கோணக்காலன் ஏதோ கோப வெறியில் வருவதைப் போல குதித்து குதித்து நடந்து வருகிறான். முட்டிகள் இரண்டும் முட்டிக் கொண்டு உரச, ரெண்டு பாதங்களும் இடமும் வலமுமாக இழுத்து இழுத்து நடக்கிறான். அவன் மனசுக்குள் தாங்க முடியாத வலியின் அதிர்வுகள். நினைக்க நினைக்க வேதனை தாளவில்லை. அவமானமாகவுமிருக்கிறது.

வாய்விட்டுச் சொல்லியழ முடியாத வேதனையெல்லாம்... அவமானகரமான அசிங்கம் தானே!

ஊமையன் கண்ட கனாவைக் கூட கையையாட்டி, முகஜாடை காட்டி சொல்லிவிடலாம். ஊமையன் வெட்கப்படத்தக்க அசிங்கமான கனாகண்டால், யாரிடமாவது சொல்ல முடியுமா? சொல்லத்தான் முடியுமா? அப்படித்தான் கோணக்காலன் கதையும். வெட்கக் கேடான அசிங்கம். வெளியே சொல்ல முடியாத கசப்பான கொடுமை.

ஆவுடை இப்படிச் செய்வாள் என்று இவன் கனா கூட கண்டதில்லை. நினைக்கவே அசிங்கமாக இருக்கிறது.

ஆவுடைக்கு எப்பவும் இவன்மேல் ஒரு லயிப்பு உண்டு. மயங்கித் திளைப்பாள். இவனிடம் எப்போதும் சொக்கிக் கிடப்பதை பெருமையென நினைக்கிறவள். செல்லமாய்க் கொஞ்சுவதற்குக் கூச்சப்படவே மாட்டாள். அவளா.... இப்படிச் செய்கிறாள்?

நினைக்க நினைக்க உலைகொதிச் சோறாக பொங்கி நுரை ததும்புகிற வேதனை. அடிமனசையும் கசக்க வைக்கிற அவமானக்கூத்து.

ரெண்டு பாதங்களும், ரெண்டு பக்கமாக இழுக்க முட்டிக்கால் ரெண்டும் ஒட்ட உராய... கு;தது குதித்து வருகிற கோணக்காலன்.

ஆடு குட்டிகள் அடைபட்டுக் கிடக்கிற ஆட்டுத் தொழுவத்தை நெருங்க, நெருங்க... வாசம் வந்து மோதுகிறது. உயிருக்குள் உயிராக பரவிப் படர்கிற ஆட்டுச் சாணியும் கலந்து மிதிபட்டு, நசுக்குண்டு குமைந்து கிடந்த அந்த வாசம், எப்பவும் இவனுக்குப் பிடிக்கும். அதிலும் அடைமழைத் தூறல்களில் விடிய விடிய நனைந்து நைந்த சாணி வாசம், 'கும்ம்ம்'மென்று ஆளைத் தூக்கும். அவனை கிறங்கடிக்கும்.

பிறந்த மறு வருஷமே அய்யாவை தின்றுதீர்த்தான். வயது ஆகிற போது, அம்மாவும் 'போய்ச் சேர்ந்துவிட்டாள். நாதியற்ற அந்தப் பச்சைமண்ணை... முத்தையாக் கோனார், தனது ஆட்டுத் தொழுவத்தில் படுக்கச் சொன்னார். அவர் ஊற்றுகிற கஞ்சி உயிர் வளர்த்ததைப் போலவே... ஆட்டுச் சாணி வாசமும் அவனை ஒட்டி உறவாடி சீராட்டி உடலை வளர்த்து.

அன்புக்கு ஏங்கியவன். பாசம் இல்லாமல் பரிதவித்தவன். நெற்றியைத் தடவி, தலைரோமத்தை வருடுகிற வாஞ்சை - பரிவு - பார்த்தறியாதவன். அவன் தேடித் தேடி உயிரால் ஏங்கிய பாசத் தாபம் முழுவதையும் ஆடுகளிடம் காட்டினான். ஆடுகள், வெறும்பிராணியல்ல. அவனுக்கு அவை அம்மா ரூபங்கள். அய்யா சாயல்கள். தம்பி தங்கை வடிவங்கள்.

படல்கதவைத் திறந்து, உள்நுழைந்து அடைத்தான். ஆடுகள் இவனைப் பார்த்த சந்தோஷத்தில் கத்திக் கூப்பாடு போட்டது. பசியும், பட்டினியுமாக கதறுகிறது. அடிவயிற்றின் தீயை "ம்ம்ம்ம்மேய்ய்ய்ய்க்" என்ற நீள நீளக் கதறல்களில் இவனிடம் காட்டுகின்றன. பருத்தி மாரை கையில் எடுத்தான். ஆடுகளை கையாலும், தோள்பட்டையாலும் நெட்டி நெட்டித் தள்ளிக் கொண்டே சாணி சகதியை பரசிப்பரசிக் கூட்டினான். கூடைகூடையாக அள்ளி, படலின் மாரிமூலையில் கிடந்த குப்பைக் குமியில் கொட்டினான்.

முத்தையாக்கோனார் கல்யாணம் "மூய்த்து" வைத்த அன்றே.... இதைச் சீதனமாக தந்துவிட்டார்.

"ஏலேய்.... சாணிக் குப்பையை வித்து வித்து ஒஞ்செலவுக்கு வைச்சுக்கோ. ஆவுடைக்கு ஒரு சீலை கீலை எடுத்துக்குடு."

ஏழெட்டு நாளாக விடாத அடைமழை. ஐப்பசி மாச அடைமழை. ராத்திரிiயும், பகலுமாய் விடாமல், சொரு, சொருவென்று ஊற்றுகிற மழை. பாட்டம் பாட்டமாக சுற்றி வளைக்கிற மழை.

ஆடு குட்டிகளை மேய்ச்சலுக்கு வெளியே பற்றவிடாமல், நீர்க்கயிறாக கொட்டித் தீர்க்கிற மழை. மழைவிட்டநேரத்தில் படலுக்குள் வெட்டவெளியில் சுற்றித்திரிகிற செம்மறிகள். தூறல் பொசுபொசுக்க ஆரம்பித்துவிட்டால், கூரைச் சாய்ப்புக்குள் நெருக்கியடித்துக் கொண்டு ஒதுங்கிக் கொள்ளும்.

குனிந்து சாணியை கூட்டுகிற இவன்மேல் காலைத் தூக்கிப் போடுகிற ஆடுகள். முழங்காலை மோந்து பார்க்கிற செம்மறிகள். இவன் காலை உரசித் தேய்க்கிற ஆடுகள். அதுகளுக்கு இவன் வாசம் பிடிக்கும். இவனுக்கு அதுகளின் ரோமச் சொரசொரப்பு பிடிக்கும்.

மிச்சமீதியாக வாடிச் சுருண்டு கிடந்த பழைய கொழைகளையெல்லாம்... ஓர் இணுக்கு கூட மிச்சமில்லாமல், தின்று தீர்த்துவிட்டன. கொழை இருந்த கொப்புகளின் தோலைக் கூட கறும்பி கறும்பி உரித்துவிட்டன.

இரை இல்லாமல் குலை பட்டினியாகக் கிடக்கிற அதுகள், கத்திக் கதறுகின்றன.

அதன் பசிதாளாத அவலக் கதறல்கள் இவனது நெஞ்சையறுக்கின்றன. அதன் கதறல், வெட்டவெளியை நிரப்புகிறது.

"ஐயோ பாதரவே... வாயில்லாச் சீவன்க வாய்விட்டுக் கதறுதுகளே... அதுகளோட வவுத்தை நனைக்க வழியில்லாமல் போச்சே...."

தாயைப்பார்த்து... 'யம்மா,கஞ்சி' என்று கத்துகிற பிள்ளைகளைப் போல... இவனை நம்பிக்கையுடன் பார்த்து, கத்திக் கனைக்கிற செம்மறிகள்.

"வாயில்லாச் சீவன்க வயித்தை குலை பட்டினியாகக் காயப்போடுகிற பாவத்தைப் போல... உலகத்துலே வேற கொடும்பாவம் ஏதுமில்லே".

அவனுள் முணுமுணுக்கிற சோகப்புலம்பல்கள். வயிறு வெள்ளை, ஓட்டைக்காது, கிழிஞ்ச மூஞ்சி, கருமூக்கு, புள்ளிக் கறுப்பு, நொண்டிக்காலு, வாலு வெள்ளை, சாம்பக்கண்ணு, செங்காலு என்று ஒவ்வொரு ஆடுகளின் முகம் தேடித்தேடிப் பார்க்கிற இவனைப் பார்த்து கத்திக் கனைக்கிற அதுகள். அதன் வாஞ்சை மின்னுகிற கண்கள். பசி நிறைந்த தேடல் குரல்.

இவனுக்கு குலை கொதிக்கிறது. அடிவயிற்றில் ஏதோ ஒரு பிசைவு. யாரோ குடலைப் பற்றி முறுக்கிப் பிழிகிற மாதிரியான உணர்வு. தாய்மனத் தவிப்பு.

"ஆடுமாடு இல்லாதவன்தான் அடைமழைக்கு ராசா'ன்னு ஒரு சொலவடை சொல்லுவாக. அது எம்புட்டு ஞாயம்னு இப்பத்தான் புரியுது."

புஞ்சைகள் எதிலும் அகத்திக் கொழையோ, ஆமணக்கோ இருக்காது. பங்குனி, சித்திரை என்றால், காடு கரைகளில் கொழை கொம்பு செழித்துக்கிடக்கும். களவாண்டு, ரவ்வோடு ரவ்வாக கொண்ணாந்து சேர்த்திடலாம். இப்ப... ஐப்பசி மாசம். இப்பத்தான் ஆமணக்கு, அகத்தி விதைகள் ஊன்றுவார்கள். கரிசல் காட்டு வேப்பமரங்களின் கொழைகளை ஆவணி புரட்டாசி கோடைக்கே பறித்து மொட்டையடித்தாகிவிட்டது.

இப்ப என்ன செய்ய? ஆடுகளின் கதறலுக்கு என்ன பதில் சொல்ல? எங்கபோய்... எதில்போய் கொள்ளையடித்துப்போட? ஊரெல்லாம் தண்ணீர்க் காடாக.. காடெல்லாம் நீரூற்று அடிக்கிற சகதிக்காடாக சீரழந்து கிடக்கிற போது.... எங்கபோய்.. எந்தப் பச்சை'யை பறிக்க?

மலையாக மறித்து நிற்கிற கேள்விகள்.. மனசின் ஆணிவேரை அறுக்கிற ஆடுகளின் அவலக் கதறல்களில், உயிர் உருகிக் கரைகிறது.

பசி பட்டினியில் கத்திக் கதறுகிற ஆடுகளைப் பார்க்கச் சகிக்காத மனப் பாரத்தோடு நகர முடியாமல், நகர்கிற கோணக்காலன்.

ஆவுடையும் இந்த வாயில்லாச் சீவன்களை மாதிரித்தான். இவன்மேல் உயிராய்க் கிடப்பாள். இவனது சேட்டைச் சில்மிஷங்களில் கிறங்கிப்போயிருப்பாள்.

மூக்குத்திக்குக் கூட கதியற்ற கூலிக்காரியான ஆவுடையை... இந்த அனாதைப் பயலுக்காக பெண் கேட்டு முத்தையாக்கோனார் ஆள் அனுப்பியிருந்த போது, வெறும்பும், கோபமுமாக நெருப்பெனச் சீறி, கேவலப்படுத்தி அனுப்பியவள்தான்.

'அந்தக்கோணக்காலனுக்கு வாக்கப்பட்டு என்ன செய்ய? அவன் ஒரு ஆம்பளையா? என்னை வைச்சுப் பூசை பண்ணுவானா"? என்று சீறிச் சினந்து, மனசைக் கீறி புண்ணாக்கியவள்தான்.

அப்புறம்... இவனது மனிதக் குணமறிந்து, அன்புக்கும் பாசத்துக்கும் ஆலாய்பறக்கிற 'பாலை' மனமறிந்து... சம்மதித்து, வாழ்க்கைப் பட்டபிறகு-

இவன், அவளை வைத்துச் சீராட்டிய சீராட்டில்... அப்படியே சொக்கிப்போனாள்.

'பெண்ணை ஆளுமை செய்ய முடியாமல், வளைந்து போன கோணக்கால் தடுக்கும்' என்று இவள் நினைத்திருந்த கணக்கை.. கசக்கி ஊதித்தள்ளிவிட்டான்.

செல்லமுத்து என்று அம்மாவைத்த செல்லப் பெயர், கூட ஆடு மேய்க்கிற பயல்களால் செல்லாண்டியாகி... வளைந்து முட்டி தட்டிப்போன கோணல்காலான பிறகு... எல்லாப் பெயர்களும் மாண்டு மடிந்து மாயமாகிப்போய்... கோணக்காலன் என்பதே நிலைச் சட்டமாயிற்று.

அவனது கருந்திரேகம் பூராவிலும் நெருக்கமான அடர்த்தியான ரோமக்கட்டு. ஒருசீராக ஒழுங்கமைந்த கருஞ்சுருள்முடி. நெஞ்சு வயிறு, முதுகு, தோள்பட்டை பூராவிலும் சட்டைபோட்ட மாதிரியான ரோமக்கட்டு, சொரசொரப்பான முரட்டு ரோமச்சுருள்.

பார்க்கிற யாருக்கும் "கோதி, வருடிப் பார்ப்போமா" என்று கைவிரல்கள் பரபரக்கும். ஆவுடைக்கு அதில் ரொம்பப் பெருமிதமான மனக்கிறக்கம். அவனது முதுகு முடியில் கன்னத்தால் உரசி, கிளுகிளுப்பாள்.

வாயில்லாச் சீவன்களான ஆடு குட்டிகளை ராப்பட்டினி போடக் கூடாதே என்கிற உயிர்க் கருணையில் கொழைக் களவுக்குப் போய்விட்டு.. நேரங்கெட்ட நேரத்தில், சாமத்துக்கு மேலாகத்தான் வீடு வந்து, படுப்பான். உடம்பெல்லாம் வியர்வைப் பிசுபிசுப்பில் இலைகளின் இணுக்குகள் ஒட்டியிருக்கும். மனசெல்லாம் பயநினைவுகள். ஆட்டுச்சாணியின் வாசமும் மூக்கை முட்டும்.

அந்தநேரங்கெட்ட அகால நேரத்திலும்-

பூத்த பூவாக காத்திருப்பாள், ஆவுடை.

கொழை ஒடித்த புஞ்சையில், காலடித்தம் பதிந்திருக்குமே.. துப்பு துலக்கி புஞ்சைக்காரர் வீட்டு வாசலில் வந்து நிற்பாரோ.. என்ற பயப் பதைப்பான யோசனையில் உழன்று கொண்டிருக்கிற கோணக்காலனின் நடுமுதுகு ரோம அடர்த்திக்குள் விரல்களை அலையவிடுவாள், அவள். சுட்டு விரலில் ரோமம் சுற்றி மென்மையாக இழுப்பாள்.

தோள்பட்டையில் அவளது உள்ளங்கை பதித்து, திருப்புவாள், அவளது சுவாசச்சூட்டை இவனது கன்னம் உணரும் போதுதான்.. பயமனசு, தன்னிலைக்கு வரும். இவள் மீது மனம் நிறுத்த...மோகப்பார்வை பார்ப்பான்.

அவளது சின்னச் சிரிப்பில் உதட்டில் விழும் சிறு நெளிவு, அவனது  உயிரைக் சுண்டியதிர வைக்கும். அவனைச் சாகடிக்கிற அவளது கிறக்கப்பார்வையின் வசீகரம்.

அம்புட்டுத்தான்...

அவள் தருகிறாளா? சூறையாடாப்படுகிறாளா, சூறையாடுகிறாளா? எல்லாந்தான்.

அப்பேர்ப்பட்ட ஆவுடைக்கு என்ன ஆயிற்று? யார் கண் பட்டு, திருஷ்டி விழுந்தது, பத்து நாளாக... காறித்துப்பாத குறையாக 'சீ'யென்று ஒதுக்கி, காயப்போட்டு விட்டாள். தொட்டால், சாரைப்பாம்பாக 'சீர் சீர்'ரென்று சீறுகிறாள். கோபமும் குமுறலுமாகி, அடைக்கோழி மாதிரி, 'உர்ர்ர்ர்' ரென்கிறாள்.

.... பத்துநாளைக்கு முன்னாடி....

பொழுது சாய்ந்தும் சாயாத அந்தி நேரம். தங்க வெயிலால் வீட்டு முற்றம் மஞ்சள் பூசியிருந்தது.

யார் புஞ்சையில் போய் இன்னைக்கு கைவைக்கலாம், கொழைக்களவுக்கு என்னதிசையிலே போகலாம் என்ற நினைப்பில், மனசு நின்று நிலைக்க... வட்டடில் சோற்றைப் பிசைந்து கொண்டிருக்கிறான்.

"ஏய்க் இந்தா... ஏய்க் இந்தா..." என்று தணிந்த தொனியில்... கொஞ்சலாக் கூப்பிடுகிற ஆவுடை.

"ம்ம்ம்...என்ன? சொல்லு வெஷயத்தை"

"எங்க சித்திமகா மூக்கம்மா.. அவா மகளுக்கு மொட்டை போட்டு, காது குத்துறாக. நாம போய்... செய்மொறை செய்யணும். போவமா?"

'கோவில்லேயா?"

"ம்."

"எந்த ஊர்லே?"

"திருச்செந்தூரு பக்கத்துலே. அருஞ்சொனைகாத்த அய்யனார் கோவில்லே வைச்சு. இங்கருந்து வேன் புடிச்சுப்போறாக. போவமா?"

"அம்புட்டு... தூரந்தொலைவுக்கு நாம போகணுமா?"

"நம்ம கல்யாணம்" மூய்ஞ்ச'பெறவு... என்னை எங்கேயாச்சும் கூட்டிடடுப்போனதுண்டா? எந்த ஊருக்காச்சும் அம்மனும் சாமியுமா நாம போனதுண்டா? கோவில் கொளம் உண்டா? வேறெங்கையாச்சும் எட்டிப்பார்த்ததுண்டா?"

கோபத்தை அடக்குவதற்கான யத்தனிப்போடு, வேகம் வேகமாகப் பேசுகிற ஆவுடை. அப்புராணித்தனமாக அவனும் பேசுகிறான்.

"நாதியத்த நாயி... நா. நா, எந்த ஊரைக்கண்டேன்? எந்தச் சீமையைப் பாத்தேன்? பஸ்லே கூட ஏறுன்துல்லே, இதுவரைக்கும். நீ சொல்றதுவும் வாஸ்வந்தான். ஒறவுமுறையிலே நல்லது நடக்குறப்ப, போகத்தான்  செய்யணும். செய்மொறையும் செய்யத்தான் செய்யணும். அப்பத்தான்.. நாளைப் பின்னே நமக்கும் நாலுபேரு இருப்பாக.."

உடன்பாட்டுத் தொனியில் அமைதியில் அவனது சாந்தமான குரல. அவள் முகத்தில் சிரிப்பின் மலர்ச்சி. மனசின் குதூகலமின்னல்.

ஆவல் பறப்பாக.. ஆசைப் பரபரப்பாக அவளது சந்தோஷக் கூவல்.

"அப்ப.. நாம போவமா? வேன்லேயே சேர்ந்து போவமா?"

சின்னப்பிள்ளை போன்ற அவளது வெகுளியான கும்மாள உற்சாகம்.

"'எம்புட்டு ரூவா... ஆகும்?"

"வேன் வாடகைக்கு நூறு ரூவா.. செய்மொறைக்கி எரநூறு ரூவா.. மேக்கொண்டு கைச்செலவுக்கு நூறுரூவா..."

"வெறுங்கழுதைகளா நிக்குற நம்மகிட்டே. அம்புட்டு ரூபா ஏது? கவலைப்படாதே.. கோனார் மோலாளிகிட்டே கேட்டுப் பாப்பம்".

மறுநாளே கேட்டான். அனாதைப் பயலுக்கு கஞ்சி ஊற்றி வளர்த்து, ஆடு மேய்க்கிற தொழில் தந்து, ஆவுடையையும் மூய்த்து வைத்துவிளக்கேற்றி வைத்த அந்த மகாராசா...

"அஞ்சு ரூவாயை கண்ணாலே காண்க முடியலே. மனுசர் கெடந்து சீரழியுறப்ப.. இவன் வந்துட்டான், ஐநூறு கேட்டு. போடா. போ... போக்கத்த பயலே... போய் சோலியைப் பாரு".

ஒற்றை வாக்கியத்தில் உயிரறுத்து விட்டார். இவனும் கோனார் சொன்னதை அப்படியே ஆவுடையிடம் ஒப்பித்துவிட்டு.. வெள்ளந்தியாக நின்றான்.

"நா... என்ன செய்ய? எனக்கு என்ன தெரியும்? யாருக்கிட்டே என்ன கேக்கத் தெரியும்? எப்புடி என்னாலே ரூபா பெரட்ட முடியும்? ஆட்டைத் தவிர..காட்டைத் தவிர.. வேற என்ன தெரியும் எனக்கு?"

குற்ற உணர்ச்சியின் குழப்ப சிந்தனக்காளாகி ஒன்றுக்குமற்ற கேணையனாக நின்ற அவனை..ஒரு புழுவைப் பார்ப்பது போன்ற அசூயையும் அருவருப்புமாக நோக்கினாள். முகமெல்லாம் அனல் காட்டம்.

கடுத்த பார்வை, "த் தூய்! துப்பு கெட்டமனுசா"என்று காறித் துப்பியது.

அன்றைக்கு ஆரம்பித்தது, வினை. வீட்டுக்குள் மூன்றாவது ஆளாக மௌனம் சனியனாக உலவியது. முறைப்பும், விறைப்புமான மௌனம். மன இறுக்கத்தின் தெறிப்பான மௌனம். சனியனாக உறவை அலைக் கழித்த மௌனம்.

அவளாகவே வந்து தோள்பட்டையில் கைபதிப்பாள் என்று ரெண்டு நாளாக எதிர்பார்த்து ஏமாந்தான்.ஓரடி இடைவெளிவிட்டு தள்ளிப்படுத்திருக்கிற ஆவுடை.

நாலாவது நாள். இவனாகவே தாழ்ந்த, பணிந்து தொட்டான். வெட்டியெறியப்பட்ட கைபோல், தொட்டகை உதறப்பட்டது. அத்தனைவேகம். அத்தனை சீற்றம்.

"என்னைத் தொட்டீன்னா... மானங்கெட்டுப்போகும்" என்று ஆத்திரத்தின் உச்சத்தில் பத்ரகாளியாக கொதித்தாள்.

"சொந்த பந்தம்... நாலுசாதிசனம்... செய்மொறை, கோவில் கொளம்னு கூட்டிட்டுப்போறதுக்குக் கூட வக்கத்த ஆம்பளைக்கு... இதுக்கு மட்டும் பொம்பளை வேணுமாக்கும்?"

ஒரு செருப்பை கவ்வக் கொடுத்து, மறுசெருப்பால் அடித்த மாதிரியிருந்தது, கோணக்காலனுக்கு.

வேதனையின் அதிர்வுகளில் குலுங்கிப்போன மனசெல்லாம்.. அவமானக் கசப்பு.

பத்துநாளாக நிதம்நிதம் இதே கூத்துதான். நேற்று ராத்திரியும் அப்படித்தான். அவளது சீற்றமான கோபச் சொற்களின் தகிப்பில், அடிமனசின் ஆணி வேர் வரை கருகியது. "ச்சீய்ய்க்" என்று கத்திய கத்தலில், காறித்துப்பின மாதிரியிருந்தது.

கம்பு தூக்கிய நாளிலிருந்து ஆடே உலகம், காடே கதியென்று இருண்டுபோனவன். மனிதப் பழக்கவழக்கம், லௌகீக வாழ்க்கைப் புழக்கம் எதுவும் அறியாமலேயே நறுங்கிப்போனவன்.

ஆவுடையின் ஆசை, நியாயம், முழு நியாயம். இவனுக்கே வேனில் ஏறி... சீட்டில் உட்கார்ந்து, பயணம் செய்ய ஆசைதான். புருசனும், பெண்டாட்டியுமாக சேர்ந்து... ஊர்வழிபோய்... கோவில்குளம் பார்த்து வருவதற்கு இவனுக்கும் ஆசைதான்.

ரூபாய்க்கு எங்க போக? என்ன செய்ய? ஏழ்மையும், இயலாமையும், அறியாமையும் மனசின் ஆசைகளை காலில்போட்டு நசுக்கி எற்றுகின்றனவே!

அன்புக்கு ஏங்குகிற - பாசத்துக்கு தவிக்கிற - இரண்டு உயிர்களின் உறவையே சேதாரப்படுத்துகிறதே!

கோணக்காலனுக்கு அழுகை அழுகையாக வந்தது. அடைமழையில் அடைபட்டு பசி பட்டினியாய் கத்திக் கதறுகிற ஆடுகளுக்கும் இரைபார்க்க முடியவில்லையே என்ற தவிப்பு. நியாயமான ஆசையோடு கோபம் கொண்டிருக்கிற ஆவுடையின் விருப்பத்துக்கும் வழிபார்க்க முடியவில்லையே என்ற வருத்தம்.

மனசுமுட்டிக் கொண்டு வருகிறது. நெஞ்சுக்குள் திணறல். நாசி நுனியின் விடைப்பு. அழுதுவெடித்து விடுவோமோ என்ற நடுக்கம்.

பல்லைக் கடித்துக் கொண்டு தெருவில் நடக்கிற கோணக்காலன். முழங்கால் முட்டுகள் முட்டி உரசிக் கொள்ள. இங்கிட்டும் அங்கிட்டுமாக பாதங்கள் இழுக்க... குதித்து குதித்து நடந்து தெருச்சகதியில் விரல்கள் பதிய... ஊர் மடத்துக்கு வந்து சேருகிறான். சாணியையும், சகதியையும் வழித்துகூடையில் அள்ளிய கையெல்லாம் அதன் அடையாம்.

தெருவில் செல்லம்பட்டி சின்னான், சைக்கிள் கேரியலில் மிகப்பெரிய புல்கட்டுடன் உருட்ட முடியாமல் உருட்டுகிறான். கனத்தழல்கட்டு. பச்சைப்பசேலென்று... ஈரச்சொட்டடிக்கிற புல்.

"இது என்ன புல்லு? புதுசா இருக்கே"

இவன் விசாரிப்புக்கு நின்று, மூச்சு வாங்கிக் கொண்டு பேசுகிற சின்னான்.

"இது என்னமோ புது ரகப் புல்லுவகையாம். முள்ளங்கீரைப் புல்லுன்னு சொல்லுதாக. நாம என்னத்தைக் கண்டோம்?"

:"ஆடுமாடுக... திங்குதா? என்னமும் கெடுதல் செய்யலியே...."

"அதெல்லாம்... ஆடு மாடுக வளைச்சுப்புடிச்சு மாட்டுதுக. ஒண்ணும் கெடுதல் எல்லாம் பண்ணலை. நா நாலுநாளா அறுத்துட்டுத்தானே வாரேன்."

"எங்க கெடக்கு?"

"கருசக்காடு பூராவுலேயும் மொளைச்சு செழிச்சுக்கெடக்கு. அதுலேயும் முத்தையா நாடாரு புஞ்சையிலே ரொம்பக் கெடக்கு. சமுத்திரம் மாதிரி. அறுக்க அறுக்க... தீரவே தீராது. ஆசை ஆசையாயிருக்கும்"

பசியோடு கத்திக் கனைக்கிற செம்மறிகள். வாஞ்சையும் நம்பிக்கையுh இவனைப் பார்த்துப் பார்த்து கதறுகிற அதன் அலறல்.

"பொறுங்க... சித்த பொறுங்க... கண்ணுகளா. மரகதப் பச்சையா எரை கொண்ணாந்து போடுதேன்"

தாய்மனப்பூரிப்பும் புளகாங்கிதமுமாக மனசுக்குள் சொல்லிக்க கொண்ட கோணக்காலன்.

'பண்ணரிவாளை எடுத்துக்கிட்டு கருசக்காடு போவணும்' என்று வீட்டுக்கு 'வெக், வெக்'கென்று வருகிற அவனது குதிநடை.

வீட்டு வாசலில் ஆவுடை.. முகத்தைப் பார்க்க முடியாத மனவெறுப்புடன் வெடுக்கென முகத்தை திருப்பிக் கொள்கிறது ஆவுடை... முகம் பார்க்கிறாள்.

"முனிக்காளை ஒம்மைப் பாத்தாரா?"

"இல்லியே... என்ன முனிக்காளைக்கு?"

"நாத்தாங்காலை பக்குவப்படுத்துறதுக்கு ஆட்டுச்சாணி வேணுமாம். வந்து கேட்டாரு."

"ம்...ம்...."

"நா. ஆயிரத்து நூறு சொன்னேன். அவரு எண்ணூறு ரூபாய்க்குக் கேட்டாரு. ஒம்மகிட்டே பேசிக்கிடச்சொல்லி அவரை அனுப்பி வைச்சேன்."

அவள் முகத்தை ஏறிட்டு... கூர்ந்து, கண்ணுக்குக் கண்ணாகப் பார்க்கிற கோணக்காலன்.

'இங்க பாரு... எனக்கு அம்மா இல்லே, அய்யா இல்லே. ஊரு நாடு பாத்த அறிவும் இல்லே. எல்லாமே எனக்கு நீதான். ஒனக்குத் தெரியாத ஒலக நடைமுறையா? நீபாத்து... ஓன்யோசனைப்படி.. பேசி முடிச்சிரு.."

"நீரு எங்க? தூரவா?"

"அடைமழைக்கு அடைபட்டு கிடக்குற ஆடுகுட்டிக ஒரு பொட்டு எரைகூட இல்லாம, குலைப்பட்டினியா கெடக்குதுக. அதுகளுக்காக புல்லறுக்கப்போறேன், கருசக்காட்டுக்கு".

... வீட்டுக்குள் நுழைந்த அவன், பண்ணரிவாளைத் தேடிப் பார்த்தான். வாசலுக்கு மேலே கூரையில் சொருகப்பட்டிருந்தது. எடுத்துக் கொண்டான்.

"அப்ப.. கோவிலுக்கு வேன்லே நாம போவலாம்லே?"

"சாணி, வழிகாட்டிருச்சு. ஜேஜேன்னு அம்மனும் சாமியுமா ஜோடியா போய்ட்டு சாமியைக் கும்புட்டுட்டு வருவோம். ரைட்டா?"

முடிச்சவிழ்ந்தி சுதந்திரமான தலைமுiடியைப் போல... பாரமிழந்த உல்லாசக் குரல்களின் உற்சாக உரசல்கள்.

பண்ணரிவாளுடன் வாசலுக்கு வந்தவனை, முகமெல்லாம் பூத்த பூவின் மலர்ச்சியோடு பார்த்த ஆவுடை. உதட்டு நெளிவுடன் கூடிய உயிரை அதிர வைக்கிற அந்தச் சின்னச் சிரிப்பு.

அவனது நெஞ்சுக்குழிரோமத்தை இடது உள்ளங்கையில் வருடிய ஆவுடை.

"ச்ச்சீய்ய்... விடு சனியனே.. கூச்சமாயிருக்கு" என்று நாணச்சிரிப்பு சிரிக்கிற கோணக்காலன்.

ஏதுமற்ற அதுகளைச் சுற்றியும் வாழ்க்கை ஒரு கூடு பின்னிக் கொண்டிருக்கிறது.