செ. சத்தியசீலன், கிழவன் ஏரி

மம்தா பானர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா -மூவரிடம் காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள்..?

மம்தாவும் ஜெ.வும் உயர்குலத்தில் பிறந்தவர்கள், மாயாவதி அடித்தட்டு வகுப்பில் உதித்தவர் என்பது முக்கியமான வேற்றுமை, ஆனால், அந்த வேற்றுமையை ஒன்றுமில்லாமல் ஆக்கியது இந்த மூவருமே இந்து மதவெறி அரசியலுக்குத் துணைபோனது, பா. ஜ. க. வுடன் கூட்டுச் சேர்ந்தது. அதிலும் நம்மவூர் ஜெயலலிதா இப்பவும் மோடியின் உண்ணாவிரத்துக்கும் அத்வானியின் யாத்திரைக்கும் ஆள் அனுப்பி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். கேட்டால் மத நல்லிணக்கத்தைப் பேணவும், ஊழலை ஒழிக்கவும் வாழ்த்து என்கிறார். ஒபாமாவோடு கூட்டுச் சேர்ந்து ஏகாதிபத்தியத்தை ஒழிக்க முடியுமா? முஸ்லீம்களை நரவேட்டையாடிய மோடியோடு சேர்ந்து எப்படி மத நல்லிணக்கத்தைக் கொண்டு வர முடியும். எடியூரப்பா கட்சிக்காராம் அத்வானியோடு சேர்ந்து எப்படி ஊழலை ஒழிக்க முடியும்? ஜெயலலிதாவுக்கே வெளிச்சம்!

புதுச்சேரி கல்வி அமைச்சர் 10ம் வகுப்புத் தேர்வு எழுதுவதற்கு ஆள் மாறாட்டம் செய்தாராமே..?

அரசியல்வாதிகளை மிகப் பெரிய வில்லன்களாகத் தமிழ் சினிமா சித்தரிக்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கும். உள்துறை தாதாவே உள்ளூர் அமைச்சரானார் என்றெல்லாம் வரும். கடைசியில் அதெல்லாம் உண்மையாகிப் போனது. கல்வி அமைச்சரே டூப் போட்டு பரீட்சை எழுதியிருக்கிறார்! கைதிலிருந்து தப்பிக்கத் தலைமறைவு! இந்த நாட்டுக் கல்வி மீதும், அரசியல் மீதும் யாருக்காவது மரியாதை வருமா?

இரா. இராஜேந்திரன், கடலூர்

"தலித் இலக்கியம்" தலித்துக்களால் மட்டுமே படைக்கப்பட வேண்டும், அப்போது தான் உணர்வுபூர்வமாக இருக்கும் என்ற கருத்து நிலவுகிறதே! அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இந்த விவாதம் எல்லாம் எப்போதோ எழுந்து பேசி முடித்தாகிவிட்டது. இப்போது நிலைமை என்னவென்றால் யாராக இருந்தாலும் மெய்யான தலித் இலக்கியத்தைப் படைக்கட்டுமே எனும் ஆவலாதி தான் உள்ளது. கொக்கு குருவியைச் சுடுவது போல பரமக்குடியில் ஆறு தலித்துகளைச் சுட்டுக் கொன்றிடிருக்கிறது ஜெ. அரசின் போலிஸ். ஊடகங்களுக்கெல்லாம் அதுவொரு பிரச்சனையாகவே தெரியவில்லை. மனசாட்சி உள்ள எழுத்தாளர்கள்-கலைஞர்களுக்கு இதைவிடப் படைப்புக்கான கருப்பொருள் வேறு என்னவாக இருக்க முடியும்?

ப. அண்ணாமலை, ஒட்டன்சத்திரம்

விபரீதமான முடிவை எடுக்கும் முன் மனிதனின் மனோநிலை எப்படியிருக்கும்?

ஒரே நாளில் பால் கட்டணம், பஸ் கட்டணத்தை படு அதீதமாக உயர்த்த முடிவு செய்தபோது ஜெயலிலதாவின் மனோநிலை எப்படி இருந்தது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால் இதற்கு விடை கிடைக்கும்.

இன்று பாரதி புதிதாய்ப் பிறந்தால்... ?

எதற்கு வம்பு என்று மரபுக் கவிதைப்பக்கம் போகாமல் வசன கவிதையாக எழுதிக் கொண்டிருப்பான்!

நமது லட்சியத்தை அடைய கனவு காண்பது அவசியம் தானே?

அப்துல்கலாம் சொன்னாலும் சொன்னார் மேடைப் பேச்சாளர் முதல் டி. வி. விளம்பரம் வரை இதே பேச்சுத்தான். கனவு காண்பது என்பது நல்ல லட்சியத்தை வரிப்பதைக் குறிக்கிறது. நல்ல லட்சியம் என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கு நன்மை பயப்பதாகவும், காரிய சாத்தியமானதாகவும் இருக்க வேண்டும். இந்தியா வல்லரசாக வேண்டும் என நினைப்பது கெட்ட கனவு, நல்லரசாகவேண்டும் என நினைப்பதே நல்ல கனவு- காரியார்த்தமான கனவு.

ஜீவ. செந்தில் அதிபன், மயிலாடுதுறை,

கூடங்குளம் பற்றிய பதில் முழுமையானதாக இல்லையே? சூரிய சக்தி அதிக விலை என்பதை ஏற்க முடியாது.

கூடங்குளம் பற்றிய விவாதம் அந்தத் திட்டம் பாதுகாப்பானதா, இல்லையா என்பதாக மட்டும் இல்லை. அது மிகவும் பாதுகாப்பானதே என்று அப்துல்கலாமின் விஞ்ஞானி-உதவியாளர் சொல்ல "அப்படியென்றால் அதைக் கொண்டு போய் நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் வைத்துக் கொள்ளுங்கள், எங்களுக்கு வேண்டாம்" என்று கிண்டலாகப் பதில் தருகிறார் போராட்டக் குழுத் தலைவர் உதயகுமர்! அணுமின் சக்தியே நாட்டுக்கு வேண்டாம் என்பதே அவரின் வாதமாக உள்ளது. எனவே விவாதம் அவ்வளவு எளிதானதாக இல்லை, பதிலும் உடனே முழுமையானதாக இருக்க முடியாது. அணுமின் சக்தியின் சாதக பாதகம் பற்றி இன்னும் நுணுக்கமான, விரிவான விவாதம் நடக்க வேண்டும் என்றே படுகிறது. ஆனால் ஒர விஷயம், சூரிய சக்தியிலான மின்சாரம் அதிக விலையானதே. அணுசக்தி கமிஷனின் உறுப்பினர் விஞ்ஞானி எம்.ஆர்.சீனிவாசன் "இண்டியன் எக்ஸ்பிரஸ்" ஏட்டில் (5-10-11) எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்-" கொள்கை ரீதியாகவே அணு சக்தியை எதிர்க்கிற சிலர் சூரிய மற்றும் காற்று சக்தியைப் பயன்படுத்துவோம் என்கிறார்கள். தற்போது ஒரு கிலோவாட் சூரிய சக்தி ரூ.20 விலையாகிறது. காற்று சக்தி ரூ.10 விலையாகிறது; அதுவும் காற்றடிக்கிற 20 அல்லது 25 சதவீத காலத்திற்கே கிடைக்கிறது. நமது அணுமின் நிலையங்களாகிய தாராப்பூர் கிலோவாட் ரூ.1க்கும், கெய்கா மற்றும் புதிய நிலையங்கள் ரூ.3க்கும் மின்சக்தியை விற்கின்றன. கூடங்குளத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் ரூ.3க்கும் குறைவாகக் கிடைக்கும்."

எஸ். கே. சம்சுதீன், வாணியம்பாடி

"வால் ஸ்ட்ரீட்"போராட்டம் சொல்லும் சேதி என்ன?

முதலாளித்துவம் என்பது முரண்பாடுகளின் மூட்டை. அது இருக்கும் வரை இத்தகைய வர்க்கப் போராட்டங்கள் எழவே செய்யும் என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. சோவியத் ஒன்றியம் பிறப்பதற்கு முன்பே மார்க்சியம் உதித்திருந்தது, அது சிதைந்த பிறகும் இது ஜீவித்திருக்கும். காரணம் இது உலகு தழுவிய தீர்க்கதரிசனமான கோட்பாடு என்று மார்க்சியர்கள் சொல்லி வருவதன் வாழ்வியல் எடுத்துக்காட்டு.

எம். சின்னச்சாமி, காஞ்சிபுரம்

சமீபத்தில் தாங்கள் ரசித்துப் படித்த புத்தகம் என்ன?

அது "முலாயம் சிங் - ஓர் அரசியல் வாழ்க்கை வரலாறு"- நமக்கு வடநாட்டு காங்கிரஸ் தலைவர்களின் வரலாறுதான் தெரியுமேயொழிய, பிற கட்சித் தலைவர்கள் பற்றி அதிகம் தெரியாது. ஆகவே ஆவலோடு படிக்க ஆரம்பித்தேன். முதலில் இருப்பது மார்க்சிஸ்டு கட்சியின் பிதாமகர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் அணிந்துரை. அதில் அவர் கூறினார் - "1989 சட்டமன்றத் தேர்தலில் பெரு வெற்றி பெற்று முலாயம் சிங் உ. பி. யின் முதலமைச்சர் ஆனார். பிற்படுத்தப்பட்ட வகுப்பாரிடம் ஏற்பட்ட எழுச்சியைக் கண்டு பயந்த பா. ஜ. க. மண்டல் குழு பரிந்துரைகள் அமலாக்கப்படும் எனும் அறிவிப்புக்குப் பிறகு அயோத்தியில் பிரச்சனைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டுவோம் என்று கொடி பிடித்தது. அப்போது அந்தச் சவாலை எதிர்கொண்டவர் முலாயம் சிங். வகுப்புவாதம் எனும் கருப்புச் சக்திகளுக்கு எதிரான போராட்டத்தில் தனது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தினார்; நமது சமுதாயத்தின் மதச்சார்பற்ற அடித்தளத்தைப் பாதுகாத்து தேசிய ஒற்றுமையைக் காக்கும் ஒரு தீரராக தேசிய அரங்கில் வெளிப்பட்டார். " நூல் உள்ளுறையின் சாரம் இதுவே எனலாம். இது வெளிவந்த ஆண்டு 1998.

எல். புவனேஸ்வரி, சென்னை

அடுத்த பிரதமர் அத்வானியா, மோடியா என்று விவாதம் நடக்கிறதே..?

இது இந்துத்துவாவாதிகளின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது. ஊடகங்களின் உதவியோடு இப்படியாக அடுத்த ஆட்சி பா. ஜ. க. வினுடையதே எனும் மாயத் தோற்றம் உருவாக்கப்படுகிறது. 1992 டிச. 6ல் அயோத்தியில் மசூதி இடிப்பு எனும் சட்டவிரோதச் செயலுக்கு மூல கர்த்தாவாகிய அத்வானிக்கு இன்னும் அதற்கான தண்டனை கிடைக்கவில்லை. மாறாக, உள்துறை அமைச்சர் எனும் பரிசு கிடைத்தது! இப்போது பிரதமர் பதவி என்று கூச்சமில்லாமல் பேசுகிறார்கள்! குஜராத் முதல்வர் மோடியோ 2002 ல் தனது மாநிலத்தில் குறிவைத்து முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தவர், தூண்டி விட்டவர். அதற்குப் பிறகும் போலி என்கவுண்ட்டர்கள் மூலம் முஸ்லிம் இளைஞர்கள், யுவதிகள் கொலை செய்யப்பட்டதை ஆதரித்து நின்றவர். அப்படிப் பலியான 19 வயது கல்லூரி மாணவி இஸ்ரத் ஜெகன் பற்றி இப்போது உண்மை வெளியாகியுள்ளது. குஜராத் உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு கண்டறிந்துள்ள உண்மை: இஸ்ரத் உள்ளிட்ட நான்கு முஸ்லிம்கள் போலிஸ் தரப்பு சொல்லிய நாளுக்கு முன்பே கொல்லப்பட்டிருந்தார்கள்! எப்போதோ அவர்களைக் கொன்ற போலீசார் அது பின்னர் ஒரு என்கவுண்டரில் நடந்ததாகப் பச்சைப் பொய் சொல்லியிருந்தார்கள்! குஜராத்தில் "வளர்ச்சிப் பணி" அபாரம் என்கிறார்களே சில அறிவுஜீவிகள், அது இது தானா? இத்தகைய மனிதரைப் பிரதமர் பதவிக்கு லாயக்கானவர் எனச் சொல்ல எப்படித்தான் மனம் வருகிறதோ?