மகாகவி பாரதி வாழ்ந்த நிகழ்காலத்திலேயே நிராகரிப்பின் வலியை மிகஅதிகம் உணர்ந்தவர். 1882 டிசம்பர் 12ம்தேதி பிறந்த பாரதி 1921 செப்டம்பர் 11ம் நாள் மறித்துபோனார். அவர் வாழ்ந்தது 39 ஆண்டுகள் மட்டுமே. பாரதிக்கு அரசியல், சமூக இலக்கியத் தளத்தில்இயங்குவதற்கு கிடைத்த வாய்ப்பு ஒப்பிட்டஅளவில் மிகக் குறைவான காலமே ஆகும்.

அதிலும் பலநாட்கள் ஓடுவதற்கும், ஒளிவதற்குமே அவருக்கு நேரம் சரியாக இருந்தது. புதுச்சேரியில் தங்கியிருந்த பாரதியை பிடித்துக் கொடுப்பவதற்கு ரூ. 1000 பரிசு வழங்கப்படும் என்று 1911ம் ஆண்டு 9ம்தேதி பிரிட்டிஷ் அரசு அறிவித்திருந்தது. இந்தத் தொகையும் பாரதி தன் வாழ்நாளில் முழுதாக பார்த்திருப்பாரா? என்பது சந்தேகமே. ஆனால் இப்போதும் கூட பாரதியைப் பிடித்துக் கொடுத்து பரிசுவாங்குதற்கு சிலர் துடித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

சுப்ரமணியபாரதி என்று மட்டுமே கையெழுத்துப்போட்ட பாரதி தனக்கு தன்னுடைய பெயருக்கு முன்னும் பின்னும் எந்த ஒட்டையும் ஒட்டிக்கொள்ள வில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் பெயருக்கு பின்னால் சாதிப் பெயரை போட்டுக் கொள்வது இயல்பான ஒன்றாகயிருந்தது. ஆனால் பாரதி சாதிப்பெயரை மட்டுமல்ல, இன்றைக்கும் கூட சிலரால் பெருமையாகக் கருதப்படுகிற பூணுலையும் அறுத்தெறிந்தவர்.

தேசியகவி, மகாகவி என்பதெல்லாம் அவரது மறைவுக்கு பிறகு அவருக்கு தரப்பட்ட பட்டங்களே ஆகும். பாரதி குறிப்பிட்ட சாதியில் பிறந்ததாலே அவருடைய சாதனை எதையையும் கணக்கில் எடுக்காமல் அவரை நிராகரிப்பவர் இன்றைக்கும் இருக்கிறார்கள். மறுபுறத்தில் பாரதி, பாரதிய ஜனதாவின் முன்னோடி என்று புத்தகம் எழுதுவோரும் உள்ளனர். பாரதி வாழ்ந்த காலத்திலும் மறைந்த பின்னும் சுயசாதியினரின் வெறுப்புக்கு அவர் அளவுக்கு உள்ளானவர்கள் யாருமில்லை.

பாரதி ஒரு மகாகவியா, இல்லையா என்ற விவாதம் தமிழ் இலக்கிய உலகில் பல சுற்று நடந்து முடிந்திருக்கிறது. பாரதியை மகாகவி இல்லை என்று விவாதித்த ராஜாஜி, கல்கி போன்றவர்கள் பிறகு அவருக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் கட்டினார்கள் என்பது வரலாறு.

மணிக்கொடி எழுத்தாளர்கள் ஒருபுறத்திலும், சத்தியமூர்த்தி ஒருபுறத்திலும், ஜீவா போன்ற பொதுவுடைமையாளர்கள் ஒருபுறத்திலும், பாரதியை மகாகவி என்று நிறுவுவதில் முன்நின்றார்கள். ஆனால் ஒவ்வொருவரின் நோக்கமும், வேறு வேறாக இருந்தது. ஆனால் அனைவரது விவாதத்திற்கு இசைவதாக பாரதியின் பாடல்கள் இருந்தன.

இப்போது ஒருவர் பாரதியை ஒரு கவிஞர் என்று வேண்டுமானால் சொல்லலாம். மகாகவி என்றெல்லாம் ஒரே அடியாக சொல்லி விடமுடியாது. தன்னுடைய வலைதளத்தில் எழுதியதை தொடர்ந்து மீண்டும் பாரதி குறித்த விவாதம் முன்னுக்கு வந்துள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு மரணம் தான் கடவுள் தருகிற பரிசு என்றும், நானே கடவுள் என்றும் அழுக்கு அகோரித் தத்துவத்தை நவீன கலைவடிவத்தில் ஏற்றும் ஒருவர், எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என்று பாடிய பாரதியை மகாகவியாக ஏற்க முடியாது என்று கூறுகிறார்.

இவர்களுக்கு, பாவேந்தர் பாரதிதாசன் அன்றைக்கே பதிலளித்துள்ளார்.

"வைதிகர்க்கு பாரதியார் பகைவரேனும்

செய்வதென்ன? மேலுக்குப் புகழ்ந்தே வந்தார்:

சிலநாட்கள் போகட்டும் என இருந்தார்

உய்யும் வழி கெடாதிருக்க மெதுவாய் இந்நாள்

உலககவி அல்ல அவர் எனத் தொடங்கி

ஐயர்கவி தைக்கிழுக்கும் கற்பிக்கின்றார்

அழகாக முடிச்சவிழ்த்தார் விடுவார் உண்டோ?"

மேற்படி ஆளும் அழகாகத்தான் முடிச்சவிழ்க்கிறார். பாரதி நவீன தமிழில் முதல் புள்ளி, நவீனத் தமிழ் கவிதையின் தொடக்கம், அவரிலிருந்தே இன்றைய புதுக்கவிதை பிறந்தது. அவர்தான் தமிழ் நவீன உரைநடையின் அமைப்பை உருவாக்கியவர் என்றெல்லாம் படபட புகழ்ந்து பேசிவிட்டு, ஆனாலும் பாரதி மகாகவி இல்லை, சாதா கவிதான் என்று முடிச்சவிழ்க்கிறார்.

கபிலர், பரணர், ஒளவையார், பாலைபாடிய பெருங்கடிங்கோ, இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருவள்ளுவர், நம்மாழ்வார், கம்பர், சேக்கிழார் ஆகிய பெரும் கவிஞர்களின் பட்டியல்களில் பாரதியை சேர்க்க முடியாது.

இந்த நெடிய மரபின் தொடர்ச்சி தான் பாரதி. இவர் சொல்லிவிட்டார் என்பதற்காகவே இந்தப் பட்டியலில் உள்ளவர்களை உரசிப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், சேக்கிழார் எப்படி இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டார் என்பது புரியவில்லை. அவர் எழுதிய பெரிய புராணத்தை படித்துப் பார்த்தால், பிராமணியத்தை, நிலவுடைமை ஆதிக்கத்தை நிலைநிறுத்த புனையப்பட்ட பொய்க்கதைகளின் ஆபாசத் தொகுப்பே அது என்பதை புரிந்து கொள்ளமுடியும். இவர் சிலாகிக்கிற அந்தரங்கக் கவிதை ஒன்றும் அதில் வழிவதாக தெரியவில்லை. வரலாற்று நோக்கில் ஒளவையார் ஒருவரில்லை. இவர் எந்த ஒளவையாரை சொல்கிறார் என்பதும் புரியவில்லை.

இவரது விமர்சனத்திற்கு வந்த பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கும்போது பாரதி மகாகவி என்று பொத்தாம்பொது சொல்லாட்சி ஆகிவிட்டது. ஒருவர் கூட மகாகவி என்பதற்கான வரையறையை சொல்லமுயலவில்லை என்று கூறியிருக்கிறார்.

சரி, இவராவது அதற்கான வரையறையைக் கூறுகிறாரா என்று பார்த்தால் நமது சிற்றறிவுக்குப் புலப்படவில்லை.

பாரதி அந்தரங்கத்தில் பித்தில் தாண்டவமும், சஞ்சலமும், அமைதியும் சில கவிதைகளிலேயே பதிவாகியுள்ளன என்கிறார். பாரதி தான் வாழ்ந்த காலத்தில் தேவையாக இருந்த விடுதலையை பாடியது குற்றம். இந்திய தேசியம் கட்டமைக்கப்பட்டுகொண்டிருந்த அந்த காலத்தின் மொழி வழி தேசியத்தை முன்வைத்தது குற்றம். மொத்தத்தில் மனிதத்தை தன்னுள் தேடி மயங்காமல், மானுடப் பெருவெளியில் தேடியது குற்றம். இந்தக் குற்றங்களால் பாரதியை நிராகரிக்கிறார் இவர். ஆனால் இந்த "குற்றங்கள்" பாரதியை இன்னமும் காலம் கடந்து பேச வைக்கிறது. இவரைப்போன்றவர்கள் அவரை இன்றைக்கும் கூட நிராகரிக்க முடியாமல் நிலைதடுமாற வைக்கிறது என்பது தான் உண்மை.

பாரதி எட்டயபுரத்து சமஸ்தானத்திலேயே முடங்கி, பாளையத்திற்கு தொண்டூழியம் செய்துகொண்டு அந்தரங்கத்தின் ஆழ்குரலைப் பதிவு செய்திருந்தால் ஒருவேளை இவர் பாரதியை மகாகவி என்று சொல்லியிருக்க கூடும்.

பாரதியாரின் கவிதைகள் முழுமையான வாழ்க்கை நோக்கையும் கவித்துவமான எழுச்சியையும் ஒரே சமயம் அடையும் மகத்தான கவிதைகள் அல்ல, அவை ஷெல்லி எழுதியவை போன்ற மாற்றத்திற்கான உணர்ச்சிகரமானஅறைகூவல்கள் மட்டுமே என்று கல்கி கூறியதை இவர் துணைக்கு அழைத்துள்ளார். இவரது விவாதத்திலும் இவர் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டு பாரதி அவரது காலச்சூழலின் அறைகூவலாக இருந்தார். அது கவிதையாகாது என்பதுதான்.

சமூக உள்ளடக்கம் சார்ந்த எதையும் இலக்கியம் என்பது அல்ல என்று நிராகரிக்கும் அழுகுணி சித்தாந்தத்தின் மீட்சியே இது. சமண, பவுத்த, எழுச்சியை முறியடிக்க அவை முன்வைத்த சார்பு சமத்துவத்தை சவக்குழிக்கு அனுப்ப சேக்கிழார் எழுதிய பெரிய புராணமும் ஒருவகையான அறைகூவல் தான். இது இவருக்கு உவப்பாக இருப்பதால் சேக்கிழாரைப் போற்றுகிறார்.

வள்ளுவரின் திருக்குறளும் அன்றைய காலத்தின் அறைகூவல்தான். கம்பனின் காதையும் சோழப் பேரரசு உருவான கால கட்டமைப்பின் அறைகூவல்தான்.

பாரதி ஒரு சமூக சீர்திருத்தவாதியாகவும் சனாதன எதிர்பாளராகவும் இருந்ததும், இயங்கியதும் தான் இப்போதும் சிலருக்கு இடையூறாகத் தான் இருக்கிறது.

"மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ" என்றும் "வயிற்றுக்குச் சோறிட வேண்டும்-இங்கு வாழும் மனிதருக் கெல்லாம்" என்றும் அடிமை இந்தியாவில் பாரதி பாடிய வரிகள் சுதந்திர இந்தியாவில் அர்த்தம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. மனிதர் உணவை மனிதர் பறிப்பதை எதிர்த்து அனைத்து வயிற்றுக்கும் சோறு கேட்பவர்கள் பாரதி வரிகளை ஆயுதமாக ஏந்துகிறார்கள். இதனால்தான் சிலருக்கு எரிச்சல் வருகிறது.

வசன கவிதைகளில் பாரதி தொட்டுள்ள கவித்துவத்தின் உச்சத்தைக்கூட இவர்கள் நிராகரிக்க முயல்கிறார்கள். பாரதியை மகாகவி என இவர்கள் ஏற்க மறுப்பதற்கு காரணம் அவரது பேசுபொருள்தான். பேசா பொருளை பேசத் துணிந்த காரணத்தினால் தான் இப்பொழும் இவர்கள் பாரதியை யேசுகிறார்கள்.

பாரதி என்னும் நெருப்பு இன்னமும் தேவைப்படுகிறது. போராளிகளுக்கு தீப்பந்தமாகவும், இவர் போன்ற சில வம்பர்களுக்கு குளிர்காயவும்.

இன்றைய காலத் தராசை கையில் வைத்துக் கொண்டு பாரதியிடம் அதுஇல்லை, இது இல்லை என்று எடைபோடலாகாது.

"காலத்திற் கேற்ற வகைகள்- அவ்வக்

காலத்திற் கேற்ற ஒழுக்கமும் நூலும்

ஞால முழுமைக்கும் ஒன்றாய் - எந்த

நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை"

என்பது பாரதி வாக்கு.