நூல்மதிப்புரைபாலுமணிவண்ணனின் சினிமா சினிமா

இயக்குநர் கே.விஜயன், “பாரதி“ ஞானராஜசேகர், பி.லெனின் போன்ற திறமைமிக்க இயக்குநர்களிடம் துணை இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் நீண்டகாலமாகப் பணியாற்றிய நெடிய அனுபவமும், குறும் பட இயக்குநராக வெற்றி பெற்ற பாலுமணிவண்ணன், எழுதிய “சினிமா சினிமா’’ நூல்  சினிமா எனும் ஊடகத்தின் வலிமையையும் சினிமா கட்டமைக்கிற ரசிக மனோபாவங்களையும் உணர்த்துகிறது.

சினிமா சார்ந்த தனித்தனித் தொழில் நுட்பங் களைப் பற்றியும், திரைப்படத்தின் வரலாற்றையும் திரைத் தொழில் வரலாற்றையும், திரை உள்ளடக்க மாறுதல்களின் வரலாற்றையும் உணர்த்துகிறார். கே.சுப்ரமணியம் என்ற இயக்குநரின் புரட்சி கரமான செயல்பாட்டு விளைவுகளை உணரமுடிகிறது. பாலச்சந்தர், பாரதிராஜா, ஸ்ரீதர், ஏ.பி.நாகராஜன், கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மற்றும் பெண் இயக்குநர்கள் பற்றியெல்லாம் சாதனைகளையும், பலவீனங்களையும் முன்வைக்கிறது. திராவிடப் பாரம் பர்யம் திரைத்துறையை பயன்படுத்தியதன் சாதக  பாதகங்களை விமர்சனபூர்வமாக  விளக்குகிறது.

ஹிரோ யுகம் தோன்றிய விதம்.. வளர்ந்த விதம் பற்றியெல்லாம் விளக்குகிற நூல், கட்டுரை மொழி நடையில் எழுதப்படாமல். ஒரு சுவாரசியமான-வசீகர மான-எளிய மொழி நடையில் வெளிப்பட்டிருக்கிறது.

ஒரு சினிமாவைப்  போலவே வாசகனை சுவாரஸ்யப்படுத்தி வசீகரித்து, தன் வயப்படுத்தி, நல்வயப்படுத்துகிறது சினிமா பற்றிய இந்த நூல். கலைவாணர், எம்.ஆர்.ராதா, எம்.ஜி.ஆர், சிவாஜி, பற்றியெல்லாம் சுருக்கமாக- நுட்பமாக விளக்குகிறது.

பாடல் இல்லாத “அந்தநாள்”, வசனமேயில்லாத “பேசும்படம்”, “பொம்மை” தந்த எஸ்.பாலச்சந்தர் போன்று குறிப்பிடத்தக்கவை விடுபட்டிருப்பதை கவனித் திருக்கலாம். இன்னும் சில விடுபட்டிருக்கின்றன. தீரர் சத்தியமூர்த்தி பற்றிய தகவல் புதியது; அரியது. இதுபோல நிறைய அரிதான தகவல்கள் நூலுக்குள்ளிருந்து வந்து நம்முன் மோதி ஆச்சரியமூட்டுகின்றன. பாவை பப்ளிகேஷன்ஸ் பிழையில்லாமல், அழகான வடிவமைப் புடன்  அச்சிட்டு வெளியிட்டிருக்கிறது. கலைக்கல்லூரி களில் திரைப்படம் ஒருபாடமாக வைக்கப்பட்டால் - தற்போதைய திரைப்படக் கல்லூரிகளின் முதலாம் ஆண்டின் பாடநூலாக இதை முன் வைக்கலாம் என்று தைர்யமாகப் பரிந்துரை செய்யலாம்.

வெளியீடு :  பாவை பப்ளிகேஷன்ஸ் 142, ஜானி ஜான்கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை - 600 014.

விலை:  ரூ. 75