அண்மையில் வீசிய ‘தானே’ புயலால் கடலூர் மாவட்டமே பேரழிவுக்கு உள்ளானது. விழுப்புரம் மாவட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளன. பயிர்கள், மரங்கள் அடியோடு அழிந்து பத்தாயிரம் கோடி ரூபாய்களுக்கு மேல் விவசாயிகளும் பொது மக்களும் நஷ்டமடைந்துள்ளனர். நிவாரணப் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாக மக்கள் கூக்குரலிடுகிறார்கள். மாநில அரசு அந்த இரண்டு மாவட்டங்களின் ஆட்சியாளர்களையும் மாற்றியுள்ளது.

thaney_puyal_370ஒரு தேசியப் பேரழிவாக அறிவித்து நஷ்ட ஈடு தராமல் மத்திய அரசு வெறும் 500 கோடி ரூபாயைக் கொடுத்துவிட்டு ஏமாற்றிவிட்டது. மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் உட்பட நேரில் வந்து புயல் சேதங்களைப் பார்த்தும் அவர்களுக்கு உதவிடமனமில்லை. மக்களின் துயரங்கள் தொடர்கின்றன. மாநில அரசு தீவிர கவனம் செலுத்தி ஊழல்களைத் தடுத்துநிறுத்தி நிவாரண உதவிகள் நேர்மையாக வழங்கப்பட ஆவன செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசிடம் போராடி கூடுதல் நிதி பெறவும் வேண்டும்.

 சல்மான் ருஷ்டிக்குத் தடை

2012ம் ஆண்டுக்கான இலக்கியத் திருவிழா ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடை பெற்றது. இதற்கு இந்தியாவில் பிறந்து தற்போது லண்டனில் வாழும் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டியை விழாக் குழுவினர் அழைத் திருந்தனர். பல்வேறு மிரட்டல்களுக்குப்பின் அவரது வருகை தடை செய்யப்பட்டது. ருஷ்டி எழுதிய ‘சாத்தானின் கவிதைகள்’ என்ற நாவலில் முகமது நபியை விமர்சித்திருப்பதாய்க் குற்றம் சாட்டி ஈரான் மதத்தலைவர் அயதுல்லா கொமேனி மரண தண்டனை விதித்தார். அதைத் தொடர்ந்து உலக முஸ்லிம் குருமார்கள் ருஷ்டி மீது பட்வா (தடை) விதித்தனர். அவர்கள் அதுபற்றி ருஷ்டியோடு விவாதிக்கக்கூடத் தயாராகயில்லை. ஒருதலைப் பட்சமாக முடிவெடுத்தார்கள்.

தற்போது இஸ்லாமியத் தீவிரவாதிகளால், பம்பாய் நிழலுலக தாதாக்களால் ருஷ்டியின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறித் தடுக்கப்பட்டுள்ளார். ருஷ்டியைப் போன்று பல இலக்கியவாதிகளுக்குப் பலவிதமான தடைகள் விதிக்கப்பட்டு கருத்துச் சுதந்திரம் அடியோடு பறிக்கப்படுகிறது.

 கூடங்குளம் - ஜெயலலிதா மௌனம்

கூடங்குளம் அணு உலை குறித்த பீதியை உதயகுமார் தலைமையிலான போராட்டக்குழுவினர் தொடர்ந்து கிளப்பி வருகின்றனர். மக்களின் அச்சத்தைப் போக்க மத்திய அரசும், அணு விஞ்ஞா னிகளும் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். போராட்டக்குழுவினருக்குக் கொடுப்பதற்கு வெளி நாடுகளிலிருந்து தன்னார்வக் குழுக்களுக்கு வந்த பணம் ரூபாய் 54 கோடி கணக்கை மத்திய அரசு கண்டு பிடித்துள்ளது.

இப்பிரச்சனையில் ஜெயலலிதா மௌனம் சாதிப்பதால் கூடங்குளத்தை விட்டு விஞ்ஞானிகளும் ஊழியர்களும் வெளியேறி வருகின்றனர். இருண்டு கிடக்கும் தமிழகத்தில் எப்போது மீண்டும் ஒளிபிறக்கும் என்பது தெரியவில்லை.

 இலங்கை - எஸ்.எம்.கிருஷ்ணா விஜயம்

இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா அண்மையில் இலங்கை சென்று ராஜ பக்சேயுடன் பேசிவிட்டு வந்துள்ளார். இலங்கையில் முப்பதாண்டு காலப்போர் முடிந்து முப்பது மாதங்கள் உருண்டோடி விட்டன.தமிழர்களின் மறு வாழ்வுக்கு மத்திய அரசு இலங்கை அரசுக்கு வழங்கிய சுமார் 2000 கோடி ரூபாய் அடையாளமின்றிப் போய் விட்டது. ராஜபக்சே போதுமான அளவுக்கு எதையும் செய்யவில்லை என்ற வருத்தம் தமிழர்களிடம் உள்ளது.

கிருஷ்ணா பேச்சுவார்த்தைகளில் ஈழத்தமிழர் சுயாட்சி, மறுவாழ்வு, மீனவர் பிரச்சனை உட்பட எந்தப் பிரச்சனையும் முடிவுக்கு வரவில்லை. இந்தியா மேலும் ரூ.1500 கோடி உதவும் என்று கூறிவிட்டு கிருஷ்ணா நாடு திரும்பியுள்ளார். மத்திய அரசு தொடர் கவனம் செலுத்தி தமிழர் பிரச்சனைக்கும், தமிழக மீனவர் பிரச்சனைக்கும் சரியான தீர்வு காண வேண்டும்.

 ஐந்து மாநிலத் தேர்தல்

உத்தரப்பிரதேசம், உத்தர்காண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் இம்மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. ஊழல் திமிங்கலங்களான காங்கிரசும், பி.ஜே.பியும் உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும் ஆட்சியைக் கைப்பற்ற பணப் பெட்டிகளோடு வெறிபிடித்தலைகிறார்கள்.

உ.பி.யில் தேர்தல் சின்னம் பற்றிய தமாசுகள் நிறைய நடைபெறுகின்றன. ராகுல்காந்தி பிரச்சாரத் தில் உமாபாரதியை வெளி மாநிலத்தைச் சேர்ந்த வர் என்று பேச, பதிலுக்கு உமாபாரதி “உன் அம்மா வெளிநாட்டுக்காரி” ஏன்று பேச ரசாபாச மாய் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மாயாவதி தனது சிலைகளையும் தனது தேர்தல் சின்னமான யானை சிலைகளையும் ரூ.14,000 கோடி செலவில் வைத்துள்ளார். நூற்றுக்கணக்கான யானை சிலைகளை மூடுவதற்கு தேர்தல் கமிஷன் திணறுகிறது. அவர்களுக்கு இது யானைக்குக் கோவணம் கட்டிய கதையாய் உள்ளது. யானையை மூடி மறைத்தால் கைகள் (காங்.சின்னம்) எப்படி மறைப்பீர்கள் என்று கேட்கிறார். கடும் வறுமையில் தத்தளிக் கும் மக்களை சாதி, மத வெறியூட்டி ஓட்டு களைப் பறிக்க முயற்சி நடக்கிறது.

 மூடிய அங்காடித் தெரு

சென்னை தி.நகரில் பெரும் வணிகம் செய்யும் 28 கடைகளை மாநகராட்சி மூடி சீல் வைத்து வணிகர்களைத் தெருவில் நிறுத்தியது. மூடச் சொன்னவர்களே திறப்பதற்குப் பணம் கேட்டதற்கு 28 பெரிய ‘சி’ கொடுக்கப்பட்டதாம். இந்தத் திரு விளையாடலை நடத்திய கோஷ்டி சசிப்   பெயர்ச்சியில் விரட்டப்பட்டதால் இப்போது நீதிமன்றத்தின் மூலம் ஆறுவார அனுமதியில் கடை திறந்திருக்கிறார்களாம். எப்படியெல்லாம் ஆட்சியைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கிறார்கள் பாருங்கள்.