அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரந்தொழில்” செய்திடும் இந்தியத் தொழிலாளி வர்க்கம் தனது அத்தியா வசியக் கோரிக்கைகளுக்காகவும் தேசத்தின் நலனுக்காகவும் பொங்கியெழுந்து போராடவிருக்கிறது.

பிப்ரவரி 28 அன்று தேசம் முழுவதும் கோடானுகோடி உழைப்பாளர் கூட்டம் பொது வேல நிறுத்தம் செய்கிறது.

சிஐடியு, ஏஐடியுசி முதலான பல மத்திய தொழிற்சங்கங்களும் கூட்டாக ஒன்றுபட்டு இந்த மாபெரும் போராட்டத்திற்கு அறை கூவல் விடுத்துள்ளன.

“ஏழைகளின் இதயம் குமுறினால் போராட்டம் எழுமே புவி மேலே” என்று பாட்டாளிக் கவிஞன் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடியதன் நிதர்சனம் இது. கவிக் கூற்றாய்க் களம் காணு கிறது பாட்டாளிவர்க்கம்.

ஊழலின் உறைவிடமாகிப் போன காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தீவிரமாகப் பின்பற்றி வரும் நவீன உலகமய, தாராளமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாகக் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ள தொழிலாளர் வர்க்கத்தின் பல்வேறு தரப்பு மக்களும் இந்தப் பொது வேலை நிறுத்தத்திற்கு அணிதிரளவிருக் கிறார்கள்.

ஒட்டுமொத்த மக்களையும் விழிபிதுங்கச் செய்கிற விலைவாசி உயர்வு, இருக்கிற வேலையில்லாத் திண்டாட்டத்தோடு புதி தாய்ச் சேரும் வேலையில்லாதோர் பட்டாளம், தீவிர மடைந்துவரும் விவசாய நெருக்கடி, இந்தியாவின் கோவில்கள் என்று, நாட்டின் முதலாவது பிரதமர் நேருஜியால் வர்ணிக்கப் பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய ஐ.மு.கூ. அரசால் சீர் குலைக்கப்படுதல், சில்லறை வர்த்தத்தில் அந்நிய ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களைப் புகவிட்டு சொந்தநாட்டின் நான்கு கோடி சில்லறை வர்த்தக உழைக்கும் மக்களின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் முயற்சி... இவற்றையும், இவை போன்ற இன்னும் பல மத்திய அரசின் பிற்போக்கான எதிர்மறை நடவடிக்கைகளையும் எதிர்த்தே தொழிலாளரின் இந்த எழுச்சி.

“வருகிற மத்திய பட்ஜெட்டானது வறுமை, வேலையின்மை, சமுதாயக் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் விதத்தில் மக்கள் நலன் சார்ந்த பட்ஜெட்டாக இருக்க வேண்டும்” என்பது முதலான முக்கிய ஆலோசனை களைப் போராட்டக் களம் காணவிருக்கும் மத்திய தொழிற்சங்கங்கள் மத்திய நிதியமைச்சகத்திடம் முன்வைத்துள்ளன. இவற்றை ஏற்றுக் கொண்டால் நாட்டுக்கு ஏற்றம் உண்டு. ஏற்கச் செய்வதற்காகத் தொழிலாளர் போராட்டங்களும் மறுபடி, மறுபடித் தொடரும். அநீதிக்கும், சீர்குலைவுக்கும் எதிராக ஆர்த்தெழும் போராட்டம் ஓய்வதில்லை.

இது ஒரு தேசபக்திச் செயல். அந்நிய ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுவது ஒரு தேசபக்தி என்பதைப் போல, சுதந்திர தேசத்தில் நாட்டின், மக்களின் நலனுக்காகப் போராடுவதும் ஒரு தேச பக்தியின் வெளிப்பாடுதான்.