(கவிஞர் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை)

மஞ்சப்பட்டு கூட்டுரோடு, ஆட்டை விழுங்கிய மலைப் பாம்பாய் சுற்றியிருக்கிற ஏழெட்டு கிராமங்களைத் தின்று செரித்தபடி நெளிந்து கொண்டிருந்தது.

இரண்டு பெட்டிக்கடைகள், மூன்று டீக்கடைகள், வாடகை சைக்கிள் கடை, பூக்கடை, டிபன் கடை, பிரியாணி ஸ்டால், பிராய்லர் கறிக்கடை, ரெடிமேட் துணிக்கடை, மளிகைக் கடை, உரக்கடை, ஓமியோபதி கிளினிக், செல் ரீசார்ஜ் கடை, ‘இதோ நான் நகரமாகி வருகிறேன் பார்...’ என்பதற்கான அடையாளமாய் ஒரு ஃபாஸ்ட் புட் கடை. இதில் மீதமிருக்கிற இரண்டு கடைகளில் ஒன்று பழனியின் ‘முத்து சலூன்கடை’. மற்றொன்று நான் வேலை செய்கிற தனியார் கூரியர் சர்வீஸ் கடை.

விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாய் மாற, பிழைப்புக்கு வழியில்லாமல் நகரங்களை நோக்கி இடம் பெயர்கிற கிராமத்து மனிதர்களை இழுத்து வந்து, நெடுஞ்சாலைப் புழுதியோடு சேர்த்தணைத்து மூச்சுத் திணற வைக்கின்றன இந்த கூட்டு ரோடுகள்.

பக்கத்து மாவட்டத்தின் சிறு நகரமொன்றிலிருந்து வந்து, கூரியர், சர்வீஸ் கடையிலேயே தங்கி வேலை செய்யும் எனக்கு, பேச்சுத் துணைக்கு ஆறுதலாயிருப்பது பழனி மட்டுந்தான்.

பழனிக்கு நெட்டு முகம். நாற்பது வயதிற்குள்ளேயே மீசையும், முன்பக்க முடியும் நரைத்து வயதானவர் போன்ற தோற்றம். மேல் வரிசைப் பல் லேசாய் துருத்திக் கொண்டிருக் கும். எப்போதும் முகத்தில் இருக்கும் சாந்தமும், குழந்தைத் தனமான சிரிப்பும் பழனியை என்னோடு ரொம்பவும் நெருக்க மாக்கி விட்டது.

பழனிக்கு என்னைவிட ஒரு வயது அதிகம்தான். இருந்தாலும் என்னை ‘சார்’ என்று தான் கூப்பிடுவார். நானும் பதிலுக்கு, ‘சொல்லுங்க சார்’ என்பேன். ‘என்ன சார் கிண்டல் பண்றீங்க?’ என்பார். அவர் என்னைக் கூப்பிடும் போது மரியாதையான சொல்லாகவும், நான் அவரைக் கூப்பிடுகையில் ‘கிண்டலாகவும்’ மாறிப் போகிற இந்த ‘சாரை’ இன்னும் விட்டொழிக்க முடியவில்லை.

எனக்கும் பழனிக்குமான அறிமுகம் கடந்த மூன்று மாதமாகத்தான். நான் வேலை செய்யும் கூரியர் கடை மாடியிலிருந்து பார்த்தால், நேர் எதிரே பழனியின் கடை தெரியும். பெரும்பாலும் பெஞ்சில் காலைக் குத்த வைத்து, சுவற்றில் சாய்ந்தபடியோ, எப்போதாவது முடிவெட்டிக் கொண்டோ இருக்கும் பழனியைப் பார்க்கலாம்.

பழனி சவரம் செய்கிற அழகே தனி சுகம்தான். முதலில் சவரம் செய்ய வருகிறவர்களை ‘வாங்க சார்... உக்காருங்க... சார்’ என்பார். கடைக்கு வருகிறவர் குழந்தையாக இருந்தாலும் இதே மரியாதைதான்.

 சிறிய கிண்ணத்தில் இருக்கிற தண்ணீரை கொஞ்சமாய் கையில் அள்ளி, ஷேவ் செய்து கொள்பவர் முகத்தில் இப்படியும், அப்படியுமாய் பதமாய் தேய்த்து விடுவார். பிறகு ஷேவிங் கிரீமை எடுத்து தாடையில் வைப்பார். பிரஷை தண்ணீரில் முக்கி எடுத்து, லேசாய், உதறிவிட்டு, அப்படியே தாடையில் வைத்த கிரீமைத் தொட்டு கன்னமெங்கும் பூசி விடுவார். முகமே நுரைப் பூவால் மூடிவிடும். இப்போதே சிலர் கண்மூடி தூங்க ஆரம்பித்து விடுவார்கள்.

அடுத்து, பிளேடு கத்தியை எடுத்து, சத்தமே வராமல் பிளேடை இரண்டாக உடைத்து, ஒன்றை பிளேடு கத்தியில் பொருத்துவார். தூங்குபவரை சற்றும் தொல்லை செய்யாமல் தலை எந்தப்பக்கம் சாய்கிறதோ, அந்தப் பக்கத்திற்கு வாகாக ஷேவ் செய்வார்.

“சரியானு பாருங்க, சார். எதாவது குறை இருந்தா சொல்லுங்க, செய்யிறேன்...” என்று கேட்பார்.

முடிவெட்டினாலோ, ஷேவிங் செய்தாலோ ... செய்து முடித்தவுடன் ஒரு முடிகூட கீழே கிடக்க விடமாட்டார். மொத்தமாய்க் கூட்டிப் பெருக்கி, அள்ளி, ஒரு பாலிதீன் பையில் கட்டி வைத்து விடுவார். அவ்வளவு சுத்தம்.

பல நேரங்களில் பழனியின் கடை அருகிலிருந்தே கவனித்ததில் எனக்குள் நெருடிய சந்தேகமொன்றை ஒருநாள் கேட்டே விட்டேன்.

“ஏன் பழனி, ‘மயிரு’ன்னு சொல்லாட்டியும் ‘முடி’ங்கிற வார்த்தையக் கூட சொல்ல மாட்டேங் கிறீங்க...?

லேசாய்ச் சிரித்துக் கொண்டே பழனி சொன்ன பதில் என்னை உலுக்கிப் போட்டது.

“எனக்கு சோறு போடுற வார்த்தை சார் அது..”

மஞ்சப்பட்டு, கூட்டு ரோடிலிருந்து சரியாய் ஆறு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது கீரப் பள்ளம் கிராமம். பழனியின் கிராமமது. அறிமுக மான இந்த மூன்று மாதத்திலேயே பழனி இரண்டு முறை அவரது கிராமத்திற்கு கூட்டிப் போயிருக் கிறார். முப்பது, நாற்பது வீடுகள் கொண்ட சிறிய கிராமம். ஊர் எல்லையில் காளியம்மன் கோயில். அதையொட்டி பெரிய அரசமரமொன்று.

“எங்க தாத்தன் முப்பாட்டன் காலங் காலமா தொழில் செஞ்ச இடம் சார்..” என்று பெரிய கல்லொன்றை காட்டினார் பழனி.

கல்லுக்கான சொர சொரப்பின்றி மழ மழவென்று பளிங்காய் ஜொலித்தது. அந்தக்கல். இப்படி கல்லே தேய்ந்திருக்கிறதென்றால், அதில் உட்கார்ந்து உழைத்த மனிதர்கள் எப்படி தேய்ந் திருப்பார்களென்று நினைவு உள்ளுக்குள் ஓடியது. பழனி குடும்பத்தினர்தான் அந்த கிராமத்தில் இருந்த ஒரே நாவிதர் குடும்பம். பழனியின் தாத்தா, அப்பா எல்லாமே ஊர் நாவிதர்களாக இருந் திருக் கிறார்கள்.

ஊரில் இருக்கிறவர்களுக்கு முடிவெட்டுதல், ஷேவ் செய்தல், மொட்டை போடுதல் எல்லாமே அரசமரத்தடியில்தான். கோயில் தர்மகர்த்தா, குருக்கள் இருவருக்கு மட்டும் வீட்டிற்கே போய் செய்து விட வேண்டும்.

இவர்கள் செய்கிற வேலைக்கு ஊரில் யாரும் காசு தரமாட்டார்கள். ஆண்டுக்கொருமுறை அறுவடை சமயத்தில் வீட்டுக்கு ‘மூணு மரக்கா’ நெல்லைக் கூலியாகத் தந்துவிடுவார்கள். இந்த நெல்லை வாங்க ஒவ்வொரு வீட்டு வாசல் படியையும் பலமுறை ஏறி இறங்க வேண்டி யிருக்கும்.

இதில்லாமல் ராத்திரி சாப்பாட்டுக்குத் தட்டெடுத்துப் போனால், ஒவ்வொரு வீட்டிலும் ஒரு கைப்பிடிச் சோறு கொடுப்பார்கள். ஊரிலுள்ள வண்ணான் குடும்பத்திற்கும் இதுதான் கூலி.

பழனியின் அப்பாவுக்கு கண் பார்வை குறையவே, நான்காம் வகுப்போடு படிப்பைத் தலைமுழுகிவிட்டு, கத்தியை எடுத்துவிட்டார் பழனி.

முட்டி நோக உட்கார்ந்து வேலை செய்தாலும், அரை வயிறு பசியோடு படுப்பதும், வீட்டுக்கு வீடு தட்டேந்தி போவதும் பழனிக்கு அறவே பிடிக்க வில்லை.

தப்பிப் பிழைக்க வழிதேடி தவித்துக் கிடந்த பழனியை எப்படியோ இழுத்து வந்துவிட்டது இந்த மஞ்சப்பட்டு கூட்டுரோடு.

மூன்று பக்கமும் மண்சுவர். மேலே கீற்று வேய்ந்த கூரை. கதவு கிடையாது. பலகைத் தடுப்பு வைத்து, கயிறு போட்டு கட்ட வேண்டும். பழனி யின் இந்தக் கடைக்கு இருநூற்றைம்பது ரூபாய் வாடகை வேறு. அட்வான்ஸ் ஏதுமில்லை என்பது ஆறதலாயிருந்தது.

காலொடிந்த ஒரு பெஞ்ச் கடையில் கிடந்தது. அதில் இருவர் உட்காரலாம். முடிவெட்டிக் கொள்கிறவர் உட்காருகிற நாற்காலி ஒன்று. எதிரே லேசாய் ரசம் போன கண்ணாடி. சாமிப்பட க் காலண்டர். இதுதான் பழனியின் மொத்தக் கடையுமே.

பழனியைத் தேடி ஊர்க்காரர்கள் கூட்டு ரோட்டிற்கே வந்துவிட்டார்கள்.

“பாருப்பா, நம்மூரு பழனி கடை போட்டிருக் காம்பா”என்றபடியே ஷேவ் செய்து கொண்டும், முடிவெட்டிக் கொண்டும், மனசே வராமல் சட்டைப் பையைத் துழாவி ஒரு ரூபாயோ, இரண்டு ரூபாயோ சில்லறையைத் தந்து விட்டு போனார்கள்.

பழனி தயங்கித் தயங்கிக் கேட்டால், “ ஏய், நீ நம்மூரு அமட்டன்டா. அசலூருக்காரன் மாதிரி எங்கிட்ட காசு கேக்காதே .வீட்ல வந்து நெல்லு வாங்கிக்க. வழக்கத்த மாத்தி ஏதாவது சாமி குத்தம் வந்துடப்போவுதுடா...” என்று கொஞ்சம் பயமும் காட்டி விட்டு நகர்ந்தார்கள்.

வாயடைத்துப் போய் நின்றார் பழனி.

பழனியும் நானும் பக்கத்திலிருந்த கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தோம்.

மண் ரோட்டிலிருந்து புழுதி கிளப்பியபடி மேலேறி, தார்ச்சாலையில் வந்து நின்றது அந்த டிவிஎஸ் விக்டர். வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினார் கனத்த சரீரம் கொண்ட அந்த மனிதர். முன்னே பெருத்த தொப்பை. நடு ரோட்டில் நின்று சட்டையைத் தூக்கி கரைவேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டார்.

டீக்கடைப் பக்கமாய் பார்வையைத் திருப்பினார்.

“டேய் பழனி! அங்க என்னடா மயிரப் புடுங்கிற. ‘வெரசா வாடா இங்கெ”- என்று அதட்ட லான குரலில் பழனியைப் பார்த்து கத்தினார்.

பாதி டீயை அப்படியே வைத்துவிட்டு பழனி ஓடினார்.

 “ஊருக்குள்ள இருந்து வேலை செய்யிறத வுட்டுப்புட்டு, எங்கள இப்படி அலைய விடுற ..ம்ம” என்றார்.

அப்படியெல்லாமில்லே...என்பதாய்த் தலையாட்டி மறுத்தார் பழனி.

நாற்காலியில் உட்கார்ந்தபடியே, பரட்டென சட்டையைக் கழற்றி பழனியின் முகத்தில் அடிப்பது போல் வீசினார். அதை பவ்வியமாகப் பிடித்து ஆணியில் மாட்டினார் பழனி.

“பெரிய மாப்பிள்ளைக்கு ஆபரேசன். நானும் எஞ் சம்சாரமும் நாலு மாசமா பெங்களூர்ல இருந்துட்டு நேத்து தான் வந்தோம். ஊரே ரொம்ப மாறிப் போச்சு. மொத்தப் பயலுமே கூட்டுரோடே கதின்னு கெடக்கிறாங்க. சரி... புது பிளேடா போடுடா...”

அவர் போக்கில் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார். பழனி கத்தியை லேசாய் துணி வைத்து துடைத்து, புது பிளேடை எடுத்து மாட்டி ஷேவ் செய்ய ஆரம்பித்தார்...

“டேய்... லேசா கத்திய போடுடா... இந்த இழு இழுக்கிறே. எதிர் போடாதே... “

“ம்ம்... ம்ம்” என்றபடியே பழனி ஷேவ் செய்து முடித்தார்.

பழனி முகத்தைக் கழுவி பவுடர் போட்டு விட்டார். சீப்பெடுத்து தலைவாரி விட்டார். அப் போதும் நாற்காலியை விட்டு இறங்காதவர், படக்கென வலது கையைத் தூக்கினார்.

ஈரவாடை மூக்கைத் துளைத்தது. சாம்பல் நிறத்தில் அக்குளில் அழுக்குத் திரண்டிருந்தது. உள்ளிருந்த மயிர்களில் அழுக்குப் பின்னிக் கொண்டு அடை அடையாக இருந்தது. வியர்வை நாற்றமில்லை. கொழுப்பின் நாற்றம்.

“அக்குள் மயிர எடுடா...” என்றார்.

பக்கத்தில் சென்ற பழனியும், பவுடரை எடுத்து அக்குளில் அடித்தார். வெள்ளைப் பஞ்சே அழுக்கு நிறமாய் மாறியது.

இடது கை ஆட்காட்டி விரலாலும், கட்டை விரலாலும், அவரது வலது கை மேல் சதையை சற்றே அழுத்திப் பிடித்தார். அக்குள் மயிரை மழித்தெடுத்தார். அழுக்குக் கட்டியாய் “ சொத்” தென்று தரையில் விழுந்தது. இடது கையைத் தூக்கினார். அதையும் மழித்தெடுத்தார்.

எழுந்து சட்டையைப் போட்டவர், சட்டைப்பைக்குள் சம்பிரதாயமாக கையை விட்டுப் பார்த்து “சில்லற இல்ல, அடுத்த வாட்டி வர்றப்ப கேட்டு வாங்கிக்க..” என்று வேகமாய் வெளியே வந்தவர், அதே வேகத்திலேயே வண்டியையும் கிளப்பிக் கொண்டு புழுதியோடு கலந்தார்.

இதையெல்லாம் தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்த எனக்குள் ஆத்திரம் பொங்கியது.

“யாரு பழனி இந்தாளு?” என்றேன்.

“எங்கூரு தான் சார். வெத்துவேட்டு வைத்தி. மேலத்தெருக்காரன். சும்மா ஊரை மெரட்டிக் கிட்டு திரியிறான். பத்துக்காசு தேறாது சார். “பழனியின் குரலில் இறுக்கம்.

“ சரி “நானுங் கேக்கிணுமுனு பல நாலா நெனச்சிட்டு இருந்தேன். இப்பெல்லாம் டவுன்ல எந்த சலூன்லயும் கமுக்கோடு மயிரை யாரும் எடுக்கிறதில்லே. தெரியுமா?”

“அதெல்லாம் டவுனுக்கு தான் சரிப்பட்டு வரும். இங்க கிராமத்தில சொல்ல முடியாது சார். அவங்களே கூச்சமில்லாம கையத் தூக்கி எடுக்கச் சொல்லயில தொழில் செய்யிற நான் மாட்டேன்னு சொல்லலாமா ?....”

அடுத்து என்ன சொல்வதென்று புரியாமல் நின்றேன். பழனியே தொடர்ந்தார்.

“சார் .இது ஈரமேயில்லாத காஞ்ச பய ஊரு. இவங்க சாவகாசமே வேண்டாமுனு தானே இங்க வந்து கடை போட்டேன். ரெண்டு ரூவா பிளேடை போட்டு ஷேவ் செஞ்சா, ஒத்த ரூபா தர்றானுங் களே. இவங்களுக்கெல்லாம் பழைய பிளேடு போட்டு செய்யணும்னு நெனைச்சாலும், மனசு ஏனோ கேக்க மாட்டேங்கிது ”

“ உனக்கு மட்டுந்தான் தர்மம் நியாயமா ...?”

என் கேள்வி பழனியை பெரிதாய் பாதிக்கவில்லை.

“விடுசார். ஒரு நாளக்கி நா குடும்பத்தோட இந்த ஏரியாவை விட்டுக் கௌம்பணும். ஊர்க்காரங்கெ மொத்தப் பேருமே செரைக்க ஆளில்லாம தாடி மீசையோட காட்டுப்பயக மாதிரி அலையணும். பேசிக் கொண்டிருந்த பழனி சட்டென குரலைத் தாழ்த்தி, அந்தப் பக்கமாய் போகிற துண்டுக்காரரைக் காட்டி..

“சார் ... அந்தாளு தான் நம்ம கடையோட ஓனரு. எங்க ஊரு ஆளுகளோட சாதிக்கார ஆளு. இவர்ட்ட ஏதாச்சும் ஏடா கூடம் பண்ணி கடைய காலி செஞ்சிடுவாங்களோன்னு பாக்றேன். இல்லேன்னா...”

பழனியின் வார்த்தைகளில் லேசாய் கோபம் தெரிந்தாலும், முகத்தில் மட்டும் அதே சாந்தம்.

கூட்டு ரோடே அல்லோகலப்பட்டது. ஜீப்பில் இருந்து இறங்கிய நான்கைந்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ரோட்டின் இருபுறமும் நீள நீளமாய் கூடி நின்று ஏதேதோ பேசிக் கொண்டே கிளம்பிப் போனார்கள்.

ரோட்டை அகலப்படுத்தப் போகிறார்களாம். எப்படியும் ரோட்டின் மேற்கு வரிசையிலுள்ள ஏழெட்டுக் கடைகளை காலி செய்ய வேண்டுமாம்.

அந்த ஏழெட்டுக் கடைகளில் பழனியின் கடையும் ஒன்று என்பதே எனக்கு வருத்தமா யிருந்தது. ஆனால் பழனி மட்டும் ஏதும் பேசாமல் மௌனமாயிருந்தார்.

அன்று -

மாடியிலிருந்து கீழிறங்கி வந்து கொண்டிருந் தேன். தடதடத்தப்படியே வந்து நின்ற டிவிஎஸ் விக்டரிலிருந்து இறங்கினார் வைத்தி. கையிலிருந்த புகையும் சிகரெட்டை ரோட்டில் வீசியெறிந்தார்.

பழனி கடைக்குள் போனவர், முடி வெட்டிக் கொண்டவர் எழுந்ததும், நாற்காலியில் சட்டென உட்கார்ந்தார். ஷேவ் செய்து கொள்ள ஒரு பெரியவர் பெஞ்சில் காத்திருந்ததைப் பற்றி அவர் கண்டு கொள்ளவேயில்லை.

“டோய் சீக்கிரமா ஷேவ் செய்யி..” என்றார். பழனி ஏதும் பேசாமல் ஷேவ் செய்ய ஆரம்பித்தார். ஷேவிங் முடிந்தது.

கையை உயர்த்தி... “இதை எடு” என்றார்.

பழனி “முடியாது” என்பதாய்த் தலையாட்டி மறுத்தார்.

“டேய், சொல்றேன்ல . மயிரெ செரைடா!” என்றார் அதட்டலான குரலில். “அதெல்லாம் இப்ப எடுக்கிறதில்லே”-என்றார் பழனி.

பல்லைக் கடித்தப்படியே, பழனியின் சட்டையைப் பிடிக்க கையை நீட்ட, சற்றே பின்னால் விலகிப் போனார் பழனி.

நாற்காலியைப் பின்னால் தள்ளி விட்டு ஆவேசமாய் எழுந்தார் வைத்தி.

“என்னடா கொழுப்பேறிப் போச்சா? பத்தே நிமிசத்தில உங்க கடையை காலி பண்ண வைப்பேன். கவட்டி மசிரை செரைன்னாலும் செரைச்ச பயக, இப்ப பதிலாடாப் பேசுறீக ?”

பழனியை அடிக்க வலது கையை ஓங்கினார் வைத்தி. இடது கையால் வைத்தியின் கையை இறுக்கிப் பிடித்தார் பழனி.

திமிறிக் கொண்டே, “கைய விடுடா, கைய விடுடா...” என்று கத்தினார் வைத்தி.

வைத்தியின் கையை அவர் நெஞ்சோடு சேர்த்தணைத்து, கோபமாய் அவரை வெளியே தள்ளியபடி பழனி சொன்ன வார்த்தைகள் மட்டும் தெளிவாய், உறுதியாய் என் காதில் விழுந்தது:

“வெளியே போடா, மயிரு !”