அறுபது ஆண்டுகாலப் பாரம்பரியம் மிக்க கேரள முற்போக்குக் கலை இலக்கிய இயக்கமான கேரள புரோகமன கலா சாகித்ய சங்கத்தின் ஒன்பதாவது மாநில மாநாடு கொல்லத்தில் மே 13,14,15 தேதிகளில் நடைபெற்றது. காலையில் கொடியேற்றத்துடன் பிரதிநிதிகள் மாநாடு துவங்கியது. 410 பிரதிநிதிகள் பங்கேற்றனர். மாலை 3 மணிக்கு நாவலாசிரியர் யு.ஏ.காதர் தலைமையில் பொது மாநாட்டின் துவக்க விழா நடைபெற்றது. கேரள மாநிலக் கல்வி அமைச்சர் எம்.ஏ.பேபி, முதுபெரும் மலையாளக்கவிஞர்கள் ஓ.என்.வி.குரூப் மற்றும் புதுசேரி ராமச்சந்திரன், கேரள சாகித்ய அகாடமியின் செயலர் திருமதி வத்சலா, முதுபெரும் மார்க்சிய அறிஞர் பி.கோவிந்தப்பிள்ளை போன்றோர் உரையாற்றினர். பிரபல இந்தி திரைப்படக் கதாசிரியரான தோழர் ஜாவேத் அக்தார் மாநாட்டைத் துவக்கி வைத்துப்பேசினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக அதன் பொதுச்செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். ”மலையாள இலக்கிய உலகத்தின் மீதும் பண்பாட்டு இயக்கங்களின் மீதும் நாங்கள் பெரும் மதிப்புக் கொண்டிருக்கிறோம். கலை இலக்கிய இயக்கமானாலும் சரி.மக்கள் அறிவியல் இயக்கமானாலும் சரி.நூலக இயக்கமானாலும் சரி. கேரளம் எப்போதுமே எங்களுக்கு முன்னோடியாக இருந்து வந்துள்ளது. தகழி சிவசங்கரம்பிள்ளை, எஸ்.கே பொற்றேகாட், வைக்கம் முகம்மது பஷீர், ஓஎன்வி குருப், கமலாதாஸ் துவங்கி இன்றைய மலையாள எழுத்தாளர்களான பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, கெ.ஆர்.மீரா, சந்தோஷ் ஏச்சிகானம், பவித்ரன் தீக்குன்னி வரை பெரும்பாலான மலையாளப் படைப்பாளிகளின் எழுத்துக்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் நாங்கள் தொடர்ந்து வாசித்து வருகிறோம்.அந்த அளவுக்கு தமிழ்ப்படைப்புக்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை வாசிக்கப்படவில்லை என்கிற வருத்தம் நீண்டகாலமாக எங்களுக்கு இருந்து வருகிறது.

1975ஆம் ஆண்டு  32 எழுத்தாளர்கள் மதுரையில் கூடித் தொடங்கிய எங்கள் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் இப்போது 16000 உறுப்பினர்களைக் கொண்டு தமிழகத்தில் மாநிலம் முழுவதும் கிளைகள் கொண்டு தொடர்ந்து இயங்கும் ஒரே கலை இலக்கிய அமைப்பாக வளர்ந்துள்ளது. இலக்கியப் படைப்புகளுக்கும் சிரந்த திரைப்படங்களுக்கும் ஆண்டுதோறும் நாங்கள் வழங்கும் விருதுகள் தமிழகத்தின் மதிப்புமிக்க விருதுகளாக கலைஞர்களாக மதிக்கப்படுகின்றன. நாங்கள் நடத்தும் கலை இலக்கிய இரவுகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுகிறார்கள். இப்போது நாங்கள் தெரு சினிமா இயக்கத்திலும் நாட்டுப்புற ஆய்வுகளிலும் படைப்பிலக்கியத்துறையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். ஜூன் மாதம் தமிழக அரசு கோவையில் நடத்தும்  உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டை அம்மாநாடு வெறும் அரசியல் திருவிழாவாக அல்லாமல் தமிழுக்கு உருப்படியாகச் சிலவற்றையேனும் செய்கிற மாநாடாக அமைய வேண்டும் என வற்புறுத்தி தமிழகம் முழுவதும்  இயக்கம் நடத்திவருகிறோம்.” என்றும் இன்னும் தமுஎகச செய்துவரும் பணிகளையும் உலகமயமாக்கல் சூழலில் பண்பாட்டுத் தளத்தில் நாம் முன்னெடுக்க வேண்டிய பணிகள் பற்றியும் வாழ்த்துரையில் ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார். தொடர்ந்து கவியரங்கம், நாடகம், நாட்டியம் எனக் கலை நிகழ்வுகள் தொடர்ந்தன. வள்ளத்தோல் துவக்கிய கேரள கலாமண்டலத்திலிருந்து வந்த கலைஞர்கள் நிகழ்த்திய எண்ட கேரளம் என்கிற கதகளி ஆட்டம் மனதைக் கவர்ந்தது. கவிஞர்கள் எல்லோருமே சந்தத்தோடும் ராகத்தோடும் கவிதைகளை வாசித்தது நமக்குப் பெரும் ஏக்கத்தை உண்டாக்கியது.

 இம்மாநாட்டில் புகசவின் புதிய மாநிலத்தலைவராக நாவலாசிரியர் யு.ஏ.காதர் அவர்களும் பொதுச்செயலாளராக பேராசிரியர் வி.என்.முரளி அவர்களும் தேர்ந்த்தெடுக்கப்பட்டார்கள்.