ஆர்.கே.எஸ்.சம்சுகனி, டி.மரியூர்

ஆஸ்திரியா நாட்டின் வியன்னா நகரில் ஸ்வீடனைச் சேர்ந்த மரியம் தாப்சன் என்ற பெண் செக்ஸ் பள்ளி தொடங்கி உள்ளாராமே?

“சொல்லித் தெரிவதில்லை மன்மதக் கலை” என்றுதான் இப்போதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்திலேயே வாத்ஸ்யாயனார் தனது “காம சூத்திரம்” மூலம் சொல்லிக் கொடுத்தார். கோயில்களில் சிற்பங்கள் மூலம் சொல்லிக் கொடுத்தார்கள். முறையான பாலியல் கல்வி இளைஞர்களின் உடல் மற்றும் மனோ ஆரோக்கியத்தை வளர்க்கும். சிக்கல் என்னவென்றால், சாதாரணக் கல்வியே வணிகமயமாகிவிட்ட இன்றைய உலகில் கலவிக் கல்வியும் அதற்காகத் தான் நடக்கும். அது மனோ விகாரங்களையே கிளப்பும். ஐரோப்பாவின் பல ஊர்களில் அதுதான் நடக்கிறது என்கிறார்கள்.

 மொழிவாரி மாநிலமாகத் தமிழ்நாடு பிரிக்கப் பட்டபோது நமது மக்கள் தொகை மூன்று கோடி. இப் போது 7.21 கோடி. இதில் தென் தமிழகத்தின் 18 மாவட்டங்களில் மட்டும் மூன்று கோடிக்கும் அதிக மாக மக்கள் வசிக்கிறார்கள். எனவே, மதுரையைத் தலைநகராகக் கொண்டு “தென் தமிழ்நாடு” அமைக்க வேண்டும் - என்று டாக்டர் சேதுராமன் கூறுவது பற்றி..?

Dr.Sedhuraman_250மக்கள்தொகை பெருக்கத்தை வைத்து மட்டும் தனி மாநிலக் கோரிக்கை எழுப்புவது முறையல்ல. சிறிது காலத்தில் தெற்கேயும் மக்கள் தொகை உயரும். அப்போது திருநெல் வேலியைத்
தலைநகராகக் கொண்டு “தென்கோடித் தமிழ்நாடு” கேட்பதா? பிரச்சனையின் மையப் பொருள் மதுரையிலும் அதற்குத் தெற்கே யும் தொழில் வளர்ச்சி இல்லை என்பது. இதனால் படித்த பிள்ளைகள் எல்லாம் வேலைதேடி பெரு நகரங்களுக்குச் சென்று விட மதுரை ஏதோ ஒரு பெரிய முதியோர் இல்லம்போல ஆகிக் கொண்டிருக் கிறது - மத்தியதர வர்க்கத்தைப் பொறுத்த வரை. கட்டுப்பாடற்ற முதலாளித்துவ மானது இத்தகைய ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டுவரவே செய்யும். அதற்கு மூக்கணாங் கயிறு போட்டு பின்தங்கிய பகுதிகளிலும் தொழில் வளர்ச்சியைக் கொண்டுவர வேண்டியது மத்திய - மாநில அரசுகளின் பொறுப்பு. அதைச் செய்யாத அரசுகள் மீது தனது கோபத்தைத் திருப்பட்டும் டாக்டர் சேதுராமன்.

கே.எஸ்.அகமது சுல்தான், உத்தம பாளையம்.

“காலச்சுவடு” ஜனவரி இதழில் வே. வசந்திதேவி எழுதியுள்ள ஒரு கட்டுரையில் மார்க்சியத்தை ஏற்றும், அதில் நடை முறையில் ஏற்பட்ட தவறுகள் பற்றியும் விரிவாக எழுதியுள்ளார். இது பற்றித் தங்கள் கருத்து என்ன?

அந்தக் கட்டுரை ஒரு புதிய கோணத்தில், நல்ல நோக்கோடு எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. 1. “வரலாற்று மாற்றம் கிழக்கு நோக்கி ரஷ்யா, சீனா என்று திரும்பிற்று. இப்பொழுது மீண்டும் மேற்கு நோக்கிக் காற்று வீசுகிறதா?”

2. “சோசலிச சமுதாயத்தில் மனிதன் உற்பத்தி யிலும் ஆற்ற லிலும் புதிய பிரம் மாண்டங்களைப் படைப்பான். மார்க் சின் அந்தத் தீர்க்க தரிச னம் பல காரணங்களால் 20-ஆம் நூற்றாண்டில் பொய்த்து விட்டது. 21-ஆம் நூற்றாண்டில் அது மெய்யாகுமா?”

3. “ஜனநாயகமின்றி சோசலிசமில்லை; சோச லிசமின்றி ஜனநாயகம் இல்லை. இதனை மறுத்துச் செய்துகொள்ளும் சமரசங்கள் மார்க்சியத்தின் மன்னிக்கவியலா திரிபுகள்”.

vasanthadevi_2504. “21ஆம் நூற்றாண்டின் சோசலிசம் இத்தவறு களையெல்லாம் விடுத்துப் பன்முக ஜனநாயகத் திற்கு வழி வகுக்க வேண்டும்”

5. “அரேபிய வசந்தத்திலும், வால்ஸ்ட்ரீட் போராட்டத்திலும் போராளிகளை ஒன்றிணைப் பதில் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்கள் ஆற்றிய பங்கு மகத்தானது. ஒரு காலத்தில் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று ஒலித்த அறைகூவல் நிதர்சனமாவதற்கான அறிகுறிகள் இன்று தோன்றியுள்ளன” - இப்படியெல்லாம் சில கருத்துக்களைக் கட்டுரையாளர் முன்வைத்திருக் கிறார். இவையெல்லாம் விவாதத்திற்குரியவை. மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அண்மையில் இறுதிப்படுத்தியுள்ள, விரைவில் வெளிவரவிருக் கிற சித்தாந்தம் பற்றியத் தீர்மான நகலில் இதற்கெல்லாம் விடை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

 ரெ.மருதசாமி, மயிலாடுதுறை

“கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்ப்போம், சங்க இலக்கியத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிவோம்” - என்று முழங்கிய “வட்டத் தொட்டி” குழுவினர் யார் என்று தெரியவில்லையே?

ராமாயணம் - மகாபாரதம் போன்றவற்றிற்கு மாற்றாகத் திராவிட இயக்கம் சங்க இலக்கியத்தைத் தூக்கிப் பிடித்தபோது கம்ப ராமாயணத்தை உருகி உருகிப் பாடி, பேசி வந்தவர்கள் ராஜாஜியின் நண்பரான டி.கே.சிதம்பரநாத முதலியாரும் அவரது குழுவினரும். அவர்களில் யாராவது இப்படித் தடாலடியாகப் பேசியிருக்கலாம்.

 செ.சத்தியசீலன், கிழவன்ஏரி.

தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தமிழ கத்துடன் இணைக்க வேண்டும் என்ற கலை ஞரின் கருத்து..?

இது ஏட்டிக்குப் போட்டியாகச் சொன்னது. கலைஞர் போன்ற மூத்த தலைவருக்கு இது அழகல்ல. என்றோ முடிந்துபோன எல்லைப் பிரச்சனையைக் கொண்டு இப்போதைய அணைப் பிரச்சனையைத் தீர்க்க முடியாது. உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்நோக்குவதே புத்திசாலித்தனமான காரியம்.

 இரா.இராஜேந்திரன், கடலூர்.

காலில் செருப்பணிந்து நடப்பதே நல்லது என்கிறார்கள் டாக்டர்கள்; வெறுங் காலுடன் நடப்பதே ஆரோக்கியமானது என்கிறார்கள் வேறு சிலர். நான் என்ன எல்லாம் தெரிந்த ஏகாம்பரமா என்று கேட்டுவிடாமல் எது சரி என்று சொல்லுங்களேன்?

பதில் சொல்லாமல் விட மாட்டீர்கள் போலும். நான் கண்ட ஒரு காட்சியைச் சொல்லு கிறேன். எங்கள் பகுதியில் இருக்கும் பூங்காவிற்கு வருகிற பலரும் காலில் செருப்புப் போட்டு வந்து, அதைக் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு நடைப் பயிற்சியை ஆரம்பிக் கிறார்கள்! இதன் அர்த்தம் என்ன? அழுக்கு நிறைந்த தமிழ்நாட்டு வீதிகளில் செருப்பில்லா மல் நடக்க முடியாது. பூங்கா நடைபாதை களில் செருப்பில்லாமல் நடந்து அக்கு பிரஷர் தாக்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

 வல்.சி.அபிஜித், மஞ்சாலுமூடு

அன்னா ஹசாரே போராட்டத்தைப் பற்றிக் கருத்துக்கூற முதல்வரோ, முன்னாள் முதல்வரோ முன்வராததைக் கவனித்தீர்களா?

ஏன் கருத்துக் கூற வேண்டும்? காங்கிரசுடனான உறவின்மை அல்லது உறவு நாளை என்னாகுமோ, யாரறிவார்? அப்போது அதற்கேற்ப அன்னாவை திட்டுவோம் அல்லது பாராட்டிக் கொள்வோம்! - இதுதான் அவர்களது கணக்கு. கொள்கை வழிப் பட்ட மதிப்பீட்டை யெல்லாம் அவர்களிடம் எதிர்பார்த்தால் அது உங்களுடைய தவறு.

 கே.அரங்கராஜன், பாதிரக்குடி

“புதிய தலைமுறை” டி.வி.பார்க்கிறீர்களா? அதன் நிகழ்ச்சிகள் பற்றித் தங்களின் மதிப்பீடு என்ன?

சில ஆங்கிலத் தொலைக்காட்சிகளைப்போல செய்திகள் பற்றிய உடனுக்குடனான அலசல்கள் நடத்தப்படுகின்றன. அதற்காகப் பலதரப்பட்ட வர்களும் அணுகப்படுகிறார்கள். இது நல்ல விஷயம். ஆனால் செய்திகள் தரப்படும் விதத்தைப் பார்த்தால் அகில இந்திய அளவில் பா.ஜ.க.வுக்கும் தமிழக அளவில் அதிமுகவுக்கும் தனி முக்கியத்துவம் தருவதாகப் படுகிறது.

 எஸ்.விவேகானந்தன், தஞ்சாவூர்

சல்மான் ருஷ்டியை இந்தியாவுக்கு வர விடாமல் செய்து விட்டதாகக் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீது பாஜக பாய்ந்திருக் கிறதே..?

நபிகள் நாயகம் பற்றி மோசமாக எழுதிய ருஷ்டிக்காக இப்படிக் கண்ணீர் விடுகிறவர்கள் இந்துக் கடவுளர்களை மோசமாக வரைந்த எம்.எப்.ஹூசேனிடம் சிறிதும் கருணை காட்டவில்லையே? அவரை இந்தியாவில் வாழ அனுமதிக்காமல் துரத்தியடித்தார்களே? அப்பொழுது எங்கே போயிற்று இவர்களின் கருத்துச் சுதந்திரம்? உண்மை என்னவென்றால், எல்லா வகை மதப் பழமைவாதங்களும் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிப்பதில்லை என்பதுதான்.

 எல்.கே.சுல்தான் முகமது, வாணியம்பாடி

ஜெயலலிதா பற்றி “நக்கீரன்” எழுதிய விவகாரம் இன்னும் முடிவதாகத் தெரிய வில்லையே? அந்தச் செய்தியை மேற்கோள் காட்டி பிரசுரித்த “இந்து” மீதும் வழக்காமே?

இறந்துபோன ஒருவரின் கூற்றைக் கொண்டு இருக்கிற ஒரு தலைவரின் சாதி பற்றி எழுதுவது சரியில்லைதான். இதற்காக “நக்கீரன்” ஏடும் வருத்தம் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. அதற்குப் பிறகும் அதை அம்மையார் இழுத்துக் கொண்டு போவது ஆச்சரியத்தைத் தருகிறது. அது மட்டுமல்ல, ஆட்டுக்கறி, கோழிக்கறி சாப்பிடுகிறார்கள்; மாட்டுக்கறி சாப்பிடுவது மட்டும் பெரிய தவறா? அம்மையார் வீட்டில் அதை அனுமதிப்பதில்லை என்பது “கொள்கைரீதியாக” எடுக்கப்பட்டமுடிவு என்று அதிமுக தலைவர் ஒருவர் அறிக்கை வெளியிட்டது இன்னும் ஆச்சரியத்தைத் தந்தது. அது என்ன கொள்கை? அது இந்துத்துவா கொள்கை அல்லவா? அவர்கள் அல்லவா மாட்டுக்கறி சாப்பிடும் மக்களைத் தாழ்வாகப் பார்க்கிறார்கள். அந்தப் பார்வை அதிமுக தலைவர்களுக்கும் உண்டா? அந்தப் பார்வை கூடாது என்று போராடிய பெரியார் - அண்ணா பெயரைச் சொல்லுகிற கட்சிக்கு இது இருக்கலாமா? யோசித்துப் பார்க்கட்டும்; இந்த விவ காரத்தை இத்தோடு விடட்டும்.

 ஜி.எஸ்.ராமநாதன், திருப்பூர்

சமீபத்தில் தாங்கள் படித்த புத்தகம் எது?

அதன் பெயர்: “வகுப்புவாதம் விளக்கப்படு கிறது- ஒரு சித்திர வரைவு”. சங் பரிவாரத்தின் மோசமான கோட்பாடுகளை, அடாவடி நடவடிக் கைகளை அது படம் போட்டுக் காட்டுகிறது. ஒரு சித்தாந்தப் போராட்ட நூலைச் சித்திரங்கள் துணை யோடு எழுதமுடியும் என்று நிரூபித்திருக்கிறார்கள் ராம் புனியானி மற்றும் சரத் சர்மா. முஸ்லிம்கள் மீது மிகுந்த அனு தாபத்தோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலை எழுதிய ராமும், படம் வரைந்த சரத்தும் இந்துக்களாகத் தெரிகிறது. மத நல்லிணக் கத்திற்கும் இது நல்ல எடுத்துக் காட்டு. இந்த ஆங்கில நூல் இப்படிப் படங்களுடன் தமிழில் வந்தால் தமிழ்நாட்டு இளம்பிள்ளைகளுக்குப் பயன்படும்.