துண்டு துக்காணி நிலம் கொண்ட சிறு விவசாயிகள், அதுவுமற்ற விவசாயக் கூலி களின் வாழ்வு அப்படியே இந் நாவலில் அப்பட்டமாக படம் பிடித்து காட்டப்படுகிறது. கூலி வேலைக்குச் செல்லும் இவர்கள் மில்லில் வேலைக்கு சேர்ந்தால் மாதாமாதம் கணிசமான சம்பளத்தைப் பெறலாம். பல சலுகைகளும் கிடைக்கும். அது சமூகத்தில் அந்தஸ்தாகவும் கருதப்படும் என நினைக்கிறார்கள்.

விளக்கை தேடி ஓடும்விட் டில் பூச்சியை போன்றது இவர்களின் நினைப்பு என்பதை மில்லில் சேர்ந்தவுடன் புரிந்து கொள் கிறார்கள். 6 மாதம் ஓசி வேலை. அதற்கு பின்னால் 3 ரூபாய் சம்பளம். அதற்கு பின்னால் சம்பள உயர்வு என்ற பெயரில் 50 பைசா கூடுதல். மில் வேலை யோடு மில்லுக்குள்ளிருக்கும் விவசாய வேலையும் சேர்த்து பார்க்க வேண்டும். ஒரு நாள் லீவுக்குக்கூட மேலதிகாரியிடம் கெஞ்சிக் கூத்தாட வேண்டும்.

அத்தோடு குதிரை கீழே தள்ளியதும் மட்டுமல்லாமல் குழியும் பறித்த கதையாக பொய்யான குற்றச்சாட்டின் பேரில் மாதக்கணக்கில் இடைநீக்கம் வேறு. இப்படிப்போகும் மில் வாழ்க்கையின் நிலை வெளியில் தெரியப்போய் ஊராரின் கேலிக்கு ஆளாகும் சோகமும் சேர்ந்து கொள்கிறது.

அனுபவமே ஆசான் என்பது போல மில்லின் கெடுபிடி எனும் இருட்டு சங்கம் என்ற வெளிச்சத்தை நோக்கி இத்தொழிலாளிகளைப் போக வைக்கிறது. பெரும்பாலானவர்கள் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் ஆதரவும் பூரணமாகக் கிடைக்கிறது.

3 ரூபாய் சம்பளமும் உத்தர வாதமில்லாத நிலையில் வீட்டின் வறுமை, கந்துவட்டிக்காரனின் நெருக்கடி போன்ற சம்பவங்களை மிக உருக்கத்தோடு எழுதியிருக்கிறார் ஆசிரியர்.

மில் வேலையை நோக்கிய ஆவலையும், அங்கு படும் சிரமங்களையும்கூட அவர் கொண்டு போகும் விதம் ஒன்றின் மேல் ஒன்றாக கற்களை அடுக்கி வீடு கட்டுவதுபோல் இருக்கிறது. மெல்ல மெல்ல வாசகர்களைக் கொண்டு போய் நிறுத்தும் இந்த யுக்தி காமுத் துரைக்கே உரியது.

சில இடங்களில் வட்டார வழக்குச் சொல் லேசான நெருட லை தருகிறது. காமுத்துரையும் ஒரு பஞ்சாலை தொழிலாளி யாக இருந்தவர் என்பதினால் மில்லுக்குள் உள்ள வேலைப் பிரிவுகளை அந்த மொழியி லேயே அவர் லயித்து சொல்லி யிருக்கிறார்.

மில்லையே பார்க்காத வாசகர்களுக்கு அதுவும்கூட கொஞ்சம் வாசிப்பதில் சிரமத் தைத்தான் தரும். மொத்தத்தில், தமிழக கிராமங்களில் எந்தவித தொழிலும் இன்றி மழையை யும், மண்ணையுமே நம்பி வாழும் விவசாயக் கூலிகள் ஒரு மாதாந்திர உத்தரவாதமான சம்பளத்திற்கு ஏங்குவதை இதை விட நயமாக யாரும் எழுத்தில் கொண்டு வர முடியாது.

இப்படி ஏங்கும் கூலிகளை எப்படி வளைத்து தங்களது லாப சுரண்டலுக்கு பயன்படுத்தலாம் என்ற மில் முதலாளியின் தந்திரங் களையும் அதே நயத்தோடு சித்தரித்திருக்கிறார்.

தொழிலாளிகளை ஒட்ட சுரண்ட நினைத்த மில் முதலாளி கடைசியில் தானே ஒரு காண்ட் ராக்ட்காரராக மாறி கூலிக்கு நூல் உற்பத்தி செய்து கொடுப்பதாக நாவல் முடிகிறது.

சிறிய மீன்களை பெரிய மீன்கள் விழுங்குவது போல் பெரு முதலாளிகளின் ஆதிக்கம் நச்சென கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மிகப்பெரிய அணிதிரட்டப்பட்ட தொழிலாக இருந்த மில்கள் இன்றைக்கு நவீன குடியிருப்புகளாகவும், ஷாப்பிங் மால்களாகவும் மாறி ரியல் எஸ்டேட் தொழிலின் அடிப்படையாகிவிட்டன.

வயதுக்கு வந்த பின் வீட்டிற்கு அப்பால் வெளிச்சத் தையே பார்க்காத கிராமத்து பெண்கள் இன்றைக்கு மாவட்டம் விட்டு மாவட்டம் போய் சுமங்கலி திட்டத்தில் சேர்ந்து 3 ஆண்டுகாலம் ஒப்பந்த தொழிலாளியாய் வேலை பார்க்கும் நிலைக்கு பஞ்சாலைகள் போய் விட்டன. முதலாளிகளின் லாப நோக்கம் எப்படியெல்லாம் சிந்திக்கிறது என்பதையும், இயலாமையில் இருக்கும் ஏழைகள் தங்களது சடங்கு, சம்பிரதாயங்களை துறந்து வயிற்றுப்பாட்டுக் காக ஓடுவதும்தான் இன்றைய பஞ்சாலைகளின் நிலை.

தான் சார்ந்த பஞ்சாலைத் தொழிலின் அவலங்களை ஒவ் வொரு நாவலாக்கி வெளிச்சத்திற்கு கொண்டு வந்த காமுத்துரை மிகுந்த பாராட்டுதலுக்குரியவர். பல ஆண்டுகளுக்கு முன் மில்களை பற்றி இப்படியொரு நாவல் வந்திருந்தால் மில்களின் நிலைமையே வேறு மாதிரியாக இருந்திருக்கும். 

வெளியீடு: உதய கண்ணன், 10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை - 600 011.

விலை ரூ. 150.