மாநிலங்களவை உறுப்பினர்களில் பாதிக்கு மேலானவர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகளாம். தேர்தல் சீர்திருத்தத்திற்காகப் பணியாற்றும் அமைப்பான நேஷனல் எலக்ஷன் வாச் - 'நியூஸ்' எனும் நிறுவனம் இந்தத் தகவலைத் தருகிறது. அது மேலும் ஒரு அதிர்ச்சித் தகவலாக, இந்த மாநிலங்களவை உறுப்பினர்களுள் 17 சதவீதம் பேர் குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டிருப்பவர்கள் என்கிறது.

வெறும் 9 சதமான பெண் உறுப்பினர்கள் மட்டுமே இந்த மேலவையில் இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டும் இந்த அமைப்பு ஒரு காட்டமான கேள்வியையும் எழுப்பியுள்ளது. அது இதுதான்: 'குரல் எழுப்பமுடியாத சாதாரண மக்களுக்காகக் குரல் எழுப்புவதாகவும், பெண்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்க உழைப்பதாகவும் கூறிக்கொள்ளும் இந்த அரசியல்வாதிகள் உண்மையிலேயே அவற்றைச் செய்யத்தவறியிருக்கின்றார்கள் என்பதைத்தான் இவை காட்டுகின்றன.'

 தேர்தலின்போது தந்த சொத்து விபரப்பட்டியலின் அடிப்படையில் எம்.பி.களின் சொத்து விபரங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதாக 'நியூஸ்' நிறுவனத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அனில் பைர்வால் கூறுகிறார். மார்ச் 31, 2009 தேதிப்படி ராஜ்யசபா உறுப்பினர்கள் 183 பேர்களில் 98 பேர் அதாவது 54 சதவீதம் பேர் கோடீஸ்வரர்கள். அதேநேரத்தில் நடப்பு நாடாளுமன்ற மக்களவையில் 58 சதவீதம் பேர் பலகோடிகளுக்கு அதிபதிகளாம். அதாவது 315 பேர்.

நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தலைப்போல பெரிய பணப்புழக்கம் தேவைப்படாத போதிலும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களையும் பெரும்பாலான கட்சிகள் பணபலமுள்ள வட்டாரங்களிலேயே தெரிவு செய்வதாகவும், அப்படித் தேர்ந்தெடுக்கப்படும் பெரும்பாலான உறுப்பினர்களின் நன்நடத்தைகளும் பெருத்த சந்தேகத்துக்குரியனவாகவும் இருப்பதாக பைர்வால் கூறுகிறார்.

பெரிய கட்சிகளில் காங்கிரஸ் கட்சியின் 65 சதவீத மாநிலங்களவை உறுப்பினர்களும், பாரதீய ஜனதாவின் 53 சதவீத மாநிலங்களவை உறுப்பினர்களும் கோடிகளில் புரள்பவர்களாம். மாநிலங்கள் அடிப்படையில் பார்க்கிறபோது உத்தரப்பிரதேசத்திலிருந்துதான் அதிகபட்ச கோடீஸ்வரர்கள் மாநிலங்களவைக்குச் சென்றிருக்கின்றனர் என்கிறார் பைர்வால். இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிர மாநிலம் வருகிறது. உ.பியிலிருந்து 17 பேரும், மகாராஷ்டிரத்திலிருந்து 13 பேரும் கோடீஸ்வர எம்.பி.களாம். அதிகப் பணக்காரர் வரிசையில் மகாராஷ்டிரத்தின் ராகுல் பஜாஜ் முதலிடம் வகிக்கிறார். இவர் ஒரு சுயேச்சை உறுப்பினர். அவரது சொத்து மதிப்பு 3 மில்லியன் ரூபாய். அவருக்கு அடுத்தபடியாக கர்நாடகத்தைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.ஏ.எம்.ராமஸ்வாமி வருகிறார். இவரது சொத்துமதிப்பு 2.7 பில்லியன் ரூபாய். திரைப்பட நடிகையும் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் எம்.பி.யின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களின் மதிப்பு 2.7 பில்லியன் ரூபாய். அவரது குடும்ப நண்பரான அமர்சிங்கின் சொத்து மதிப்பு 795 மில்லியன் ரூபாய்.

இரண்டே உறுப்பினர்களின் சொத்து மதிப்பு பூஜ்ஜியம் என்று பதிவாகியிருக்கின்றன. அவர்களில் ஒருவர் மேற்குவங்கத்தின் சமன் பதக். இன்னொருவர் தமிழ்நாட்டின் (ஆமாம், நம்ம தமிழ்நாடுதான்...) டி. ராஜா. முதலாமவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இரண்டாமவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். மிகவும் குறைவான சொத்து மதிப்புள்ள உறுப்பினர்கள் மேற்குவங்கத்தைச் சேர்ந்த இருவர். அவர்களில், அபானி ராய் (ரூபாய் 72 ஆயிரம் மட்டுமே.) மற்றும் பிருந்தா காரத் (ரூபாய் 1 லட்சத்து 74 ஆயிரம் மட்டுமே).

இந்த விஷயத்திலும் இடதுசாரிகள்தான் அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட்கள்தான் மக்களுக்கு நெருக்கமானவர்கள் என்பதுவும், நேர்மைக்கும், எளிமைக்கும் சொந்தக்காரர்கள் என்பதுவும் உறுதியாகியிருக்கிறது.

-சோழ. நாகராஜன்

-ஆதாரம்: ஐ.ஏ.என்.எஸ். செய்தி நிறுவனம்.