சிறந்த திரைப்பட நூலுக்கான தேசிய விருதை இந்த ஆண்டு திரிசக்தி பதிப்பக வெளியீடான திரைச்சீலை என்னும் நூல் பெற்றுள்ளது. இந் நூலைக் கோவையைச் சேர்ந்த ஓவியர் ஜீவா எழுதியுள்ளார். 1982இல் அறந்தை நாராயணன் எழுதிய தமிழ்ச் சினிமாவின் கதை என்னும் நூலுக்குப் பின்பு இவ்விருது பெறும் தமிழ் நூல் இதுவே. கோவையின் போக்குவரத்து நெரிசல் மிக்க டவுன்ஹால் சாலையின் அஞ்சு முக்கு வீதியில் உள்ள அவரது வீடும் ஸ்டூடியோவுமான இடுக்கமான இடத்தில் செம்மலர் சார்பாக அவரைச் சந்தித்து வாழ்த்துச் சொன்னோம்.

குமரி மாவட்டம் பூதப்பாண்டி இவரது பூர்வீக பூமி. ஆம். அதே பூதப்பாண்டிதான். தோழர் ஜீவா பிறந்த மண்ணில் அவருடைய உறவுக் காரப் பையனாகப் பிறந்தவர்தான் இந்த ஜீவா வும். இன்றும் நாகர்கோவில் நகரில் உள்ள ஜீவா மணி மண்டபத்தில் இவர் வரைந்த ஜீவாவின் ஓவியம்தான் வைக்கப்பட்டுள்ளது.

படித்தது உயர்தர ஆங்கில வழிப்பள்ளியில்; வாழ்ந்தது இந்தச் சந்து பொந்தில் என்று தன்னைப்பற்றிக் குறிப்பிடும் ஜீவா படிப் பால் ஒரு வழக்கறிஞர், மனதால் மன விருப்பத்தால் ஒரு ஓவியர், வாழ்வுக்காக அல்லது பிழைப்புக்காக ஒரு ஓவிய டிசைனர். சென்னை மாநிலக்கல்லூரியில் எம்.ஏ.பட்டமும் கோவை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் பட்டமும் பெற்றாலும் மனம் முழுக்க ஓவியத்திலேயே நாட்டம் கொண்டிருந்தது. காரணம் அவருடைய தந்தையார் திரு.வேலாயுதம். அவர் துவக்கி நடத்திய சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சினிமா பேனர்கள் வரைந்து கொடுப்பதைப் பிரதான பணியாகக் கொண்டது. அப்பாவுடன் சேர்ந்து வரையத் துவங்கிய வர் ஜீவா. அப்பா 56 வயதில் காலமாகிவிட வீட்டுக்கு மூத்த பிள்ளையான ஜீவா குடும்ப வருமானத்துக்காக அப்பாவின் தொழிலையே கைக்கொண்டார். ஆங்கிலப்பள்ளியில் படித்த அவர் தமிழ் படிக்கவில்லை. அவர் இதற்கு முன் எழுதியதுமில்லை. இதுதான் அவரது முதல் நூல்.

“கோவையில் மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் தான் நடத்திய ரசனை இலக்கிய இதழில் சினிமா ரசனை பற்றி ஒரு தொடர் எழுதுமாறு வற்புறுத்தியதால் தமிழில் எழுத வந்தேன். உலக சினிமாக்களைப் பார்க்க அப்ப என்னைச் சிறுவயதிலேயே அழைத்துச் செல்வார். மொழி பெயர்த்து எனக்குக் காட்சிகளை விளக்குவார். அந்த அனுபவமும் அப்பா எனக்கு வாசிக்கத் தந்த சோவியத் இலக்கியங் களும்தான் இந்த திரைச்சீலை நூல் வெளிவரக் காரணம் எனலாம். நாஞ்சில்நாடன் போன்ற நான் மிகவும் நேசிக்கும் படைப்பாளிகளின் உற்சாகமூட்டலும் தொடர்ந்து எழுதி முடிக்க ஒரு காரணம்”

அப்பாவிடம் ஓவியம் கற்றுக் கொண்டீர்களா அல்லது முறையாக ஓவியப்பள்ளியில் சேர்ந்து படித்தீர்களா?

ஜீவா: அப்படி எந்தப் பயிற்சியுமில்லை. அப்பாவும் கற்றுக் கொடுக்கவில்லை. அவர் என்னை ஆங்கில வழியில் எம்.ஏ. அரசியல் விஞ்ஞானம் படிக்க வைத்து ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கு போகச் சொன்ன வரல்லவா? இந்தத் தொழில் விருத்தியில்லாத தொழில் என்பதால் அப்பா அப்படி நினைத்தார். ஆனால், நானோ புனே திரைப்படக் கல்லூரிக்குப்போய் திரைப் படம் கற்க ஆசைப்பட்டேன். இரண்டுமில்லாமல் சட்டம் படித்துவிட்டு நான் பிரஷ் பிடித்தேன். அப்பா வரையும் பேனர்களில் இடைவெளி களை வண்ணம் கொண்டு அடைக்கும் வேலை செய்யத் துவங்கியதிலிருந்து என் ஓவிய வாழ்க்கை பள்ளிப் பருவத்தி லேயே துவங்கியது. 6 பேரில் மூத்தவனான நான் வருமானத் துக்காக இப்படி ஆனாலும் என் தம்பி மணிகண்டனை சினிமாத்துறைக்கு அனுப்பி ஆறுதல் தேடிக்கொண்டேன். தம்பி மணிகண்டன் அடை யாறு திரைப்படக்கல்லூரியில் படித்து இன்று பேசப்படும் ஒளிப்பதிவாளராக வாழ்ந்து கொண்டிருக்கிறான். ராவணன், பெண்ணின் மனதைத் தொட்டு, செங் கோட்டை சாருக்கான் எடுத்த ஓம் சாந்தி ஓம் இந்திப்படம் என அவன் மும்பையிலும் சென்னையிலும் வலுவாகக் கால் ஊன்றி கேமராமேனாக வெற்றி பெற்றிருக்கிறான்.

பேனர்கள் வரைவது ஒரு கலை. மனதுக்கு திருப்தியளிக்குமா?

சினிமா பேனர் வரைவது ஒரு மறுபடைப்புத்தான். முகங்களை வரைவதுதான் அதில் பிரதான வேலை. இத்தனை ஆண்டுகளில் லட்சக் கணக்கான முகங்களை வரைந்துவிட்டேன். அந்த அனு பவமே எனக்குத் தடையாக உள்ளது. நவீன ஓவியர்களைப் போல அரூப ஓவியங்களை வரைய ஆசைதான். அப்படி முயன்றாலும் அது ஒரு முகமா கவே எனக்கு வந்துவிடும். அப்படிப் படிந்து போய் விட்டது. இயற்கையைப் பார்த்து வரையவும் ஆசை இருந்தாலும் நேரமில்லை. அந்த அளவுக்கு நேரத்தை ஒதுக்க என் நெருக்கடி மிகுந்த வாழ்க்கை இதுவரை இடம் தரவில்லை.

அது ஒரு சோகம்தானே..?

அப்படிச்சொல்ல முடியாது. நான் பேனர் வரைவதை எப்போதும் ஒரு கூட்டம் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும். அதில் அன்றாடம் வந்து நிற்கும் எனக்கான ரசிகர்களும் உண்டு. உடனுக்குடன் பாராட்டும் விமர்சனமும் கிடைக்கும். அதைப் பெரிதாக மதிப்பேன். நவீன ஓவியம் வரைந்து அதைக் கண்காட்சியாக வைப்பது என்பது ரொம்பவும் காஸ்ட்லியான சங்கதி. ஓவியக்கண்காட்சி என்பது எப்போதுமே கார்ப்பொரேட் கையில்தான். மண்டபம் பிடித்து படங்களை வைக்கவே பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் செலவிட வேண்டும். தவிர அதில் ஒரு பிராண்ட் பெயர் தேவைப்படுகிறது. எம்.எஃப். உசேன் படம் என்றால் ஒரு கோடி 2 கோடி ரூபாய்க்குப் போகும். ஆதிமூலம் படம் என்றால் ஒரு விலை இருக்கிறது. நம்மைப்போன்ற ஆட்கள் அந்த இடத்துக்கு வர வாய்ப்பில்லை. அதுவும் கோவையில் வாழ்ந்து கொண்டு அந்த இடத்தை எட்ட முடியாது. மனத் திருப்திக்காக வரைய வேண்டும் என்றாலும் இன்று வண்ணங்கள், திரைச்சீலைகள் விற்கும் விலையைப் பற்றி யோசித் தால் கலை, மனதுக்குள்ளேயே வறண்டு போகும். ஒரு கலர் ட்யூப் விலை 150 ரூபாய். 35 கலர்களாவது வேண்டும். அப்புறம் கேன்வாஸ் இத்யாதி செலவுகள் வேறு.

யாரைப்பார்த்தாலும் அந்த இடத்திலேயே அவரை அப்படியே ஐந்து பத்து நிமிடங்களுக்குள் ஓவியமாக வரைந்து விடும் திறன் சின்ன வயதி லிருந்தே எனக்கு வந்துவிட்டது. அது எனக்குப் பல இடங்களில் பேரும் புகழும் மரியாதையும் பெற்றுத்தந்துள்ளது. ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஸ்விஸ் நிறுவனம் காஃப்காவின் நாடக அரங்கேற்றத்துக்காக அவர்கள் சொன்ன கருத்துக்களுக்கேற்ப பேனர்கள் வரைந்து தரச் சொன்னார்கள். வரைந்து கொடுத்தேன். அது அவர் களுக்கு மிகவும் பிடித்துப்போனது. வலைத் தளங்களில் அப்படங்களைப் போட்டார்கள். சர்வதேச அளவில் எனக்கு நிறைய ரசிகர்களை அது உருவாக்கித்தந்துள்ளது. ஆகவே இந்த ஓவிய வாழ் வில் சோகம் என்று ஒன்றுமில்லை. நம் வாழ்நிலை யிலிருந்துதானே பார்க்க வேண்டும்?

ஓவியத்துறையில் உங்கள் மனதுக்குப் பிடித்ததாக வேறு ஏதும் செய்கிறீர்களா?

கோவையில் சித்ரகலா அகாடமி என்றொரு சங்கத்தை 1979 இலிருந்து நடத்தி வருகிறோம். 20 ஆண்டுகள் அதன் செயலாளராகவும் இப்போது அதன் தலைவராகவும் இருந்து வருகிறேன். குழந்தைகளுக்கு ஓவியம் வரையக் கற்றுக்கொடுப் போம். இலவசமாக அதைச் செய்துதருகிறோம். ஆண்டுதோறும் ஏராளமான குழந்தைகள் எங்களிடம் ஓவியம் பயின்று வருகிறார்கள். தவிர, 2000த்தில் வள்ளுவர் கோட்டத்தில் 133 ஓவியர் களை அழைத்து ஆளுக்கு ஒரு திருக்குறள் அதிகாரத் தைப் படமாக வரையச்சொன்னார்கள். அந்த 133 பேரில் ஓவியக்கல்லூரியில் பயிலாத 2 பேரில் ஒரு ஓவியனாக நான் பங்கேற்றேன். அந்தப் படங்களெல்லாம் இப்போது குப்பையாகக் கிடப்பதைப் பார்த்தால் வேதனையாக இருக்கிறது.

டிஜிட்டல் பேனர்களின் வருகையை எவ்விதம் எதிர்கொண்டீர்கள்?

ஒன்றுமே செய்யமுடியாமல் போனது ஒரு நாளில். கோவை யில் ஓவியர்கள் 400 கடை வைத்து பேனர்கள் வரைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். எல்லாம் மாயமாய் மறைந்து போனது. இப்போது 3 கடைகூட இல்லை. அந்த ஓவியர்கள் இப்போது வீடுகளுக்கு வெள்ளை அடிக்கப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அதில் நல்ல வருமானமும் கிடைக்கிறது. நாங்கள் உண்மை யில் ஆடித்தான் போனோம். வீட்டை அடமானம் வைத்து ஒரு டிஜிட்டல் பேனர் தயாரிக்கும் எந்திரத்தை நிறுவி தொழில் பண்ணிக்கொண்டிருக்கிறோம். 100 ரூபாய் வேலைக்காக மணிக் கணக்கில் ஒருவருக்கு உட்கார்ந்து அவர் விருப்பப்படி டிசைன் பண்ணிக் கொண்டிருக்கும் ஒன்று தான் சோகம். எப்போதும் ஒருவித எரிச்சலான மனநிலையே நீடிக் கும் நிலை இருக்கிறது. என்னடா வாழ்க்கை இது என்கிற சலிப்பும் வரத்தான் செய்கிறது.

ஓவியம் தவிர வேறு கலைகளில் ஆர்வம்?

தொடர்ந்து வாசிப்பேன். நிறைய எழுத்தாளர் களோடும் ஓவியர்களோடும் நட்புக் கொண் டிருக்கிறேன். ஆதிமூலம் அவர் களின் ஓவியம் பற்றி கணை யாழியில் விமர்சனமாக நான் எழுதி எனக்கும் அவருக்கும் ஒரு சண்டையே நடந்து அதன் தொடர்ச்சியாக நாங்கள் மிக நெருக்கமான நண்பர்களாகி விட்டோம். பின்னர் அவரே என் குருநாதரும் வழிகாட்டியாகவும் ஆனார் என்பேன். பாஸ்கரன், தட்சிணாமூர்த்தி, மருது, ராஜ ராஜன், நெடுஞ்செழியன், மகி, அல்போன்ஸ் எனப் பல முன் னணி ஓவியர்கள் எனக்கு நல்ல நண்பர்களாக இருக்கிறார் கள்.

புத்தகங்கள் மிகச்சிறந்த நண்பர் களாக எப்போதும் இருக் கிறார்கள். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே நீல.பத்ம நாபனின் தலை முறைகள் நாவலை முடித்துவிட்டேன். நண்பர் மாலன் “திசைகள்” வார இதழை ஆரம் பித்தபோது அதில் ஓவியங்கள் வரைந்தேன். அச்சமயம் கல்கியில் சிந்து - ஜீவா என்கிற பெயரில் 2 ஆண்டுகள் சினிமா விமர்சனம் எழுதினேன்.

கோவையில் திரைப்படக் கழகம் யார் துவக்கினாலும் அவர் களோடு நான் கட்டாயமாக இருப் பேன். திரைப்படச் சங்கத் திரை யிடல்களுக்கு தவறாமல் செல் வேன். கவிஞர் புவியரசுவின் தாக்க மும் என் மீது உண்டு. இதெல்லாம் சேர்ந்து தான் திரைச்சீலை புத்தகம் உருவானதாகச் சொல்ல வேண்டும்.

அவருடைய மகன் ஊடகவியல் படித்துள்ளார். மகள் பி.எஸ்ஸி ஐ.டி படிக்கிறார். ஓவியத்துறையில் இருவரும் இல்லை. அவருடைய மகன் ஒருநாள் எதிர்பாராமல் ஒரு மரம் வரைந்திருக்கிறார். அந்த நாள் நான் அடைந்த துடிப்புக்கும் மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை என்று சொல்லிக் குதூகலிக்கும் ஜீவா வலைப்பூவில் அவ்வப்போது எழுதி வருகிறார்.

சந்திப்பு: சதன், பாலாஜி

Pin It