மையக் கோபுரத்தைச் சுற்றியுள்ள பிளாக்குகளில் மூன்றாம் பிளாக்கிற்கு சற்றுத் தொலைவில் இருந்த ஏறக்குறைய நூறு வயது புளிய மரத்தை நோக்கி, கூண்டுகளை விட்டு வெளியேறிய பிராய்லர் கோழிகளை போல வெள்ளைச் சீருடை அணிந்த கைதிகள் வந்து சேரத் துவங்கினர். சுமார் 15 அடி உயரத்திற்கு கிளைகளோ, பிடிமானத்திற்கு ஏற்ற முண்டுகளோ இல்லாமல் வழுக்கு மரமாக இருந்தது அந்தமரம். அன்றாடம் கண்ணில்பட்ட போதும் இன்றுதான் அதன் பிரம்மாண்டம் பிரம்மிப்பூட்டுவதாக இருந்தது. 15 அடி உயரத்திற்கு மேலே இன்னும் ஒரு பத்தடிக்கு மேலே இருந்த கிளையில் நின்று கத்திக் கொண்டிருந்தது கிளி. கிளி என்றால் கிளியல்ல, கிளியென்று மட்டுமே சக கைதிகளாலும், காவலர்களாலும் அறியப்பட்ட பிரேம்குமார். பிரேம்குமார் என்பது அலுவலக ஆவண கோப்புகள் மட்டுமே அறிந்த பெயராக இருந்தது.

parrot_370பச்சை நிற சோப்புக் கட்டிகளில் கிளி சிற்பம் செதுக்கி, லைபாய் சோப்புத் துண்டால் அலகு செய்து பொருத்தி, அழகிய கிளிகளை பல வடிவங்களில் செய்வதால் அவனுக்கு சிறையில் கிளியென்ற பெயரே நிலைத் திருந்தது. வேறு பல சிற்பங்கள் அவன் செதுக்கியிருந்தபோதும், அந்தப் பெயராலேயே அழைக்கப்பட்டு தன் சொந்தப் பெயரை மறக்கும் நிலையாகிவிட்டது.

சோப்புக் கட்டிகளை கிழித்த அவனது தகடு, சக கைதி ஒருவனின் முகத்தை பதம் பார்க்க, தண்டனையாக தனி செல்லில் வைக்கப்பட்டு, நேற்றுத்தான் பொது பிளாக்கிற்கு திரும்பியிருந்தான். மீண்டும் தனக்கு அந்த கூரிய தகடும் சிற்பம் செதுக்க அனுமதியும் கேட்டுத்தான் வேதாளம் போல் மரத்தில் ஏறி நின்று, வேண்டாத பேச்சுக்கள் பேசுகின்றான். இது எப்போதுமே வேடிக்கையாக முடியும் விசயமல்ல. போன மாதம் மரம் ஏறி நின்ற கைதி, எல்லா முயற்சிகளும் தோற்றுப்போய் தூக்கில் தொங்கினான். நூற்றுக் கணக்கான மனிதர்களின் கண் முன்னே தூக்கில் தொங்கி சாவதையும், மரத்தில் இருந்து குதித்து சாவதையும், இன்னும் எத்தனை முறைதான் பார்த்து தொலைக்க வேண்டியுள்ளதோ என கைதிகள் வேதனையுடன் பேசிக் கொண்டனர்.

கீழே இருந்து அன்னார்ந்து பார்த்தவாறு ‘கிளி’, ‘கிளி’ என்று அழைக்கப்பட்ட எந்த வேண்டு கோளையும் அவன் ஏற்பதாக இல்லை. குதிக்கப் போவதாக சொல்லிக் கொண்டி ருந்தவன், இடுப்பிலே சட்டைக்கு மேலே இறுக்கமாக கட்டியிருந்த துண்டை அவிழ்த்து முறுக்கி சுருக்கு தயார் செய்து கொண்டான். எல்லாக் குரல்களையும் அலட்சியப் படுத்திய வன் ஒரு குரலை மட்டும் இனம்கண்டு “ஏட்டையா நீங்க ஒருத்தர் தான் நல்லவரு, என்ன மன்னிச்சிடுங்க. நீங்க ஒங்க பிளாக்கில போய் இருங்க. இல்லேன்னா ஒங்களையும் சஸ்பெண்டு பண்ணிடுவாங்க. போங்க ஏட்டையா” என்று சொல்லிவிட்டு ஒரு கும்பிடு போட்டான்.

போன மாதம் மரத்தில் தொங்கி இறந்த நிகழ்வில் மரம் இருந்த பிளாக் காவலரும், எந்த பிளாக் கிலிருந்து வந்தானோ அந்த பிளாக் காவலரும் சஸ்பெண்டு ஆனார்கள். அவர்கள் இன்னும் பணிக்கு திரும்ப முடியவில்லை. அதனால் இப்போதும் சம்பந்தப்பட்ட பிளாக் காவலர்களும், அவர்களுக்காக மற்ற காவலர்களும், கைதிகளும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், கிளி கேட்ப தாக இல்லை. திரும்ப திரும்ப கிளி போலவே பேசிக் கொண்டிருந்தான். அங்கு புதிதாக வந்து சேர்ந்தவர்கள் “பிளாக் காவலர் யாரு” “கைதி எந்த பிளாக்” என்ற விசாரிப்புகளால் மேலும் பீதி யடைந்து காணப்பட்டனர் சம்பந்தப்பட்ட காவலர்கள். உணவுப் பொருள் கிடங்கு அதிகாரிக்கு தகவல் கிடைத்து, அவரும் பதட்டத்துடன் வந்து சேர்ந்தார். பக்கத்தில் இருந்த இன்னொரு அதிகாரியிடம் “போன மாசம் செத்தவனுக்கு போஸ்ட் மார்ட்டம் செலவு, வீடியோ செலவு, போலீஸ் ஸ்டேசன் செலவு, ஆம்புலன்ஸ் செலவு, அவன் சொந்தக்காரங்கள சமாதானப் படுத்த செலவுன்னு எவ்வளவு செலவு செஞ்சிருக்கேன் தெரியுமா. இப்ப இவன் வேற” என்று சலிப்புடன் சொல்லிவிட்டு மேலே பார்த்து,

“ஏம்ப்பா கிளி, ஒனக்கு என்ன வேணுமோ வாங்கிக்கோ, இறங்குப்பா” என்றார் கெஞ்ச லுடன்.

“அய்யா நீங்க எனக்கு எந்த குறையும் வைக்கல. பெரிய அதிகாரிகள வரச் சொல்லுங்கய்யா. என்னோட தேவ பெரிசா ஒன்னும் இல்ல” என்றான் கிளி.

உயர் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் சென்றுவிட்டது. நிர்வாக நடவடிக்கையில் தீவிரம் காட்டினார்கள். தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் சொல்லி ஏற்பாடு செய்துவிட்டு உயர் அதிகாரிகளும் வந்து சேர்ந்தனர். வெள்ளைச் சீருடை கைதிகளும், காக்கி காவலர்களும், அதிகாரிகளும் ஆங்காங்கே கூடி ஆலோசித்துக் கொண்டிருந்தனர். கிளியின் பேச்சு இன்னும் இன்னும், அசிங்கமாகவும், ஆவேசமாகவும் போய்க் கொண்டிருந்தது. கீழே இருந்தவர்களின் பார்வைகள் அனைத்தும் மேல் நோக்கியே இருந்தன. இன்னும் ஒரு சில நிமிடங்களில் தீயணைப்பு வாகனம் வந்துவிடும் என்ற தெம்புடன் ஜெயிலர் “ஏலே மயிராண்டி இறங்குறாயா, இல்லையா” என்று மிரட்டிப் பார்த்தார்.

“தகட்டால காயப்படுத்தினதுக்காக தகட்ட புடுங்கிட்டீங்களே, கையால அடிச்சி காயப்படுத்தினா, கைய எடுத்திடுவீங்களா- பல்லால கடிச்சிருந்தா பல்ல புடுங்கிடுவீங்களா” ஜெயிலரை பார்த்துக் கேட்டான் கிளி. கைதிகள் பக்கமிருந்து வந்த சிரிப்பொலி, ஜெயிலர் முறைத்து பார்த்ததும் அடங்கியது. மீண்டும் மேலே பார்த்து கோபத்துடன் “இப்ப இறங்கப் போறயா இல்லயா” என்றார். அவரது மிரட்டலை அலட்சியப்படுத்தியவனாக “பத்து வருஷமா தகட்ட வச்சிருக்கேன். ஒரு முறை தப்பு செஞ்சதுக்காக தகட்ட தரமாட்டேன்னு சொல்லீட்டிங்கள்ல... இனி ஹியூமன் ரைட்ஸுக்கு பதில் சொல்லுங்க” என சொல்லிவிட்டு, சுருக்கு முடிச்சிட்ட துண்டை வாயில் கவ்விக் கொண்டு, பக்கவாட்டில் சற்று படுக்கை வசமாக பிரிந்து சென்ற கிளையில் ஏறிக்கொண்டான். அங்கேயிருந்து மெயின்கேட்டில் தீயணைப்பு வாகனம் உள்ளே நுழைந்ததை பார்த்துவிட்டான். கையில் இருந்த துண்டின் முனையை மேல் கிளையில் கட்டி விட்டு சுருக்கை அகலமாக்கி வைத்துக் கொண் டான்.

அவன் சாவது உறுதியாகிக் கொண்டிருந்தது. எல்லோர் உடலிலும் ஒருவித பதட்டம், நடுக்கம். எல்லோரும் ஒதுங்க, மின்னல் வேகத்தில் வந்து நின்றது தீயணைப்பு வாகனம்.

“கிளி கிளி வேண்டாம் கிளி” “ஏய் ஏய் நில்லு நில்லு” கீழிருந்து கூச்சல்கள். அப்போதுதான் நினைவு வந்தவர்களைப் போல். “கருப்ப ஏறச் சொல்லுங்கய்யா” “கருப்ப ஏறச் சொல்லுங்க” என சொல்லிக் கொண்டே கருப்பை கூட்டத்தில் தேடிக் கொண்டிருக்க, தீயணைப்பு வண்டியில் இருந்து இறக்கப்பட்ட ஏணியின் மூலமாக தீயணைப்பு வீரர்கள் ஏணியில் ஏறி மரத்தை தொடுவதற்கு முன் பாகவே, கிளி முன்பு நின்ற கிளையை அடைந்து விட்டான் கருப்பு. தீயணைப்பு வீரர்கள் அடுத்த அடியெடுத்து வைக்க திணறிக் கொண்டிருந்தனர். அதற் குள் கழுத்திலே சுருக்கை மாட்டிக் கொண்டு “போங்கடா நீங்களும் ஒங்க ஜெயிலும்” என்று சொன்னமாத்திரத்தில், படுக்கை வசமாக பிரிந்த பிடிமானம் ஏதுமில்லாத கிளையில், தரை யில் மனித குரங்கொன்று நான்கு கால்களில் ஓடுவது போல் ஓடிய கருப்பு, கிளியை நெருங்கும்போது, தொங்கியே விட்டான் கிளி. பார்க்க சகிக்காமல் இதயம் படபடக்க வேறு பக்கம் திரும்பியவர்கள் மீண்டும் அடுத்த நொடியில் பார்த்தபோது, கிளியின் டவுசரை பிடித்து மேலே தூக்கிக் கொண்டிருந்தான் கருப்பு. கருப்புமேலே போனது அப்போது தான் சில பேருக்கு தெரிந்தது. கீழே இருந்து கைதட்டல்களும் உற்சாக ஒலிகளும் வந்த வண் ணம் இருந்தன. இதற்கு முன்பும் பல கைதிகளின் உயிரை இதேபோல் காப்பாற்றி யிருக்கிறான் கருப்பு. ஆனாலும் அடிக்கடி கஞ்சாவுடன் மாட்டிக் கொண்டு அடி வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தான் கருப்பு. பிடரி வரை வளர்த்த தலை முடியும், சவரம் செய்யாத முகமும், சிறையில் அவன் ஒரு அடங்காபிடாரி என்பதற்கான அடையாளமாக இருந்தன.

கருப்பின் மடியில் கிடத்தப்பட்டு, ஒரு கையில் கிளையை பிடித்துக் கொண்டு, மறு கையில் கழுத்தை இறுக்கியிருந்த சுருக்கை தளர்த்திக் கொண்டு “இன்னொரு ஆள் வாங்கய்யா” என்றான் கருப்பு. அப்போதுதான் தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்தை அடைய முடிந்தது. “ஒரு பாட்டில்ல தண்ணி கொண்டு வாங்கப்பா” கீழே பார்த்து சொல்ல, இன்னொரு கைதி தயாராகவே தண்ணீர் பாட்டிலுடன் நெருங்கினான். தண்ணீர் பாட்டில் தீயணைப்பு வீரர் மூலம் கருப்பு கையில் கிடைத் தது. தண்ணீரை கிளியின் முகத்தில் அறைந்து கொஞ்சம் குடிக்கவும் கொடுத்தான். அதன்பின் பெரிய வடம் கயிற்றை தீயணைப்பு வீரர் கருப் பிடம் கொடுத்தார். கிளியின் இரண்டு அக்குளுக்குள் கயிற்றை விட்டு முடிச்சு போட்டு, முடிச்சை இறுக்கி சரி சேர்த்துக் கொண்டான். தீயணைப்பு வீரர்கள் கருப்பின் செயல்பாடுகளை கண்டு வியந்தனர்.

கண்ணெதிரே ஒரு மரணம் நிகழாமல் போனதில் அனைவருக்கும் மகிழ்ச்சி. மனித உரிமை கமிஷன் விசாரணைக்கு வாய்ப்பில்லாமல் போனதில் சிறை அதிகாரிகளுக்கு பெருமகிழ்ச்சி. கருப்பு எந்த பிளாக் என்றோ, அவன் மரம் ஏற யார் அனுமதித்தது என்றோ கேள்விகளை அதிகாரிகள் கவனமாக மறந்திருந்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு முன் பதட்டத் திலும், பரபரப்பிலும் நடுங்கிக் கொண்டிருந்த அத்தனை கால்களும் நடுக்கம் மறந்து நடக்கத் தொடங்கின. எல்லோர் பார்வையும், மேலேயிருந்து கயிறு வழியாக இறக்கப்பட்டுக் கொண் டிருந்த கிளியின் மேல் இருந்தது. கிளைகளில் அடிபட்டுவிடாமல் தாங்கிப் பிடித்த வாறு இறங்கிக் கொண்டு இருந்தான் கருப்பு. ஏணியருகே வரும்போது தீயணைப்பு வீரர்கள் கிளியை தூக்கி தோளில் வைத்தவாறு போட்டோவுக்கு போஸ் கொடுத்துவிட்டு ஏணி வழியாக இறங்கினர். முதல் ஆளாக இலக்கை அடைந்த கருப்பு, கடைசி ஆளாக ஏணியை தொடாமலேயே இறங்கினான்.

ஆவேசமாக அடிக்கும் எண்ணத்துடன், லத்தியுடன் கிளியை நெருங்கிய பாரா காவலர்கள், மயக்க நிலையில் இருந்ததை பார்த்து “வெளியே போய் செத்து தொலைக்க வேண்டியது தானடா, எங்க உயிரை ஏண்டா எடுக்குற” என்று புலம்பிக் கொண்டனர். அங்கேயே சிருஞ்சியில் மருந்து ஏற்றிக் கொண்டுவந்த மருத்துவ பணியாளர், கிளிக்கு ஊசியை போட்டவுடன் அவனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர்.

ஒரு வாரத்தில் குணமாகிவிட்டான் கிளி. கழுத்தில் இன்னும் தழும்பு இருந்தது. மரண வாசலுக் குள் எட்டிப்பார்த்து திரும்பிய அனுபவத்தை காவலர்களும், கைதிகளும், விசாரித்த வண்ணம் இருந்தனர். அதேநேரத்தில் சோப்பு சிற்பம் செய்ய அனுமதியும் கிடைத்துவிட்டது; வேலை முடிந்தவுடன் தகட்டை காவலரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற நிபந்தனை யுடன். தகடு கிளியின் கையில் இருக்கும் போதெல்லாம் காவலர்கள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான் இருந்தனர்.

இந்த ஆண்டும் சென்ற ஆண்டைப்போலவே மகாத்மா காந்தி பிறந்த நாள் விழாவில் சோப்பு சிற்பத்திற்கு பரிசு பெறலாம் என்ற எண்ணத்துடன் வேலையில் தீவிரம் காட்டினான் கிளி. கருப்புவை பார்த்து நன்றி சொல்ல வேண்டுமென நினைத்தான். ஆனால் இந்த ஒரு வாரத்தில் கருப்பு கண்ணில் படவேயில்லை. “அவன் மட்டும் ஒரு நொடி தாமதமாக வந்து சேர்ந்து இருந்தால் இவன் போய் சேர்ந்திருப்பான்” என்று பல கைதிகள் அவன் காதுபட பேசிக் கொண்டனர்.

“மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா” என்ற பேனர் கலையரங்க மேடை பின்புறம் கட்டப் பட்டிருந்தது. ஒலி பெருக்கியில் தேசபக்திப் பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கேரம் உள்ளிட்ட விளையாட்டு களில் வெற்றிபெற்ற வீரர்களின் பட்டியலு டன் அங்கு மிங்குமாக நடமாடிக் கொண்டிருந்தார் நல அலுவலர். அவர் வழக்கத்திற்கு மாறாக ‘டை’ கட்டி, ‘ஷூ’ அணிந்து மிடுக்குடன் காணப்பட்டார். மேடையில் மைக்கை சரிசெய்து “மைக் டெஸ்டிங்” “ஒன் டூ திரி” சொல்லிக் கொண்டிருந்தார் மைக் செட் பொறுப்பு கைதியொருவர்.

மேடைக்கு முன்பாக முன்னதாகவே வந்து நூற்பாலை நூற்கண்டுகள் போல் வெள்ளைச் சீருடையில் வரிசை வரிசையாக உட்கார்ந்திருந்தனர் கைதிகள். கருப்பும் கிளியும், கலை யரங்க நுழைவுப் பாதையோரமாக நின்று பேசிக் கொண்டிருந்தனர். கடந்து செல்லும் ஒவ் வொரு அதிகாரி களுக்கும் வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தனர். “என்னடா, ஒழுங்கா இருக்கீங்களாடா” என்று கேட்டுக் கொண்டே போனார் உணவுப் பொருள் பொறுப்பு அதிகாரி.

மகாத்மா காந்தியின் பெருமைகளை ஒவ்வொரு ஆண்டும் பலர் பேசியதையே இந்த ஆண்டும் புதிதாக வந்த அதிகாரிகளும், சிறப்பு விருந்தினர்களும் முழங்கிக் கொண்டி ருந்தனர். எல்லாம் பேசி முடித்தபிறகு பரிசளிப்பு விழா. நல அலுவலர் பெயர் வாசிக்க வாசிக்க நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், கேரம் என வெற்றிபெற்ற ஒவ்வொருவரும் பலத்த கரகோஷத்துக்கிடையில் பரிசுகளை வாங்கிக்கொண்டு, வெளியே உற்சாகம் பொங்க வந்து கொண்டிருந்தனர். சில விளையாட்டு வீரர்களின் பரிசை திருப்பி திருப்பி பார்த்துவிட்டு கொடுத்தான் கருப்பு. தேசிய கீதம் பாடல் ஒலித்த போது எல்லோரும் அமைதியாக எழுந்து நின்று மரியாதை செய்தனர். தேசிய கீதம் ஒலித்து முடித்த வுடன் கூட்டம் கூட்டமாக கலைந்து வந்து கொண்டிருந்தனர்.

கிளி, தான் வைத்திருந்த புதிய சோப்பு ஒன்றை எடுத்து கருப்புவிடம் கொடுத்தான். சோப்பு உறை யின் ஒரு முனை மட்டும் பிரிக்கப்பட்டிருந்தது. உள்ளேயிருந்த சோப்பை வெளியே எடுத்துப் பார்த்து “புது சோப்ப ஏன் என்கிட்ட குடுக்கிற” என்றான் கருப்பு. “நல்லா பாரு, ஒனக்காக நான் செஞ்சது”என்றான் கிளி. திருப்பி திருப்பி பார்த்து, ஒன்றும் புரியாமல் குழம்பினான் கருப்பு. அதை வாங்கி கிளி தீப்பட்டியை திறப்பது போல் சற்று அழுத்தி காட்டி னான். உள்ளே இருந்து காலியாக இருந்த ஒரு பெட்டி வெளியே நீட்டியதை பார்த்து முக மலர்ந்து ஆவலுடன் அந்த பரிசை வாங்கிக் கொண்டான் கருப்பு.