இருப்பதை இடிக்க முன்னோட்டம்

அச்சுதானந்தனின் மலையாள வெறி கேரள அரசு முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட “பூமி பூசை” போட்டுள்ளது. இப்பணிக்காக தனியாக நிதி ஒதுக்கி விரைவாக செயல்பட்டுக் கொண்டுள்ளது. 

      உச்சநீதிமன்றம் நியமித்த வல்லுநர் குழு இச்சிக்கல் குறித்து, விசாரணை நடத்தி இரண்டு மாநில அரசுகளுக்கும் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைக்க 15 நாள் அவகாசம் கொடுத்து, அறிவிப்புக் கொடுத்துக் கொண்டிருக்கிற போதே மலையாள அரசு தனது அத்துமீறலை எந்தத் தயக்கமும் இன்றி நடத்திக் கொண்டிருக்கிறது. குறைந்தபட்சம் விசாரணை நடந்து முடிகிற வரையிலுமாவது புதிய அணை குறித்த பணிகளை கேரள அரசு தொடரக்கூடாது என்று பரிந்துரை செய்வதற்குக் கூட வல்லுநர் குழுவுக்கு வலுவில்லை. இக்குழுவில் தமிழகப் பேராளரும் இருக்கிறார். இக்குழு விசாணை முடியும் வரை இருக்கும் நிலையே நீடிக்கும என்று உச்சநீதிமன்றமும் ஆணையிடவில்லை. 

      விசாரணை நாடகம் நடக்கிறது. இந்நாடகத்தை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போது, மலையாளிகள் புதிய அணைக் கட்டுவது என்ற போர்வையில் இருக்கிற அணையை இடிக்கப் போகிறார்கள். இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் இந்த மலையாள இனவெறிச் செயலுக்கு உறுதுணையாக இருக்கின்றன. 

      காவிரி நீர் குறித்த நடுவர்மன்ற விசாரணையும், உச்சநீதிமன்ற வழக்கும் நடந்து கொண்டிருந்த போதே பேச்சுவார்த்தை என்ற பெயரால், அவ்வப்போது தமிழகத்தை இழுத்து காலத்தைக் கடத்தி, அக்கால இடைவெளியில் புதிய புதிய அணைகளைக் கட்டி காவிரி நீரைக் பூட்டி வைத்தது கர்நாடகம். இதே போன்று இப்போது கேரளம் இந்திய அரசோடு சேர்ந்து விசாரணை நாடகத்தை நடத்திக் கொண்டே இடிப்பு வேலை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 

      இந்திய அரசின் இந்த அப்பட்டமான தமிழின விரோத செயலை தட்டிக் கேட்பதற்கு திராணி யற்றவராய், தி.மு.க. முதலைமைச்சர் தமிழ்நாட்டில் ஓணம் பண்டிகைக்கு சில மாவட்டங்களில் விடுமுறை அளித்து தமிழர் - மலையாளி இன நல்லிணக்கம் பேசி இந்த உரிமைப் பறிப்பை திரையிட்டு மறைக்கிறார். 

      முல்லைப் பெரியாற்றையும் தமிழர் மானத் தையும் பாதுகாக்க வேண்டுமென்றால் கட்சி கடந்து தமிழர்கள் இனஎழுச்சி கொள்வது கட்டாயத் தேவை யாகும். வீதியில் இறங்கிப் போராடுவதைத் தவிர தமிழின நீதியை நிலைநாட்ட வேறு வழியில்லை.

Pin It