நூல் மதிப்புரை: ம.மீனாட்சிசுந்தரம் எழுதிய மேன்மக்கள் (சிறுகதைத் தொகுப்பு)

பத்தாண்டுகளாக சிறப்புடன் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நெய்வேலியில் நிறைய சிறுகதை எழுத்தாளர்களை, கவிஞர்களை உருவாக்கியுள்ளது. புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்கு முன்பே ஆழ்ந்த வாசிப்புடன் சிறுகதைகள் எழுதுவது குறித்து யோசித்துக் கொண்டிருந்த ஒரு சிலரில் நெய்வேலி 'தமுஎகச' பொருளாளர் ம.மீனாட்சிசந்தரம் குறிப்பிடத்தகுந்தவர்.

பதினைந்தாண்டுகளுக்கும் அதிகமாக தமுஎகசவுடன் மீனாட்சிசுந்தரம் கொண்ட தொடர்புப் பரிச்சயத்தின் விளைவில் 'மேன்மக்கள்' நமக்கு நல்லதொரு தொகுப்பாக கிடைத்துள்ளது என்பது மிகையற்ற உண்மை.

ரணப்பிரசவம் முதல் மேன்மக்கள் முடிய தொகுப்பின் பதினைந்து கதைகளில் ரணப்பிரசவம், கண்ணீர்ப் பொம்மைகள்,ஜீவியம், கறிச்சோறு, வேரில்லா மரங்கள் இந்த ஐந்து கதைகளும், கதாசிரியரின் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டையைச் சுற்றியுள்ள தறித் தொழிலாளர்களின் வாழ்வியல் துன்பங்களை ஆசிரியர் கண்டறிந்த அனுபவ வழியில் சொல்லும் கலைச் சித்தரிப்புகளாக மிளிர்கின்றன. ஒப்பனை முகங்கள், காதல் 2007, சுமிக்குட்டி, அன்னத்தாமி போன்ற கதைகள் வெவ்வேறு கருப்பொருள்களில் சிறப்புறுகின்றன.

இரண்டாம் பிரசவம் முடிந்து மருத்துவமனையிலிருக்கும் மகளை வீடு அழைத்து வர குடும்பத் தலைவி, தாய் தனக்குச் சீதனமாகக் கொடுத்த அண்டாவை தாயின் நினைவுடன், அக்கம் பக்கம் அறிந்துவிடக் கூடாது. என்னும் பயத்துடன் கணவன் - மகன் மூலம் விற்பனைக்கு ரகசியமாக அனுப்பி வைக்கும் சோகத்தைச் சொல்லும் கதை 'ரணப்பிரசவம்'.

நல்ல கதைகளின் தொகுப்பு என்பதற்கு இந்தச் சிறுகதையை உதாரணமாக்கினாலும் தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கதைகள் எம்டன்,மேன்மக்கள் ஆகியவை.

கிராமங்களின் கிணறுகளில் தவறி விழுந்த பொருட்களை அனாயசமாக மூச்சடக்கி, மூழ்கி வெளியில் கொண்டு வந்து மக்களிடம் 'எம்டன்' என்று பெயரெடுத்தவன் கணவனால் விரட்டப்பட்ட கர்ப்பிணி மகளைக் காப்பாற்றும் முயற்சியில் கிணற்றில் வீழ்ந்து இறந்து போவதைச் சொல்லும் கதை 'எம்டன்'. 

கிராமத்தில் பக்கத்து வீட்டுக்காரனாக, நண்பனாக இருந்தவன் நகரத்தின் பேருந்து நிலையத்தில், பேருந்துகளில் பேனா விற்பதைப் பார்த்து வேதனைப்படும் அரசு உத்தியோக நண்பன் மனைவியின் பிரசவ செலவுக்கு பேனா வியாபாரிக்கு ரூ.2 ஆயிரம் கடன் கொடுத்து உதவுகிறான். கொடுத்த பணத்தை வாங்கி வர மனைவி வற்புறுத்தும் காரணத்தில் நண்பனின் வாடகைக் குடிசை தேடிச் செல்பவன் விபத்தில் நண்பன் இறந்துபோன தகவல் அறிந்து அதிர்கிறான். நண்பனுக்குக் கொடுக்க, கணவன் பொட்டலமாகக் கட்டி வைத்த பணத்தைத் தந்த நண்பனின் மனைவி அறியாதவாறு குழந்தை தூங்கும் தூளியில் பணப் பொட்டலத்தை வைத்து, வீடு திரும்பும் மனிதனின் மேன்மையைச் சொல்லும் கதை 'மேன்மக்கள்'.

அனைத்துக் கதைகளுக்கும் பொருத்தமாக நிகழ்களச் சித்தரிப்புகள், பாத்திரங்களின் சொல்லாடல்கள், சொலவடைகள் செறிவாக அமைந்துள்ளன.

சிருஷ்டிக் கலைக்கு அனுபவங்கள் முக்கியம் என்னும் யதயார்த்த நெறியில் 'மேன்மக்கள்' தொகுப்பை நிச்சயப்படுத்தலாம்.

 

வெளியீடு : மணியம் பதிப்பகம்,

39, இரத்தின முதலித் தெரு,

குறிஞ்சிப்பாடி - 607 302

விலை ரூ. 57