தன் பங்களாவின் வாசலில் எங்கிருந்தோ வந்த கருப்பு நாய் படுத்திருப்பதைப் பார்த்த ஷண்முகம் அதிர்ந்து மிரண்டுபோனார். அளவுக்கும் அதிகமான நாய் பயம் கொண்டவர் அவர். நாயை அங்கிருந்து விரட்ட அவர் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்வி கண்டன. விடாப்பிடியாக அந்த இடத்தை நாய் பிடித்துக்கொண்டது.

வாசல்முன்னால் நாய் கிடந்ததால் வெளியே செல்ல பங்களாவின் பின் காம்பவுண்டு சுவரை ஏறிக்குதித்துச் சென்றார் ஷண்முகம். இப்படியே சில நாட்கள் மிக்க பயத்தோடு தொடர்ந்தன.

ஆனால் ஒரு நாள் காலையில் இவர் பங்களாவின் முன் தோட்டத்தில் நின்று கொண்டு பிஸ்கட்டுகளை தூக்கித் தூக்கிப்போட, கருப்பு நாய் வாலை ஆட்டிக்கொண்டு பிஸ்கட்டு களை கவ்விப்பிடித்து நொறுக்கிக் கொண்டிருந்தது. இருவரும் ரொம்ப நட்பு.

இந்த அதிசயம் எப்படி ஏற்பட்டது தலைகீழ்மாற்ற அதிசயம்.

ஷண்முகம் சும்மா உட்கார்ந்து சாப்பிட விரும்பாதவர். ஏதாவது ஊருக்கு நாலு நல்லது பண்ண நினைப்பார். ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தலைவராக இருந்து மக்கள் பிரச்சனைகளுக்காகப் பாடுபட்டுக்கொண்டிருந்தார்.

விளைநிலங்களை வீட்டு பிளாட்டுகளாகப் போட்டுக் கொள்ளையடிக்கும் “லாண்டு மார்பியா” கும்பல் பற்றிய கிரிமினல் தகவல்களை இவர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கேட்க ஆரம்பித்ததும், இவரைத் தீர்த்துக்கட்ட ஒரு கொலைகாரக் கும்பல் இவர் வீட்டிற்கு நடுநிசியில் அனுப்பப்பட்டது. கொலைகாரர்களைக் கண்டதும் நாய், பேயாக மாறியது. அவர்களின் தடிஅடி, மிளகாய்ப்பொடி வீச்சின் வேதனைகளைப் பொறுத்துக் கொண்டு ஏழு ஊர் கேட்கும்படி இடையின்றி விடாது குரைக்கவே இரவு ரோந்து வந்த போலீசார் அந்த இடத்திற்கு ஓடி வரநேர்ந்துவிட்டது.

கொலைகாரர்கள் சிக்கினார்கள்..

தான் பயந்து விரட்டியடிக்க முயற்சித்த நாய், போராடி தன் உயிரைக் காப்பாற்றியதை நினைக்க நினைக்க... ஷண்முகத்திற்கு நாய் பயம், நாய்ப் பாசமாக மாறிவிட்டது. அவர் தூக்கிப்போடுகிற பிஸ்கட்டை லாவகமாக ஓடிக் கவ்வுகிற நாயின் கண்ணில் மகிழ்ச்சி மின்னல்.

Pin It