மார்கழி மாதத்து சென்னையில் இதமான பனி பொழியும். இசையால் சபாக்கள் நிரம்பி வழியும். திருப்பாவை, திருவெம்பாவை பாடி கூட்டம் சூழ வலம் வரும். புத்தகத் திருவிழாவை ஒட்டி புத்தக வெளியீடுகள் நடைபெறும். நவீன அச்சகங்கள் ஓயாது ஓடிக் கொண்டிருக்கும். 20ஆண்டுகளாய் தொடரும் த.மு.எ.க.ச கலைஇரவைத் தொடர்ந்து சில ஆண்டுகளாய் சென்னை சங்கமம், இப்போது சர்வதேச திரைப் படவிழா என புதிய புதிய அழகோடு சென்னை மிளிர்கிறது.

டிசம்பர் பதினைந்து தொடங்கி இருபத்து மூன்று வரை எட்டாவது சர்வதேசத் திரைப்படவிழா நடைபெற்று முடிந்திருக்கிறது. குறுந்தகட்டு யுகத்தில் உலகப்பட விழாவைப் பார்க்க கூட்டம் வருமா? நெறித்த புருவங்கள் ஆச்சரியத்தால் உயர்ந்து நிற்கின்றன.

ஒன்பது நாட்கள், நான்கு திரையரங்குகள், நூற்று எண்பது காட்சிகள், நூற்று ஐம்பது படங்கள், இருபதாயிரம் ஆர்வலர்கள் என நடைபெற்று முடிந்திருக்கிறது. திரைக் கலைஞர்கள், மாற்றுத் திரைப்பட ஆர்வலர்கள், ஊடக மாணவர்கள் நாளைய இயக்குநர்கள், சொற்பமாய் எழுத்தாளர்கள் என திரையரங்குகளில் இருந்த இதமான சூழல் மகிழ்வுகூட்டியது.

பல்வேறு தலைப்புகளில் விவாத அரங்கம், செய்திமடல், அதிக திரைப்படம் பார்த்தோருக்கான பஃப் (ரெகக) விருது, சிறப்பு மலர், சிறந்த தமிழ்ப் படம், இயக்குநர், தயாரிப்பாளர், சிறப்புக் கலைஞர் களுக்கான சிறப்பு விருது, சிவப்புக் கம்பளக் காட்சி என பல விதங்களில் பங்கேற்பாளர்களை கவர்ந்தது இவ்விழா.

சீனா, தென்மார்க், ஜெர்மனி, கொரியா, கிரீஸ், வெனிசுலாவிலிருந்து, படைப்பாளிகள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து அபர்ணாசென், கிரீஸ்காசரவள்ளி, சஞ்சய் நாக், பிஜூ, மோகன் என கலந்து கொண்டனர். பாலுமகேந்திரா, பாலசந்தர், சாருஹாசன், மணிரத்னம், சங்கர் அர்ச்சனா, விக்ரம், பி.லெனின். சரத்குமார், மிஸ்கின், வசந்தபாலன், பிரபுசாலமன், சிம்புதேவன், பாஸ்கர்சக்தி என தமிழ்ப் படைப்பாளிகள் பங்கேற்றனர். எம்.சிவகுமார், டி.லட்சுமணன், இரா.தெ.முத்து, ச.விசயலட்சுமி, பால்வண்ணம் போன்ற தோழர்களும் கலந்து கொண்டனர்.

சிறந்த தமிழ்ப் படமாக வசந்தபாலனின் அங்காடித்தெரு, சிறந்த இயக்குநராக பிரபுசாலமன், சிறந்த கலைஞராக பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசளிக்கப்பட்டது. களவாணி இரண்டாவது சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்டது. தயாரிப்பாளர்களுக்கும் தலா ஒரு லட்சம் பரிசளிக்கப்பட்டது.

இந்த ஒன்பது நாட்களில் எம்மால் பதினாறு படங்களைப் பார்க்க முடிந்தது. பதினாறையும் எழுத இயலாது. பாதித்த சில படங்களை மட்டும் பகிர்ந்து கொள்ளலாம்.

ஆஸ்திரேலிய பெண் இயக்குநர் ஜீலி பெர்ட்டுசீலியின் தி ட்ரீ, உணர்ந்து புரிந்து கொண்ட அப்பாவின் இழப்பால் துயருறும் குழந்தைகளின் மனவுலகிற்கு அப்பாற்பட்டு பெரியவர்கள் யோசிப்பதும் குழந்தைகளைக் கலக்காமல் எடுக்கப்படும் முடிவுகள் குடும்பத்தைப் பாதுகாக்க இயலாது என்பதை சிறுமி சீமோனுக்கும் முற்றத்து மரத்திற்குமான பிணைப்பாக உருவகப்படுத்தியக் கதை ஆஸ்திரேலிய உட்புற கிராமமொன்றை களனாகக் கொண்டது.

குடிப்பழக்கத்தால் வேலை இழந்த அமர் இஸ்லாமிய வகாப் அமைப்பில் பணிக்கு சேர, அவனைப் பார்க்கப் போகும் இளம் மனைவி லூனா அவ்வமைப்பில் நிலவும் ஆண் சார் சுதந்திரம், மூடப் பழக்கங்கள், பெண்ணுக்கு எதிரான கொள்கைகளை காணச் சகியாமல் அமரை அழைத்துக் கொண்டு ஊர் போய் சேர்கிறாள். ஊர் வந்த கணவனிடம் மத சார் பழமைவாதங்கள் படிந்திருப்பதையும் தனது மென்னுணர்வுகள் புறக்கணிக்கப்படுவதையும் பொறுத்து பொறுத்துப் பார்த்த லூனா இனிமேல் சேர்ந்து வாழ இயலாது என முடிவெடுத்து வறண்ட முத்தமொன்றை அவன் உதட்டில் வைத்து விட்டு குட்பை சொல்லி கிளம்புகிற ஆன் தி பாத் கதையை உணர்ச்சி மேலோங்கிட இயக்கி இருக்கிறார் போஸ்னியா நாட்டு ஜஸ்மில்லா சபானிக் என்ற பெண் இயக்குநர். லூனாவாக சிருங்கா சிவிடெசிக்கின் தோற்றமும் நடிப்பும் அருமை.

தனது அறுபதாவது வயதில் படமெடுக்கத் தொடங்கிய இரானிய இயக்குநர் அப்பாஸ் கியாதோஸ்மி யின் சர்டிஃபைட் காப்பி, திருமண ஒப்பந்தம் காகிதத்தில் இருப்பதையும், காதலும் அன்பும் பிரிட்டிஸ் எழுத்தாளரோடு கிளைத்திருப்பதை உணரும் பிரான்ஸ் பெண்ணிற்குமான கதை பெண் நோக்கில் காட்சி படுத்தப்பட்டுள்ளது. பிடிக்காத இத்தாலிய கணவனோடு ஏன் சேர்ந்து வாழ வேண்டும்? குடியுரிமை பாதுகாப்பிற்காக இருக்குமோ? கதைக்கு இப்பாலும் அப்பாலுமான யோசிப்பு. இது பிரான்ஸ் படம்.

சிசிலியன் கிராமத்தில் கிரிமினல் கும்பலால் கொல்லப்பட்ட தனது அப்பா, அண்ணனின் கொலையை யும் தொடரும் கிரிமினல் கும்பலின் நடவடிக்கைகளையும் நேர் சாட்சியாகப் பார்த்து அவ்வப்போது டயரியில் குறித்து வருகிற பனிரெண்டு வயது ரீத்தா பதினெட்டாவது வயதில் கொலையை செய்தவர்களுக்கு தண்டனை வாங்கித்தர டயரிக் குறிப்புகளோடு நீதிமன்றம் போகிறார். வழக்கு குற்றவாளிகளை நெருங்கும் நேரத்தில் நீதிபதி கொல்லப் படுகிறார். அரசியல் செல்வாக்கு மிக்க கிரிமினல் கும்பலால் பின்னடையும் வழக்கை தீவிரமாக்க ரீத்தா கடைசியாக நகரின் மையமான விடுதிக் கட்டிடம் மேலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள ஊடகம், பொதுமக்களின் கவனத்தை ஈர்த்த இந்த மரணத்தால் வெடித்த பொது மக்களின் போராட்டம் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருகிற இத்தாலியின் உண்மைக் கதையை துள்ளத் துடிக்க நாற்பது வயதான இயக்குநர் மார்கோ அமெண்டா தந்திருக்கிறார்.

பகலில் கூலி வேலைகளைச் செய்து கொண்டு இரவில் ஒண்டுகிற அழுக்கடைந்த, காற்று வராத நெருக்கடி மிகுந்த பார்சிலொனா நகரின் குடியிருப்புகளில் வாழ நேர்ந்த செனகல், பாகிஸ்தான், இந்தோனேசிய, ருமேனிய எளிய மக்களின் வாழ்க்கைப் பாடுகளை, ரணத்தை, காதலை, மனித நேயத்தை எந்த ஒப்பனையு மின்றி அனுபவப் பகிர்வாக புகழ் பெற்ற ஸ்பானிய இயக்கு நர் அலஜாண்ட்ரோ இன்னாரிட்டு காட்சிபடுத்தி இருக் கின்ற பியூட்டிஃபுல் கேன்ஸ்படவிழாவில் கவனத்தை ஈர்த்தது போலவே சென்னைப் படவிழாவிலும் ஈர்த்தது; வலியைத் தந்தது.

சீனாவையும் வடகொரியாவையும் பிரிக்கின்ற டியூமன்நதி, பனிக்காலங்களில் உறையும் பொழுது சீனாவை நோக்கி இடம் பெயர்கின்ற வடகொரியர்களின் சிரமங்களையும் அவர்களின் மனப்பிறழ்வுகளையும் காட்டு வதினூடாக வடகொரியாவின் அரசியல், பொருளா தாரத்தை படமெங்கும் எதிர்நிலையில் காட்சி படுத்துகிற தென்கொரியாவின் டோமன் ரிவர் படத்தையும் பார்க்க முடிந்தது. இதன் இயக்குநர் சீனாவைச் சேர்ந்த லூ சாங்.

இந்தியப் படப்பிரிவில் கடைசி நாளன்று பார்த்தே தீர்வதென்று அபர்ணாசென்னின் இந்தி மிருனா ளினியைப் பார்த்தேன். நடிப்பிற்கான ஊர்வசிப் பட்டத்தை பெறக்காரணமான இயக்குநரோடு ரகசியத் திருமணம் செய்து கொண்டு, ஒரு குழந்தைக்குத் தாயாகி பின் வந்த முரண்பாட்டில் இயக்குநரை நடிகை மிருனாளினி பிரிய, நடுத்தர வயது காலத்தில் இளவயது நடிகரோடு ஏற்படும் பழக்கம் காதலாகி, அந்தக் காதல் நழுவிப் போக தற்கொலைக்கு முயலும் தருணத்தில், முன்னர் பழக நேர்ந்த எழுத்தாளர் சிந்தனின் கடிதத்தி னூடாக உடல்சார் உறவுக்கு அப்பாற்பட்ட நேசமும் காதல் போல மரியாதைக் குரியதுதான் என்ற பொறி தட்டுதலில் தற்கொலையிலிருந்து மீண்டு வாழத் தொடங்குகிறார் மிருனாளினி என்பதானக் கதை மனசை உலுக்கியது. நடிகையாக அபர்னாசென் வாழ்ந்திருந்தார்.

இந்தப் படங்களினூடாக நமது படங்களை வைத்துப் பார்க்கையில் நமது பலவீனம் தெரிகின்றது.மாறி வருகின்ற தமிழ் சினிமாவின் மொழியும் விசாலமும் புரிகின்றது. எனினும் திரைக்கதைக்கு சம்மந்தமில்லாத எந்தத் திணிப்பையும் உலகப்படத்தில் பார்க்க முடிவதில்லை. கதைசார் களங்கள், இயற்கை வெளிச்சத் தில் படமாக்கும் நேர்த்தி, கூடுதல் பொருள் தருகின்ற இயற்கை சார் நிலக்காட்சிகள், ஒளிவண்ணம், இசை என நம் ரசனை, பார்வை,அழகியல் புதிய உயரத்தை தொட இப்படவிழா உதவியது.

வரும் ஆண்டுகளில் மாற்று சினிமா குறித்த சரியான பார்வை கொண்ட திரைக் கலைஞர்கள், இயக்குநர்கள், திரைஆய்வாளர்கள், எழுத்தாளர்கள் விழாக் குழுவில் இணைக்கப்பட்டு புதியப் புதிய திரளினர் பங்கேற்கவும் கூடுதல் வெற்றி பெறவும் தமிழக அரசும், இந்திய சினிமா ரசனையாளர் அமைப்பும் திட்டமிட வேண்டும்.