“படத்தில் ஒரு காட்சி. ஒருவரைக் குத்திக் கொல்கிற காட்சி. அதைக் காட்டுகிறபோது திரையரங்கில் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள். இதைப் பார்த்து நான் அதிர்ந்துபோனேன். கொலைக் காட்சியில் தெரியும் குரூரத்தை ரசித்துக் கைதட்டும் அளவுக்கு இது என்ன விதமான ரசனை?

balumagendran_370அமெரிக்காவில் எடுக்கப்படுகிற வெகுஜனப் படங்கள் நம் பார்வைக்கு வருகின்றன. நாம் இன்றைக்குச் சிலாகிக்கிற இரானிய சினிமா உலகிலும் வெகுஜன சினிமா இருக்கத்தானே செய்யும்? வெகுஜன அளவு கோலை மீறி நான் எடுத்தவை இரண்டு படங்கள். வீடு, சந்தியா ராகம். இரண்டையும் குறைந்த பட்ஜெட்டில் ரூபாய் 40 லட்சத்துக்குள் எடுத்து முடித்தேன். அதைத் தொடர்ந்து நான் ரசித்த சிறுகதைகளை தொலைக் காட்சியில் தொடராகச் செய்தேன். சினிமாவில் நான் ஊன்றி நிற்க இலக்கியம்தான் காரணம். சினிமாவை நேசிக்கிறவர்கள் தொடர்ந்து நல்ல இலக்கியங்களை வாசிக்க வேண்டும். காட்சிப்படுத்துதல், சினிமா மொழி ஆகியவை அப்போது தான் நன்றாக வரும். உள்ளடக்கம், அதை வெளிப்படுத்துவதற்கான உருவம் இரண்டையும் அந்த வாசிப்புதான் உருவாக்கிக் கொடுக்கும். என்னுடைய சினிமாக்களின் பின்னணியில் இதமான இலக்கிய வாசிப்பு இருந்தது. இது அனைவருக்கும் இருக்க வேண்டும்.”

- இயக்குநர் பாலுமகேந்திரா