தமிழ்ச் சமூகத்திற்கு காலம் தந்த நல்வாய்ப்பாக பேராசிரியர் அருணனின் "காலந்தோறும் பிராமணியம்" ஏழாம் பாகம் வெளியாகி உள்ளது. இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலத்தில் பிராமணியத்தின் இயங்கு நிலை குறித்து இந்நூல் ஆய்வு செய்கிறது. நூலாசிரியர் குறிப்பிட்டிருப்பது போல இந்திரா காலம் என்பது கடந்த காலம் அல்ல. தற்காலம்.

இந்த நூல் நிறைவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறது என்றும் எட்டாம் பாகத்துடன் இந்தத் தொடர் நிறைவு பெற உள்ளது என்றும் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிராமணியத்தின் காலம் முடிய இன்னும் எத்தனை காலம் ஆகுமோ தெரியவில்லை. ஆனால் அவ்வளவு எளிதானதல்ல பிராமணிய ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவருவது. ஆனால் தொடர்ச்சியாக தத்துவ தளத்திலும், சமூக தளத்திலும் நடத்த வேண்டிய  அந்தப் போருக்கு இந் நூல்கள் ஒரு படைக்கலனாக பயன்படும் என்பதில் ஐயமில்லை.

பொதுவுடைமை இயக்கத்தில் என்னை இணைத்துக்கொள்வதற்கு முன்பு ஸ்தாபன காங்கிரஸ் அதன் பின் ஜனதா அதன் பின் ஜனதா தளம் என்றுதான் என் மாணவப்பருவ வாழ்க்கை கழிந்தது. எவ்வளவு பெரிய மயக்கத்திலும், மாயையிலும் என் இளமைக்காலம் கழிந்தது என்ற துக்கம் இந்த நூலை வாசிக்கிறபோது எனக்கு எழுந்தது.

இந்திராகாலத்தில் அரசியல், பொருளியல் பின்புலம், பிராமணியத்தை இந்திரா அரசு எதிர்கொண்ட விதம், காங்கிரஸ், ஜனசங்கம், சிவசேனை, ஆர்எஸ்எஸ், குருமார்கள் என பல்வேறு தளங்களில் பிராமணியத்தின் இயங்கு நிலை, மாதர் விடுதலை, பிற்படுத்தப்பட்டோர் நலன், ஜெகஜீவன் ராம், தலித் சிறுத்தைகள், கன்சிராம், திராவிட இயக்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என பல்வேறு இயக்கங்கள் மற்றும் தனி மனிதர்கள் மேற்கொண்ட சமூக சீர்திருத்த இயக்கம் என இந்நூல் விரிந்து பரவியுள்ளது.

ஜவஹர்லால் நேருவைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி அவரைத் தொடர்ந்து இந்திராகாந்தி ஆகியோர் இந்தியாவின் பிரதமர் பொறுப்புக்கு வந்தவிதத்தை அருணன் விவரித்துள்ளது ஒரு அரசியல் நாவலை படிப்பது போன்று உள்ளது.

துவக்ககாலத்தில் பல விஷயங்களில் சோவியத் அரசோடு இந்திரா இணக்கமாக இருந்தார். ஆனால் அவரது இளையமகன் சஞ்சய்காந்தி அமெரிக்காவுடன் சாய்மானமாக நடந்துகொண்டது குறித்தும் இந்திரா அதிர்ச்சியடைந்தது குறித்தும் இந்நூலில் கூறப்பட்டுள்ள தகவல்கள் புதிய வெளிச்சத்தைத் தருகிறது.

1967 தேர்தலைத் தொடர்ந்து டாடா, பிர்லா போன்ற முதலாளிகள் ஜனாதிபதி ஆட்சிமுறையை கொண்டுவர முயன்றனர் என்பதும், பாஜக தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் பிற்காலத்தில் இத்தகைய முயற்சியில் இறங்கியது என்பதையும் நினைத்துப்பார்க்கும்போது இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தை கருவறுக்க முதலாளித்துவம் நீண்டகாலமாகவே துடித்துவருவதை புரிந்துகொள்ள முடியும். மனிதப்புணிதர் என்று போற்றப்படுகின்ற மொரார்ஜி தேசாய் பல விஷயங்களில் எப்படி பழைய பஞ்சாங்கமாக இருந்தார் என்பதையும் புரிந்துகொள்ள முடியும்.

பசுபக்தர்கள் காமராஜர் வீட்டின்மீது நடத்திய தாக்குதல், பூரி சங்கராச்சாரியார் 77 நாள் உண்ணாவிரதம் இருந்தது அவரை இந்திரா அரசு கைது செய்து விமானம் மூலம் பாண்டிச்சேரி கொண்டுசென்றது போன்றவை வரலாற்றின் சுவையான பக்கங்கள். குல்சாரிலால் நந்தா இடைக்கால பிரதமராக இருந்தவர். நல்லவேளையாக அவர் நிரந்தர பிரதமர் ஆகவில்லை என்கிற நிம்மதி பெருமூச்சு எழுகிறது. சிவசேனை தென்னிந்தியர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மட்டுமல்ல, கம்யூனிஸ்ட்டுகளுக்கும் எதிராக வெறியாட்டம் போட்ட அமைப்பு என்பதை அறிவோம். இனவெறி, மதவெறி எந்த வடிவில் தூண்டிவிடப்பட்டாலும் பொதுவுடைமை இயக்கத்திற்கு அது பெரும் சேதாரத்தை ஏற்படுத்தும் என்பதை சிவசேனை அனுபவத்திலிருந்து புரிந்து கொள்ளமுடியும்.

சிபிஐ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட எஸ்.ஏ.டாங்கே சிவசேனை மாநாட்டில் பங்கேற்றார் என்பது அதிர்ச்சிதரும் தகவல். காந்திஜி படுகொலையைத் தொடர்ந்து அரசியலில் தனிமைப்பட்டிருந்த ஜனசங்கம் அவசரநிலைக்காலத்தைத் தொடர்ந்து கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் மிகச்சாதுர்யமாகப் பயன்படுத்திக்கொண்டது. அதன் நீட்சியாக பாஜக என்று பெயரை மாற்றிக்கொண்டு மத்திய ஆட்சிப்பொறுப்புக்கே வந்ததும் அதன் சித்தாந்தத்தோடு நேர் எதிரான திராவிட இயக்கக் கட்சிகள் கூட அதன் வலையில் விழுந்ததும் வரலாற்றின் நகை முரண்கள். ஜனசங்கத்தின் பூர்வாசிரம கதையை முற்றாக விவரிக்கிறார் பூரு வம்சத்தின் ஆசிரியர்.

பூரி சங்கராச்சாரியார் துவங்கி காஞ்சி பெரிய சங்கராச்சாரியார் வரை பசு பாதுகாப்பாளர்கள் மட்டுமல்ல பிராமணியத்தின் அசல் காப்பாளர்கள் என்பதும் இந் நூலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணா மடங்கள், சின்மயா மிஷன்களின் சுயரூபத்தை தோலுரிக்கிறது இந்நூல், வைணவ மடங்களின் வண்டவாளத்தையும் விட்டுவைக்கவில்லை. சத்திய சாய்பாபாவும் பிராமணியத்தின் ஒரு கூறுதான் என்றும் அருணன் விளக்கியுள்ளார். சதி எனும் கொடூரத்தைக் கூட நியாயப்படுத்தியவர்தான் இந்த விபூதி மந்திரவாதி.

இந்நூலின் மகுடமாக விளங்குவது ஊடகங்களில் பிராமணியத்தின் இயங்குநிலை குறித்த ஆய்வு. இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஆனந்தவிகடன், கல்கி, துக்ளக் போன்ற பத்திரிகைகளில் பிராமணியம் எப்படி இயங்கியது என்பதை ஆசிரியர் உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார். மாதர் விடுதலை விஷயத்தில் பிராமணியம் மிகக்கொடூரமான அணுகுமுறையை இன்றளவும் கொண்டுள்ளது. அது நீதிமன்றத்தையும் விட்டுவைக்கவில்லை. மதுரா என்ற 16வயது பழங்குடியினப் பெண் காவல்நிலையத்தில் இரண்டு போலீசாரால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டார். அந்தப்பெண் ஏற்கனவே காதலனுடன் உடலுறவு கொண்டுள்ளாள். எனவே போலீசார் செய்தது கற்பழிப்பு ஆகாது என்று செசன்ஸ் நீதிமன்றம் தீர்ப்புக்கூற உயர்நீதிமன்றம் போலீசாரை தண்டித்தது. உச்சநீதிமன்றமோ அந்தப் பெண் அலறவில்லை. எனவே அது வன்புணர்ச்சி ஆகாது என்று கூறியுள்ளது. இந்த இடத்தில் உச்சநீதிமன்றம் குறித்து பெரியார் பயன்படுத்தும் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது. திராவிட இயக்கத்தில் ஏற்பட்ட சறுக்கல்களுக்கான சரித்திர முன்னேட்டத்தை புரிந்துகொள்ள இந்நூல் உதவும். சமூக சீர்திருத்த விஷயத்தில் இயல்பாகவே பொதுவுடைமை இயக்கங்கள் முன்நின்றதையும், எனினும் முன்னுரிமைப் புரிதல்களில் ஏற்பட்ட சில பிரச்சனைகளையும் இந்த நூல் விமர்சனக்கண்ணோட்டத்துடன் அணுகியுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் ஆட்சியமைந்த மேற்குவங்கம், கேரளம், திரிபுரா மாநிலங்களில் அடித்தட்டு மக்கள், மாதர்கள் விடுதலைக்கான ஆக்கப்பூர்வ காரியங்கள் மேற்கொள்ளப்பட்டதும் ஆதாரத்தோடு விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

சாதுக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்த தகவல்கள் தொகுத்ததுத் தரப்பட்டுள்ளன. அவர்கள் சாதுக்கள் அல்ல தீதுகளே என்பதை இந்த ஆய்வு புலப்படுத்தும்.

அவசர நிலைக்காலம் ஜனநாயக தீபத்தை அணைக்க மட்டுமல்ல பிராமணியத்தை உச்சத்திற்கு கொண்டு செல்லவும் உதவியுள்ளது. பிராமணியம் வரலாற்றின் திருப்பு முனையில் நின்று மைய அரசை கைப்பற்ற வியூகம் வகுத்ததுடன் இந்நூல் முடிகிறது. அந்த வியூகம் வெற்றி பெற்ற விபரீதத்தை அடுத்த பாகம் விவரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

காலந்தோறும் பிராமணியம்
பாகம் ஏழு
(இந்திரா காலம்)
அருணன்
பக்கம்-416
விலை-ரூ.250
வெளியீடு: வசந்தம் வெளியீட்டகம்
69/24ஏ-அனுமார்கோவில் படித்துறை
சிம்மக்கல், மதுரை-625 001