிக்கை அவர்கள் கைது செய்து அழைத்துச் செல்கிறார்கள். கோர்ட்டில், தான் குற்றம் செய்யவில்லை என்கி றார் டொமினிக். நான் நிரபராதி என நிரூபிப்பேன் என பத்திரிகையாளர்களிடம் சொல்கிறார். வழக்கு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இது குறித்த செய்திகள் தினசரி சர்வதேச ஊடகங்களில் வந்து கொண்டிருக்கின்றன.

இதைப் படித்த உடனே, பல ஐரோப்பிய இயக்குநர்கள் இவ்வழக்கில் ஓர் ஆவணப்படத்துக் கான சுவாரஸ்யத்தைவிட கதைப்படத்துக்கான சுவாரஸ்யம் அதிகம் உள்ளது என்பதை உணர்வர். இவ்வழக்கில் டொமினிக் விடுதலையாவாரா, தண்டிக்கப்படுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

சில நேரங்களில் சுவாரஸ்யமான விஷயங்கள் ஆவணப்படங்களாகவும் கதைப்படங்களாகவும் வந்த நிகழ்ச்சிகள் உண்டு. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக ‘செக்ஸ் இன் எ கோல்ட் க்ளைமேட்’ என்ற ஆவணப்படத்தையும், ‘மேக்டலின் சிஸ்டர்ஸ்’ என்ற கதைப்படத்தையும் சொல்ல லாம்.

இரண்டுமே ஒரே விஷயத்தை கருப்பொருளாகக் கொண்டவை.

அயர்லாந்து நாட்டில், கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மேக்டலின் காப் பகங்கள் நடத்திவந்தனர். இங்கு இளம் வயதில் பாலியல் ரீதியாக முறை தவறியப் பெண்கள் சேர்க்கப்பட்டனர். பெரும்பாலான நேரங்களில் பெற்றோர் களே தங்கள் மகள்களை தண்டனையாக இங்கு சேர்த்தனர். அந்த இளம் பெண் கள் செய்த ஒரே தவறு (?) திருமணத் திற்கு முன் ஆண்களுடன் தொடர்போ, உறவோ வைத்திருந்ததுதான்.

காலவரையற்று இந்த காப்பகங் களில் பெண்கள் அடைபட்டிருந்தனர். அவர்கள் தினமும் 12 மணி நேரம் துணி களைத் துவைத்து சலவை செய்ய வேண்டும். அதை ஒரு லாபமீட்டும் தொழிலாக கன்னியாஸ்திரிகள் செய்து வந்தனர்.

இங்கு தங்கியிருக்கும் காலகட்டத்தில் இந்தப் பெண்கள் பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாயினர். இங்குள்ள கத்தோலிக்க கன்னி யாஸ்திரிகளும், இங்கு வந்து போகும் பாதிரியார் களும் இந்தப் பெண்களைத் தங்கள் காம இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டனர். எந்தத் தவறுக்காக (?) அவர்கள் இங்கே அடைக்கப் பட்டனரோ அதே தவறுகள் அவர்கள் மீது இங்கே இழைக்கப்பட்டன. நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டது.

பல சமூக வரலாற்று ஆவணப்படங்களை எடுத்த இங்கிலாந்தைச் சேர்ந்த ஸ்டீவ் ஹம்ப்ரீஸ் 90 களின் இறுதியில் இது குறித்த ஆவணப்படத்தை எடுத்தார். அதுதான் ‘செக்ஸ் இன் எ கோல்ட் க்ளைமேட்’ என்ற படம். இப்படம் இன்று னுஏனு-யிலும், இணையத்திலும் சுலபமாக கிடைக்கிறது. இப்படத்தில் அந்தக் காப்பகங்களிலிருந்து தப்பித்து இங்கிலாந்து சென்று வாழ்கின்ற மூன்று பெண் களின் பேட்டிகள்தான் பிரதான அம்சம். அப் பெண்கள் இப்போது வயதாகி, சிலர் திருமணமும் புரிந்து இங்கிலாந்தில் வாழ்கின்றனர். சிறுவயதில் அந்த காப்பகங்களில் அவர்களுக்கும் மற்றவர் களுக்கும் நேர்ந்த கொடுமைகளைப் படம் முழுக்க அவர்கள் நினைவு கூர்கின்றனர். அவர்கள் பெற் றோர்களால் எப்படி அங்கு தள்ளப்பட்டார்கள் என்பதையும் கதையாகச் சொல்கின்றனர். அவர் களுக்கு நேர்ந்த கொடுமைகளையெல்லாம் அவர் களின் வாய் வார்த்தைகளாய்தான் கேட்கிறோம். ஆனாலும், அது இடியென நம்மைத் தாக்குகிறது. 1998ல் முதன் முறையாக இப்படம் பிபிசி-யில் ஒளி பரப்பப்பட்டபோது இங்கிலாந்தே கொதித் தெழுந்தது. அதைத் தொடர்ந்து அக்காப்பகங் களால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண் கள் தங்கள் மனக்குமுறல்களை ஊடகங்களில் கொட்டினர். அயர்லாந்து அரசு இந்த ஆவணப் படத்தை உடனே தடை செய்தது. இன்றுவரை அயர்லாந்தில் இப்படம் அதிகாரபூர்வமாகக் காட்டப்படவில்லை.

என்னதான் பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வார்த்தைகளால் விளக்கினாலும், காட்சிரீதியான விளக்கங்கள் ஏதும் இருக்காது. ஆனால், இதே விஷயத்தைக் கதைப் படமாக எடுத்தால் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளைக் காட்டலாம்.

இந்த ஆவணப்படத்தால் மிகவும் வசீகரிக்கப்பட்ட பீட்டர் முலான் என்ற இயக்குநர் இதையே 2002 ஆம் ஆண்டு ‘மேக்டலின் சிஸ்டர்ஸ்’ என்ற கதைப்படமாக எடுத்தார். இப்படத்தில் தப்பித்துப் போன மூன்று பெண்கள் கதாபாத்திரங்களாக மாற்றப்பட்டனர். அவர்களை இளம் வயதில் அவர்களின் பெற்றோர்கள் தண்டனையாக அக் காப்பகங்களில் சேர்ப்பதாகவும், பின்னர் அங்கு அவர்களுக்கு நடக்கும் கொடுமைகளையும், இறுதி யில் அங்கிருந்து அவர்கள் தப்பித்துச் செல்வதையும் கதைரீதியாக, காட்சிகளாய் பார்க்கும்பொழுது அதன் தாக்கம் வேறு பரிமாணத்தில் இருந்தது. அமெரிக்காவில் இப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. வெனிஸ் பட விழாவில் தங்க சிங்கம் உட்பட பல சர்வதேச விருதுகளை இப்படம் தட்டிச் சென்றது. வாட்டிகன் கத்தோலிக்க சபை இப்படத்தை கடுமையாக எதிர்த்தது. ஆனாலும், இத்தாலி, அயர்லாந்து உட்பட பல ஐரோப்பிய நாட்டு விமர்சகர்கள் இப்படத்தைப் பெரிதும் பாராட்டினர். ஒரே விஷயத்தை ஆவணப்பட மாகவும், கதைப் படமாகவும் பார்க்கும்போது அதன் தாக்கம் எப்படி வெவ்வேறு பரிமாணங்களில் உள்ளது என்பதை இப்படம் உணர்த்துகிறது.