சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு

கதைப் படங்களுக்கும், ஆவணப் படங்களுக்கும் இடையே எப்போதுமே ஒரு போராட்டம் இருக்கும். இப்போராட்டம் வடிவம், அழகியலை தாண்டிய ஒன்று.

இப்போராட்டம் ஆவணப்படங்களை இயக்கும் இயக்குநர்களின் மனதில் நடக்கும் போராட்டம்.

சினிமாவின் மொழியை, தொழில்நுட்பங்களை, ரகசியங்களை ஓரளவு அறிந்து, முழு நேர தொழிலாய் ஆவணப்படங்களை இயக்கும் இயக்குநர்களின் மனதில் நடக்கும் போராட்டம் இது.

சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில், டிஜிட்டல் தொழில்நுட்ப யுகத்தில் சினிமா என்கின்ற கலை, தன் எல்லைகளை, மொழியை, அழகியலை விரிவாக்க நடத்தும் போராட்டம் இது.

கதை சொன்னாலே, அதில் சுவாரஸ்யம் இல்லை எனில் மக்களுக்கு சலிப்பு ஏற்படுகிறது. அவ்வாறு சலிப்பு ஏற்படாமல் கதை சொல்வதற்குத்தான் சினிமா தற்போது படாதபாடுபடுகிறது. திரை நட்சத்திரங்களுக்கான அதி முக்கியத்துவம், மசாலாக் கதைகள், செலவு மிகுந்த விளம்பரங்கள் எல்லாமே இந்தப் போராட்டத்தின் வெளிப்பாடுதான்.

கதைப் படங்களுக்கே இந்த பாடு என்றால், ஆவணப்படங்களை குறித்து யோசித்துப் பாருங்கள். ஆவணப்படங்களுக்கு கதைப் படங்களைப் போன்று, வெளியீடு, விளம்பரப் பிரச்சனைகள் இல்லாத காரணத்தால், ஆவணப்படங்களுக்கான போராட்டம் என்பது உள் நோக்கிய ஒன்றாக இருக்கும். இந்த உள்நோக்கிய போராட்டம் ஆவணப்படங்களின் அமைப்பில், கதை சொல்லுதலில், அழகியலில் வியத்தகு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. சினிமா அரங்குகளில் இப்படங்கள் வெளியிடப்படவில்லை எனினும், சர்வதேச நிதியுதவி, சர்வதேச டெலிவிஷன் கூட்டமைப்பு, பணம் கொடுத்து பதிவிறக்கம் செய்துகொள்ளக் கூடிய இணைய வசதி போன்ற காரணங்களால் வாய்ப்பும் வரமும் பெற்ற சில ஆவணப்பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் தற்போது பல அற்புதமான ஆவணப்படங்களை எடுத்துவருகின்றனர்.

இந்தியாவில் நடைபெறும் மிக முக்கியமான சர்வதேச ஆவண, குறும்பட மற்றும் அனிமேஷன் படங்களுக்கான திரைப்பட விழாவின் அடுத்த ஆண்டு விழாவிற்காக, சர்வதேச போட்டிக்காக வந்திருக்கும் ஆவணப்படங்களை பார்த்து, போட்டிக்கான படங்களை தேர்வு செய்யும் குழுவில் உறுப்பினராய் இருந்ததால், கடந்த இரு ஆண்டுகளில் இந்தியாவிலும், உலகின் பிற நாடுகளிலும் எடுக்கப்பட்ட சில அற்புதமான ஆவணப்படங்களை காணும் வாய்ப்பு கிடைத்தது.

அதே நேரத்தில் சில மோசமான படங்களையும், பல சுமாரான படங்களையும் பார்க்க நேர்ந்தது.

ஒருவிதத்தில் இது தற்போது சர்வதேச ஆவணப்பட உலகில் நிலவும் மூன்றுவித நிலைப்பாடுகளையே காட்டுகிறது.

சினிமாவைப் பற்றி ஒன்றுமே அறியாத சிலர், கையில் கேமராவும் கொஞ்சம் பணமும் இருக்கிறது என்கின்ற ஒரே காரணத்திற்காக சமூக பிரச்சனைகளை குறித்து படம் எடுப்பதாக நினைத்துக் கொண்டு, பிதற்றலான படங்களை மிக தைரியமாக படவிழாவின் பரிசுக்கான போட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இன்னும் ஒரு சிலரோ, சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்த வேண்டும் என்ற போராட்டம் உள்ளுக்குள் இல்லாததால், பழைய பாணியிலேயே சொல்ல வந்ததை சுவாரஸ்யம் இல்லாமல் சொல்கிறார்கள்.

இன்று சர்வதேச அளவில், சிலர் பிரச்சனைகளை சொல்வதற்கும், அதன் ஆழத்திற்கு செல்வதற்கும், அதன் தீவிரத் தன்மையை வெளிக்கொண்டு வரவும் கதைப்படங்களை காட்டிலும் ஆவணப்படங்களே சிறந்தது என அத்தகைய ஆவணப்படங்களை எடுக்கும் இயக்குநர்கள் சிந்திக்கிறார்கள். பல ஆவணப்படங்கள் முதன் முறையாக எனக்கு பல பிரச்சனைகளை அறிமுகப்படுத்தியது. அறிமுகப்படுத்திய உடனே அப்பிரச்சனையின் ஆழத்திற்கும் இட்டுச் செல்கிறது. அவற்றில் பல படங்கள் இந்திய ஆவணப்படங்களாக இருந்தது பெருமையும் ஆச்சரியமும் தருவதாக இருந்தது.

அத்தகைய சில படங்கள் குறித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்வது ஒரு சுகமான பணி.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்த முக்கிய பிரச்சனைகளை அவ்வப்போது செய்தித்தாள்களிலும், டெலிவிஷனிலும் தான் பார்ப்பது உண்டு. வடகிழக்கு மாநிலங்கள் குறித்த பல அற்புதமான ஆவணப்படங்களை பார்த்த போதுதான், அம்மாநிலங்களில் உள்ள பிரச்சனைகளின் ஆழத்தை என்னால் முதன்முதலாக உணர முடிந்தது.

குறிப்பாக மணிப்பூரில் இருந்தும், மணிப்பூர் பிரச்சனைகள் குறித்தும் பல அற்புதமான படங்களை பார்க்க முடிந்தது.

Fried Fish Chicken Soup of a Premier Show என்கின்ற ஆவணப்படம் மணிப்பூரின் சினிமா மற்றும் சினிமாத் தொழில் குறித்தப் படம். மணிப்பூரில் சினிமா எடுப்பதற்கு பல தடங்கல்கள் உண்டு. பல மணிப்பூர் மக்கள் தங்களை வலுக்கட்டாயமாக இந்திய அரசு ஆளுவதாகவே கருதுகிறார்கள். இந்திய ராணுவத்தை அந்நிய அடக்கு சக்தியாகவே கருதுகிறார்கள். உள்ளூர் போராட்டக்குழுக்கள் விதித்த தடை காரணமாக, இந்தியப் படங்கள் ஏதும் அங்கு வெளியிடப்படுவதில்லை. உள்ளூரில் குறைந்த செலவில் எடுக்கப்படும் டிஜிட்டல் திரைப்படங்கள் தான் மணிப்பூர் மக்களுக்கு ஒரே பொழுதுபோக்கு. இந்த ஆவணப்படம் உள்ளூர் குழு ஒன்று தயாரிக்கும் மணிப்பூர் திரைப்படத்தை பற்றிய பதிவாகத்தான் துவங்குகிறது.

சினிமாவில் ஆர்வம் மிகுந்த ஒரு நடுத்தரக் குடும்பம் தான் இப்படத்தை தயாரிக்கிறது. கணவன் தயாhப்பாளர், அவரது நண்பர் இயக்குநர். மனைவிதான் படக்குழுவினருக்கான மொத்த உணவையும் வீட்டிலேயே தயாரிக்கிறார். வேலைகளை செய்கின்றனர். அவர்கள் குறைந்த செலவில் படமெடுக்கும் அவஸ்தையை சிறிது நகைச்சுவை உணர்வோடு காட்டப்படுகிறது. இதை மட்டும் காட்டியிருந்தால் இப்படம் சாதாரண ஆவணப்படமாக இருந்திருக்கலாம். இப்படத்தினுடே மணிப்பூர் சினிமாவின் சுவையான வரலாற்றுப் பக்கங்களும் சொல்லப்படுகின்றன. முதன் முதலில் எடுக்கப்பட்ட மணிப்பூரி மொழிபடம், அரசியல் போராட்டங்களால் மணிப்பூரி சினிமாவின் ஸ்தம்பித்து போனத வரை பல விஷயங்கள் சுவைப்பட சொல்லப்படுகிறது. மணிப்பூரி என்ற ஒரு மொழி உண்டு, அம்மொழியிலும் சினிமா தயாரிக்கப்படுகிறது என்பதை 1982ம் ஆண்டு தான் உலகம் அறிய நேர்ந்தது. காரணம், அப்போதுதான் இமாகி நிங்கதம் (Imagi Ningthem) என்கின்ற மணிப்பூரி படம் வெளிவந்து, இந்தியாவின் ஆவணத்தையும், உலகின் கவனத்தையும் ஈர்த்தது. இப்படத்தை இயக்கியவர் அரிபாம் ஷியாம் என்பவர். இவர் மணிப்பூரி சினிமாவின் தந்தையாக கருதப்படுகிறார்.

எந்த வசதியும் இல்லாமல் மிகச் சாதாராண போல்க்ஸ் (Bolex) கேமராவால் அரிபாம் ஷியாம் ஷர்மா இப்படத்தை எடுத்தார். இப்படத்தை பிரான்சு நாட்டு திரைப்பட விழா ஒன்றில் உலகின் முன்னணி சினிமா கேமரா தயாரிக்கும் ஏரிஃளக்ஸ் (Ariflex) கம்பெனி ஆட்கள் பார்க்க நேர்ந்தது. இத்தனை அழகான கதையை ஏன் அவர்கள் மிகச் சாதாரண பழைமையான போலக்ஸ் கேமராவால் எடுத்தனர் என விசாரிக்கின்றனர். வேறு வசதியே இல்லாததால்தான் அரிபாம் ஷர்மா போலக்ஸ் கேமராவால் எடுத்தார் என்பதை அறிந்தபோது, மனம் நெகிழ்ந்த எரிஃளக்ஸ் கம்பெனி ARRI III என்கின்ற தொழில் ரீதியான கேமராவை அரிபாம் ஷர்மாவுக்கு இலவசமாகவே தந்தனர். இதுபோன்று பல சுவையான தகவல்கள் தற்போது போராடி டிஜிட்டல் படம் எடுக்கும் படக்குழுவினரின் கதையீலுடே சொல்லப்படுகிறது. இந்த பல்வேறு சுவையான தகவல்களினுடே மணிப்பூரின் சமூக, அரசியல் நெருக்கடிகளும் நமக்கு தெரிய வருகின்றன. வெறும் மூன்று லட்ச ரூபாயில் டிஜிட்டல் படம் எடுக்கும் இக்குழுவினரின் போராட்டத்தில் ஒருவித எதிர்மறை நகைச்சுவையை கடைசி வரை பார்க்க முடிகிறது.

படத்தின் முதல் விஷேசக் காட்சிக்காக போஸ்டர் அடித்து, ஒலி பெருக்கியில் விளம்பரம் செய்திகிறார்கள். விஷேச முதல்காட்சி என்பது ஒரு பெரிய விளையாட்டுடி மைதானத்தில் வீடியோ ப்ரொஜக்டர் மூலம் அடர்தகடை (DVD), திரையிடுவத தான். அந்தக் காட்சிக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கூடி விடுகின்றனர். விஷேச காட்சிக்கு முன்பு மணிப்பூர் சினிமா சங்கம் என்கின்ற அமைப்பின் அனுமதியை பெற வேண்டும். கிட்டதட்ட சென்சார் போர்டு போன்ற அமைப்பு அது. அவர்கள் முக்கியமாக பார்ப்பது படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் மணிப்பூரை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இன்னொன்று படத்தில் இந்திய தன்மைகள் ஏதும் இருக்கக்கூடாது.

அவசர அவசரமாக படத்தில் முதல் பாதியை ஒரு DVDயில் கமிட்டிக்கு தருவார்கள். அதைப் பார்த்து முடிப்பதற்குள் அடுத்த DVD வந்துவிடுவதாக சொல்வார்கள். ஆனால் அடுத்த DVD ஐ தயாரிப்பதில் தொழில்நுட்ப சிக்கல்கள் கமிட்டி உறுப்பினர்கள் காத்திருப்பர். கடைசியாக படத்தை பார்த்து முடித்ததும் கமிட்டி சில ஆட்சேபணைகளை தெரிவிக்கிறது. அதில் முக்கியமான ஒன்று ஒரு பாடல் காட்சியில் கதாநாயகன், நாயகியின் உடை வண்ணம் பாடலீனுடே மாறுகிறது. அது இந்தியத்தன்மை என்று ஆட்சேபிக்கிறார்கள். படத்தின் இயக்குநரோ உடையின் வண்ணம் மாறவில்லை, பாடலின் காட்சிகள் வெவ்வேறு நாட்களில் நடைபெறுகின்றது. அதனால்தான் வெவ்வேறு உடைகளில் வருகின்றனர் என சொல்லிப் பார்க்கின்றார். கமிட்டி அதை ஏற்பதாக இல்லை. இறுதியில் வேறு வழியில்லாமல் படத்தின் இயக்குநர் பாடல் காட்சியை மட்டும் வண்ணத்திலிருந்து, கறுப்பு வெள்ளைக்கு மாற்றி விடுகிறார்.

90 நிமிடங்கள் ஓடும் இந்த ஆவணப்படத்தை பார்த்து முடித்தபோது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

ஆச்சர்யத்திற்கு காரணம், 2010ம் ஆண்டில், சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டில், இந்தியாவின் ஒரு பகுதி என்று சொல்லப்படும் ஒரு மாநிலத்தில் ஒரு சாதாரண டிஜிட்டல் திரைப்படத்தை எடுக்க இந்த பாடு படுகிறார்களே என்பது.

மகிழ்ச்சிக்கு காரணம், மணிப்பூரின் தற்போதைய சமூக, வரலாற்று, அரசியல் நிலைமை, அதன் சினிமாவைக் குறித்து வெறும் 90 நிமிடத்தில் என் மனதில் இத்தனை ஆழமாக பதிய வைத்தது.

சர்வதேச தரத்திலான இந்த ஆண்டின் இந்தியாவின் இன்னொரு முக்கியமான ஆவணப்படம் "ஜெய் பீம் காம் ரேட்" இப்படத்தை இயக்கியவர் இந்திய அரசியல் ஆவணப்படங்களின் முன்னோடிகளில் ஒருவரான ஆனந்த் பட்வர்த்தன் ஆவார். இவர் கடந்த முப்பது ஆண்டுகளாக அரசியல் ஆய்வு ஆவணப்படங்களை எடுத்து வருபவர். இந்துத்துவாவுக்கு எதிரான இவரது "ராம் கி நாம்" ஆவணப்படம் இந்திய ஆவணப்படங்களில் முக்கியமான மைல் கல் ஆகும். "ஜெய் டீம் காம் ரேட் படத்திற்கு முன்பு

இவர் எடுத்தப்பபடம் "வார் அன்ட் பீஸ்" (War and Peace) ஆகும். இப்படம் வெளிவந்து 9 ஆண்டுகளுக்கு பின் ஆனந்த் பட்வர்த்தன் "ஜெய் பீம் காம்ரேட்" படத்தை வெளியிட்டுள்ளார்.

கடந்த 14 ஆண்டுகளாக இப்படம் தயாரிப்பில் இருந்தது. படத் தலைப்பில் உள்ள பீம் என்பது தலித் தலைவரும், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவருமான டாக்டர் பீம்ராவ் அம்பேத்காரை குறிக்கிறது.

1997 ம் ஆண்டு, மும்பையில் போலீஸ் நிராயுத பாணிகளாக இருந்த 10 தலித்துக்களை சுட்டுக் கொன்றது. அந்தக் கொடுமையை தாங்க முடியாமல் தலித் இன தலைவரும், பாடகரும், கவிஞருமான விலாஸ் கோக்ரே தற்கொலை செய்து கொள்கிறார். தன் நண்பனாக இருந்த விலாய் கோக்ரேயின் இந்த மரணம்தான் தன்னை இப்படம் எடுக்கத் தூண்டியதாக பட்வர்த்தன் சொல்கிறார். இந்த மரணத்தையும், அதைத் தொடர்ந்து அடுத்த 14 ஆண்டுகளில் குறிப்பாக மகாராஷ்டிராவில் தலித் எழுச்சி வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்களை இந்த ஆவணப்படம் மிக அருமையாக படம் பிடித்துள்ளது. மகாராஷ்டிராவை மையமாக கொண்டிருந்தாலும், இப்படம் இந்திய நாட்டின் ஒடுக்கப்பட்ட மக்கள் சாதி, வர்க்கம் என்ற இரட்டை துன்பங்களுக்கு ஆளாகிறார்கள் என்பதையும் ஆழமாக காட்டுகிறது.

இப்படத்தில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியது, படம் முழுக்க தலித் இன கலைஞர்கள் எப்படி பேச்சை, கவிதையை, பாடலை, இசையை, தெரு நாடகங்களை தங்கள் போராட்ட ஆயுதங்களாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான்.

இப்படம் ஏற்கனவே கடந்த அக்டோபரில் காட்மண்டுவில் நடைபெற்ற தெற்காசிய ஆவணப்படங்களுக்கான படவிழாவில் சிறந்த படத்துக்கான பரிசைத் தட்டிச் சென்றுள்ளது.

இப்படம் மூன்று மணி நேரம் இருபது நிமிடங்கள் ஓடுகிறது. இந்தியாவில் தலித் இன எழுச்சி வரலாற்றை ஒருவித ஆக்கப்பூர்வமான விமர்சனப் பார்வையோட பார்ப்பதால், தமுஎகச போன்ற இயக்கங்கள் இப்படத்தை பல பகுதி மக்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும்.

இப்படத்தின் அதீத நீளம் காரணமாக, படத்தின் கருப்பொருள் குறித்த அறிவோ, அக்கறையோ இல்லாதவர்கள் இப்படத்தை பார்க்க முடியுமா என்பது சந்தேகமே. ஆனந்த் படவர்த்தனின் இதற்கு முந்தய படமான 'வார அன்ட் பீலும்"மூன்று மணிநேரம் ஓடக்கூடியது. படத்தின் நீளம் காரணமாக சாதாரக, சாதாரண மக்களுக்கு இப்படங்களைக் காட்டுவதில் சிரமம் உள்ளதே என்று நான் ஒரு சினிமா விமர்சகரோடு விவாதித்தேன். மக்களுக்கு தற்போது அந்த அளவு நேரமும் பொறுமையும் இருப்பதில்லையே என்று சொன்னேன். அதற்கு அவர் உடனே கோபித்துக் கொண்டு, ஒன்றுமில்லாத மூகதூவிப் பலமணி நேரம் தினமும் செலவு செய்யும் இளைஞர்களால் இதுபோன்ற ஒரு படத்திற்காக மூன்றரை மணி நேரம் செலவு செய்ய முடியாதா என கோபமாக கேட்டார். ஒரு விதத்தில் அவர் சொன்னது உண்மைதான்.

பட்வர்த்தனின் படங்கள் பல ஆண்டு உழைப்பினால் உருவானவை. பல நூறு மணிநேர படப்பதிவுகளிலிருந்து தொகுக்கப்பட்டது. பட்வர்த்தனின் ஆவணப்படங்கள் எப்போதுமே, படத்தின் கருப்பொருள் பற்றிய கூட்டங்கள், விவாதங்களுக்கு உதவும் ஒர கருவியாக உள்ளது. அதே நேரத்தில் அரசியல் ஆய்வு ஆவணப்படங்கள் எடுக்க விரும்புவர்களுக்கு ஒரு வழிகாட்டியாகவும் உள்ளது.

பிங்க் சாரிஸ் (Pink Saris), என்ற பெயரில் வந்துள்ள ஆவணப்படமும், இந்த ஆண்டு சர்வதேச அளவில் பேசப்பட்ட படம்.

உத்தரப்பிரதேசம் மாநில கிராமங்களில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைக்கு எதிராக சம்பத் பால் என்கின்ற பெண், பிங்க் சாரிஸ் (குலாபி கூட்டம்) என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி எப்படி கிட்டதட்ட ஒரு தனி மனுஷியாக போராடுகிறாள் என்பது பற்றியதுதான் இந்த ஆவணப்படம்.

இங்கிலாந்து நாட்டு தயாரிப்பான இப்படத்தை இயக்கியதம் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பெண் ஆவணப்பட இயக்குநர் கிம் லாங்கிநோட்டோ (Kim Longinotto). இவர் ஏற்கனவே பல்வேறு நாடுகளில் பெண்களின் போராட்டங்களை, குறிப்பாக வெற்றிப் பெற்ற போராட்டங்களை குறித்து ஆவணப்படங்கள் எடுத்தவர்.

பிங்க் சாரிஸ் படத்தில், பெரும்பாலும் பெண்கள் அமைப்பின் போராட்டமாகக் காட்டுவதை விட, சம்பத் பால் என்கின்ற தனி மனுஷியின் போராட்டமாகவே காட்டப்படுகிறது.

விறுவிறுப்பான கதைப்படம் போல படம் பிடிக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு எடுக்கப்பட்ட பிங்க் சாரிஸ் ஆவணப்படம் 'பண்டின் குயின்' படத்தை ஆவணப்படமாக பார்ப்பது போல் உள்ளது.

குழந்தை திருமணம், இளம் பெண்களை கணவன், மாமனார், மாமியார் கொடுமைப்படுத்துவது போன்ற கொடுமைகள் எங்கு நடந்தாலும் வெற்றியை குதப்பும் வாயோடு அங்கே சம்பத்பால் ஆஜராகி விடுகிறார்.

ஒன்று பிரச்சனையை தீர்த்து வைக்கிறார். அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணை தன்னோடு அழைத்து வந்து விடுகிறார்.

அவளின் இந்தப்போராட்டத்தினூடே அவளின் தனிப்பட்ட வாழ்க்கையையும், அவர் சிறுவயதில் பாதிக்கப்பட்டதையும், பெண் கொடுமைக்கு எதிராக ஏன் போராட துணிந்தாள் என்பதையும், ஒரு சிறந்த கதைப்படத்துக்கான நேரத்தியோடு இந்த ஆவணப்படத்தில் இயக்குநர் காட்டியுள்ளார்.

இன்று சர்வதேச அளவில் புகழ்பெற்ற பெரும்பாலான ஆவணப்படங்கள், கதைப்படங்களைப் போல ஒரு மணி நேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் ஓடக்கூடியதாக உள்ளது. அப்படங்களின் கருப்பொருளை கையாண்ட விதமும் கதைப்படங்களுக்கு நிகராக உள்ளது. இது எப்படி சாத்தியமாயிற்று என்பதையும், வேறு சில முக்கிய ஆவணப்படங்கள் குறித்தும் வரும் இதழில் பார்ப்போம்.

- எம். சிவக்குமார்