தோழர் ஜீவா மிகச்சிறந்த பேச்சாளர் என்பது அவரது காலத்தில் வாழ்ந்த காதுள்ள அனைவரும் அறிவார்கள்.

"பேச்சுக்கலையை விளக்கும் பாடப்புத்தகங்கள் எத்தனையோ விதிகள் கூறும்; ஜீவா அவற்றை காலடியில் போட்டு மிதித்தவர். அவருடைய பாணி இரவல் பாணியல்ல. இந்த தேசத்தில் பேச்சு, அதற்குரிய பலனை தரவேண்டுமென்றால் அது எவ்வாறு அமைய வேண்டும் என்பதும் அவருக்குத் தெரியும்" என்று வியப்பார் எழுத்தாளர் சுந்தர ராமசாமி.

ஜீவா பன்முகம் கொண்ட ஒரு தலைவர். எனினும் நான்முகன் என்றழைக்கப்படுகிற பிரமன் சிலையின் நான்காவது முகம் சரியாக அறியப்படாதது போலவே ஜீவா என்கிற ஜீவ ஒளிமிக்க கவிஞனின் முகமும் தேவையான அளவுக்கு அறியப்படவில்லை.

விடுதலைப்போராட்ட இயக்கத்தில் துவங்கி சுயமரியாதை இயக்கத்தில் வியந்து நின்று பொதுவுடைமை இயக்கத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட தோழர் ஜீவாவின் கவிதைப் பயணத்தை விளக்கும் வகையில் தோழர் சு. பொ. அகத்தியலிங்கம் எழுதியுள்ள நூல் " கோடிக்கால் பூதமடா" (ஜீவாவின் கவிதைப் பயணம்).

செய்யுள் எழுதுவது ஒருவகை என்றால் அதற்கு பொழிப்புரை எழுதுவது ஒருவகை. மிக எளிமையாக திருவள்ளுவர் எழுதியுள்ள குறட்பாவுக்கு சிலர் எழுதியுள்ள உரையைப் பார்க்கும் போது தலைசுற்றும்.

ஜீவாவின் கவிதைகள் புரியாத செய்யுளும் அல்ல, அதற்கு சு. பொ. அ. எழுதியுள்ளது பொழிப்புரையும் அல்ல. மாறாக ஜீவாவின் கவிதைகளை தொட்டு அவர் பயணித்த தடத்தை தொட்டுக்காட்டும் முயற்சி இது.

தீக்கதிர் இலக்கியச் சோலை பகுதியில் தொடராக வந்த கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. ஜீவாவின் பாடல்கள் மற்றும் கவிதைகள் 122 கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றிலிருந்து சாரத்தைத் தருவதுபோல 29 பாடல்கள் தேர்வு செய்யப்பட்டு நூலில் தரப்பட்டுள்ளன.

ஜீவாவின் கவிதைப் படைப்புகளை பொருளடக்க வகையாக மட்டுமின்றி சுவையாகவும் 15 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

ஜீவா மூன்றாம் படிவம் படித்துக் கொண்டிருந்த போது அவரது சக வகுப்புத் தோழனாகிய மாணிக்கம் என்ற தலித்தை சிவன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். கோயில் நிர்வாகிகள் தடுத்துக் கேட்டபோது இவன் என் சகோதரன் தான் என்றார். ஊரில்அவருக்கு திட்டும், வீட்டில் உதையும் விழுந்தது.

அப்போது ஜீவா எழுதிய கவிதை "வாயற்ற நாய், கழுதை மலந்தின்னும் / பன்றியும் வழியொடு செல்லலாமா/ மனிதர் நாம் சென்றிடில் புனிதமற்றுத் தீட்டு/ வந்துலகு முழுகிப்போமாம்"

என்று நினைவு கூர்கிறார் அவரது சகோதரர் ப. நடராஜன்.

பாலின்றி பிள்ளை அழும், கோடிக்கால் பூதமடா என்ற ஜீவாவின் கவிதை வரிகள் இன்றைக்கும் அனலடிக்கும் அணையா நெருப்பு வரிகள். இவை சோலையில் அமர்ந்து எழுதியவை அல்ல. போராட்ட உலைக் களத்தில் வார்த்தெடுக்கப்பட்ட ஆயுதங்கள்.

இன்றைய தமிழ்ச் சூழலில் புரட்சி என்பது ஒரு கொச்சைப்படுத்தப்பட்ட ஒரு வார்த்தை. ஆனால் புரட்சி என்பது என்ன என்று ஜீவா கவிதையில் அடுக்கிக் கொண்டே போவதைப் படித்தால் நரம்புகள் நாணேறும்.

 ஜீவாவின் பாடல்களில் பெண் விடுதலை, தொழிலாளர் வர்க்க எழுச்சி, சுயமரியாதை, பகுத்தறிவு, யுத்தம், பாசிசம், தேசியம் என காலத்தின் தேவையையொட்டிய பல்வேறு பாடல்கள் இடம் பெற்றிருப்பதை ஆய்வுநோக்கி மட்டுமின்றி, அந்த வரிகளில் உள்ள இலக்கிய நயம், சந்த லயம் ஆகியவற்றையும் எடுத்துரைத்துள்ளார் சு. பொ. அ.

தனக்கே உரிய பாணியில்இந்நூலில் சு. பொ. அ. பலகேள்விகளை எழுப்பியுள்ளார். சமூக உள்ளடக்கம் சார் இலக்கியங்களை பிரச்சாரம் என்று ஒதுக்கி விடுவார்கள் கலைசார் இலக்கிய கோஷ்டிகள். ஆனால் தனது சொந்தக் கவிஞனை பாட்டாளி வர்க்கம் மறக்கலாகுமா? என்ற கேள்வியும் அதில் ஒன்று.

ஜீவா என்கிற ஜீவ நதியின் ஆழ, அகலங்களை, உணர படகாய் உதவும் இந்த நூல். படகில் ஏறுங்கள். பயணம் துவங்கட்டும்.

வெளியீடு:

நான் தமிழர் பதிப்பகம்

10/14 தோப்பு வெங்கடாச்சலம் தெரு,

திருவல்லிக்கேணி,

சென்னை- 5

பக்கங்கள்: 104

விலை, ரூ. 50/-